ஏப்ரல் 10, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

திருவள்ளுவர் யார்? அவரது பின்னணி என்ன?

தேமொழி

Feb 1, 2020

siragu thiruvalluvar yaar2

திருவள்ளுவர் வரலாறு எனக் கூறப்பட்டதில் புனைவுகளை அடையாளம்கண்டு, அது குறித்து மேற்கொண்ட ஆவண ஆய்வுகள் மற்றும் கள ஆய்வுகள் மூலம் வள்ளுவர் ஓர் இளவரசர் என்று அடையாளம் கூறியவர் பண்டிதர் அயோத்திதாசர். அயோத்திதாசர் எழுத்துக்கள் மீது தொடர்ந்து ஆய்வுகளைச் செய்து அவற்றை நூல்களாகவும் கட்டுரைகளாகவும் வெளியிட்டு வருபவர் எழுத்தாளர் திரு. கௌதம சன்னா. பண்டிதர் அயோத்திதாசர் ஆய்வுகளின் அடிப்படையில் ஜூன் 2018 ஆம் ஆண்டு இரண்டாம் உலகத் திருக்குறள் மாநாட்டில் கௌதம சன்னா தான் வழங்கிய திருவள்ளுவர் குறித்த ஆய்வுரையை மேலும் விரிவுபடுத்தி அதற்கு நூல் வடிவம் கொடுத்ததுடன், நூலுக்காகத் தான் ஆய்வு மேற்கொண்ட ஆவணங்களையும் பின்னிணைப்பாக இந்த நூலில் கொடுத்துள்ளார். ஓவியர்-சிற்பக்கலைஞர் சந்ரு அவர்கள் வடிவமைத்து, தமிழ் மரபு அறக்கட்டளை – பன்னாட்டு அமைப்பால் டிசம்பர் 2019 ல் ஜெர்மனியில் உள்ள லிண்டன் அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்ட திருவள்ளுவரின் ஐம்பொன் சிலையின் அழகிய படம் இந்த நூலின் மேலட்டையை அலங்கரிக்கிறது. ஜெர்மனியின் அருங்காட்சியகத்தில் வள்ளுவர் சிலை நிறுவும் விழாவன்று வெளியிடப்பட்ட நூல் இது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

நூலில் முனைவர் க.சுபாஷிணியின் பதிப்புரை. சங்ககாலத்துக்குப் பின்னர் மிக நீண்ட வைதீக தாக்கத்தினால் தமிழகச் சூழலில் கவனிப்பாரற்று புறக்கணிக்கப்பட்ட நிலைக்குச் சென்றிருந்த திருக்குறள், ஐரோப்பியச் சமயப் பரப்புரையாளர் வருகையின் பின்னர் மீண்டெழுந்ததையும், அவர்களால் திருக்குறள் ஆர்வத்துடன் ஆராயப்பட்டு, மொழிபெயர்க்கப்பட்டு, அச்சு நூல்கள் வடிவில் திருக்குறள் மறுமலர்ச்சி கண்டதையும் விவரிக்கிறது. ஐரோப்பியர் பங்களிப்பு ஒதுக்கப்பட முடியாத இடத்தை திருக்குறள் வரலாற்றில் பெற்றுள்ளது என்பதுதான் உண்மை. குறள் தந்த திருவள்ளுவரை அண்மையில் உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் ஓர் ஒற்றை அடையாளமாக இந்த 21 ஆம் நூற்றாண்டு முன்னிலைப்படுத்தியுள்ள வரவேற்கத்தக்க மாற்றத்தைச் சுட்டுகிறார் சுபாஷிணி.

தமிழ் இலக்கியங்கள் சுவடியிலிருந்து 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் அச்சேற்றப்பட்டது. குறளும் வள்ளுவரும் பரவலாக அறியப்படத் தொடங்கிய இக்காலகட்டத்தில், வள்ளுவர் யாரென்பது குறித்துப் புனைவுகளும் கட்டுக்கதைகளும் வள்ளுவரின் வரலாறாக அச்சு நூல்கள் வழியாகவும் மக்களிடையே புகுத்தப்பட்டன. அவற்றை மீள்பார்வை செய்து “திருவள்ளுவர் யார்?” என்று ஆராய்ந்து கௌதம சன்னாவால் அவர் கோணத்தில் அளிக்கப்படும் விளக்கமே 150 பக்கங்கள் கொண்ட இச்சிறிய நூல். திருவள்ளுவர் யார் என அறிந்து கொள்ள முற்படுகையில் திருக்குறளின் நீண்ட புனைகதை வரலாற்றையும் இந்நூல் மூலம் நம்மால் அறிய முடிகிறது.

நூலின் முதல் பகுதியில் பண்டிதர் அயோத்திதாசர் வாழ்க்கை குறித்தும், சமுதாயத்திற்கும் இலக்கியத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு குறித்தும் சுருக்கமாக அறிமுகப்படுத்துகிறது. பண்டிதர் அயோத்திதாசரின் பாட்டனார் கந்தப்பன் என்பவர் தன்னிடம் இருந்த திருக்குறள் சுவடியை அச்சுப் பதிப்பிற்குக் கொடுத்து உதவிய பெருந்தகை. இதனால் திருக்குறள் அச்சுப் பதிப்பு முயற்சிகளின் வரலாற்றை அறிவதும் தவிர்க்க இயலாத தேவையாகிறது.

