மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

திறன்மிகு தியாகராயர் சாலை

இராமியா

Feb 22, 2020

siragu t nagar2

அண்மைக் காலமாய்த் “திறன்மிகு” (Smart) என்ற சொல் வெகுவாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறது. அந்த வகையில் சாலைகளில் போக்குவரத்து வசதியை மேம்படுத்தத் திறன்மிகு சாலைகளை  (Smart Roads) அரசு அமைத்துக்கொண்டு இருக்கிறது. அவற்றுள் சென்னை, தியாகராய நகரில் உள்ள தியாகராயர் சாலையும் ஒன்று.

முன்பு தியாகராயர் சாலையின் இரு மருங்கிலும் நடைபாதைக் கடைகள் நிரம்பி இருந்தன. அக்கடைகள் இருப்பது நடைபாதையில் நடப்பவர்களுக்கு இடையூறாக இருப்பாகக்கூறி அவற்றை அகற்ற முயன்றார்கள். ஆனால் தங்கள் வாழ்வுரிமை பாதிப்பதாகக்கூறி நடைபாதை வணிகர்கள் நீதிமன்றத்தில் வழக்காடி தங்கள் உரிமையைத் தக்கவைத்துக் கொண்டனர். வழக்கமான முறையில் நடைபாதைக் கடைகளை அகற்ற முடியாததைக் கண்ட “மிகத்திறமையான” அரசு அதிகாரிகள் திறன்மிகு சாலைத் திட்டத்தின் மூலம் அதை செய்துவிடலாம் என்று ஒருவழியைக் கண்டனர். “புலிக்குப் புல் வாங்கிப் போட்ட செலவுரூ.500″ என்பதுபோல் நடைபாதை வணிகர்களின் வாழ்வுரிமைக்கு மாற்று இடம் ஒதுக்கிக் கடைகள் கட்டுவதாக அத்திட்டத்தை வடிவமைத்தனர்.

திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்பு அது தங்களைப் பாதிக்கும் என்று நிறுவமுடியாத நிலையில் நடைபாதை வணிகர்கள் அதை எதிர்க்க முடியவில்லை.

பணமதிப்பு இழப்பு கருப்புப் பணத்தை ஒழிக்கும் என்று உறுதிமொழி அளிக்கப்பட்டாலும் நடைமுறையில் அப்படி எதுவும் நடக்காததுபோல் நடைபாதை வணிகர்களுக்கு அளித்த உறுதிமொழியும் பொய்யாகிப்போனது. அதுஒருபக்கம் இருக்கட்டும். யார் யார் பயன் அடைந்தார்கள்? என்ன என்ன விளைவுகள் ஏற்பட்டன?

நடைபாதையின் அகலம் அதிகமாக்கப்பட்டு, சீராக்கப்பட்டு நடப்பதற்கு வசதியாக செய்யப்பட்டு உள்ளது. இதனால் நடைபாதையில் நடப்பவர்களில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைாவான எண்ணிக்கையில் உள்ள “அறிவாளிகள்” மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மற்றவர்கள் தங்களுக்கு மலிவான விலையில் பொருட்களை விற்கும் வணிகர்களைக் காணாமல் ஏமாற்றம் அடைகின்றனர். அதனால் நடப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வாகனப்போக்குவரத்துக்கு அதிக வசதி கிடைத்து உள்ளது.

அந்த அதிக வசதி எப்படிப் பயன்பட்டுக் கொண்டு இருக்கிறது?சாலையின் இரு மருங்கிலும் வாகன நிறுத்த (Vehicle Parking) இடமாக மாற்றப்பட்டு உள்ளன.

இவ்வாறு சாலைப்பகுதி வாகன நிறுத்தப் பகுதியாக மாற்றப்பட்டு உள்ளதால் வாகன ஓடு தளம் குறுகிவிட்டது. அதன் தொடர்ச்சியாக அச்சாலை ஒருவழிப் போக்குவரத்தாக  (One way traffic)மாற்றப்பட்டு விட்டது. அதன் விளைவு?

முன்பு வாகனங்களில் வரும் செல்வந்தர்கள் அவற்றை நிறுத்த இடம் கிடைக்காமல் சிரமப்பட்டுக் கொண்டு இருந்தனர். அவர்களுடைய நேரம் அதிகமாக விரயம் ஆகிக்கொண்டு இருந்தது. இப்பொழுது அவர்கள் நேரம் விரயம் ஆகாமல் தங்கள் வேலையை முடித்துக் கொண்டுபோக வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

