மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

திரையிசையில் நாட்டுப்புறப் பாடல்கள்

தேமொழி

Aug 1, 2020

siragu-naattuppurap-paadalgal1

“நாட்டுப்புறம்” என்ற சொல்லானது கல்வி வாய்ப்புகள் குறைந்த, நகர நாகரிகம் இல்லாத, கிராமியப் பகுதிகளை, ஊரகப் பகுதியைக் குறிக்கும். நகர்ப் புறங்களில் வாழும் கிராமிய குணம் கொண்ட கூறுகளையும் “நாட்டுப்புறம்” என்று அழைப்பது வழக்கமாக உள்ளது. இலக்கிய உலகில் முன்னர் முறையாக ஆவணப்படுத்துவதில் அக்கறை காட்டப்படாத ஒரு பிரிவாக விளங்கியது ஊரக மக்களின் வாழ்வியல் வாய்மொழி இலக்கியங்கள். பதினெட்டாம் நூற்றாண்டில் மேற்கத்திய மக்களால் இவை ஒரு ஆய்வுக்குரிய தளமாக அறியப்பட்டாலும் கூட, 1950களில் தான் தமிழக ஆய்வாளர்கள் இதில் ஆர்வம் காட்ட முற்பட்டனர்.

நாட்டுப்புறப்பாடல்களைத் தொகுத்து வெளியிட்டவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் கி.வா.ஜகந்நாதன், நா.வானமாமலை, அ.மு.பரமசிவானந்தம், சோமலெ,தமிழண்ணல், செ.அன்னகாமு, மு.வை.அரவிந்தன், ஆறு.அழகப்பன், பெ.தூரன், சு.சண்முகசுந்தரம் போன்றோர் ஆவர்.

நாட்டுப்புறப் பாடல்கள் குறித்து நாம் அறிவது என்ன?

நாட்டுப்புறப்பாடல்கள் ஒவ்வொன்றும் அந்தந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைப் பதிவு, அவர்களின் உணர்வின் வெளிப்பாடு. தமிழக நாட்டுப்புறப்பாடல்கள் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு வாழ்க்கை வட்டச் சடங்குகளிலும் பாடல்களாக எளிய மக்களின் வாழ்வில் பரிணமித்து வந்துள்ளன. தாலாட்டு, விளையாட்டு, பூப்புச்சடங்கு, திருமணம், இறப்பு என ஒவ்வொரு நிகழ்வுக்கும் பாடல்கள் உள்ளன. நமக்கு நாமே பாடிக் கொள்ள முடியாத இரு வகைப் பாடல்கள் என நாம் பிறந்தவுடன் பாடப்படும் தாலாட்டுப் பாடலும், பிறகு இறந்தவுடன் பாடப்படும் ஒப்பாரி பாடலும் எனலாம்.

நாட்டுப்புறப் பாடல்களின் கூறுகள் எனக் கீழ்வரும் பண்புகள் அடையாளம் காணப்படுகின்றன.

– பாடலை இயற்றியவர் யார் என்று தெரியாத ஒரு நிலை,

– காலத்திற்கேற்ப இடத்திற்கேற்ப பாடலின் வரிகள் மாறி வரும் நிலை,

– வாய்மொழியாகவே புழக்கத்தில் உள்ள எழுதாப் பாடல்கள்,

– வட்டாரத்தின் பேச்சு வழக்குச் சொற்கள் நிரம்பிய பாடல்கள்,

– எளிமையும் இனிமையான சந்தங்களும் கொண்ட வரிகள்,

– சூழ்நிலை தரும் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் வரிகள்,

– ஊரக மக்களின் உணர்வுகள் பாடல்களின் கருப்பொருட்களாக அமைவது,

– தென்காஞ்சியாக (தென்பாங்காக/தெம்மாங்காக) மனம் போன வகையில் பாடப்படுவதாக அமைவது என்ற பண்புக் கூறுகளைக் கொண்டவை நாட்டுப்புறப் பாடல்கள்.