எனவே, நூலின் இரண்டாம் பகுதி குறளின் பதிப்பு வரலாறு குறித்து விரிவாக விவரிக்கிறது. திருக்குறளின் முதல் பதிப்பு எது, எந்த ஆண்டில் அது யாரால் பதிப்பிக்கப்பட்டது என்பதை விளக்கும் பகுதி இது. ஐரோப்பியப் பாதிரிமார்களாலும் மற்ற பிற ஐரோப்பியராலும் பிறமொழிகளில் குறளின் பகுதிகள் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறினாலும், திருக்குறள் முதலில் ‘தமிழில்’ தஞ்சையைச் சேர்ந்த ஞானப்பிரகாசர் என்பவரால் 1812 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதாகக் குறிப்புகள் பதிவாகியுள்ளன. ஜார்ஜ் ஆரிங்டனின் பணியாளரான கந்தப்பன் (பண்டிதர் அயோத்திதாசரின் பாட்டனார்) தன்னிடம் இருந்த திருக்குறள் சுவடியை ஆரிங்டன் வழியாக பிரான்சிஸ் வைட் எல்லீஸ் அவர்களிடம் சேர்ப்பித்து, 1831 ஆம் ஆண்டு தாண்டவராய முதலியார் மற்றும் முத்துசாமிப்பிள்ளை ஆகியோரால் திருக்குறள் அச்சேறுகிறது என்கிறது மற்றொரு குறிப்பு. இத்தகவலைப் பண்டிதர் அயோத்திதாசர் பதிவு செய்திருக்கும் ஒரு குறிப்பின் மூலம் அறிய முடிகிறது.

ஆனால் இக்குறிப்புகள் கொடுக்கும் ஆண்டுகள் முரண் என்று ஆய்வு கூறுவதை அடியொட்டி முதலில் ஞானப்பிரகாசர் வெளியிட்ட நூலுக்கான சுவடி யாரிடம் இருந்து பெறப்பட்டது என்ற ஆராய முற்பட்டு, 1812இல் வெளியான திருக்குறள் நூலானது கந்தப்பனால் எல்லீசிடம் சேர்ப்பிக்கப்பட்ட சுவடியின் பதிப்பே என்பது காட்டப்படுகிறது. கந்தப்பனால் எல்லீசிடம் சேர்ப்பிக்கப்பட்ட அந்த குறளின் சுவடியை எல்லீஸின் பதிப்பு நிறுவனத்தின் மேலாளர் முத்துசாமிப்பிள்ளையும், ஞானப்பிரகாசரும் அச்சு நூலக வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஞானப்பிரகாசர் அச்சகத்தார் என்பதால் அக்கால பதிப்பு வழக்கப்படி அவர் பெயர் திருக்குறள் பதிப்பின் மேலட்டையில் இடம்பெற்றுள்ளது. ஆகவே ஞானப்பிரகாசர் அச்சகத்தார் பதிப்பித்தவர் அல்ல. வேப்பேரியில் இருந்த அவரது அச்சகத்தை எல்லீஸ் பயன்படுத்த வேண்டிய நிலைக்குக் காரணம், பதிப்பு வெளியிடப்பட்ட ஆண்டில் எல்லீஸின் சொந்த அச்சகம் உருவாகாததால், எல்லீசிடம் இருந்த திருக்குறள் சுவடி ஞானப்பிரகாசர் அச்சகத்தால் அச்சு நூலாகப் பதிப்பிக்கப்பட்டது என்று விளக்குகிறார் ஆசிரியர்.

மூன்றாம் பகுதி, “திருக்குறளா அல்லது திரிகுறளா” எது சரி என்ற கேள்வியை எழுப்பி, அயோத்திதாசர் தந்த விளக்கமான தன்ம, சூத்திர, விநய பிடகங்கள் (மெய்யறம், மெய்ப்பொருள், மெய்யின்பம்) என்ற முந்நூலை வழிநூலாகக் கொண்டு திராவிட மொழியில் அறம், பொருள், காமம் என்ற முப்பால் விளக்கம் தரும் நூல்தான் “திரிகுறள்” என்ற விளக்கம் அறிமுகப்படுத்தப்படுகிறது. தொடர்ந்து அதற்கான பண்டிதர் அயோத்திதாசர் கொடுத்த விளக்கத்தை விரிவாக நூல் அலசுகிறது. அதாவது பாலி மொழியில் திரிபிடக வாக்கியங்களாக அறியப்பட்ட புத்தரின் போதனைகளின் அடியொட்டி வள்ளுவரால் தமிழ் குறள் வெண்பாக்களாக எழுதப்பெற்றவையே ‘திரிக்குறள்’ என்பது அயோத்திதாசர் தந்த விளக்கம்.

