மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

திருவாடானை வட்டார விடுதலைப் போராட்டங்களும், அதன் விளைவுகளும்

ம. முத்து பாலகிருஷ்ணன்

Sep 17, 2022

siragu poraattam2
தேவகோட்டையைச் சார்ந்த தேசத் தொண்டர்களைத் திருவாடானைச் சிறையில் அடைப்பது என்பது ஆங்கிலேய அரசாங்கத்தின் நடைமுறையாக இருந்து வந்தது. இதன் காரணமாகதேவகோட்டைக்கும் திருவாடானைக்கும் இடையே ராஜாங்கத் தொடர்பு இருந்து வந்தது. இராமநாதபுர மாவட்டத்தில் தற்போது உள்ள திருவாடானை அக்காலத்தில் அரசுகாஜானா, நீதிமன்றம், காவல் நிலையம், சிறை போன்ற அமைப்புகளைக் கொண்டு விளங்கியது. திருவாடானை சிறையை முன்வைத்து வெள்ளையனே வெளியேறு போராட்டம்மிக எழுச்சியுடன் நடந்தது. இதுகுறித்த தகவல்களை இவ்வியல் விளக்குகிறது.

ஆகஸ்டு புரட்சி அல்லது வெள்ளையனே வெளியேறு புரட்சி

1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் புரட்சியை தனது வாழ்வின் கடைசி போராட்டமென அறிவித்தார் மகாத்மா  காந்தியடிகள். அடுத்த நிமிடமே இந்திய துணைக்கண்டமே பற்றி எரியத்தொடங்கியது. பால் குடித்த பிள்ளை கூட தாய் மடியை விரட்டிறங்கி தாய்நாடு காக்கப் புறப்பட்டது.

போராட்டத்திட்ட அறிக்கையை ஜெய்பரகாஷ் நாராயணன், அச்சுதப்பட்டவர்த்தன், ராம்மனோகர் லோகியா, அசப்அலி அருணா அசப்பலி முதலியோர் தயாரித்து அளித்தனர். அந்த அறிக்கை தமிழக இளைஞர்களை தட்டி எழுப்பியது.
தேவகோட்டையில்ஆங்கில அரசுக்கு எதிராகப் பேசிய சின்ன அண்ணாமலை, மற்றும் இராமநாதன் இருவரும் திருவாடானைச் சிறையில்  அடைக்கப்பட்டனர். இதன் காரணமாக பெரியபோரட்டம் ஒன்று திருவாடானை பகுதி சார்ந்த தேசத் தொண்டர்களால் நடத்தப்பெற்றது.

“திருவாடானை பகுதி சார்ந்த தேசத் தொண்டர்கள் அனைவரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி திருவேம்பத்தூரில் திரள வேண்டுமென” விளாங்காட்டூர் பாலபாரதி செல்லத்துரை அறிவித்தார். தொண்டர்கள் மின்னலென சுழன்று அனைத்து கிராமங்களுக்கும் செய்தி தெரிவித்தனர். செய்தி காட்டுத்தீப்போல் பரவச்சருகனி, திருவேகம்பத்தூரை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.

அன்றைய சருகனி வட்டார காங்கிரஸ் கமிட்டித் தலைவர்குமாரவேலூர் மு. லெ. சொக்கலிங்கம் செட்டியார் தலைமையில் சொக்கநாதபுரம் ஆதி.சண்முகம் செட்டியார், பள்ளமடம் வெள்ளையன் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் சருகனியில் அணி திரண்டனர். அதே நேரத்தில் திருவேகம்புத்தூரில் காங்கிரஸ்கமிட்டியின் துணைத்தலைவர்கள் வென்னியூர், முனியப்பதேவர், சித்தூர் சிவஞானத்தேவர், கார்மேகத்தேவர், விளாங்காட்டூர் முத்திருளப்பன் சேர்வை, காவதுகுடி நன்னி ஆகியோர் உள்ளிட்ட ஏரளாமானோர் அணி திரண்டனர்.

சிலமணிநேரத்திற்குள் அனைவரும் திருவேம்பத்தூரில் ஒன்று கூடினர். அன்றைக்குசிவங்கை எஸ்டேட் கலெக்டர் பொன்னுச்சாமி திருவேம்பத்தூரில் பயணியர்விடுதியில் தங்கியிருந்தார்.

போராட்டத்தின் திட்டத்தை தெளிவாக வகுத்திருக்க பாலபாரதி செல்லத்துரை தனது வலதுகரமாக திகழ்ந்த காவதுகுடி நன்னியை அழைத்து தெளிவுபடுத்தினார். சொன்ன மாத்திரத்திலேயே காவதுகுடி நன்னிதலைiயில் தொண்டர் படைசருகனி முதல் தொண்டிவரை சாலையோரம் நிற்கின்ற அனைத்து மரங்களையும் வெட்டி வீழ்த்தியதுடன் அந்தச் சாலையோரங்களில் அமைக்கபட்டுள்ளதந்தி கம்பிகளையும் துண்டித்தனர். 1942 ஆம் ஆண்டு 17 ஆம் தேதி காலையில்தொண்டர் முத்தைய்யாவும், திருவேம்பத்தூர் எம்.ஜெயராம பிள்ளையும் மிதிவண்டிகளில் தொண்டி வரை சென்று தந்திகம்பிகளை வெட்டி தபால்தந்தித்  தொடர்பில்லாமல் செய்தார்கள். இதன் வழியாகவே ஆங்கிலேயர்களுக்குத் தகவல் பரிமாற்றம் நடைபெற்று வந்தது. மேற்கண்ட செயலால் ஆங்கிலேயர்களுக்குத் தகவல் பரிமாற்றம் தடைபெற்றது.

