ஏப்ரல் 4, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

திறன்பேசியின் வளர்ச்சி

தேமொழி

Jul 21, 2018

siragu thiranpesi2

இந்த 2018 ஆம் ஆண்டுடன் ‘திறன்பேசி’ உருவாக்கப்பட்டு கால்நூற்றாண்டு ஆகிவிட்டது.  திறன்பேசி என்பதன் பொருள் என்ன என்பதன் அடிப்படையில் 25 ஆண்டுகள் என்பது இந்தக் கணக்கு. இருப்பினும் இது குறித்து பலருக்கும் பல்வேறு கோணங்கள் இருக்கக்கூடும்.

இன்று வாழ்வோரில் “ஹலோ! யார் பேசறது?” என்று கேட்காதவர் இருக்க வழியில்லை என்றே தோன்றுகிறது. ஒலியைப் பல அலைவரிசைகளில் மின்துடிப்புகளாக (அல்லது அதிர்வுகளாக) மாற்றி, அதனைக் கம்பிவழி கடத்தி மீண்டும் ஒலியாக ஒலிக்கச் செய்யும் முறையைக் கொண்டு “தொலைபேசி” என்ற கருவியை 1876ல் கிரஹாம் பெல் உருவாக்கினார். தொடர்ந்து கம்பிவழி ஒலியைக் கடத்தும் தொலைபேசி பற்பல வளர்ச்சிகளைக் கண்டது. ஆனாலும் கருவியை விரும்பும் இடத்திற்கு ஒருவர் தம்முடன் எடுத்துச் செல்ல இயலாதிருந்தது. இந்நிலையை மாற்றியது செல்லிடத்திற்கு எடுத்துச் செல்லும் செல்பேசிகள். ‘மோட்டோரோலா’ நிறுவனமே முதலில், 1973 இல் கம்பிவழியின்றி அலைவரிசை வழியாகப் பேசும் மொபைல்ஃபோன் என்றழைக்கப்படும் தொலைபேசியை  உருவாக்கியது. மோட்டோரோலாவின் ஆய்வாளர் மார்ட்டின் கூப்பர் என்பவர் மன்ஹாட்டனில் இருந்து  ஏப்ரல் 3,  1973 அன்று, நியூஜெர்சியில் உள்ள பெல் ஆய்வு நிறுவனத்தின் தலைமையகத்தில் பணிபுரிந்த தனது போட்டியாளரான ஜோயல் எஸ். ஏங்கெல் என்பவருக்கு முதல் அழைப்பை அனுப்பிப் பேசினார். அதன் பிறகு இன்று நாம் பயன்படுத்தும் வகையில் அந்த கைபேசியின் வளர்ச்சி வியக்கத்தக்க வண்ணம் மாறியுள்ளது.

siragu thiranpesi3

தொடர்ந்து, அனலாக் அடிப்படையில் செயல்படும் ‘டைனடேக்’ (DynaTAC 8000X) என்ற கைபேசியை மோட்டோரோலா 1983 இல் அறிமுகப்படுத்தியது, அதன் அன்றைய விலை $ 4,000 டாலர். பழைய படங்களில் பார்த்தால் கையில் ஒரு செங்கல் அளவிற்கு ஒரு அலைபேசிக்கருவியை வைத்துப் பேசுவது சற்று வேடிக்கையாகக் கூட இருக்கும். இந்த அளவின் காரணமாகவே முதலில் இந்த அலைபேசிகள் கார்களில் மட்டுமே இணைக்கப்பட்டிருந்தது. 1989  ஆண்டிற்குப் பிறகே, காரிலிருந்தும் விடுபட்டு கையடக்க கைபேசியாக அலைபேசி உருமாறியது. அப்படியும் சட்டைப்பையில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு அதன் வடிவம் சிறியதாக மாறவில்லை. வழக்கமான கம்பிவழி பேசும் தொலைபேசியின் ‘ஹாண்ட்செட்’ எனப்படும் கம்பியற்ற பேசும் பகுதியை,  நாம் வீட்டில் பல இடங்களுக்கும் கையோடு எடுத்துச் சென்று  பேசும் பகுதியைப் போன்ற தோற்றத்துடன் உருவாக்கினார்கள்.  அழைப்பு எண்களை அழுத்தும் பொத்தான்களுடன் ஒலிவாங்கியையும் பேசும்பகுதியையும் கொண்டு வடிவத்திலும் கம்பிவழி தொலைபேசி போன்றே காணப்பட்டது.