காலந்தோறும் நாட்டுப்புறப்பாடல்களின் தாக்கம் தமிழ் இலக்கியங்களில் உண்டு என்பதும், சிலப்பதிகாரம் முதற்கொண்டு சிற்றிலக்கியங்கள் வரை நாட்டுப்புறப் பாடல்களின் தாக்கத்தில் அமைந்தவை என்பதும் நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள் உறுதியாக முன்வைக்கும் கருத்து. நாட்டுப்புறப்பாடல்களின் தாக்கம் இக்காலத்துத் திரையிசையிலும் உள்ளது. நாமறிந்த புகழ்பெற்ற சில திரைப்படப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடலின் வரிகளை நேரடியாகவே எடுத்தாண்டவையாகவோ அல்லது அதன் குறிப்புகளை உள்வாங்கி எழுதப்பட்டவையாகவோ அமைந்துள்ளன. கண்ணதாசன் முதல் வைரமுத்து வரை பல திரையிசைக் கவிஞர்கள் கற்பனை வளத்துடன் தக்க வகையில் தங்களது பாடல்களில் அக்கருத்துக்களைத் திரையில் இடம்பெறும் சூழலுக்கு ஏற்றவாறு எடுத்தாண்டுள்ளார்கள். அவ்வாறு அடையாளம் காணப்பட்ட பாடல்கள் சில கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

முரண்பட்ட கருத்துக்களை முன்வைத்து காதலனும் காதலியும் பாடும் பாடல்களின் நீளமும் அதிகம், அதற்குக் கற்பனை மட்டும்தான் எல்லை. காதலன் நான் இவ்வாறு உருவெடுத்து உன்னை நாடி வருவேன் எனப்பாட, காதலி நீ இவ்வாறு உருவெடுத்து வந்தாலும் உன்னிடம் இருந்து நான் தப்பி ஓடிவிடுவேன் எனப் பாடுவாள். இருவரும் இறுதியில் மானமொத்து ‘உனக்கு நான், எனக்கு நீ’ என்ற ஒரு உடன்பாட்டுடன் இணைந்து கொள்வார்கள். இது ‘வாது கவி’ என்று அழைக்கப்படுகிறது. ஈழப் பகுதியிலும் தென்தமிழகத்திலும் இந்த வகைப் பாடல்கள் பாடப்படுவதாக அறிய முடிகிறது.

siragu-naattuppurap-paadalgal2நாட்டுப்புறப் பாடலில் .. .. ..

அவள்:

கோழிக் குஞ்சு ரூபங் கொண்டு

கொத்தி விழுங்க வந்தால்

வல்லூறு ரூபங் கொண்டு

வானத்தில் பறப்பேனடா

அவன்:

வல்லூறு ரூபங் கொண்டு

வானத்தில் பறக்கு முன்னே

பாம்பாக ரூபங் கொண்டு

பாதை மறிப்பேனடி

அவள்:

பாம்பாக ரூபங் கொண்டு

பாதை மறித்தாலும்

அயிரை உருவங்கொண்டு-நான்

அழியில் புகுந்திடுவேன்.

இக்கருத்து திரையிசையில் .. .. ..

அவன்:

ஊரார் உறங்கையிலே

உற்றாரும் தூங்கையிலே

நல்ல பாம்பு வேடம் கொண்டு

நான் வருவேன் சாமத்துலே

அவள்:

நல்ல பாம்பு வேடம் கொண்டு

நடுச் சாமம் வந்தாயானால்

ஊர்க் குருவி வேடம் கொண்டு

உயரத்தில் பறந்திடுவேன்

அவன்:

ஊர்க் குருவி வேடம் கொண்டு

உயரத்தில் பறந்தாயானால்

செம்பருந்து வேடம் கொண்டு

செந்தூக்காய் தூக்கிடுவேன்

—தெம்மாங்கு பாடல், நாலு வேலி நிலம் – 1959

குறிப்பு: இப்பாடல் தெம்மாங்கு பாடல் என்றே திரையிசையிலும் பதிவாகியுள்ளது.

