சனவரி 28, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

துறவறம் சார்ந்த அறக் கோட்பாடுகள்

முனைவர் மு.பழனியப்பன்

Jul 25, 2020

Siragu silappadhigaaram2

சிலப்பதிகாரத்தில் துறவறக் கோட்பாடுகளும் இணைத்தே படைக்கப்பெற்றுள்ளன. இல்லறத்தின் வழிப்பட்ட கோவலனும் கண்ணகியும் துறவறத்தாளாகிய கவுந்தி வழிகாட்ட மதுரை மூதூருக்குப் பயணப்படுகின்றனர். தன் வாழ்வில் பயணத்திலும் அவர்கள் அருளறம் கொண்டு பயணப்படுகின்றனர். துறவறம் ஆண்களுக்கு மட்டுமே என்ற பெரும்பான்மையை உடைத்தெறிகிறது சிலப்பதிகாரம். ஆண்களுக்கும், பெண்களுக்கும் துறவினைப் பொதுவில் வைக்கிறது. துறவறத்தோர்கள் இல்லறத்தாருக்கு உதவுகின்றனர். இல்லறத்தார்களின் வாழ்விற்கு ஞான வழிகாட்டியாக துறவறத்தார்கள் விளங்குகின்றனர். சிலப்பதிகாரத்தில் சமண மத அறங்களுக்குச் சிறப்பான இடம் தரப்பெற்றுள்ளது. இந்நிலையில் சிலப்பதிகாரத்தில் காணலாகும் துறவறக் கோட்பாடுகளை இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது.

அடைக்கலம் தரலே சிறந்த பண்பு

கவுந்தியடிகள் கோவலன், கண்ணகியுடன் இணைந்து மதுரை நோக்கிப் பயணத்தைத் தொடங்கும் நிலையில் கவுந்தியடிகள் அவ்விருவரையும் தன் அடைக்கலப் பொருளாக ஆக்கிக்கொண்டார். மதுரையின் புறநகரில் அவர்களை மாதரியிடம் அடைக்கலம் படுத்தும் நிலையில் அவரின் அடைக்கலப் பண்பு மிக்குயர்ந்து நிற்கிறது.

துறவறப்பண்புடையோர்க்கு உயிர்களுக்குத் துன்பம் வராது காத்தல் சிறந்த பண்பாகும். தன்னை நாடி நின்றோரை அடைக்கலமாகக் கொள்ளுதலும் சிறந்த அறமாகின்றது.

‘‘தவத்தோர் அடக்கலம் தான்சிறி தாயினும்

மிகப்பே ரின்பம் தருமது கேளாய்”

என்று அடைக்கலப் பண்பினைச் சிறந்த பண்பாகக் காட்டுகின்றார் கவுந்தியடிகள்.

அடைக்கலச் சிறப்பிற்கு, குரக்குக்கை வானவன் கதையை எடுத்துரைக்கிறார் கவுந்தியடிகள். எட்டிசாயலன் என்பவனும் அவனின் மனைவியும் இல்லறத்தை நல்லறமாகச் செய்து வந்தனர். தம்மை வந்தடைந்த அறவோர்க்கு உணவும் வேண்டும் பொருளும் கொடுத்து உதவினர். அவர்கள் வீட்டிற்கு ஒருமுறை சாரணர் ஒருவர் வந்தார். அவருக்கு உணவு படைத்தபோது கருங்குரங்கு ஒன்றும் அவருடன் இணைந்து உணவுண்ண தலைப்பட்டது. அச்சாரணர் அதற்கும் உணவளித்து, அக்குரங்கை மகன்போன்று பேணி வருக என்று கட்டளையிட்டார். எட்டி சாயலன் அவ்வாறே அக்குரங்கினைக் காப்பாற்றி வந்தான். அது இறப்பு எய்திய பின்னும் அதற்குப் பல தானங்கள் செய்தான். இதன் காரணமாக அக்குரங்கு வாரணாசியில் ஒரு அரசனின் மகனாகப் பிறந்து அரசு உரிமை பூண்டது. அதன்பின் அவன் வானவன் ஆனான். அவ்வானவனின் உடலுடன் குரங்குக்கையும் இணைந்து இருந்தது. இதன் காரணமாக அவன் குரங்குக் கை வானவன் எனப்பட்டான். இக்கதையின் வழி எவ்வுயிரானாலும் அடைக்கலப் படுத்தப்பட்டால் அவ்வடைக்கப்படுத்தப்பட்ட உயிரை அதன் இறுதி வரைக் காப்பது என்பது அறமாகின்றது.