இந்நாட்களில் அலைவரிசை வழியாகப் பேசும் தொலைபேசி, கைபேசி என்றும், செல்பேசி என்றும், அலைபேசி என்றும், திறன்பேசி என்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தகுந்த பெயர்கள் கொண்டு வேறுபடுத்திக் காட்டப்பட்டாலும் கைபேசி, செல்பேசி, அலைபேசி, திறன்பேசி என்று பல வகையிலும் மாற்றி மாற்றி பேச்சுவழக்கில் குறிப்பிடப்படுகிறது. ஆங்கிலத்திலும் இதே நிலையில் மொபைல்ஃபோன், செல்ஃபோன், வயர்லெஸ்ஃபோன், ஸ்மார்ட்ஃபோன் என்றே பல சொற்களும் புழக்கத்தில் உள்ளன. சொல் பயன்பாட்டில் பயனர்களின் வயதின் தாக்கமும் இருக்கக்கூடும். திறன்பேசி என்பது தொடுதிரையுடன் (டச்ஸ்க்ரீன்) கூடிய ஒரு கையடக்க அலைபேசி, அதனை இயக்கும் இயக்குதள மென்பொருளை (ஆபரேட்டிங் சிஸ்டம் சாஃப்ட்வேர்) நிறுவக்கூடியதாக ஒரு ‘கையடக்கக் கணினி போல’ செயல்பட  வேண்டும் என்பது திறன்பேசியின்  அடிப்படை வரையறை.

siragu thiranpesi4

திறன்பேசி என்றவுடன், அனைவர் மனதிலும் இன்று முதலில்  நினைவிற்கு வருவது  ஸ்டீவ் ஜாப்ஸ் ஜனவரி 9, 2007 இல், மேக் வர்ல்ட் கன்வென்ஷனில் அறிமுகப்படுத்திய ஆப்பிள் நிறுவனத்தின் பலதொடுமுனைதிரையுடன் கூடிய முதல்தலைமுறை ஐஃபோன்தான். அந்த 2007 ஆம் ஆண்டின் மாற்றம் என்பது  திறன்பேசி வளர்ச்சியில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது என்பதும் உண்மைதான். எனினும் ஆப்பிள் நிறுவனத்திற்கே உரிய, ஐஃபோனுக்கான  இயக்குதள மென்பொருள் தவிர பிற மென்பொருளை நிறுவக்கூடிய வகையில்  அமையாத ஐஃபோனை, திறன்பேசிக்கான வரையறையை அது நிறைவு செய்யவில்லை என்று கூறி அது திறன்பேசி அல்ல என்று மறுப்பவர்களும் உள்ளனர். திறன்பேசிக்குரிய இந்த வரையறையை நிறைவு செய்யும் ஒரு அலைபேசி, ஆப்பிள் ஐஃபோன் அறிமுகப்படுத்தப் படுவதற்கு 15 ஆண்டுகளுக்கும் முன்னரே திறன்பேசியாக  பயன்பாட்டிற்கு வந்துவிட்டது என்பதுதான் வரலாற்று உண்மை.

ஆம், தொடுதிரை கொண்ட, பயனருக்கு உதவும் பல வசதிகளைக் கொண்ட திறன்பேசி உருவாக்கப்பட்டது 1992 ஆம் ஆண்டே நிகழ்ந்துவிட்டது. ஆனால்,  அப்பொழுது “திறன்பேசி” என்ற சொல்தான் உருவாக்கப்படவில்லை. அதாவது, ஸ்மார்ட்ஃபோன் என்று குறிப்பிடும் வழக்கம் பின்னரே தோன்றியது. ஆகவே, திறன்பேசியின் வளர்ச்சியைக் காலக்கோட்டில் பார்க்கும் பொழுது சில முக்கியமான தொழில்நுட்ப மாற்றங்கள் அடிப்படையில் காணுவது சிறப்பாக அமையும்.

