ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

தீட்டும் தீண்டாமையும்! (பகுதி – 14)

முனைவர். ந. அரவிந்த்

Jul 10, 2021

வர்ணம் மற்றும் சாதிகளை வைத்து மனிதனை மனிதனே தொடாமல் இருப்பது தீண்டாமையாகும். இது ஒரு பாவச் செயல். ஏனெனில், இறைவன் பார்வையில் அனைவரும் சமமே. மனிதனே பணம் மற்றும் சாதியினை வைத்து தன்னை உயர்ந்தவன் என்றும் பிறரை தாழ்ந்தவன் என்றும் தீர்மானிக்கிறான்.

தீண்டாமை வேறு தீட்டு வேறு. தீட்டு என்பது குறிப்பிட்ட காரணங்களுக்காக சில பொருட்களை தொடாமல் அல்லது சில செயல்களை செய்யாமல் மற்றும் தவிர்க்கப்படக்கூடிய இடங்களுக்கு செல்லாமல் இருப்பதாகும். தீண்டாமை தவறு ஆனால் தீட்டு தவறில்லை. ஆனால், அதில் மூட நம்பிக்கை கலந்துவிடாமல் பார்ப்பது மிக அவசியம்.

ஆதி தமிழர்கள் கோயில் செல்லும் போது பல பழக்க வழக்கங்களை கடைப்பிடித்தனர். அவற்றில் பல இன்று வரை தமிழகத்தில் தொடர்கின்றன. யாராக இருந்தாலும் குளித்த பின்னரே கோயில் செல்ல வேண்டும். உற்றார் உறவினர்கள் யாராவது இறந்தால் 40 நாட்கள் கோயில் செல்லமாட்டார்கள்.

siragu theettu1

குழந்தை பிறந்த பின்னர் 42 நாட்கள் தாய்க்கு தீட்டாகும். அந்த நாட்களில் குழந்தையின் தாய் கோயில் செல்வதில்லை. அதற்கு பலவீனம் ஒரு காரணம். மற்றும், ஏதாவது தொற்று இருந்தால் அது பிறருக்கு பரவ வாய்ப்புள்ளது. தொற்று வியாதியானது பிறரிடமிருந்து தாய் மூலமாக குழந்தையையும் தாக்க வாய்ப்புள்ளது. குழந்தைப் பெற்ற ஒரு பெண் முறையான பாதுகாப்பு எடுக்க தவறினால் தொற்று மற்றும் பெரிய சிக்கல்களை சந்திக்க நேரிடும். குழந்தை பிறந்து 6 வாரங்களுக்கு, தாய்க்கு இரத்தக் கசிவு இருக்கும். எனவே இந்த சமயத்தில் ஊட்டச்சத்து நிறைந்த சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும். இதனால் பெண்களுக்கு தெம்பும், தேவையான அளவு சக்தியும் கிடைக்கும். இரத்தக் கசிவு நின்றாலும் அதற்கு பின்னர், அதிகமான நாற்றம் மற்றும் சிறிதளவு இரத்தக் கசிவும் ஏற்படும். இது குழந்தை பிறந்த நேரம் நடந்தால் இயல்பானதே. இதுதான் தாயானவள் கோயில் செல்லாமல் இருப்பதற்கு காரணம். மற்றபடி, தீட்டு என்ற பெயரில் பெண்களை ஒதுக்கி வைக்கிறோம் என்று அர்த்தமில்லை. தாய்மையானது மிக புனிதமானது. இறைமகன் இயேசுவே புவியில் அவதரிக்க ஆணின் துணை தேவைப்படவில்லை. ஆனால், ஒரு தாய் தேவைப்பட்டது. தனக்கும் பிறருக்கும் பிரச்சனைகள் வராமல் இருக்க சில நாட்கள் வெளியே செல்வதை தவிர்க்கிறோம். அவ்வளவுதான். இந்த இடத்தில் தாய்மை எனும் தீட்டு தூய்மைக்காக கடைபிடிக்கப்படுகிறது.

கணவனும் மனைவியும் உறவு கொண்ட பின் இருவரும் குளிக்காமல் கோயில் செல்லக்கூடாது. பெண்கள் மாதவிலக்கு காலங்களில் கோயில் செல்வதில்லை.