விளாங்காட்டூர் சின்னத்துரைதேவர், தொண்டர்முத்தையா மற்றும் சிலரும் கலெக்டர் பொன்னுசாமி தங்கியிருந்த பயணியர் விடுதிக்குள் நுழைந்து அவர் கையிலிருந்த ரிவால்வரை பிரித்து கொண்டனர். வெளியே நின்றுகொண்டு இருந்த அவரது கார் தீ வைக்கப்பட்டது. கொதித்து எழுந்தமக்களின் நிலைகண்டு கலெக்டர் பொன்னுச்சாமி பயந்து அலறிக்கொண்டு அம்மன் கோயிலுக்குள் ஓட அவரை துரத்தி கொண்டு ஓடிய மக்கள்  கலெக்டரை கோவிலுக்குள் வைத்து பிடித்துவிடுகின்றனர். கோவிலுக்குள் தஞ்சம் புகுந்த அவரை ஒன்றும்செய்ய வேண்டாம் விட்டுவிடுங்கள் என்றார் செல்லத்துரை.

1931 ஆம் ஆண்டு வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்புச் சத்தியா கிரகத்தின் போது புளிய ஆக்கைகள் கொண்டு ரத்தம் சொட்டச் சொட்ட விடுதலை வீரர்களை தாக்கும்படி ஆணை பிறப்பித்த அதே பொன்னுச்சாமி தான் அவர் என்பதை அறிந்து வைத்திருந்தால் தான் புரட்சிபடை இவரை விரட்டியது. கோவிலுக்குள் போய் கதவை சாத்திக் கொண்ட கலெக்டர் பொன்னுச்சாமி இரவோடு இரவாக சிவகங்கைக்கு சென்று உயிர்தப்பினார்.

அடுத்தநொடியே மறு உத்தரவை பிறப்பித்தார் பாலபாரதி செல்லத்துரை நாளை காலை வீரகுலச்சிங்கங்களே திருவாடானையை நோக்கி புறப்படுங்கள். அங்கே நம்மக்களை சித்தரவதைசெய்யும் காவல் நிலையமும் கிளைச்சிறையும் இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கவேண்டும்! சிறையிலிருப்பவர்களை விடுவிக்க வேண்டும். செய் அல்லது செத்துமடி என்று தாய்நாட்டின் மானங்காக்க புறப்படுக சிங்கங்களே! வாழ்ந்தால் மானத்தோடு வாழ்வோம்! அல்லது செத்து மடிவோம் என சொல்லித் தனது மேல் துண்டைஎடுத்து வெளியே வீகினார் பாலபாரதி செல்லத்துரை.

அவரின் வழிகாட்டல்படி பலதொண்டர்களும் இளைஞர்களும் திருவாடனை நோக்கிச் செல்ல அணிவகுத்தனர். நன்பகல்அளவில் புரட்சி படை திருவாடானை நகருக்குள் புகுந்தது. அதே நேரத்தில்தொண்டியிலிருந்து வந்த புரட்சிப் படையயும் சேர்த்து கொண்டது. பலஆயிரம்புரட்சி வீரர்கள் ஒன்று சேர்ந்தனர்.

வெள்ளையனே வெளியேறு
செய் அல்லது செத்துமடி
பாரதமாதாவுக்கு ஜே!
என்றகுரல் விண்ணை பிளந்தது. அந்த சமயத்தில் “சிங்கங்களை விடுதலை செய்யுங்கள் காவல் நிலையத்தை தகர்தெரிங்க” என்னும் பாலபாரதி செல்லத்துரையின் வீரக்குரல் ஒலித்தது. மதங்கொண்ட யானையைப் போல புரட்சி படையினர் சிறைச்சாலையை உடைத்துசின்ன அண்ணாமலை, டி.எஸ். இராமநாததனையும் விடுவித்தனர். பாலபாரதியும், சொக்கலிங்கம் செட்டியாரும் கட்டி அணைத்து கண்ணீர் மல்க அவர்களதுகன்னங்களில் முத்தமிட்டனர். அங்கு பறந்து கொண்டிருந்த யூனியன் ஜாக் கொடிஇறக்கபட்டு இந்திய தேசிய கொடியை ஏற்றினார். செல்லத்துரை, வெள்ளையர் பிடியிலிருந்த திருவாடானை மீட்கபட்டுவிட்டது. நமது நாடு விடுதலை பெற்றுவிட்டது எனச் சுதந்திர பிரகடனம் செய்தார்.

திருவாடானை சிறை உடைப்பு பற்றிச் சின்ன அண்ணாமலை தன் சொன்னால் நம்ப மாட்டீர்கள் என்ற நூலில் எழுதியுள்ளார். அதனை அப்படியே இங்கு தருவது இன்னும் இச் சூழலைத் தெளிவுபடுத்துவதாக இருக்கும்.

சுமார் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்ஒன்று சேர்ந்து திருவாடனை சப்-ஜெயிலுக்கு என்னை விடுதலை செய்ய வந்துகொண்டு இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டதும் சப்-ஜெயிலைச் சுற்றி இருந்தசர்க்கார் அலுவலகங்களான மாஜிஸ்திரேட் கோர்ட், தாசில்தார் காரியாலயம், கஜானாஅதிகாரி, போலீஸ் ஸ்டேஷனில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் போலீஸ் கான்ஸ்டபிள்கள் அனைவரும் என்னை அடைத்து வைத்திருந்த சப்-ஜெயிலுக்கு முன்பு வந்தார்கள். எல்லோரும் என்னிடம் என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டார்கள்.

நான் சொன்னேன், ‘இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட ஜனங்கள் வருவதால் அவர்களைத் தடுத்து நிறுத்துவதோ, வன்முறையை உபயோகிப்பதோ இப்போது உள்ள சூழ்நிலைக்குச்சரியாக இருக்காது. இது சுதந்திரப் போராட்ட வேகம். மக்களிடம் ஏற்பட்டிருக்கும் உணர்ச்சியை மதித்து அவர்களுக்கு வழிவிட்டு நில்லுங்கள். அனைவரும் ஒதுங்கிக் கொள்வதுதான் இந்த நேரத்தில் செய்யக்கூடிய புத்திசாலித்தனமான காரியம்’ என்று அவர்களுக்கு ஆலோசனை கூறினேன்.
அவர்கள் சொன்னார்கள், ‘நாங்களும் எங்கள் குடும்பமும் குழந்தை குட்டிகள் அனைவரும் பக்கத்திலுள்ள லையனில்தான் குடியிருக்கிறோம். வருகின்ற கூட்டம் எங்களையும் எங்கள் குடும்பத்தாரையும் கோபப்பட்டுத் தாக்கினால் என்ன செய்வது?’ என்றுகேட்டார்கள்.