நவம்பர் 23, 1992 இல், ஐபிஎம் நிறுவனம் வெளியிட்ட ‘சைமன் பர்சனல் கம்யூனிக்கேட்டார்’ (The IBM Simon)  என்ற பெயரில், முதன்முதலில் தொடுதிரையுடன் கூடிய அலைபேசியொன்று ‘காம்டெக்ஸ் கம்ப்யூட்டர் அண்ட் டெக்னாலஜி  டிரேட்ஷோ’வில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நாட்களில் இது ‘முதல் திறன்பேசி’   என்று அடையாளம் காணப்படுகிறது. ஆக, இதன் அடிப்படையில் திறன்பேசி  உருவாக்கப்பட்டு  கால்நூற்றாண்டு ஆகிவிட்டது. சைமன் ஒரு ‘பிடிஏ’, திருத்தமாகச் சொல்ல விரும்பினால், சைமன் என்ற கருவி பெர்சனல் டிஜிட்டல் அசிஸ்டெண்ட் என்பதும் அலைபேசியும் இணைந்த ஒரு கருவி. அதில் நாட்காட்டி, கடிகாரம், முகவரி தொகுப்பு, கால்குலேட்டர் போன்றவையும் அமைக்கப்பட்டிருந்தது.  அக்காலம், பெர்சனல் டிஜிட்டல் அசிஸ்டெண்ட் கருவிகளின் காலம். ஆப்பிள் நிறுவனத்தின் ‘நியூட்டன் மெசேஜ் பேட்’ என்ற கருவியை வர்த்தக உலகம் ஆர்வத்துடன் பயன்படுத்திய காலம். இத்தகைய கருவியில் அலைபேசியும் இணையும்பொழுது,  இவற்றுக்கு வணிக நிறுவன பயனாளர்கள் இடையில்  நல்ல வரவேற்பு கிடைத்த காலம் அது.

siragu thiranpesi1

தொடர்ந்து, ‘குளோபல் சிஸ்டம் ஃபார் மொபைல்’ அல்லது ‘ஜிஎஸ்எம்’ என்ற உலகளாவிய ஒரு தர அடிப்படையில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்ட அலைபேசிகளை, குறிப்பாக டிஜிட்டல் (எண்ணிம) அடிப்படையில் செயல்படும் அலைபேசிகளை நோக்கியா நிறுவனம் பெருமளவில் உற்பத்தி செய்து 1992 ஆம் ஆண்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தது.

அமெரிக்காவில் முதன்முதல்  1996 ஆம்  ஆண்டில்தான் அலைபேசி பயன்பாடு அதிக மக்களைச் சென்றடைந்தது. எனது முதல் கைபேசியும் 1996 ஆண்டில் வாங்கப்பட்ட, படத்தில் கட்டப்பட்டது போன்ற  ‘ப்ரைம்கோ’ சேவையின் ‘குவால்கம்’ கைபேசியே.  கைபேசியின் தலையில் சிறிய ஆண்டெனா ஒன்றும் இருக்கும். பிற்காலத்தில் ஆண்டெனாக்கள் மறைந்து கைபேசிக்குள்ளேயே  அவை அடக்கமாயின.

இன்டெல் மென்பொருளில் இயங்கும் கைபேசி ஒன்று 1997 இல் முதல் ஸ்மார்ட்ஃபோன் பெயருடன் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கடுத்து, அதே ஆண்டில்  எரிக்சன் (Ericsson-GS 88)  திறன்பேசி 1997 லும், தொடர்ந்து 2000 ஆம் ஆண்டில்  தொடுதிரை கொண்ட எரிக்சன் (Ericsson R380) அலைபேசியும் “திறன்பேசி” என்ற பெயர் அறிமுகத்துடன் விற்பனைக்கு வந்தன. ஆக, அலைபேசி ‘திறன்பேசி’ என்ற பெயரில் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது சைமன் அலைபேசி உருவாகி ஐந்து ஆண்டுகள் கடந்தபின்னர் 1997 இல் தான்.