____________________________________

ஒருவர் பாடும் பாட்டுக்கு ‘எதிர்ப்பாட்டு’ பாடுவது என்பதும் நாட்டுப்புறப் பாடலில் ஒருவகை. எசப்பாட்டு பாடுவது என்றும் இவ்வழக்கம் கூறப்படுகிறது. சில பாடல்களில் இது நீ பாடாவிட்டால் உன்னை அடிப்பேன் உதைப்பேன் என்ற வன்முறையாகவும் ஒலிக்கிறது.

நாட்டுப்புறப் பாடலில் .. .. ..

அவள்:

பாட்டுக்குப் பாட்டடிப்பேன்

பதில் பாட்டு நான் படிப்பேன்

எதிர்ப் பட்டுப் படியாட்டா

ஏணி வைச்சுப் பல்லுடைப் பேன்

[வேறு-மற்றொரு வகை]

பாட்டுக்குப் பாட்டடிப்பேன்

பாட்டனாரைத் தோக்கடிப்பேன்

எதிர்ப்பாட்டுப் படிக்கலன்ன

ஏணி வைச்சுப் பல்லுடைப்பேன்.

இவள்:

கடலாடிச் சீமையிலே

காசுக்கொரு விளக்கு மாறு

எதிர்ப்பாட்டுப் படியா விட்டால்

எடுப்பனடி விளக்கு மாத்தை.

அவள்:

பாட்டுக்குப் பாட்டறிவேன் – குட்டி

பலபாட்டு நான்அறிவேன்

எதிர்ப்பாட்டு பாடாவிட்டால் – நாக்கை

இழுத்துப்பிடித் தறுத்திடுவேன்.

இக்கருத்து திரையிசையில் .. .. ..

பாட்டுக்குப் பாட்டெடுப்பேன்

எதிர்ப் பாட்டு நான் படிப்பேன்

இஷ்டம் போலத் துட்ட போடு ஓய்

குத்த வெச்சுப் பாட்டு கேளு ஓய்

தந்தனன தந்தனா தந்தனன தந்தனா தந்தான தந்தான நா

—பஞ்சு அருணாசலம், மண்வாசனை – 1983

____________________________________

நாட்டுப்புறப் பாடலில் .. .. ..

அவன்:

வட்ட வட்டப் பாறையிலே

வரகரிசி தீட்டடையிலே

யாறு கொடுத்த சாயச்சீலை

ஆலவட்டம் போடுதடி ?

[வேறு]

வட்டவட்டப் பாறையிலே – குட்டி

வரகரிசி தீட்டையிலே

ஆர்கொடுத்த சாயச்சீலை – குட்டி

ஆலவட்டம் போடுதடி?

அவள்:

யாருங் கொடுக்கவில்லை

ஆலவட்டம் போடவில்லை

கையாலே பாடுபட்டு

காய்ச்சினேண்டி சாயச்சீலே

[வேறு]

ஆருங் கொடுக்கவில்லை – மச்சான்

அவிசாரிநான் போகவில்லை

வன்பாடு பட்டுநானும் – மச்சான்

வாங்கினேண்டா சாயச்சீலை.

இக்கருத்து திரையிசையில் .. .. ..

அவன்:

வட்ட வட்டப் பாறையிலே

வந்து நிற்கும் வேளையிலே

யார் கொடுத்த சேலையடி

ஆல வட்டம் போடுதடி ?

அவள்:

மாமனோ மைத்துனனோ மாமாயம் செய்பவனோ

மைபோடத் தெரிந்தவனோ மயக்குவித்தை படித்தவனோ

மார்போடு என்னை அணைத்து

வாங்கித் தந்த சேலையிது

வாங்கித் தந்த சேலையிது…

—கண்ணதாசன், பழநி – 1965

____________________________________

நாட்டுப்புறப் பாடலில் .. .. ..

மறந்திரு மறந்திருன்னு

மனுஷரெல்லாம் சொல்லுறாக

மல்லிகைப்பூ வாசகத்தை

மறக்க மனங் கூடுதில்லை

இக்கருத்து திரையிசையில் .. .. ..

இஞ்சி இடுப்பழகா

மஞ்ச சிவப்பழகா

கள்ளச் சிரிப்பழகா

மறக்க மனம் கூடுதில்லையே

—வாலி, தேவர் மகன் – 1992

____________________________________

நாட்டுப்புறப் பாடலில் .. .. ..