‘அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதற்கு நான்பொறுப்பு’ என்று சொன்னேன். அப்போது அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டரின் பெயர் ‘சூரப்புலி’ சுந்தரராஜ ஐயங்கார் என்பது ஆகும்.

என் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு நான் சொன்னபடி போலீசார் தங்கள் உடைகள் அனைத்தையும் கழற்றிநான் இருந்த சப்-ஜெயிலுக்கு முன்னால் போட்டார்கள். எல்லோரையும் அவரவர்வீட்டுக்குப் போய் நிம்மதியாக இருக்கும்படி கூறினேன். அதன்படி அவர்கள் அனைவரும் செய்தார்கள்.

இது நடந்த சிறிது நேரத்துக்கெல்லாம் பல ஆயிரக்கணக்கான மக்கள் கையில் கடப்பாரை, கோடாரி, அரிவாள், ஈட்டி முதலிய ஆயுதங்களுடன் பலத்த கோஷம் போட்டுக் கொண்டு சப்-ஜெயிலை நோக்கி வந்தார்கள். பலர் ஜெயிலை உடையென்றும், கட்டடத்திற்கு தீ வை என்றும் பலவாறாகச் சத்தம் போட்டார்கள்.

கூட்டத்திற்குத் தலைமை வகித்து வந்தவர்களில் ஒருவரான எனது நண்பர் திருவேகம்பத்தூர் பாலபாரதி செல்லத்துரை அவர்கள் எல்லோரையும் அமைதிப்படுத்தி நான் இருந்த சிறைக்கு முன்னால் உட்கார வைத்தார்கள். அவர்சொற்படி அனைவரும் சப்-ஜெயிலுக்கு முனால் இருந்த மைதானத்தில் உட்கார்ந்தார்கள்.

பின்னர் செல்லத்துரை அவர்கள் என்னிடம் வந்து “இப்பொழுது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.
“நீங்கள் என்ன முடிவுடன் வந்திருக்கிறீர்கள்?” என்று நான் திருப்பிக் கேட்டேன்.

“இந்தச் சிறையை உடைத்து உங்களை விடுதலை செய்ய வந்திருக்கிறோம்” என்று பதில் சொன்னார்.

“சரி, அப்படியே செய்யுங்கள்” என்று நான் சொன்னதும், அங்கு நின்ற சிறை வார்டன் ஓடிவந்து இதோ சாவி இருக்கிறது என்று சாவியைக் கொடுத்தார். சாவி வேண்டியதில்லை, உடைத்துதான் திறப்போம் என்று மக்கள் பெரும் முழக்கம் போட்டார்கள்.

அதன்படியே அவர்கள் கொண்டு வந்திருந்த கடப்பரை முதலிய ஆயுதங்களால் என்னை அடைத்து வைத்திருந்த சப்-ஜெயில் பூட்டை உடைத்துத்தகர்த்து கதவைத் திறந்தார்கள்.

பட்டப்பகல் 12 மணிக்குப் பல ஆயிரக்கணக்கான மக்கள் சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் இம்மாதிரி சிறைக் கதவை உடைத்து ஒரு அரசியல் கைதியை விடுதலை செய்தது சரித்திரத்தில் அதுதான் முதல் தடவை.

அந்தச் சரித்திரச் சம்பவத்துக்கு நான் காரணமாக இருந்தேன் என்று நினைக்கும்போது இன்றும் நான் பெருமைப்படுகிறேன். இந்தியாவில் வேறு யாருக்கும் கிடைக்காத பெருமை எளியேனுக்குக் கிடைத்தது.

மக்களுடைய மாபெரும் சுதந்திர எழுச்சியின் வேகத்தில் நடைபெற்ற சக்தி மிகுந்த இந்தத் திருவாடனை ஜெயில் உடைப்புச் சம்பவம், தமிழகத்தின் ஒரு கோடியில் ராமேஸ்வரம் அருகில் நடைபெற்றதால் இந்தியா முழுவதும் விளம்பரம் இல்லாமல் அமுங்கிவிட்டது.

தமிழ்நாட்டுத் தலைவர்களும், இச்சம்பவத்தின் பெருமையை உணரவில்லை. மதிப்பிற்குரிய ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் 1942இல் சிறையிலிருந்து தப்பியதே பெரிய வீரச்செயல் என்று நாடு போற்றிக் கொண்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் திருவாடனையில் மக்கள் திரண்டு வந்து சிறைச்சாலையை உடைத்து ஆங்கில ஏகாதிபத்தியம் கைது செய்து வைத்திருந்த ஒருசுதந்திரப் போராட்ட வீரனை விடுதலை செய்ததை நாடு முழுமையாக அறிந்து கொள்ளவுமில்லை, பாராட்டவும் இல்லை.

விடுதலை செய்யப்பட்ட என்னைச் சுற்றி இருந்த மக்கள் என்னைத் தோளில் தூக்கிக் கொண்டு ஆனந்தக் கூத்தாடினார்கள். சிலபேர் நான் இருந்த சப்-ஜெயிலுக்குத் தீ வைத்தார்கள். வேறு சிலர் மாஜிஸ்திரேட் கோர்ட்டிற்கும், தாசில்தார் அலுவலகத்திற்கும் தீ வைத்தார்கள்.

அதன்பின்னர் போலீஸ் லைனை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள். அப்போது நான்குறுக்கிட்டு, “அங்கு ஓடாதீர்கள். அவர்கள் அனைவரும் நமக்காக வேண்டியஒத்தாசை செய்திருக்கிறார்கள்” என்று அவர்களிடம் சொன்னேன். சில பேர்போலீஸ்காரர்களை சும்மாவிடக் கூடாது என்றும் அவர்கள் வீடுகளுக்குத் தீ வைக்கவேண்டும் என்றும் சத்தம் போட்டார்கள்.