இதே நிலை கமெரா கொண்ட திறன்பேசியிலும் தொடர்ந்தது. மோட்டோரோலா வெளியிட்ட  1997 ஆம் ஆண்டின்  அலைபேசியில், காமெரா ஒன்றை இணைத்து புதியதாகப் பிறந்த  ‘சோஃபி கான்’ என்ற  தனது பெண்குழந்தையைப் படம் எடுத்து இணையம் வழி உறவுகளுடன் பகிர்ந்தார் குழந்தையின் தந்தை. இதுவே அலைபேசி வழி அனுப்பப்பட்ட முதல் படமாகக் கூறப்படுகிறது. ஆனால், அலைபேசி தயாரிப்பாளர்கள் இரண்டாண்டுகள் கழித்துத்தான் பயனர்களுக்கு இத்தகைய படமெடுக்கக்கூடிய அலைபேசிகளை அறிமுகப்படுத்தினர்.

1999 ஆம் ஆண்டில் தேடல் உலாவி  கொண்ட நோக்கியா அலைபேசிகள், ஐரோப்பிய நாடுகளில் ‘ஜிபிஎஸ்’ அல்லது ‘குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்’ என்ற புவியிடத் தொடர்பைக் காட்டும் அலைபேசிகள், எம்பி3 இசைகொண்ட சாம்சங் அலைபேசிகள், ஆண்டெனாவை ஃபோனுக்குள்ளே அடக்கிவிட்ட ‘இன்டெர்னல் ஆண்டெனா’ கொண்ட நோக்கியா அலைபேசிகள், குறுஞ்செய்தி அனுப்ப உதவும் கைபேசிகள், தட்டச்சுப் பலகை வடிவைப் பின்பற்றிய குவர்ட்டி விசைப்பலகைகள் கொண்ட அலைபேசிகள், எஃப்எம் வானொலி கொண்ட அலைபேசிகள், ப்ளூ டூத் தொடர்பு, வண்ணத் தொடுதிரை என்று ஒவ்வொரு திறன்பேசி தயாரிப்பாளரும் புதுப்புது வசதிகளை உருவாக்கி வெளியிடத் துவங்கினர்.

2000 ஆண்டில்  சாம்சங் (SCH-V200) நிறுவனமும், பிறகு 2002  ஆம் ஆண்டில் நோக்கியோ(Nokia 7650) வும் சானியோ(Sanyo SPC-5300) வும் புகைப்படக்கருவியை திறன்பேசியில் இணைத்து அமெரிக்கப் பயனர்களின் பயன்பாட்டிற்கு வகைசெய்தனர். தொடர்ந்து வந்த ஆண்டுகளில் திறன்பேசியின் காமெராக்களை மேம்படுத்துவதிலும், கீபோர்டுகளை மாற்றி அமைப்பதிலும், அலைபேசியின் வடிவத்தை மாற்றியமைப்பதிலுமே  அலைபேசி நிறுவனங்களின் கவனம் சென்றது.

இக்காலத்தில் திறன்பேசி பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவேகமாக அதிகரிக்கத் தொடங்கியது.  திறன்பேசிகளுக்கு இணையத் தொடர்பும் கிடைத்தது. இது ஒரு மிக முக்கியமான திருப்பம் எனலாம். 21 ஆம் நூற்றாண்டின்  துவக்கத்துடன் 3ஜி (தேர்ட் ஜெனரேஷன்) என்றும், அடுத்த பத்தாண்டுகளில், 2010 ஆண்டு முதல் 4ஜி (ஃபோர்த் ஜெனரேஷன்) எனவும், புதிய புதிய மேம்படுத்தப்பட்ட நெட்வொர்க்கிங் வசதியுடன் விரைவில் தொடர்புகொள்ள உதவும் தொலைத்தொடர்பு வலையிணைப்பு வசதிகளும் அறிமுகமாயின. வன்பொருள், மென்பொருள், இணைப்புச்சேவை என ஒன்றுக்கொன்று சளைக்காமல் போட்டிபோட்டு வளரத் துவங்கின. இவ்வாறாக,  தொலைத்தொடர்பு முறையில் புதிய நூற்றாண்டில் அடி எடுத்து வைத்த உலகம் முற்றிலும் மாறிவிட்டது.