வள்ளுவரின் மேல் புகுத்தப்பட்ட புனைவுகள்:

இதுவரை கூறப்பட்ட அறிமுகப் பகுதிகளைத் தொடர்ந்து வரும் நூலின் நான்காம் பகுதியானது நூல் உருவான நோக்கத்தை முன்னிறுத்துகிறது. ‘புனைவுகளில் சிக்கிய வள்ளுவர்’ என்ற இப்பகுதியே ‘திருவள்ளுவர் யார்? அவரது பின்னணி என்ன?’ என்று கேள்விகளுக்குப் பல நூல்கள் வழியாகவும் ஆவணங்கள் வழியாகவும் விடை காண முற்படுகிறது. வள்ளுவரின் வரலாறு என்று பலர் கூறிச்சென்ற, சான்றுகளற்ற புனைவுகளின் தொகுப்புகளை படிப்போருக்கு அறிமுகப்படுத்தும் பகுதி இது. இப்பகுதிக்கு உதவிய ஆவணங்களை நூலாசிரியர் நூலில் பின்னிணைப்பாகவும் இணைத்திருப்பது பாராட்டத்தக்கது.

பார்ப்பன குல தந்தைக்கும், பறையர் குல தாய்க்கும் பிறந்தவர் வள்ளுவர் என்ற புனையப்பட்ட கதைகளின் பின்னணிக்குக் காரணம், வள்ளுவர் குலத்தில் பிறந்த ஒருவருக்கு மிக்க அறிவுத் திறத்தை வெளிப்படுத்தக்கூடிய நூலொன்றை இயற்றும் திறன் இருந்திருக்க வழியில்லை என்ற கருத்தில் மக்களைச் சாதி அடிப்படையில் பொதுமைப்படுத்தும் கோணத்தில் உருவான சிந்தனையன்றி வேறில்லை. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவரையும் ஒரு பிரிவுக்குள் அடக்கிவிட மக்கள் ஆர்வத்துடன் செயல்பட்டுப் புனைவுகளை உருவாக்கினர் என்பது ஒரு கசப்பான உண்மை.

எல்லீஸ் முயற்சியில் வெளியிடப்பட்ட திருக்குறள் நூலில் திருவள்ளுவர் வரலாறு குறித்த புனைவுகள் எதுவும் தமிழிலோ ஆங்கிலத்திலோ இடம்பெறவில்லை. அச்சுக்குச் சென்ற திருவள்ளுவமாலை நூலில் சில பாடல்கள் இடைச்செருகலாக நுழையப்பட்டிருப்பதைச் சுவடி தந்து உதவிய கந்தப்பனார் கண்டறிந்து அதை ஜார்ஜ் ஆரிங்டனிடம் முறையிட்டார் என்று பத்திரிக்கை ஒன்றில் வெளியான செய்தி ஒன்று அயோத்திதாசரால் சுட்டிக் காட்டப்படுகிறது.

திருக்குறளின் முதல் அச்சுப்பதிப்பு வெளியான பிறகு, அதைத் தொடர்ந்து பல பதிப்புகள் பலராலும் வெளியிடப்பட்டன. அங்குதான், அப்பொழுதுதான் கற்பனைகள் கட்டவிழ்ந்து ஓடத்துவங்கின. ஆறு கட்டுக்கதைகளை அயோத்திதாசரே தமது தமிழன் இதழில் ஆவணப்படுத்தியுள்ளார் என்கிறார் நூலாசிரியர் சன்னா.

முதல் புனைவின் உரிமையாளர் திருத்தணிகை விசாகப்பெருமாள் ஐயர். இவர் 1831 இல் தனது திருக்குறள் பதிப்பு நூலின் இறுதியில் ஆதி என்ற பறைச்சிக்கும், பகவன் என்ற பார்ப்பனனுக்கும் இடையில் ஏற்பட்ட முறை தவறிய திருமண (அதாவது சாதிக்கலப்பு திருமணம்) உறவில் பிறந்த 7 பிள்ளைகளில் ஒருவர் வள்ளுவர். அவர் மயிலாப்பூரில் வாழ்ந்த காலத்தில் வைசிய குலப்பெண் ஒருவரை மணந்தார், திருக்குறள் எழுதினார் என்ற பாடலை எழுதி பின்னிணைப்பாகச் சேர்த்தார்.

அடுத்து 1837 இல் திருவள்ளுவமாலை நூலை வெளியிட்ட அவரது தம்பி சரவணப் பெருமாள் ஐயர் அந்த ஏழு குழந்தைகளும் யார் யாரென்றும் எங்குப் பிறந்து எங்கு வளர்ந்தனர் என்றும் கதையை விரிவுபடுத்தி வெளியிட்டார். இவரின் கதை வள்ளுவரின் தாத்தா பாட்டி காலம் வரை பின்னோக்கி நீண்டுவிட்டது.

மூன்றாம் முறையாக வரலாற்றுப் புனைவைப் புகுத்தியவர் வேதகிரி முதலியார். இவர் 1850 இல் தனது கதையைச் சரவணப் பெருமாள் ஐயரிடம் இருந்து எடுத்து தாம் பதிப்பித்த திருக்குறள் பதிப்பில் இணைத்து விட்டதாகத் தெரிகிறது.