நான் அவர்களைத் தடுத்து அவர்கள் அனைவரும் நமது சகோதரர்கள், நமது சுதந்திரப் போராட்டத்திற்கு உறுதுணையாக உள்ளவர்கள், அவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம். இதோ அவர்களது உடைகள் என்றுகூறி, போலீஸ்காரர்களுடைய உடைகள் அனைத்தையும் மக்களுக்குக் காண்பித்தேன். அவர்கள் அந்த உடைகளை வாங்கித் தீயில் போட்டுப் பொசுக்கித் தங்கள் கோபத்தைத் தீர்த்துக் கொண்டார்கள்.

பின்னர் கூட்டத்தினர் அனைவரும் என்னைத்தூக்கிக் கொண்டு ஊர்வலமாகச் சென்றார்கள். அப்பொழுது என்னை அடைத்துவைத்திருந்த சப்-ஜெயிலும், அதைச் சுற்றி இருந்த சர்க்கார் அலுவலகங்களும் கொழுந்து விட்டு எரிந்தன. அச்சமயம் சிலர் போலீஸ் ஸ்டேஷனுக்கு உள்ளே புகுந்து அங்கிருந்த துப்பாக்கிகளை ஒருவரும், துப்பாக்கிக் குண்டுகளை இன்னொருவரும் தூக்கிக் கொண்டு வெளியே வந்தனர். சிலர் துப்பாக்கிகளை கையில்ஏந்திக் கொண்டு சிப்பாய்களைப் போல நடந்தனர்.

மக்கள் என்னை ஊர்வலமாக அழைத்துக் கொண்டு ஊருக்கு வெளியே செல்லும்போது தூரத்தில் போலீஸ் லாரிகள் வருவது தெரிந்தது. போலீஸ் லாரியைப் பார்த்து மக்கள் கோபாவேசப் பட்டார்கள். பலர் போலீஸ் லாரியை அடித்து நொறுக்க வேண்டும் என்று கூச்சல் போட்டார்கள். சிலர் போலீஸ் லாரியை நோக்கி அரிவாளை வீசிக்கொண்டு ஓடினார்கள்.

எல்லோரையும் சமாதானப்படுத்தி ரோட்டுக்கு பக்கமாக இருந்த பனங்காட்டுக்குள் இருக்கும்படி கேட்டுக் கொண்டேன். அதன்படி மக்கள் இரு கூறாகப் பிரிந்து ரோடின் இரு மருங்கிலும் உள்ள பனங்காட்டுக்குள் பதுங்கிக் கொண்டார்கள்.

போலீஸ்லாரிகள் மெதுவாக ஊர்ந்து கொண்டு வந்தன. மக்கள் மறைந்திருப்பதை யூகித்தவர்கள் போல் போலீசார் சுடுவதற்குத் தயார் நிலையில் லாரியில் நின்றுகொண்டு இருந்தார்கள். ரோடு ஓரமாக மறைந்திருந்த ஒருவரை போலீசார் பார்த்துவிட்டனர். உடனே அவரை நோக்கிச் சுட்டனர். அவர்கள் சுட்ட குண்டு மேற்படி நண்பரின் தொடையை தொட்டுக் கொண்டு சென்றுவிட்டது.

உடனே மேற்படி நண்பர் பெரும் கூச்சல் போட்டு “எல்லாம் வெத்து வேட்டு, வெளியே வாங்கடா” என்று கலவரப்படுத்தி விட்டார். மறைந்திருந்த மக்கள் அனைவரும் பெருங்கூச்சல் போட்டுக் கொண்டு வெளியே வந்து போலீசாரைத் தாக்க ஓடினார்கள்.

இச்சமயம் துப்பாக்கி வைத்திருந்தவர்கள் ஒரு பக்கமும் குண்டு வைத்திருந்தவர்கள் மறுபக்கமும் பிரிந்து இருந்தார்கள். அதனால் மக்களிடம் இருந்த துப்பாக்கியினால் போலீசாரைச் சுட இயலாமல் போய்விட்டது. குண்டுகளைக் கையில் வைத்திருந்த கிராமவாசிகள் மட்டும், மேற்படி குண்டுகளை எறிந்தால் வெடிக்குமா, வெடிக்காதா என்று தெரியாததால் அவைகளைச் சரமாரியாக வீசிக் கொண்டு இருந்தார்கள்.

இந்நிலையில் போலீசார் தங்களைக் காத்துக் கொள்ளச் சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். குண்டுகளைப் பொழிந்து தள்ளினர். என் இடது கையில் ஒரு குண்டுபாய்ந்தது. மக்களின் முன்னால் நின்ற என் மீது மேலும் குண்டு படக்கூடாது என்று பலபேர் மாறி மாறி என் முன்னால் நின்று தங்கள் மார்பில் போலீசாரின் குண்டுகளை ஏற்று வீரமரணம் எய்தினார்கள். இம்மாதிரி தியாகம் செய்த பெருவரலாற்றை நான் படித்ததும் இல்லை, கேட்டதும் இல்லை. இந்த மாபெரும் தியாகத்தை இன்று நினைத்தாலும் எனது மெய் சிலிர்த்து விடுகிறது.

ஒரு தேசபக்தனைக் காப்பதற்காகப் பல பேர் உயிரைக் கொடுப்பது என்பது வீரகாவியமாகப் பாட வேண்டிய அத்தியாயமாகும். எவ்வித பிரதி பிரயோசனமும் கருதாமல் தங்கள் இன்னுயிரை ஈந்தஅந்த மாபெரும் தியாகிகளுக்கு இந்த நாடு என்றும் தலை தாழ்த்தி வணங்கக் கடமைப்பட்டுள்ளது.

இப்படிப் பல பேரைச் சுட்டு வீழ்த்திவிட்டு போலீசார்தப்பி ஓடிவிட்டார்கள். சிலர் இறந்து வீழ்ந்ததும் பலர் உடம்பிலிருந்து ரத்தம் தெறித்தும், அங்கு கூடியிருந்த மக்கள் ஒரு நிமிடத்தில் எங்கே சென்றார்கள் என்று தெரியாமல் ஓடிவிட்டனர்.