ஒருவழிச் சாலையாக மாற்றியதால் பேருந்தில் வரும் நடுத்தர, ஏழைமக்கள் அதிகமாக நடக்க வேண்டி உள்ளது. அதனால் அவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே குறைந்த விலைக் கடைகளை அகற்றியதன் மூலம் ஏழை, நடுத்தர நுகர்வோர்களை விரட்டி அடித்த திறன்மிகு சாலைத்திட்டம், அதிகமாக நடக்க வைக்கும் இன்னொரு சுமையையும் ஏற்றி அவர்களுடைய வருகையை மேலும் குறைக்க ஏற்பாடு செய்து, நடைபாதையின் பயன் அளவை வெகுவாகக் குறைத்து உள்ளது. அதாவது ஏழை, நடுத்தரப் பயனாளிகளில் மிகப்பலரை விரட்டி அடித்து விட்டு, போக்குவரத்து நெரிசலைக் குறைத்து விட்டோம் என்று வெளிச்சம் போடுகிறார்கள்.

சாலையின் இரு மருங்கிலும் வாகன நிறுத்தங்களை உருவாக்கி வாகன உரிமையாளர்களுக்கு அளப்பரிய சலுகைகளை அளித்து, சாலையின் போக்குவரத்துத் தாங்கு திறனை வெகுவாகக் குறைத்து விட்டார்கள். பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்த கதையாக, திறன்மிகு சாலை அமைக்கப்போய், திறன்குறைச் சாலையை அமைத்து இருக்கிறார்கள்.

siragu t nagar1

அது மட்டுமா? சாலையை ஒரு வழிப்பாதையாக மாற்றியதன் மூலம் எல்லா வாகனங்களும் தேவை இல்லாமல் சுற்றிச்சுற்றி அதிக தொலைவு பயணிக்க வேண்டி உள்ளது. இதனால் தேவை இல்லாமல் எரிபொருள் விரயம் ஆகிறது. எரிபொருள் விரயம் ஆவதால் அந்நியச் செலாவணி விரயம் ஆகிறது என்பது மட்டும் அல்லாமல், புவி வெப்பஉயர்வு முடுக்கி விடப்படவும் செய்கிறது.

இந்தக் கூத்துகள் எல்லாம் ஏன் நடக்கின்றன? ஏழைகளுக்கு எதிராகவும் பணக்காரர்களுக்குச் சார்பாகவும் என்று நினைப்பது ஒரு மேம்போக்கான கருத்தோட்டமே. உண்மையில் இது உழைக்கும் மக்களுக்கு எதிரானதும் முதலாளிகளுக்குச் சார்பானதும் ஆகும். எப்படி?

உழைக்கும் வர்க்கத்தினர் நுகரும் பொருட்கள் கிடைப்பதில் தடை அல்லது உராய்வு ஏற்படுத்தியதன்மூலம் இது அவர்களுக்கு எதிரான ஒரு திட்டமாகும்.

முதலாளிகளுக்கு எப்படி சார்பானது? முதலாளிகள் தங்கள் மூலதனத்தை இலாபகரமாக ஈடுபடுத்தும் தொழில்களில் முக்கியமானது வாகன உற்பத்தித் தொழில். வாகன உரிமையாளர்களுக்கு வசதிகளை அதிகரித்துக் கொடுப்பதன்மூலம், இப்பொழுது வாகனம் இல்லாமல் உள்ள உயர்நடுத்தர நிலையில் உள்ள மக்களை வாகனம் வாங்க ஊக்குவிக்கிறார்கள். அதன் மூலம் வாகன உற்பத்தியை அதிகரித்து மூலதனப் பயணத்தில் உராய்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

வாகன உற்பத்தி மேலும் அதிகரித்தால் புவி வெப்ப உயர்வு மேலும் முடுக்கிவிடப்படும் அல்லவா? அது சுற்றுச்சூழலுக்கும் புவிப் பாதுகாப்பிற்கும் கேடு அல்லவா?

ஆம். ஆனால் அதைப் பற்றி முதலாளிகளுக்கும், முதலாளித்துவ அறிஞர்களுக்கும் கவலை இல்லை. மூலதனப் பயணம் உராய்வு இன்றித் தொடர வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த அக்கறையும் அவர்களுக்கு இல்லை.

திறன்மிகு சாலை என்ற பெயரில் திறன்குறைச் சாலைகள் அமைக்கப்பட்டு ஏழை, நடுத்தர மக்களை இன்னலுக்கு உள்ளாக்குவதோடு மட்டும் அல்லாமல் புவிவெப்ப உயர்வையும் முடுக்கிவிடும் முதலாளித்துவ அரசின் திட்டங்களின் உடனடிக் கொடுமைகளையும், நீண்டகால அழிவினையையும் அமைதியாக ஏற்றுக்கொள்ளப் போகிறோமா? அல்லது உழைக்கும் மக்களின் நலன்களை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும் என்று அரசுக்கு அழுத்தம் தரப்போகிறோமா?


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “திறன்மிகு தியாகராயர் சாலை”

அதிகம் படித்தது