வள்ளுவரின் பெற்றோர் ஆதி என்ற பறைச்சி, பகவன் என்ற பார்ப்பான் என்பதுதான் அனைத்து வரலாற்றுப் புனைவுகளிலும் காட்டப்படுகிறது. வள்ளுவரின் ‘ஆதிபகவன் முதற்றே உலகு’ என்பதே 1831-1850 ஆண்டுகளுக்கிடையே உருவான அனைத்துப் புனைவுகளுக்குமான தொடக்கப் புள்ளி. வள்ளுவரின் சொல்லைக் கொண்டே அவரை அடையாளப்படுத்திவிட எடுத்த முயற்சிகளின் விளைவு இது.

இருப்பினும், இக்கதைகளுக்கும் மூலக்கதைகளை வேதநாயகம் பிள்ளை தொகுத்த ஆவணங்கள் சில குறிப்பிடுகின்றன, அவை பின்னர் மெக்கன்சி ஆவணங்களின் தொகுப்பில் இடம் பிடித்தவை என்கிறார் நூலாசிரியர். அக்கதைகள் இராம அவதாரம் வரை கற்பனைகளை நீட்டிச் செல்பவை என அறிய நேர்கையில், உண்மையிலேயே மக்களின் மிதமிஞ்சிய கற்பனைத் திறனைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.

வேதநாயகம் பிள்ளை தொகுத்த ஆவணப் பகுதி காட்டும் கதை (1772), விசாகப்பெருமாள் ஐயர் (1831), சரவணப் பெருமாள் ஐயர் (1837), வேதகிரி முதலியார் (1850) காட்டிய பதிப்புக் கதைகளை மேலதிகத் தகவலாகப் பின்னிணைப்பாக நூலில் கொடுத்துள்ளார் கௌதம சன்னா. உருவாக்கப்பட்ட ஒரு கதை ஒவ்வொரு முறையும் வளர்ந்து பல துணை கதைகளையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு பரிணாம வளர்ச்சி அடையும் இந்த கதைகள் வளரும் முறையானது, புராணக் கதைகள் உருவாகிப் பல்கிப் பெருகி வளர்ந்த விதம் குறித்து ஆய்வோருக்கு மிகவும் உதவக்கூடிய ஒரு கருவூலம். மேலும் இத்துறையில் ஆய்வுகள் செய்ய விரும்புவோருக்கு உதவும் பகுதி இது. புனைவுகளின் நோக்கம் வழியே அக்கால மக்களின் சிந்தனை ஓட்டத்தையும், அவர்கள் சிந்தனை மீது சமூகம் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தையும் சமூக வரலாற்றில் ஆர்வம் உள்ளோர் எடைபோடலாம்.

இவற்றில் சிலவற்றில் ஆதி பார்ப்பனக் குடும்பத்துப் பெண் என்ற கோணங்களும் உண்டு. இக்காலத் திரைப்படங்களில் காட்டப்படுவது போன்று, பிரிந்து போன குடும்பத்தினர் தங்களின் குடும்பப் பாடலைப் பாடி தொலைந்து போனவரைத் தேடிப் பிடிக்கும் முறையில் கூட ஒரு கதை இருந்திருக்கிறது (பக்கம்-58, 118) என்பதும் படிக்கும் பொழுதே புன்முறுவலை வரவழைக்கும் ஒரு வேடிக்கை. கடவுளர் ஒருவர் மீது ஒருவர் சாபம் விட்டுக் கொண்டு பூமியில் பிறப்பது முதற்கொண்டு இக்கதைகளில் புராணப் புனைவு இலக்கணங்கள் எவையும் விட்டுவைக்கப் படவில்லை. இவற்றுடன் ‘கபிலர் அகவல்’ பாடலையும் ஆசிரியர் இணைத்திருக்கலாம்.

பின்னிணைப்புகள் காட்டும் அனைத்து திருவள்ளுவர் வரலாற்றுப் புனைவுகளுக்கும் மூலக்கதை ‘கபிலர் அகவல்’ என்றே இருந்திருக்க வாய்ப்புண்டு (பார்க்க – கபிலக்கல், குடவாயில் பாலசுப்பிரமணியன்). சோழர், பாண்டியர் ஆட்சிகள் தமிழகத்தில் சரிந்த 14ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்து சாதிச் சண்டைகள் கட்டுக்கடங்காமல் உச்சக்கட்டத்திற்குப் போன ஒரு காலத்தில் எழுந்த இலக்கியங்கள் எல்லாம் சாதிகளைக் குறிப்பிட்டவாறே எழுதப்பட்டது வழக்கமானது. எடுத்துக்காட்டாக காளமேகப் புலவர் எழுதிய தனிப்பாடல்கள் என்ற தொகுப்பைக் குறிப்பிடலாம். இப்போக்கைக் கட்டுப்படுத்த எண்ணி பேதங்களைச் சாடும் உள்ளம் கொண்டோரும் அக்காலத்திலிருந்துள்ளனர். எல்லா சாதியிலுள்ளோரையும் மனிதர்கள் தான் எனக் காட்ட இக்காலகட்டத்தில் எழுந்த நூல்கள் பெரிய புராணம், கபிலர் அகவல் போன்றவை.