நானும் எனது நண்பர் ராமநாதனும் பிணக்குவியலின் மத்தியில் நின்று கொண்டிருந்தோம். உயிர் போனபலரும், உயிர் போகும் தருவாயில் சிலரும், கை, கால், கண் போன சிலரும் ஒரே இரத்தக்காடாக முனகலும், மரணக்கூச்சலும் நிறைந்திருந்த அந்த இடத்தில் என்னசெய்வது என்று தெரியாமல் திக்பிரமை பிடித்து பத்து நிமிடத்துக்கும் மேல்நின்று கொண்டிருந்தேன். இரவு மணி 7 ஆயிற்று. வெளிச்சம் மங்கி இருள்பரவிற்று. பனங்காடு, சலசலவெற சத்தம். மரத்தினுடன் மரங்கள் உராயும் போதுஎற்படும் பயங்கரமான கிரீச் எனும் அச்சமூட்டும் சத்தம். இந்நிலையில்நரிகளின் ஊளை வேறு. சுற்றிலும் இறந்து கிடந்த தேசபக்த தியாகிகளைப் பார்த்துஒரு முறை அவர்களின் பாதாரவிந்தங்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு நகர்ந்தேன்.

இருட்டில் மேடு பள்ளம் முள் கல் இவைகளில் தட்டுத் தடுமாறி நடந்தோம். காலெல்லாம் கிழிசல் ஏற்பட்டு ரத்தம் வடிந்து கொண்டே இருந்தது. கையில் குண்டு பாய்ந்த இடத்தில் ரத்தம் வழிந்தது. சுமார் நான்கு மைல்வந்ததும் தலை சுற்றியது. மயக்கமாக இருந்தது. அதே இடத்தில் கீழே தடால் என்றுவிழுந்து விட்டேன். என் நண்பரும் மயங்கிப் படுத்து விட்டார். மயங்கியநிலையில் நன்றாகத் தூங்கி விட்டோம்.

தூங்கிக் கொண்டிருந்த எங்களைச்சிலர் தட்டி எழுப்பினார்கள். சுமார் பத்து பேர் நின்று கொண்டிருந்தார்கள். போலீசார் என்று நினைத்து விட்டோம். ஆனால் அவர்கள் போலீசார் அல்ல. அதற்குமுன் தினம் இறந்து போன உறவினர் ஒருவருக்குப் பால் ஊற்றி அஸ்தி எடுத்துப்போக வந்தவர்கள். அது சரி! அவர்கள் ஏன் நாங்கள் படுத்திருந்த இடத்திற்கு வந்தார்கள்? எதற்காக எங்களை எழுப்பினார்கள்?

சொன்னால் நம்ப மாட்டீர்கள்! நாங்கள் அவர்கள் உறவினரைப் புதைத்திருந்த இடத்திற்கு மேல்தான் அவ்வளவுநேரம் அந்த இரவு முழுவதும் படுத்திருந்தோம்.”

என்று சின்ன அண்ணாமலை இந்த நிகழ்வைப் பதிவுசெய்துள்ளர். இதன் பிறகு தேசபக்தர்கள் இன்னும் பலசெயல்களில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் தேவகோட்டையை நோக்கி வந்தனர். பருத்தியூருக்கும், புளியாலுக்கும் இடையே ஆங்கில லாவட் தலைமையில் 50 பேர்கொண்ட போலீஸ்படை எதிர்கொண்டு நின்றதை அறிந்த புரட்சிபடை பருத்தியூர் அருகேசாலையை விட்டு இறங்கி ஒதுங்கினர். செடிகளுக்குள் மறைந்திருந்த விளாங்காட்டூர் முத்திருளப்பன் சேர்வை தன்மேல் துண்டை எடுத்து வீசிப்புரட்சி படையினரை அந்தப்பக்கம் வரும்படி அழைத்தார்.

இதை பார்த்தசார்ஜென்ட் லாவட் தன் ரிவால்வரால் இருமுறை சுட்டான். முந்திருளப்பன் அதேஇடத்தில் ரத்தம் பீரிடும் வண்ணம் சாய்ந்தார். அதை தொடர்ந்து போலீஸ்சார் மறைந்திருந்து புரட்சி படையினரை சுட்டனர். அதில் பனங்குளம் மலையப்பதேவர்ஆந்தக்குடி அரிஜனத் தொண்டர் கருப்பன் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் மிதந்து பலியானார்கள். பலர் காயமுற்றனர். காயடைந்தவர்களை சிலர் தூக்கிகொண்டுஓடினர். மறைந்திருந்த புரட்சி படையினர் கற்களை எடுத்து சரமாரியாக வீசியும் துப்பாக்கியாலும் சுட்டனர்.

அச்சமுற்ற சார்ஜென்ட் லாவட் வந்த காவல்வண்டியிலே ஏறித் திரும்பி ஓடினான். அதன்பின் புரட்சி படையின் துணைத்தளபதிகளான வெள்ளியூர் முனியப்பதேவர், புரட்சிபடையின் திட்ட ஆலோசகரான குமாரவேலூர் மு.லெ. சொக்கலிங்கம் செட்டியார் ஆகியோர் எதிர்காலத்திட்டம்பற்றி ஆலோசனை கூறி அனுப்பி வைத்தனர். காயம்பட்டோரை அவரவர் வீடுகளுக்கு கொண்டுபோய் சேர்த்தனர். சிகிச்சை செய்ய பலரை நியமித்து இறந்தவர்களை அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைத்து திருவாடனை சிறையை உடைத்து விடுத்துசின்ன அண்ணாமலை, டி.எஸ். இராமநாதன், இருவர்களை தக்கதுணையுடன் அனுப்பிவைத்து தலைமறைவாகினர். பட்டபகலில் சிறையை உடைத்து சின்னஅண்ணாமலை, டி.எஸ்.இராமநாதன் உள்ளிட்டோரை விடுவித்துவிட்டார்களே என போலீஸ்சார் வெறிஆட்டம் ஆடினர். இவ்வடக்குமுறை ஒரு புறம் இருக்க சிறையில் இருந்து மீட்கப்பட்ட  சின்ன அண்ணாமலையும், இராமநாதனையும் தக்க துணையுடன் தேவகோட்டைக்கு அனுப்பிவைக்கவும் அவர்கள் முடிவு செய்து அதனை நிறைவேற்றினர்.