‘‘உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட

இலகொளிச் சிலாதல மேலிருந் தருளித்

தருமஞ் சாற்றுஞ் சாரணர் தம்முன்

திருவில் இட்டுத் திகழ்தரு மேனியன்

தாரன் மாலையன் தமனியப் பூணினன்

பாரோர் காணாப் பலர்தொழு படிமையன்

கருவிரற் குரங்கின் கையொரு பாகத்துப்

பெருவிறல் வானவன் வந்துநின் றோனைச்

சாவக ரெல்லாம் சாரணர்த் தொழுதீங்கு

யாதிவன் வரவென இறையோன் கூறும்”

என்ற பகுதி மலர்மாலைகளும், ஏழு வர்ண நிறங்களும் கொண்ட வானவன் ஒருவன் கரிய குரங்குக் கை இணைவுடன் இருக்கும் நிலையைக் காட்டுவதாக உள்ளது. இவன் இவ்வாறு கரிய குரங்குக்கையுடன் இருப்பது சற்று மாறுபாடாகத் தெரிய அதன் வரலாற்றை அவனே உரைக்கும் பகுதி பின்வருமாறு.

‘‘எட்டி சாயலன் இருந்தோன் றனது

பட்டினி நோன்பிகள் பலர்புகு மனையிலோர்

மாதவ முதல்வனை மனைப்பெருங் கிழத்தி

ஏதம் நீங்க எதிர்கொள் அமயத்து

ஊர்ச்சிறு குரங்கொன் றொதுங்கிஉள் புக்குப்

பாற்படு மாதவன் பாதம் பொருந்தி

உண்டொழி மிச்சிலும் உகுத்த நீரும்

தண்டா வேட்கையில் தான்சிறி தருந்தி

எதிர்முகம் நோக்கிய இன்பச் செவ்வியை

அதிராக் கொள்கை அறிவனும் நயந்துநின்

மக்களின் ஓம்பு மனைக்கிழத் தீயென

மிக்கோன் கூறிய மெய்மொழி ஓம்பிக்

காதற் குரங்கு கடைநா ளெய்தவும்

தானஞ் செய்வுழி அதற்கொரு கூறு

தீதறு கென்றே செய்தன ளாதலின்”

என்று கருங்குரங்கிற்கு வேண்டுவன செய்து அதன் இறதிக் காலம் வரை காத்த பண்பினை இளங்கோவடிகள் காட்டுகின்றார். உயிர்களைக் காத்தல் உன்னத அறமாக இங்கு இளங்கோவடிகளால் சுட்டப்பெறுகிறது.

இவ்வாறு வளர்க்கப்பெற்ற கருங்குரங்கு ஒரு காலத்தில் தன் பிறவியை நீத்து மற்றொரு பிறவியாக மத்திம நாட்டின் அரசன் மகனாகப் பிறக்கின்றது. இதன் வரலாறு பின்வருமாறு சிலப்பதிகாரத்தில் காட்டப்பெறுகிறது.

‘‘மத்திம நன்னாட்டு வாரணந் தன்னுள்

உத்தர கௌத்தற் கொருமக னாகி

உருவினும் திருவினும் உணர்வினுந் தோன்றிப்

பெருவிறல் தானம் பலவுஞ் செய்தாங்கு

எண்ணால் ஆண்டின் இறந்தபிற் பாடு

விண்ணோர் வடிவம் பெற்றன னாதலின்

பெற்ற செல்வப் பெரும்பய னெல்லாம்

தற்காத் தளித்தோள் தானச் சிறப்பெனப்

பண்டைப் பிறப்பிற் குரங்கின் சிறுகை

கொண்டொரு பாகத்துக் கொள்கையிற் புணர்ந்த

சாயலன் மனைவி தானந் தன்னால்

ஆயினன் இவ்வடிவு அறிமி னோவெனச்

சாவகர்க் கெல்லாம் சாற்றினன் காட்டத்”

என்ற நிலையில் இளவரசனாகப் பிறந்து அதன்பின் வானவனாக அவன் மாறும் நிலையில் அவனுடன் குரங்குக்கையும் இணைந்து இருந்தமை, எட்டிசாயலனும் அவன் மனைவியும் செய்த அறத்தின் அடையாளமாக விளங்கியது.