கபிலர் அகவலில் சங்கப்புலவர்கள், சங்ககால மாந்தர்களை உள்ளடக்கி அறிவுக்குச் சாதி பேதமில்லை எனக்காட்ட வள்ளுவர், கபிலர், ஒளவையார், அதியமான், உப்பை, உருவை, வள்ளி என அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள். அவர்கள் பெற்றோரே பறையரும்-பார்ப்பனரும் கலப்பு மணம் செய்தோர்தான் எனக் காட்ட ஒரு புனைவு உருவாக்கப்பட்டுள்ளது. இப்புனைவில் பெற்றோர் பெயர் தேர்வுக்கு ‘ஆதி பகவன் முதற்றே உலகு’ என்ற குறளின் வரியே அடியெடுத்துக் கொடுத்திருக்கிறது என்பதையும் காண முடிகிறது. இப்பிள்ளைகள் எழுவரும் வள்ளுவர், பார்ப்பனர் (கபிலர்), பாணர் (ஒளவை), வேளிர் (அதியமான்) என கொடுக்கப்படும் குலப்பிரிவுகள் யாவும் சங்கப் பாடல்கள் குறிப்பிடும் உண்மைச் செய்திகள்தான். மனிதர்கள் எவ்விடத்தில் வளர்க்கப்பட்டாலும் மேன்மையானவர்களே என்று காட்டும் ஒரு முயற்சியே கபிலர் அகவல் பாடல் உருவான நோக்கம். “தமிழின் வளர்ச்சி எல்லாவிடத்தும் என்பது தான் நூல் யாத்தோனின் உள்ளக்கிடக்கையாக இருந்திருத்தல் வேண்டும்” என குடவாயிலாரும் தம் கட்டுரையில் குறிப்பிடுவார். அவ்வாறுதான் பெரியபுராணமும் அனைத்துக் குலத்தில் பிறந்தோரையும் கடவுளின் அன்பர்களாக உயர்த்திக் காட்ட முயலும். ஆனால் நம் மக்கள் படிப்பதில் கொள்ள வேண்டிய கருத்தைக் கொள்வார் இல்லை என்பதுதான் நடைமுறை வழக்கு.

கபிலர் அகவல் கொடுத்த செய்திகளையே சான்றாக வைத்து மேலும் மேலும் சாதி கதைகளை எழுதி வள்ளுவர் மேல் திணித்தார்கள். ஆக, இக்கதைகள் “கி.பி. 14ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 19ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலகட்டத்தில் தமிழ்மக்கள் கபிலர் பற்றி இக்கதைகளையே அறிந்திருந்தனர்” என்று குடவாயிலார் சொல்வது மறுக்க முடியாத உண்மை. இக்கதைகளையே நூல் வெளியிட்ட விசாகப்பெருமாள் ஐயர், அவரது தம்பி சரவணப் பெருமாள் ஐயர், வேதகிரி முதலியார் போன்றோர் தாம் ஆற்றும் இலக்கியப் பணியாக நினைத்து தாங்கள் வெளியிட்ட திருக்குறள் நூல்களில், தங்கள் கைவண்ணத்தில் உருவாக்கி இணைத்து விட்டிருக்கின்றனர். இவையாவும் மக்கள் அறிந்து அவர்களிடம் ஏதோ ஒரு வகையில் புழங்கிக் கொண்டிருந்த வள்ளுவரின் பிறப்பு வரலாற்றுப் புனைவுகள்தாம். வைதீக சமயம் இதுபோன்ற கற்பனைக் கதைகளைக் கேள்வி கேட்காமல் ஏற்போராகவே பக்தி என்ற பெயரில் தமிழரின் அறிவை மழுங்கடித்து வைத்திருந்தது இன்றும் வைத்திருக்கிறது.

வள்ளுவர் குறித்த பற்பல கட்டுக்கதைகளை ஆசிரியர் கௌதம சன்னா தம் நூலில் அறிமுகப்படுத்திய பின்னர், அதற்கு அடுத்து வரும் பகுதி சைவ சமய, வைதீக சமய தாக்கத்தில் உருவிழந்து போன வள்ளுவர் யார் என்ற கேள்வியை அயோத்திதாச பண்டிதர் தனது ஆய்வுக் கோணத்தில் அணுகியதை விளக்கும் பகுதியாக அத்தியாயம் 5 முதல் 13 வரை அமைகிறது.

siragu thiruvalluvar yaar1

திருவள்ளுவ நாயனார் மற்றும் திருவள்ளுவ சாம்பனார் என அறியப்படும் புலவர்கள் இரு வேறு புலவர்கள் என்பார் பண்டிதர் அயோத்திதாசர். திருவள்ளுவ நாயனார் குறள் தந்தவர். ஞானவெட்டியான் நூலை எழுதிய திருவள்ளுவ சாம்பனார் என்பவர் நாயனாருக்கும் பிற்காலத்தவர். மாமதுரைக் கச்சன் (அல்லது வடமதுரைக் கச்சன்) என்று அறியப்படும் ‘கூர்வேல் வழுதி’ என்ற அரசனுக்கும் ‘உபகேசி என்ற அரசிக்கும் பிறந்து நாயனார் என்ற பெயர் சூட்டப்பட்ட இளவரசன்தான் குறள் யாத்த வள்ளுவராக நாம் அறியப்படும் திருவள்ளுவ நாயனார் எனக் கூறும் அயோத்திதாசர் ‘நல்கூர் வெளியார்’ என்பர் எழுதிய ‘திரிகுறள் சாற்றுக்கவி’ பாடலில் செந்நாப் போதரின் பெற்றோர் யாவர் எனக் குறிக்கும் வரிகளை இதற்குச் சான்றாகக் காட்டுகிறார்.