இவை அனைத்தையும்செய்து முடித்து இப்புரட்சிக்குத் தலைமை தாங்கிய செல்லத்துரை அன்று இரவே தலைமறைவாகிவிட்டார். ஐந்தாண்டுகளுக்கு பின் 2 வது உலகப்போர் முடிந்து அதன்பின் இந்தியா விடுதலை அடைந்தபின், செல்லத்துரையை சுட்டு கொன்று பிணத்தையோ அல்லது உயிருடனோ பிடித்து வரும்படி ஆங்கிலேய அரசு போலீசுக்கு இட்டிருந்த ஆணை ரத்து செய்யப்பட்டு அனைத்து புரட்சிக்காரர்களும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் செல்லத்துரை தனது ஊர் வந்து சேர்ந்தார்.

புரட்சிக்குப் பின்னான கொடும் செயல்கள்

திருவாடானையில் ஆங்கிலேய அரசின் சிறைச்சாலை உடைக்கப்படடதன் எதிரொலியாக அந்தப்பகுதியில் ஆங்கில அரசின் காவல் துறை பல கொடுஞ்செயல்களைச் செய்தது.

1. புரட்சியில் பங்கு கொண்டு தலைமறைவாய் இருந்த துணை தளபதிகள் வென்னியூர் முனியப்ப தேவரையும் , சித்தூர் சிவஞான தேவரையும் கைது செய்து புதுக்கோட்டை சீமையை சேர்ந்த லெட்சுமிபுரம் காட்டில் பனைமரத்தில் கட்டி வைத்துஇன்ஸ்பெக்டர்கள் நடராஜபிள்ளையும் இராமையா பிள்ளையும் சுட்டுக்கொன்றார்கள்.

2. திருவாடனை-திருவேகம்பத்தூர் புரட்சியில் துணைத் தளபதிகளான தொண்டர் முத்தையாவையும், சின்னத்துரையும் கைது செய்து அடித்து எலும்புகளை நொறுக்கிதலையை மொட்டையடித்து கழுதை மேலேற்றி திருவாடனையில் இருந்து திருவேகம்புத்தூர் வரை அழைத்துச் சென்றனர்.

3. கைது செய்யப்பட்ட ஆண்களையும், பெண்களையும் உடைகளை களைத்து உடல் முழுவது மிளகாய் பொடியை தூவி கொடுமை செய்தனர்.

4. புரட்சியாளர்களை கைது செய்து மரக்கிளையில் தலைகீழாக தொங்கவிட்டு செருப்புகளை கவ்வச் செய்து அடித்தார்கள். செல்லத்துரை இருக்கும் இடத்தை சொல்லும்படி பல்வேறு கொடுமை புரிந்தனர்.

5. கிரமாங்களில் புகுந்து விவசாயிகள், பயிரிட்டிருந்த பயிர்களை நாசம் செய்து ஆடு, மாடு, கோழிகளைப் பிடித்துச் சென்றனர்.

6. புரட்சி வீரர்களின் தாடியிலும் மீசையிலும் நெருப்பிட்டு பொசுக்கினர்.

இவ்வாறு திருவாடானையில் நடைபெற்ற இந்திய தேசியப் போராட்டத்தின் எதிர்விளைவுகள் மிகக் கொடுமையானதாக இருந்தன. இவற்றைத் தாய்நாட்டின் விடுதலைக்காக இப்பகுதிமக்கள் ஏற்றுக்கொண்டனர் என்பது இவர்களின் தேசபற்றினைக் காட்டுவதாக உள்ளது.

போராடியவர்கள் பெற்ற தண்டனைகள்

இப்போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய பாலபாரதி செல்லத்துரையை கண்டதும் சுட ஆங்கிலேய ஆணை பிறபிக்கபட்டது. இதனை அறிந்த செல்லத்துரை
• வெள்ளையரசு,
• வெள்ளியூர் முனியப்பதேவர்,
• சித்தூர் சிவஞானதேவர்,
• குமாரவேலூர் மு.லெ. சொக்கலிங்கம் செட்டியார்

ஆகியோரை கூட்டிக் கொண்டு தலைமறைவு ஆனார.  சிலநாட்கள் கழித்து செல்லத்துரை தேவரும், சொக்கலிங்கம் செட்டியாரும் மட்டுமே கால்நடையாகவே தெற்கு நோக்கி நடந்துவல்லநாட்டு மலைப்பகுதியை அடைந்தனர். பாலபாரதி செல்லத்துரை தேவரும், குமாரவேலூர், மு.லெ.சொக்கலிங்கம் செட்டியாரும், சச்சிதானந்தம், சதானந்தம் என்னும் மாற்று பெயரில் நெல்லை சீமையை சேர்ந்த சீவலபேரியில் இருந்துவந்தனர். அவர்களுக்கு மக்கள் உணவளித்து பாதுகாப்புடன் மலைப்பகுதியில் தங்கவைத்தனர்.

எங்கே தேடியும் பாலபாரதி செல்லத்துரை பிடிபடவில்லை! என்பதால் வெறிகொண்ட வெள்ளையர்கள் அவரது வீட்டை தீ வைத்து கொளுத்தினர். திருவேகம்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்த அத்தனை புரட்சிபடை வீரர்களின் வீடுகளும் போலீசாரால் தீவைத்து கொளுத்தப்பட்டன. பெண்கள்மானபங்க படுத்தப்பட்டனர். ஆங்கிலேய அரசின் காவலர்கள் எவராலும் சகிக்கமுடியாத அட்டூழியங்களை கட்டவிழ்த்து விட்டனர்.