எடுக்கப்பட்ட ஒலி-ஒளிப்  படங்களை இணையம் வழி பகிர்தலும், செய்திகளை ஊடகங்கள் போன்று பயனர்களே உடனுக்குடன் பரப்புதலின் துவக்கமும் இதன் துவக்கமாக அமைந்தது. 2004 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘குளோபல் ரோமிங்’ என்ற பயணிகளுக்கு உதவும் சேவைகளும் உலகத்தை முற்றிலும் குறுக்கியது.  அதற்குப் பெரிதும் உறுதுணையாக இருந்தது 2005 ஆம் ஆண்டுவாக்கில் வளரும் நாடுகளில் வசிக்கும் மக்களிடமும் திறன்பேசி மிகப்பெருமளவில் சென்று சேர்ந்த காரணம்தான். பணிகளை விரைவில் செய்ய உதவும் ஒரு கருவி, ஒரு அலைபேசி போன்ற வரையறைகளை உடைத்து, உருவில் மாற்றம் பெற்று பொழுதுபோக்குக்கும் பயன்படும் கருவியாக, கற்க உதவும் கருவியாக திறன்பேசியின் பயன்பாடு திசைமாறியது. இதனை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் அதற்கான சிறப்பான மேம்படுத்தப்பட்ட மென்பொருளும் வன்பொருளும் உருவாக்க வேண்டியத் தேவையும் ஏற்பட்டது.

இந்நிலையில் ஆண்டிராய்ட் இயக்குதளம், ஐஃபோன் இயக்குதளம் போன்றவை உருவெடுக்கத் தொடங்கின. தனது வழிகாட்டலில் உருவாக்கப்பட்ட ஆண்டிராய்ட் இயக்குதள மென்பொருளைக் கூகுள் $50 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு  (அந்த அளவு  கொடுத்திருக்கலாம் என்பது ஒரு கணிப்பே)  வாங்கி அதன் இயக்குதள உருவாக்கத்தில் அக்கறை செலுத்தி,  திறன்பேசி தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்குக் காரணமாக விளங்கியது. 2007 ஆம் ஆண்டு ஜனவரியில் ஆப்பிள் நிறுவனம் ஐஃபோன் – முதல்தலைமுறை திறன்பேசியாக பலமுனைத் தொடுதிரை கொண்ட கைபேசியை உருவாக்கி மக்களைக் கவர்ந்தது. ஐஃபோனின் அழகிலும் திறனிலும் செயல்பாட்டிலும் அளவிட்டால் அது ஆப்பிள் நிறுவனம் செய்தது புரட்சிகரமான மாற்றம் என்பதில் ஐயமில்லை.

அதுவரை அழைப்பு எண்களை அழுத்தும் விதத்தில் பொத்தான்களைக் கொண்டு, கடந்தகால கம்பிவழி தொலைபேசியின் உறவைக் கைவிடாது இருந்த திறன்பேசிகளிடம் இருந்து எண்கள் கொண்ட பொத்தான்கள் மறையத் தொடங்கின. இதுவும் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மறு ஆண்டே 2008 இல் கூகுளின் முதல் ஆண்டிராய்ட் இயக்குதளம் கொண்ட அலைபேசி எச்டிசி நிறுவனத்தின்  டிரீம் ஃபோன்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்காவில் அது டி-மொபைல் ஃபோன்கள் வழியாக மக்களை அடைந்தது. இந்தக்காலத்தில்தான் இணைய வசதியுடன், ஒரு சிறிய கையடக்க கணினியாக இயங்கும் அலைபேசியே ஒரு திறன்பேசி என்று பொதுமக்கள்  கருதும்  நிலையும் வந்தது. ஐஃபோனும் ஆண்டிராய்ட்ஃபோனும் இரண்டும் சரிக்குச் சமமாக மக்களிடம் பரவியது. சற்றொப்ப 2011 ஆண்டு வாக்கில் 50% க்கு மேற்பட்ட திறன்பேசி  பயனாளர்கள்  ஆண்டிராய்ட்   திறன்பேசியைப் பயன்படுத்தினர் என்ற அளவிற்கு நிலைமை மாறியது.  மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் ஃபோன் மற்றும் வேறு சில இயக்குதளம் கொண்ட அலைபேசிகள் இந்தப் போட்டியைத் தாக்குப்பிடிக்க இயலாமல் பின்வாங்கத் தொடங்கின.