உலக இன்பங்களில் பற்றற்று வளரும் வள்ளுவ நாயனார் பெற்றோர் அனுமதியுடன் துறவறம் பூண்டு பௌத்த சங்கத்தில் சேர்கிறார், அக்காலத்தில்தான் குறள் எழுதினர் என்று கூறும் அயோத்திதாசர் அதற்கு ‘கீரந்தையாரின்’ சாற்றுக்கவி பாடலை சான்றாக முன்வைக்கிறார். சிலாசாசன தியான பஞ்சரத்தினப்பா என்ற வள்ளுவரின் வரலாறு கூறும் பாடல் திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயில் (கல்வெட்டில் பதிப்பிக்கப்பட்டு இன்று காணாமல் மறைந்து போன) கல்வெட்டில் உள்ள பாடல் மற்றொரு சான்றாகப் பண்டிதரால் காட்டப்படுகிறது. இந்த ‘திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயில்’ என்பது முன்னர் வீரராகுல விகாரையாக இருந்து, பின்னர் வைணவக் கோயிலாக மாற்றம் பெற்றுள்ளது, அதற்கு அங்குள்ள பெளத்த பரிநிர்வாண சிலை சான்று எனப் பண்டிதரின் கள ஆய்வின் முடிவுகள் குறிப்பிடுகிறது (பக்கம்- 90). திருவள்ளூர் தான் வள்ளுவர் திருக்குறளை நிலைபெறச் செய்த இடமாகக் காட்டப்படுகிறது. வள்ளுவர் பிறந்த காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்றும் (பக்கம்- 90), வள்ளுவர் பிறந்து வாழ்ந்த இடங்களாகப் பாடல்களில் காட்டப்படும் ஊர்கள் இன்றும் திருவள்ளூர் பகுதியில் இருப்பதும், அப்பகுதியில் மேலும் பல பௌத்த பின்னணி பெயர் கொண்ட ஊர்களும் அமைந்திருப்பது தற்செயலானதல்ல, ஒரு காலத்தில் இங்கு பௌத்தம் செழித்திருந்திருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவது என்கிறார் நூலாசிரியர்.

வள்ளுவர் யார்? அவர் பின்னணி? என்ன என்ற வரலாற்று ஆய்வில் ஆதி மற்றும் பகவனின் கைவிடப்பட்ட குழந்தை அவர், ஆதி-பகவனின் ஏழு பிள்ளைகளான சேரமான்/சிலைமான்/அதியமான், கபிலர், வள்ளுவர், உப்பை, உருவை, ஔவை, வள்ளியம்மை என்ற எழுவரில் ஒருவர் என்ற கோணம் மட்டுமோ, அல்லது அயோத்திதாசர் காட்டும் இளவரசர் என்ற கோணமோ மட்டும் இல்லை.

சமயக் கருத்துகளின் அடிப்படையில் அவர் சமணர் என்று வாதிடுவோரும் உண்டு. அவர்கள் குறளின் கருத்துக்கள் சுட்டும் சமண கொள்கைகளின் அடிப்படையிலோ, அல்லது சமணர்கள் தங்கள் வழிபாட்டில் பலநூறு ஆண்டுகளாக வள்ளுவரைப் போற்றும் வழக்காற்றியல் அடிப்படையிலோ அக்கோணத்தை முன்வைப்பர் (பார்க்க, “தமிழகத்தில் ஜைனம்”, ஜீவபந்து டி. எஸ். ஸ்ரீபால்). வள்ளுவரின் மற்றொரு வரலாற்றுக் கோணமாக, குறளின் கருத்துகளை அகச் சான்றுகளாகக் கொண்டும், அவரது வள்ளுவர் என்ற பெயரின் அடிப்படையில் ஆராய முற்படும் அண்மைய ஆய்வுச் செய்திகளும் உண்டு. அக்கோணத்தில் வள்ளுவரை வழிபடும் கேரள வரலாற்றுத் தகவலோஅல்லது வள்ளுவர் என்ற பெயரின் அடிப்படையில் வள்ளுவ நாடு அவர் பிறப்பிடமாக இருக்கக்கூடும் என்ற ஆய்வுக் கோணங்களோ கூட உண்டு (பார்க்க, “திருவள்ளுவர் பிறந்தது குமரி மண்ணில்”, டாக்டர் எஸ். பத்மநாபன் ஆய்வுகள்).