ஓடுகிற தண்ணியிலே – தங்கரத்தினமே

உரசிவிட்டேன் சந்தனத்தை – பொன்னுரத்தினமே

சந்தனத்தை நம்பியல்லோ – தங்கரத்தினமே

வெண்பிறப் பானேனடி – பொன்னுரத்தினமே.

இக்கருத்து திரையிசையில் .. .. ..

ஓடுகிற தண்ணியில..

உரசி விட்டேன் சந்தனத்தை..

சேர்ந்துச்சோ.. சேரலையோ..

செவத்த மச்சான் நெத்தியிலே

—அ. மருதகாசி, பிள்ளைக் கனியமுது – 1958

மீண்டும், திரையிசையில் .. .. ..

ஓடுகிற தண்ணியில..

உரசி விட்டேன் சந்தனத்தை..

சேர்ந்துச்சோ.. சேரலையோ..

செவத்த மச்சான் நெத்தியிலே

—வைரமுத்து,அச்சமில்லை அச்சமில்லை – 1984

____________________________________

நாட்டுப்புறப் பாடலில் .. .. ..

அவள்:

உச்சி நத்தம் பாதையிலே

மொச்சி கெத்து உருவையிலே

கூப்பிட்ட சத்தமெல்லாம்

குயிலு சத்தமின்னிருந்தேன்

சாமி சத்தமின்னிருந்தால்

சன்னதிக்கே வந்திருப்பேன்

இக்கருத்து திரையிசையில் .. .. ..

அவன்:

அடி மாங்குளத்துக் கரை மேல… ஏ…

மயிருணத்தும் சின்னவளே

மயிருணத்தும் சின்னவளே

பாறையில நானிருந்து…

பாடும் குரல் கேக்கலையா

பாடும் குரல் கேக்கலையா

பாட்டுச் சத்தம் கேக்கலையா

பாட்டுச் சத்தம் கேக்கலையா

பாட்டுச் சத்தம் கேக்கலையா

அவள்:

பாட்டுச் சத்தம் கேட்டதையா

ஒம் பாட்டுச் சத்தம் கேட்டதையா

கூப்பிடுற சத்தமெல்லாம்

குயிலுச் சத்தமின்னுருந்தேன்

குயிலுச் சத்தமின்னுருந்தேன்

அவன்:

அடி என் சத்தமின்னிருந்தா

என்னாடி நீ செஞ்சிருப்ப

என்னாடி நீ செஞ்சிருப்ப

அவள்:

ஒங்க சத்தமின்னிருந்தா

ஓடோடி நான் வந்திருப்பேன்

ஓடோடி நான் வந்திருப்பேன்

—வைரமுத்து, முதல் மரியாதை – 1985

____________________________________

நாட்டுப்புறப் பாடலில் .. .. ..

அவள்:

பருத்திப் புஞ்சை பொழி கெடுக

பல நாளும் வந்தவரே

ஒருத்தி எடுக்கயிலே

ஓடி வந்தால் ஆகாதோ ?

[வேறு]

பருத்தி எடுக்கயிலே

பலநாளுங் கேட்ட மச்சான்

ஒத்தையிலே இருக்கையிலே

ஓடிவந்தால் ஆகாதோ !

இக்கருத்து திரையிசையில் .. .. ..

அவள்:

பருத்தி எடுக்கையிலே என்னப்

பல நாளும் பார்த்த மச்சான்

ஒருத்தி இருக்கையிலே

ஓடி வந்தால் ஆகாதோ…

அவன்:

ஓடித்தான் வந்திருப்பேன்

நான் ஒன்ன மட்டும் பார்த்திருந்தா

தேடித்தான் வந்திருப்பேன்

தெரியலையே முன்னாடி…

—மா.ரா., ஆட்டுக்கார அலமேலு – 1977

____________________________________

நாட்டுப்புறப் பாடலில் .. .. ..