பிடிப்பட்ட பாலபாரதி செல்லத்துரையின் தம்பி சின்னத்துரை தேவரையும் தொண்டர் முத்தையாவையும் அவர்களின் தலைகளை மொட்டையடித்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்திச் செருப்புமாலை அணிவித்து கழுதை மேல் ஏற்றி திருவேகம்புத்தூர் வீதிகளில்  இழுத்துச் சென்றனர். செல்லத்துரை எங்கே எனக்கேட்டு அவர்களைச்  சித்ரவதை செய்தனர். அந்த இருவரும் வந்தே மாதரம் என்ற மந்திர சொல்லை தவிர வேறுஎதுவும் சொல்லவில்லை. வெள்ளையர்களின் தாக்குதலால் தொண்டர் முத்தையா பார்வையை இழந்தார். அவரின் எலும்புகள் முறிந்துவிட்டன.

பள்ளத்தூர்காட்டில் பதுங்கியிருந்த சித்தூர் சிவஞானதேவர் காவலர்களின் தேடுதலில்பிடிப்பட்டார். அங்கிருந்த ஒரு பனைமரத்தில் அவரைகட்டி வைத்து உனது கடைசிஆசை என்ன என்று கேட்டார்கள். அதற்கு “இந்த நாட்டை குட்டிச் சுவராக்கும் அயோக்கிய நாய்களே! சுடப்போகிறீர்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். சாகும்போதாவது நான் சுதந்திரமாக சாகவேண்டும். சித்தூர் சிவஞான தேவரைக் கட்டிவைத்துச் சுட்டார்கள் என்ற கேவலம் எனக்கு வேண்டாம். என் கைகளை அவிழ்த்துவிட்டு சுடுங்கள் என்றார். அவிழ்த்துவிட்டதும் அவர் தன்அணிந்திருந்த ஜிப்பாவை கிழித்து நெஞ்சை நிமிர்த்தி காட்டி நின்றார்.

வெள்ளையர்களின் துப்பாக்கி தோட்டாக்கள் அவரின் உடலைத் துளைத்தெடுத்தன.  அந்த மாவீரன் மண்ணிலே சாய்ந்தார்.

ஊனையூர்க் காட்டிலிருந்த வெண்ணியூர் முனியப்ப தேவரும் பிடிபட அவரையும் ஒரு மரத்தில் கட்டினர். வெள்ளையரின் காவலர்கள் என்ன நடக்கபோகிறது! என்பதை நன்குணர்ந்த முனியப்ப தேவர் வாய்விட்டு சிரித்தார். “ஏன் சிரிக்கிறாய்? என ஆங்கிலேயயர்கள் வினவ? அட வெள்ளைநாய்களே! சுடுவது தான் சுடப்போகிறீர்கள் வெண்ணியூர் முனியப்ப தேவனை கட்டி வைத்து சுட்டார்கள் என்ற கதை எனக்கு வேண்டாம் என் கைகளை அவிழ்த்துவிட்டு சுடுங்கள்!” என்றார். உடனே அவர் கைகளை அவிழ்த்து விட்டு அவரை சுடுவதற்காக வரிசையில் நின்ற போலீசார் துப்பாக்கியை உயர்த்தினார்.

விண்ணதிரச் சிரித்த முனியப்பதேவர் தனது பெரிய மீசையைதிருகி கொண்டே, ம்சுடுங்கள் என கர்ஜனை செய்தார். துப்பாக்கி சத்தம் காட்டை அதிர வைத்தது. ஒரு சுத்த வீரனை இழந்தாள் தமிழ்தாய்.

வல்லநாட்டு மலைபகுதியில் மறைந்திருந்த பாலபாரதி, செல்லத்துரையும், சொக்கலிங்கம் செட்டியாரும் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. மலையாளம் நோக்கி தனியாக நடந்தபாலபாரதி செல்லத்துரை கடைசியில் வைக்கம் போய் சேர்ந்தார். வைக்கம் கோவிலிருந்த நம்பூதிரிகள் ஏற்கனவே பாலபாரதி செல்லத்துரையை பற்றி நிறையவே கேள்விபட்டு இருந்தார்கள். பாலபாரதிக்கு பூநூல் அணிவித்து ருத்ராட்ச மாலையிட்டு ஒரு நம்பூதிரி போல வேடமணிய செய்து கோவிலுக்குள்ளேயே தங்கவைத்தனர்.

சில மாதங்களில் அங்கும் வெள்ளையர்கள் சென்று பாலபாரதியை தேடி நம்பூதிரிகளை துன்புற்த்த ஆரம்பித்தனர். மலையாளம் கற்று இருந்ததால் பாலபாரதி அங்கிருந்து தப்பித்து பம்பாய் பயணமானார். 1946 வரை பம்பாயில் புரட்சியாளர்களுடன் சேர்ந்து ரயில் நிலையங்களில் வெடிகுண்டு வைப்பது, வெள்ளையர் அலுவலகங்களில் குண்டு வீசுவது போன்ற பணிகளில் தன்னை ஈடுபடுத்திகொண்டார்.

இன்னும் பல கொடுமைகள்

திருவாடானையைச் சுற்றியிருந்த பலகிராமங்களில் விடுதலைப் போராட்டக்காரரர்கள் ஒளிந்து இருக்கிறார்களா எனக்கேட்டு ஆங்கிலேய காவல் அதிகாரிகள் செய்த கொடுமைகள் எண்ணில் அடங்காதது.

தேசியவாதிகளின் வாயில் செருப்பை கவ்வ வைத்து முட்புதர்களில் படுக்கவைத்து அடிப்பது,

மிதிவண்டி டியுப்களில் மணலை செலுத்தி அதை கொண்டு அடிப்பது,

ஒருவரது சிறுநீரை மற்றவர் வாயில் ஊற்றி குடிக்க வைப்பது,

தாடி, மீசைகளை கொளுத்துவதும்,

 பிள்ளைகளை பிடித்து துன்புறுத்துவது,

என்ற பல கொடுமைகளை ஆங்கிலேய அரசு இந்திய தேசிய விடுதலைக்காகப் போராடிய வீரர்களுக்குச் செய்தது. இன்னும் இழப்புகள் தொடர்ந்தன.