இவ்வகையில் ஒரு பிறவியில் செய்த அறம் தெய்வப் பிறவி எடுக்கும் நிலையிலும் தொடர்கிறது என்பதை உணர முடிகின்றது. இக்கதையை மாதரிக்குச் சொல்லி கோவலனையும் கண்ணகியையும் அடைக்கலப்படுத்துகிறார் கவுந்தியடிகள். மகிழ்வுடன் இவர்களைத் தம்முடன் அடைக்கலப்படுத்திக் கொள்கிறாள் மாதரி.

அடைக்கலம் தவறியதற்கான அழுகை

மாதரியிடம் அடைக்கலப்படுத்தப்பட்ட கோவலனும் கண்ணகியும் சில நாள்கள் கூட மகிழ்ந்திருக்க இயலவில்லை. கோவலன் உயிர் விதி வசத்தால் பறிக்கப்படுகிறது. இதன் காரணமாக அடைக்கலப் பொருளைக் காப்பாற்றாமல் கைவிட்டேனே என்று மாதரி புலம்புகிறாள். தவத்தோர் தந்த செயலைச் செய்ய முடியாமைக்கான வருத்தமாக இது அமைகின்றது.

‘‘ஐயந்தீர் காட்சி யடைக்கலங் காத்தோம்ப

வல்லாதேன் பெற்றேன் மயலென் றுயிர்நீத்த

அவ்வை மகளிவள்தான் அம்மணம் பட்டிலா

வையெயிற் றையையைக் கண்டாயோ தோழீ

மாமி மடமகளைக் கண்டாயோ தோழீ”

என்ற குறிப்பின்வழி அடைக்கலப் பொருளைக் காக்க மாட்டாத யான் பித்துற்றேன் என்று கூறி உயிர் துறந்தாள் மாதரி. அவளின் மகள் ஐயையைப் பார்த்து வாழ்த்துக் காதையில் தேவந்தி சில சொல்லும் நிலையில் இச்செய்தி வெளிப்பட்டு நிற்கிறது.

எனவே தவத்தோர் தக்க வழிகாட்டியாக சமுதாயத்திற்கு விளங்கவேண்டும் என்ற நிலையில் கவுந்தியடிகளின் அடைக்கலம் தரும் பண்பினை மக்களிடத்தில் மிகச் சிறந்த அறமாகக் காட்டியுள்ளார்.

கவுந்தியடிகளின் அறவுரைகள்

மாதரி வீட்டில் தங்கிய கோவலனும் மனைவியும் சமைத்து உண்கின்றனர். ஒருநாள் காலையில் சிலம்பினை எடுத்துக்கொண்டு கோவலன் கிளம்புகிறான். அப்போது கவுந்தியடிகளைக் கண்டு நான் மதுரை போகிவரும் வரை கண்ணகிக்கு ஆதரவாக இருக்கக் கேட்டுக்கொள்கிறான். அந்நேரத்தில் கவுந்தியடிகள் அவனுக்குப் பல அறவுரைகளைப் பகர்கின்றார்.

மறநெறியை விலக்குக! அறத்துரை சேர்க

பிற உயிர்களுக்குத் தீமை செய்யும் மறநெறியை விட்டு விலகுங்கள். விலகாவிட்டால் அதன் விளைவாகிய துன்பத்தை தீவினை உருக்கொண்டு வந்து ஊட்டும். இவ்வாறு அறநெறியில் ஒழுகுவோர் நன்மை தீமை அறிந்து கூறுவர் நாவைக் கோலாகவும், வாயைப் பறையாகவும் கொண்டு பறையறைந்து உரைப்பர் இவ்வாறு கூறினும், உறுதியற்றவர்கள் இதனை உண்மையாகக் கொள்ளமாட்டார்கள். தீமையை தரும் ஊழ்வினையை உருக்கொண்டு வந்து துன்புறுத்தும் போது அறியாமையால் வருந்தி நிற்பர்.