அவள்:

ஆசை வச்சேன் உன் மேலே

அரளி வச்சேன் கொல்லையிலே

பூவு வச்சேன் கொண்டையிலே

பொருந்தலேயே உன் மனசு.

இக்கருத்து திரையிசையில் .. .. ..

அவள்:

ஆசை வச்சேன் உன் மேல மச்சான்

அரளி வச்சேன் கொல்லையிலே

ஆதரிச்சா நல்லதையா இல்ல

அரளி வெதை உள்ளதையா

—வைரமுத்து, நட்பு – 1986

____________________________________

நாட்டுப்புறப் பாடலில் .. .. ..

மலடன் மலடி என்று

வையகத்தார் பேசாமல்

பிள்ளைக் கலி தீர்க்க வந்த

பெருமானே கண்ணுறங்கு

இக்கருத்து திரையிசையில் .. .. ..

மலடி மலடி என்று வையகத்தார் ஏசாமல்

தாயென்ற பெருமைதனை

மனம் குளிர தந்தவளே

கொடிக்குக் காய் பாரமா – பெற்றெடுத்த

குழந்தை தாய்க்குப் பாரமா

மண்ணுக்கு மரம் பாரமா

மரத்துக்கு இலை பாரமா

கொடிக்குக் காய் பாரமா – பெற்றெடுத்த

குழந்தை தாய்க்குப் பாரமா

—பி.கே.முத்துசாமி, தை பிறந்தால் வழி பிறக்கும் – 1958

____________________________________

நாட்டுப்புறப் பாடலில் .. .. ..

சின்னக் குட்டி நாத்தனாள் – ஏலங்கிடி லேலோ

சில்லறையை மாத்தினாள் – ஏலங்கிடி லேலோ

ராவெல்லாம் பேசினாள் – ஏலங்கிடி லேலோ

ரயிலுவண்டி ஏறினாள் – ஏலங்கிடி லேலோ.

இக்கருத்து திரையிசையில் .. .. ..

சின்னக்குட்டி நாத்தனா

சில்லறைய மாத்துனா

குன்னக்குடி போறவண்டியில்

குடும்பம் பூரா ஏத்துனா!

—பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஆரவல்லி – 1957

இதுகாறும் குறிப்பிடப்பட்டவை நாட்டுப்புறப் பாடல்களின் கூறுகளை உள்வாங்கிய “ஒரு சில” திரையிசைப் பாடல்களின் எடுத்துக்காட்டுகளே. பொதுவாகவே, நாட்டுப்புறப் பாடல்களில் இடம்பெறும்;

தங்கரத்தினமே-பொன்னுரத்தினமே

ஞானத் தங்கமே

தங்கமாமாவே – பொன்னுமாமாவே

அடி கண்ணம்மா, அடி முத்தம்மா, அடி செல்லம்மா

அன்னம்மா பொன்னம்மா, அன்னமே பொன்னம்மா

ஏலே தங்கையா – அடே பொன்னையா

ஏலங்கிடி லேலோ, ஏலேலக்குயிலே, ஏலேலோ – ஐலசா

போன்ற சொல்லாடல்களைக் கொண்ட, நாட்டுப்புறப் பாடல்களின் சாயலில் எழுதப்பட்ட திரையிசைப் பாடல்களும் அதிகம். அதனால் அப்பாடல்களும் உணர்வுகளின் வெளிப்பாடாக மண்ணின் மணத்துடன் அமைந்தவையாக மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றன.

____________________________________

உதவிய நூல்கள்:

1. “தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்”-1960

நா.வானமாமலை

(https://ta.wikisource.org/s/31ha)

2. “தமிழர் நாட்டுப்பாடல்கள்” – 1976

நா.வானமாமலை

(https://ta.wikisource.org/s/1uyt)

3. “மலையருவி” – 1958

கி.வா.ஜகந்நாதன்

(நாடோடிப் பாடல்கள்-Mr.பர்ஸி மாக்வீன்,I,C,S.,)

(http://www.tamilvu.org/ta/library-lB200-html-lB200ind-152511)


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “திரையிசையில் நாட்டுப்புறப் பாடல்கள்”

அதிகம் படித்தது