துருவ நட்சத்திரம் – குறும்பட விமர்சனம்
ஆச்சாரிMay 18, 2011
கலையும் அதன் வடிவமும் மக்களை கவரும் வகையில் நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டே வந்திருக்கிறது. அவ்வழியில் தற்போது தமிழில் குறும்படம் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இது குறைந்தது 5 நிமிடங்கள் முதல் 15.நிமிடங்கள் நேரமே ஓடக்கூடிய ஒளி-ஒலி அமைப்பில் இருப்பதாலும், அதில் சொல்ல வந்த கருத்தை மிகவும் சுவாரஸ்யமான முறையில் திரைப்படம் போலவே சொல்ல பல வழிகள் இருப்பதாலும் குறும்படம் அனைவருக்கும் பிடித்ததாக மாறி வருகிறது.
அப்படி சமீபத்தில் வெளிவந்த துருவ நட்சத்திரம் எனும் குறும்படம், அதன் உருவாக்கத்திலும் கருத்தாக்கத்திலும் சிறப்பானதாக இருக்கிறது. அரவிந்த் சுப்ரமணியன் இயக்கத்தில் விக்கி ஒளிப்பதிவில் அரவிந்த் மனோகரன் படத்தொகுப்பில் வெளிவந்திருக்கும் இக்குறும் படத்தில் டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எட்டு ஆண்டுகளாக வெளிநாட்டில் தங்கிவிட்ட தன் மகனையும் அவன் குடும்பத்தையும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் ஒரு சராசரி தகப்பனாக டெல்லி கணேஷ் பிரமாதமாக நடித்திருக்கிறார். ‘இதோ வருகிறோம்’ என்று சொல்லிவிட்டு பின் ‘வேலை இருப்பதால் வர முடியவில்லை’ என்று எப்போதும் ஏதாவது காரணம் சொல்லும் மகன் குடும்பம். ஒரு வழியாக தன பேரனை அனுப்பி வைக்கிறார்கள். டெல்லி கணேஷுக்கு தன பேரனை பார்க்கவோ பேசவோ பிடிக்கவில்லை – காரணம் அவனின் நுனி நாக்கு ஆங்கிலம் மற்றும் தலை முடி முதல் கால் வரை அவனின் அமெரிக்க பாங்கு. பின் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் இருவரும் நெருங்கி விடுகிறார்கள். பின் இரண்டொரு நாட்களில் மகனும் மருமகளுடன் வந்திறங்குகிறார். அடுத்த நாளே கிளம்பவும் தயாராகிறார். பின் என்ன நடக்கிறது என்பதை சிறுகதை போல் சொல்கிறது இப்படம்.
கதையில் வரும் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கதைக்கும் காட்சிக்கும் மிகவும் பொருத்தமான பின்னணி இசை மிகவும் அருமை. டெல்லி கணேஷின் வசனங்கள் அவரின் தனித்துவமான நகைச்சுவை எல்லையிலேயே பயணிப்பது போன்ற உணர்வு, இருந்தாலும் நன்றாகவே இருக்கிறது. அவரின் பேரனாக வரும் அந்த பொடிப்பையன் அசத்தல் நடிப்பில் நம்மை கவர்கிறான். ஒரு வெளிநாட்டு வாழ் மகனின் பெற்றோரை இன்னும் கவனமாக காட்சிப்படுத்தி இருக்கலாம். முடிவு அருமை.
ராத்திரியில் வந்து பேரனை விட்டுவிட்டு மருமகள் திரும்பி அமேரிக்கா சென்று விட்டாள் என சொல்லுவது, பேரனை ஒரு வெறுப்புடனே பார்ப்பது, அப்பாவும் மகனும் எட்டு வருடத்துக்கு பின் சந்திக்கும் போது மகனை பிரிந்த பெற்றோரின் தாக்கம் பற்றி சொல்லாதது, டெல்லி கணேஷ் மனைவிக்கான காட்சிகளை குறைத்தது என அங்கங்கே இருக்கும் சில குறைகளை டெல்லி கணேஷின் அனாயசமான நடிப்பில் மறைந்து போகிறது. படத்தொகுப்பும் ஒளிப்பதிவும் படத்துக்கு தேவையானபடி நன்றாக அமைந்திருக்கிறது.
வரவேற்போம். (என்ன ஸ்டார்,மார்க் எல்லாம் போடலையா..)
படத்தை காண http://www.youtube.com/watch?v=dz4dkh_08hY
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “துருவ நட்சத்திரம் – குறும்பட விமர்சனம்”