தீவினையின் பயன் அனுபவிக்கப்பட்டே ஆக வேண்டும்

எவ்விதத்திலும் கட்டிக்கழிக்க முடியாத தீவினையின் பயனை அனுபவிக்கும்போது சுற்றறிந்தவர்கள் செயலற்று வருந்தமாட்டார்கள்.

பற்றற்ற வாழ்வினை வாழ்க

மகளிரை பிரிவதால் வரும் துன்பம் அவர்களை அடைவதற்கான முயற்சியில் வரும் துன்பம் மன்மதன் வரு;நதுவதால் வரும் துன்பம். இவைகள் எல்லாம் மாதரைப் புணர்ந்து மயங்குவோர்க்கே உண்டு. பற்றற்ற தனிவாழ்க்கையை உடைய பெரியோர்க்கு இல்லை.

காமம் துன்பத்திற்குக் காரணம்

பெண்டிரும் உண்டியுமே இவ்வுலகில் இன்பவாழ்வு என்று கொண்டவர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாவர். இதை உணர்ந்துதான் முனிவர்கள், இவற்றை ஒழித்தனர். இத்தகைய காமத்தை விரும்பினோர் கரை காணமுடியாத துன்பத்தை அடைந்தனர். இத்தகையோர் இன்றும் முன்பும் பலர்.

மேற்கண்ட நான்கு கருத்துகளைக் கோவலன் மனங்கொள்ளுமாறு கவுந்தியடிகள் குறிப்பிடுகிறார். இந்நான்கு செய்திகளும் பெண், பசி பற்றுடன் இருக்கும் ஒருவனை அப்பற்றிலிருந்து நீக்கும் சொற்களால் அமைக்கப்பெற்றுள்ளன. கோவலன் மதுரையில் மற்றுமொரு பெண்ணை விழைந்துவிடாமல் இருக்க கவுந்தி சொன்ன செய்திகளாகவும் இவற்றைக் கொள்ளலாம்.

இளங்கோவடிகள் சொன்ன செய்யுள் முறைப்படி இவற்றைக் காண்பது துறவறத்தின் கோட்பாடாகக் கொள்ளப்பெறும்.

‘‘மறத்துறை நீங்குமின் வல்வினை யூட்டுமென்

அறந்துறை மாக்கள் திறத்திற் சாற்றி

நாக்கடிப் பாக வாய்ப்பறை யறையினும்

யாப்பறை மாக்கள் இயல்பிற் கொள்ளார்

தீதுடை வெவ்வினை யுருத்த காலைப்

பேதைமை கந்தாப் பெரும்பே துறுவர்

ஒய்யா வினைப்பயன் உண்ணுங் காலைக்

கையாறு கொள்ளார் கற்றறி மாக்கள்

பிரிதல் துன்பமும் புணர்தல் துன்பமும்

உருவி லாளன் ஒறுக்குந் துன்பமும்

புரிகுழல் மாதர்ப் புணந்தோர்க் கல்லது

ஒருதனி வாழ்க்கை உரவோர்க் கில்லை

பெண்டிரும் உண்டியும் இன்ப மென்றுலகிற்

கொண்டோ ருறூஉங் கொள்ளாத் துன்பம்

கண்டன ராகிக் கடவுளர் வரைந்த

காமஞ் சார்பாக் காதலின் உழந்தாங்கு

ஏமஞ் சாரா இடும்பை எய்தினர்

இன்றே யல்லால் இறந்தோர் பலரால்

தொன்று படவரூஉந் தொன்மைத் தாதலின்”

என்ற நிலையில் கவுந்தியடிகள் கோவலனுக்கு அறவரை பகர்கின்றார். இவ்வறவுரை துறவறத்தார்க்கு மிகவும் பொருந்துவதாகும். இவை சிலப்பதிகாரம் காட்டும் அறக் கோட்பாடுகளாகும்.

மறத்துறை நீங்கி அறத்துறை சேர்க என்பதே இளங்கோவடிகளின் இனிய அறக்கோட்பாடாகும். இது இல்லறத்தாருக்கும் பொருந்துகிறது. துறவறத்தாருக்கும் பொருந்துகிறது.

 - தொடரும்


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “துறவறம் சார்ந்த அறக் கோட்பாடுகள்”

அதிகம் படித்தது