திறன்பேசிகளின் வளர்ச்சி ஏற்படுத்திய ஒரு முக்கிய திருப்பமாக, 2010 ஆண்டு முடிவில், உலகளாவிய நிலையில் திறன்பேசிகள் விற்பனை கணினி விற்பனையை முறியடித்து சாதனை படைத்து அதிக அளவில் மக்களிடம் சென்று சேர்ந்தது. 2011 ஆண்டிற்குப் பிறகு அதற்கேற்ற வகையில் புதிய சேவைகள், வணிகங்கள் என்று உலகம் மாறத் துவங்கியது. தொடர்ந்து முன்னர் களத்தில் இருந்த மோட்டோரோலா, சோனி எரிக்சன், நோக்கியா, பிளாக் பெர்ரி, எல்ஜி போன்ற மக்களைக் கவர்ந்த நிறுவனங்களுடன் ஆப்பிள் ஐஃபோன், சாம்சங், கூகுள், எச்டிசி போன்றவையும் களத்தில் இறங்கி தங்கள் தனித்துவ படைப்புகளினால் திறன்பேசி விற்பனையில் தங்களுக்குரிய பங்கை எட்டின.

திறன்பேசி சேவையை அளிப்பதிலும் மறுபக்கம் பெரிய போட்டி ஏற்பட்டதில் அது நல்ல வகையில் பயனாளர்களுக்கும் உதவியது. சேவையை மாற்றினாலும் தொலைபேசியின் எண் மாறாது என்ற நிலை பயனர்களுக்கு பல சேவைகளை சோதனை செய்யவும்,  வாழும் இடத்திற்கு ஏற்ப நல்ல சமிக்கை கிடக்கும் சேவை நிறுவனங்களைப் பயன்படுத்தவும் வாய்ப்பளித்தது. அமெரிக்காவில் பற்பல நிறுவனங்கள் ஒன்றை ஒன்று விழுங்கி, ஒன்றுடன் ஒன்று இணைந்து இன்றைய தேதியில்  ஏடிஅண்ட்டி, வெரைசன்,  ஸ்பிரின்ட்,  டி-மொபைல் என்ற  நான்கு சேவை நிறுவனங்கள் மட்டுமே முன்னிலையில் உள்ளன. இவற்றில் அலைபேசி சந்தையில் மூன்றில் ஒரு பகுதியை ஏடிஅண்ட்டியும், அடுத்த மூன்றில் ஒரு பகுதியை வெரைசனும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, மிச்சமிருக்கும் மூன்றில் ஒரு பகுதி மற்ற நிறுவனங்களின் கையில் உள்ளன. அவ்வாறே திறன்பேசி விற்பனையும்;  இரு பெரிய நிறுவனங்களான ஆப்பிள் ஐஃபோன் மற்றும் சாம்சங் கேலக்சி திறன்பேசிகளின் தாக்கத்தை திறன்பேசி விற்பனையிலும் காணமுடியும். மூன்றில் ஒரு பங்கு ஐஃபோன் பயனர்கள், அடுத்த மூன்றில் ஒரு பங்கு சாம்சங் கேலக்சி பயனர்கள். மற்ற திறன்பேசி உருவாக்கும் நிறுவனங்கள் யாவும் மிச்சமிருக்கும் மூன்றில் ஒரு பகுதியை ஆக்கிரமித்து உள்ளார்கள். திறன்பேசி இயக்குதளத்தில் ஆண்டிராய்ட் அல்லது ஐஃபோன் இரு பெரிய போட்டியாளர்களைத் தவிர மற்றவர்கள் களத்தில் இல்லை.

siragu thiranpesi5

குறுஞ்செய்தி அனுப்புதல், புகைப்படக் கருவி இணைப்பு, இணையத்தொடர்பு கொண்ட கையடக்கக் கணினி, அவற்றுடன் பொழுதுபோக்கு விளையாட்டுகளுக்கான செயலிகள், குழுமமாக உரையாடல்கள், சமூக வலைத்தளங்கள், நூல்கள் படிப்பது, காணொளிகள் பார்ப்பது, பாடல்கள் கேட்பது, வானொலி செய்திகள், தொலைக்காட்சிகள் திரைப்படங்கள் பார்ப்பது, கடைகளில் சாமான் வாங்குவது, உடற்பயிற்சியில் உதவி, மருத்துவ செய்திகள், இணையவழிக் கல்வி வகுப்புகள், புதிய மொழி கற்பதற்கு பயிற்சி, பங்குச்சந்தையில் முதலீடு, வங்கியுடன் தொடர்பு, மின்னஞ்சல், நூல்களிலும் தாள்களிலும் இருப்பதைப் படியெடுத்தல். வரைபட உதவியுடன் பயணம் செல்லும் இடத்தை அடைதல், வாடகை வண்டிகளை  வருவித்தல், கைபேசி வழியே பணம் பரிவர்த்தனை, நல்ல உணவுவிடுதிகள் தங்கும் விடுதிகள் ஆலோசனை, வயர்லஸ் சார்ஜிங்… என்று திறன்பேசி வழங்கும் உதவிக்கு எல்லை என்பது இனி இல்லை என்ற நிலை ஏற்பட்ட உலகில் நாம் வாழத் தொடங்கி விட்டோம்.