இத்தகைய மாறுபட்ட வரலாற்றுக் கோணங்களும் வள்ளுவர் யார் என அவர் பின்னணியை ஆராயும் இந்த நூலில் ஓரிரு பத்திகளில் கூட காட்டப்படவில்லை என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இதனால், வள்ளுவரின் வரலாறு குறித்து ஆய்வு செய்ய விரும்பும் இந்த நூலின் நோக்கத்தை, முழுமையை நோக்கிச் செல்லாத நிலையில் உள்ள ஒரு குறைபாடாகவே கருத வேண்டியுள்ளது. எனவே, அயோத்திதாசர் பண்டிதரின் பார்வையில், அவர் ஆய்வின் அடிப்படையில் வள்ளுவர் யார் என்பதற்கு அவர் வைத்த சான்றுகளுக்கு இந்நூலில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என முடிவெடுக்கலாம். சமண, சைவ வள்ளுவர் உரிமை கோரல்களுக்கிடையே வள்ளுவரின் பௌத்த உரிமை கோரலுக்குரிய தரவுகளையும் விவரிப்பதுதான் நூலின் கோணம் எனக் கொள்ளலாம்.

திருவள்ளுவர் யார்? அவரது பின்னணி என்ன?

- பண்டிதர் பார்வைகளின் மீது ஒரு மீளாய்வு:

திருவள்ளுவர் யாரென்று கூறும் அயோத்திதாசர் ஆய்வுகளும் அவரது முடிவுகளுமே மீள்பார்வைக்கு உட்படுத்த வேண்டியிருக்கும் என்பதை நாம் மறக்கலாகாது. நூலாசிரியர் கௌதம சன்னாவும் நூலின் இறுதி அத்தியாத்தை அதற்கெனவே ஒதுக்கியுள்ளார் (பக்கம்- 97).

வள்ளுவரின் பௌத்தப் பின்னணி என்ற வரலாறு குறித்துப் பரவலாக அறியப்படாத செய்திகளைப் பண்டிதர் அயோத்திதாசர் தேடி எடுத்து வழங்கியுள்ளார். அவரால் வள்ளுவர் குறித்து ஆய்வுலகத்திற்கு மற்றொரு கோணம் காட்டப்பட்டுள்ளது. வள்ளுவர் வாழ்வின் பின்னணி குறித்து அயோத்திதாசர் கூறும் செய்திகளில் இயற்கைக்குச் சவால் விடும் கற்பனைப் புனைவுகள் எதுவும் இல்லை என்பதுடன், தனி மனிதர் ஒருவர் அரச குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, துறவியாக மறைந்த இயல்பான வாழ்க்கைமுறையும், அம்மனிதர் அறிவுரைகளாகக் கொடுத்த சமூகப் பங்களிப்பும், அவரை அவற்றுக்காக நினைவுகூர விரும்பிய மக்களும், இன்றும் அவர் பெயரை ஒட்டி அமைந்துள்ள ஊரும் போன்ற செய்திகளைப் பண்டிதர் காட்டும் வள்ளுவரின் வரலாற்றுக் கோணத்தின் மூலம் நாம் அறிகிறோம்.

சைவர் தாங்கள் வழக்காற்றிலிருந்த கருத்துகளின் அடிப்படையில் புனைவுப் புராணங்கள் தோற்றுவித்தனர் என்ற அதே அளவையை பௌத்த உரிமை கோரல் பதிவுகளுக்கும் நாம் நீட்டிக்கலாம். பிறர் மேற்கொண்ட அதே முறையில் அவர்களும் தாங்கள் வழக்காறு மூலம் அறிந்தவற்றின் அடிப்படையில் வள்ளுவர் ஒரு பௌத்த இளவரசர் என்று பஞ்சரத்தினப் பாடல் எழுதியிருக்கலாம், கோயிலில் (இன்று மறைந்துவிட்டதாகக் கூறப்படும்) கல்வெட்டாக வெட்டி வைத்திருக்கலாம் (பக்கம்- 89). தொல்பொருள் ஆய்வாளர் புராணக்கதைகள் கூறும் கல்வெட்டுத் தகவலை அத்தகைய நம்பிக்கை அக்கால மக்களிடம் இருந்தது என்ற அளவில் மட்டும்தான் ஏற்றுக் கொள்வது வழக்கம்.

மேற்கொண்டு, அயோத்திதாசர் தந்த விளக்கமான தன்ம, சூத்திர, விநய பிடகங்கள் (மெய்யறம், மெய்ப்பொருள், மெய்யின்பம்) என்ற முந்நூலை வழிநூலாகக் கொண்டு திராவிட மொழியில் அறம், பொருள், காமம் என்ற முப்பால் விளக்கம் தரும் நூல்தான் “திரிகுறள்” என்பதும் (பக்கம்- 89, 91) ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். “திரிபிடகத்தை புத்த தன்மமென்றும், திரிக்குறளை திருவள்ளுவர் தன்மமென்றும் கூறத்தகும்” என்பதும் கூட பண்டிதர் கருத்துதான் (பக்கம்- 91). அதாவது, திரிபிடகத்தை முன்மாதிரியாகக் கொண்டாலும் திருவள்ளுவர் கூறும் மெய்ப்பாடு தனித்துவம் பெற்றது என்ற விளக்கம் தருகிறார் அயோத்திதாசர்.