அதுமட்டுமின்றி மது அருந்திவிட்டு கோயிலுக்கு செல்ல அனுமதி இல்லை மற்றும் அம்மை போன்ற பரவும் நோய் உள்ளவர்கள் கோயில் செல்லக் கூடாது. இவ்வாறு செய்வதால் தனக்கு உள்ள நோயானது பிறருக்கு பரவாமல் தடுக்க உதவுகிறது. இவைகள் அனைத்தும் தீட்டு எனப்படும். முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமுள்ளதாகவே இருந்தது. நாகரீகம் வளர வளர தீட்டு பார்ப்பது குறைந்து வருகிறது.

தமிழ் மக்கள் மட்டுமின்றி, தீட்டு என்பது பல நாடுகளிலும் உள்ள மக்களால் பரவலாக கடைபிடிக்கக்கூடிய ஒன்றாகும். தீட்டு பற்றி விவிலியம் என்ன கூறுகின்றது என காண்போம். இறைவன், ‘தீட்டானதைத் தொடாதீர்கள். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொள்வேன். மேலும் நான் உங்களுக்குத் தந்தையாயிருப்பேன்; நீங்கள் எனக்குப் புதல்வரும் புதல்வியருமாயிருப்பீர்கள்’ என்று கூறியுள்ளார்.

தன்னைவிட்டு வழி விலகி செல்லும் மக்களை இறைவன், ‘அவர்களின் செயல்களும் நடத்தையும் ஒரு பெண்ணின் மாதவிலக்கின் தீட்டுப்போல என் கண்முன் இருந்தது’ என்று கூறியுள்ளார். மற்றொரு பகுதியில், மாதவிலக்குப் பெண்களும் பேறுகாலத் தீட்டு நீங்காப் பெண்களும் காணிக்கைப் பொருள்களைத் தொடுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

அசைவ உணவு உண்பதை சிலர் தீட்டாக கருதினர் என்பதை கீழே குறிப்பிடப்பட்டுள்ளவை கூறுகின்றன. மக்கபே என்பவன் ஏறத்தாழ ஒன்பது பேருடன் பாலைநிலத்திற்கு ஓடிச்சென்றான். காட்டு விலங்குகளைப் போன்று அவனும் அவனுடைய தோழர்களும் மலைகளில் வாழ்ந்தார்கள்; தங்களையே தீட்டுப்படுத்திக் கொள்ளாதவாறு காட்டுக் கீரைகளை உண்டு காலம் கழித்தார்கள்.

இறை பணி செய்பவர்கள் ‘குருக்கள்’ என்று அழைக்கப்பட்டனர். இறை பணி செய்பவர்களுக்கு இறைவன் சில அறிவுரைகளை வழங்கினார். அதன்படி, இறை பணியாளர்கள் தூய்மையானவற்றையும் பொதுவானவற்றையும் பிரித்தறியவும், தீட்டானதையும் தீட்டற்றதையும் பகுத்தறியவும் மக்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். இறந்த உடலின் அருகில் குரு சென்று தன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ளலாகாது. ஆயினும் இறந்தவர் தம் தந்தையாகவோ, தாயாகவோ, மகனாகவோ, மகளாகவோ, சகோதரனாகவோ, திருமணமாகாத சகோதரியாகவோ இருந்தால் மட்டும் அவர் அவ்வாறு செய்யலாம். அதன்பின் தம்மைத் தூய்மைப்படுத்திக்கொண்டு அவர் ஏழு நாள்கள் காத்திருக்க வேண்டும் என்பதாகும். குருக்கள், பறவைகளிலோ, விலங்குகளிலோ, தானாய் இறந்தவற்றையும் காட்டு விலங்குகளால் பீறப்பட்டவற்றையும் உண்ணலாகாது.

கழுவாத கைகளால் உண்பதுகூட தீட்டாக கருதப்பட்டது. இவைகள் மட்டுமின்றி, சிலைகளுக்குப் படைக்கப்பட்ட உணவினை மற்றும் கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவற்றை உண்பது தீட்டாக கருதப்பட்டது. விபச்சாரம் மற்றும் வேசித்தனம் செய்வதும் தீட்டாகும்.

தீட்டிற்கு பின்னால் அறிவியலும், தீண்டாமைக்கு பின்னால் அகம்பாவமும் ஒளிந்துள்ளன.

தொடரும்…


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தீட்டும் தீண்டாமையும்! (பகுதி – 14)”

அதிகம் படித்தது