ஒவ்வொரு புதிய புதிய செயலிகள் அறிமுகமாகும்பொழுதும் திறன்பேசி வெவ்வேறு வகைகளில் நமக்கு உதவி வருகிறது. திறன்பேசியால் சாதிக்க முடியாதது என்ன  என்பதை ஆராய வேண்டியதுதான்  இன்றைய நிலை. ஒருகாலத்தில்  “ஹலோ! யார் பேசறது?” என்ற தொலைத் தொடர்பு அலைபேசியாகத் துவங்கி இன்று அந்தப் பயன்பாட்டைப் பின்னுக்குத் தள்ளி, தனது ஆரம்பக்கால உருவத்தையும் துறந்து,  சிறுவர்களுக்கான கதைகளில் சொல்லப்படும் மந்திரவாதியின் மந்திரக்கோல் போல இன்று மாறிவிட்டது திறன்பேசி.

ஒருவகையில் 2007 க்குப் பிறகு, ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகப்படுத்திய திறன்பேசி வடிவம் மற்றும் செயல்பாடு ஆகிய மாற்றத்தைத் தொடர்ந்து வேறு புதிய வகை மாறுதல் கடந்த பத்தாண்டுகளில்  நிகழவில்லை என்றே சொல்லலாம். எவ்வாறு 2004 க்குப் பிறகு இணையமும் கேமெராவும் திறன்பேசியில் இடம்பெற்ற பின்னர் அவற்றை மேம்படுத்துவதில் மட்டுமே திறன்பேசி நிறுவனங்கள் அக்கறைகாட்டினவோ அதுபோன்ற ஒரு தேக்கநிலை இப்பொழுதும் திறன்பேசி தொழில்நுட்ப வளர்ச்சியில் காணப்படுகிறது. பலரால் செயலிகள் பல உருவாக்கப்பட்டு அவைதாம் பயனர்களுக்கு உதவுகின்றன என்றே சொல்லலாம். இதற்கும் மேல் என்ன புதுமை புகுத்திவிட முடியும் என்ற வகையில் தொழில்நுட்பம் முதிர்ச்சியை எட்டிவிட்ட ஒரு நிலையாகக் (plateau) கூட இது இருக்கக்கூடும். அல்லது ஸ்டீவ் ஜாப்ஸ் போன்ற ஒரு புதுமையை விரும்பும் சிந்தனையாளர் மற்றொருவர் வரும் வரை புரட்சிகரமான தொழில்நுட்பத் திருப்பம் நிகழாமலும் போகலாம்.

திறன்பேசிகளைக் கையாளும் பயனர்கள் கோணத்தில்;  திறன்பேசிகளைப் நாம்  தக்க வகையில்  நமக்கு ஆக்கப்பூர்வமாக வளர்ச்சி தரும் விதத்தில் பயன்படுத்துவதில் இருக்கிறது மனிதர்களின் திறமை. பொறுப்பற்ற வகையில் திறன்பேசியைக்  கையாளுவதையும், கவனக்குறைவாக ஆபத்திலோ, விபத்திலோ சிக்க வைக்காத வகையில் செயல்படுவதையும் அடுத்த தலைமுறைக்கு கற்பிப்பதும் நமது பொறுப்பில் இன்று  சேர்ந்துகொண்டது.

சான்றாதாரங்கள்:

https://www.timetoast.com/timelines/evolution-of-the-smartphone

http://www.bitrebels.com/wp-content/uploads/2011/07/The-Smartphone-History-Timeline-Infographic-1.jpg


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “திறன்பேசியின் வளர்ச்சி”

அதிகம் படித்தது