மேற்கூறப்பட்ட பௌத்த நூல் கருத்துகளையும் திருக்குறள் கருத்துகளையும் ஒப்பிட்டு எந்த அளவு ஒப்புமை இருக்கிறது என ஆராய்ந்து அறிய வேண்டியது நம் முன் எதிர் நிற்கும் மற்றொரு பெரும் ஆய்வு. முனைவர் நாகசாமி வடமொழியிலிருக்கும் ஒருசில நூல்களை அடியொற்றி திருக்குறள் எழுதப்பட்டது என்று கூறுவதை எந்த அளவில் ஒப்பிட்டு, இரு கோட்பாடுகளுக்கு இடையில் இருக்கும் அடிப்படை கொள்கை மாறுபாடு கொண்ட பொருந்தா கருத்துகளைச் சுட்டிக் காட்டி அவர் கருத்தை நாம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோமோ அதை இங்கு நினைவு கூரல் தகும். அதே போன்ற ஓர் இலக்கிய ஒப்பீட்டு ஆய்வுமுறை குறள் மற்றும் திரிபிடக பௌத்த நூல்களின் கருத்துகள் மீதும் வைக்கப்பட வேண்டும். அந்த வகையில், கௌதம சன்னா வள்ளுவர் குறித்த புதிய ஆய்வுகளுக்கான பாதையை இந்நூலின் வழியாக ஆய்வாளர்களுக்கு அகலத் திறந்து வைத்துள்ளார்.

அறிவியல் அடிப்படையில், சான்றுகள் மூலம் வரலாற்றைக் கட்டமைக்காத இந்திய வழக்கமும், புராணக்கதை புனைவுகளை உண்மை என்று நம்பி அவற்றை வரலாறாகக் கூறும் முறையும் இந்திய வாரலாற்றுப் புலத்தில் நிலவும் மிகப் பெருங்குறைபாடு. மேலை நாட்டுக் கல்வியின் தாக்கத்தில் சென்ற இரு நூற்றாண்டுகளாக இந்தியாவின் அணுகுமுறை வரலாற்றைக் கட்டமைப்பதில் மாற்றம் கண்டுள்ளது என்பதுதான் உண்மை. இன்று மரபணு ஆய்வுகள், தொல்லியல் தடயங்கள் மூலம் வரலாற்றை நாம் மீட்டுருவாக்கம் செய்து வரும் ஒரு நிலைக்கு நாம் மாறிவிட்டாலும் கூட, புனைவு எது? உண்மை எது? எது அறிவியலுக்குப் புறம்பானது? எவை இயற்பியல் விதிகளுக்கு அப்பாற்பட்டவை? என்பதை நம்மைச் சுற்றியிருக்கும் பலர் இந்த நூற்றாண்டிலும் சீர்தூக்கிப் பார்க்க மறுக்கும் நிலைக்குப் புராணக்கதைகளை எதிர்க் கேள்விகள் கேட்காமல் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையில் மக்கள் ஊறிப் போயிருப்பதே காரணம்.

அந்த வகையில்…. காலந்தோறும் திருவள்ளுவர் வரலாறு என்ற பேரில் வள்ளுவர் மீது தொடர்ந்து தூவப்பட்டு புழுதியாகப் படிந்துவிட்ட புனைகதைகள் என்ற தூசியைத் தட்டி வள்ளுவர் வரலாற்றை மெருகுபடுத்த முற்பட்ட கௌதம சன்னா அவர்களின் முயற்சிக்குப் பாராட்டுகள். வள்ளுவர் குறித்த மற்றொரு கோணத்தை இந்த நூல் மூலம் அறிமுகப்படுத்தியதற்கும் பாராட்டுகள். அவரது எளிமையான எழுத்து நடை சிறப்பு. நூலைப் படிப்போர் எவரும் வரலாறு என அறிமுகப்படுத்தும் புனைவுகளை ஆய்வுக் கோணத்தில் கேள்வி எழுப்பி சீர் தூக்கி ஆராயும் மனப்பான்மை பெற்றிடுவர் எனவும் நம்பலாம்.

“மெய்ப்பொருள் காண்பதறிவு” என்ற கருத்தைப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வலியுறுத்திய வள்ளுவம் என்றும் உண்மையை நோக்கி நடைபோட முயலும் ஆய்வாளர்களுக்கு உறுதுணையாகவே இருக்கும்.

நூல் விவரம்:

திருவள்ளுவர் யார் ?

கட்டுக்கதைகளைக் கட்டுடைக்கும் திருவள்ளுவர்

ஆசிரியர்: கௌதம சன்னா

முதற்பதிப்பு – டிசம்பர் 2019

வெளியீடு: தமிழ் மரபு அறக்கட்டளை – பன்னாட்டு அமைப்பு

விலை: ரூ.180/-


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “திருவள்ளுவர் யார்? அவரது பின்னணி என்ன?”

அதிகம் படித்தது