• இருபது கிராமங்களைத் தீயிட்டு கொளுத்தினர்.
• நாற்பது பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாயினர்.
• திருவாடானை கிராமங்களுக்கு ரூபாய் ஐம்பது ஆயிரம் திமிர் வரி வசூலித்தனர்.
• தளபதி செல்லத்துரையை பிடித்து தருபவர்களுக்கு , இருக்கும் இடத்தைசொல்பவர்களுக்கும் ரூபாய் ஐந்து ஆயிரம் பரிசு என தண்டோரா மூலம்அறிவித்தனர்.

பெண்கள் பெற்ற துயரங்கள்

தேசியப் புரட்சியில் கலந்துகொண்டு திருவாடானை பகுதி சார்ந்த தேசபக்தர் இராமசாமிபிள்ளை என்பவர் கைதுசெய்யப்பட்டுக் காவலர்களால் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.  அவருக்குசிறைதண்டனை மட்டும் போதாது என்று எண்ணி அவருக்கு மேலும் இன்னல்களைக் காவலர்கள் விளைவித்தனர்.

இராமசாமி பிள்ளைக்கு இருமனைவிகள் மூத்தமனைவியின் பெயர் கமலாம்பாள். இளையவர் முனியம்மாள். இருவரையும் காவல்நிலையத்திற்கு இழுத்து வந்தனர் காவலர்கள். ஒரு சாணிச்சட்டியையும் பழையவிளக்கமாறு ஒன்றையும் கொண்டு வந்து இரண்டையும் இளையவள் முனியம்மாளிடம்கொடுத்து விளக்கமாற்றை சாணிசட்டியில் துவைத்து எடுத்து அதைக்கொண்டுமூத்தவள் கமலாம்பாளை அடிக்கும்படி கூறினர். முனியம்மாள் கமலாம்பாளை அடிக்கமறுத்தார். உடனே காவலர்களின் கைகள் அவரைப் பாலியல் துன்புறுத்தலுக்குஆளாக்க முனைந்தனர்.

முனியம்மாளின் கற்பை காப்பாற்ற கமலாம்பாள் ஓடிவந்தார். கமலாம்பாள் “அவளை தொடவேண்டாம். தன்னை அடிக்க வைப்பதாகக்” கூறிகாவலர்களைத் தடுத்து விட்டு தன்னைத் தைரியமாக அடிக்கும்படி முனியம்மாளிடம்கூறினார். முனியம்மாளும் வேறு வழியின்றி அக்காளை அடிக்க ஆரம்பித்தார்.

சற்றுநேரம் ஆனதும் மூத்தவளிடம் விளக்கமாறை கொடுத்து இளையவரை அடிக்குமாறு கூறினார்.மாறி மாறி அவர்கள் அடித்து கொண்டதைக் கண்டு மகிழ்ந்தது ஆங்கிலேய காவல்துறை.அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்து அடித்து ஓய்ந்து களைத்து விழுந்தனர்.

அப்போது மேலும் சில பெண்களை அழைத்து வந்து அவர்களை வெற்றிலை பாக்கு போட வைத்து அந்த வீராங்கனைகளின் மீது எச்சில் துப்பி அந்தக் கோலத்தில் வெளியே விரட்டி அடித்தனர்.

ஆண்டிவயலைச் சார்ந்த காளியம்மாள் பட்ட துயரம் சொற்களில் அடங்காதது. காளியம்மாளின் கணவர் ஒரு தேசபக்தர். அவரை தேடுவதாக கூறிகொண்டு லாவட் தலைமையில் காக்கிச் சட்டைஅணிந்த படை அவரின் வீட்டின் உள்ளே நுழைந்தது.

“எங்கேயடி உன் புருஷன்” என்று அதட்டியது. அதட்டலில் நடு நடுங்கியபடி தோளில் குழந்தையுடன் ஓடிவந்தகாளியம்மாள், “சந்தைக்குப் போயிருக்காங்க” என்றாள்.

லாவட் என்ற அந்த வெள்ளைய காவல் அதிகாரி அங்கு இருந்த  ஒருவனை கூப்பிட்டு காளியமமாளின் சேலையை உரிய சொன்னான். அந்த நபர் இதற்கு உடன்படவில்லை. லாவட்டின் கைத்தடியும் உடனிருந்த காவலர்களின் லத்திக் கம்புகளும் செய்யமாட்டேன் என்று சொன்னவரின் உடலைப் பதம் பார்த்தன. அந்த அப்பாவி சேலையை அவிழ்த்தான்.

மீண்டும் அவனைக் காளியம்மாளிடம் தகாத நிலையில் நடந்து கொள்ள லாவட் வற்புறுத்தினார. அவன் மறுத்தான். கைத்தடிகள் அவனது உடலோடு விளையாடியது. அந்த அப்பாவிசுருண்டு விழுந்தான். லாவட் காளியம்மாளை இழுத்து சென்றுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினான்.

அத்துடன் நிற்காமல் காளியம்மாளையும், அவளின் கைக்குழந்தையையும் மற்றும் அங்கிருந்த பார்வதி என்ற இளம் பெண்ணையும் காவல்நிலையத்திற்கு இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் தொடர்ந்து எட்டுநாள். இருவருக்கும் படுதொல்லை கொடுத்தான். இதனை அக்காவல் நிலைய அதிகாரிகளால் பொறுக்க இயலவில்லை. அவர்கள்  பார்வதியிடம் இனி லாவட் துரை “நிர்பந்தபடுத்தினால் பலமாக கூச்சல் போடு நாங்கள் வந்து உதவுகிறோம” என்றனர். அதோடு இந்த அக்கிரமத்தை குறித்து மேலதிகாரிகளுக்கு அவர்கள் தெரியபடுத்தினர். அவர்கள் வந்து காளியம்மாளையும், பார்வதியையும் இரவுநேரங்களில் வேறு இடத்தில் தங்க வைத்தனர். காயங்களும் சித்தரவதைகளும் இரத்தகசிவு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். இதுபோன்று சிட்டு, மீனா என்ற இரு பெண்களும் பட்ட துயரம் சொல்லமுடியாது.


ம. முத்து பாலகிருஷ்ணன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “திருவாடானை வட்டார விடுதலைப் போராட்டங்களும், அதன் விளைவுகளும்”

அதிகம் படித்தது