மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

துளசியின் மகத்துவம்

சித்தமருத்துவர் - அருண் சின்னையா நிறுவனர்- தமிழர் சித்த உணவியல் இயற்கை மருத்துவ சங்கம்

Apr 4, 2015

arun chinnaiahசிறகு இணையதள நேயர்களுக்கு எனது அன்பான வணக்கங்கள். தொடர்ந்து உங்களோடு பயணிப்பது என்பது இனிமையான அனுபவம். இன்று நாம் பேச இருக்கக்கூடிய மூலிகை என்பது துளசி. இந்த துளசியை நீங்கள் எல்லோருமே பார்த்திருப்பீர்கள் மிக மிக அற்புதமான ஒரு பொருள். நிறைய வீடுகளில் அந்த காலகட்டத்தில் வீட்டிற்கு முன்பாக துளசி மாடம் வைத்திருப்பார்கள். அந்த துளசி மாடத்தில் பார்த்தோம் என்றால் கிருஷ்ண துளசி என்று சொல்லக்கூடிய கருந்துளசியை வைத்திருப்பார்கள். அதிகாலையில் எழுந்து சாணமெடுத்து வீடுதெளித்தல் அதாவது வீட்டிற்கு முன்பாக இருக்கக்கூடிய முற்றப்பகுதியை பசுஞ்சாணத்தால் தெளித்து சிறிது பசுஞ்சாணத்தில் ஒரு பூசணிப்பூவை செருகி ஒரு கோலமிட்டு அந்த துளசி மாடத்தை வலம் வந்து அன்றைய பணியை ஆரம்பிக்கும் பொழுது அன்றைய நாள் சுகமாக, சுபமாக இருக்கும் என்பது மிகச் சிறந்த ஐதீகம். ஆனால் இன்று நாம் அந்த நிலையில் இல்லை என்பது உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும்.

thulasi3துளசி மாடத்தில் இருக்கக்கூடிய அந்த துளசி இலையை ஒரு மூன்று இலை எடுத்து கூடவே சிறிது பச்சைக்கற்பூரம், சிறிகு மஞ்சள்தூள் சேர்த்து அதை சூடான வெந்நீரில் கலந்து சாப்பிட்டு விட்டு அதிகாலையில் வேலையை ஆரம்பிக்கும் பொழுது அவர்களுடைய உடல் ஆரோக்கியம் என்பது மிகச் சிறந்த முறையில் இருக்கும். அந்த துளசி இலையை நாம் யாராவது தினசரி சாப்பிடுகிறோமா என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். எப்பொழுதாவது கோவிலுக்குப் போகும் பொழுது அந்த துளசி தீர்த்தத்தை அதிகாலையில் பருகக்கூடிய சந்தர்ப்பம் ஒரு சில தமிழ் அன்பர்களுக்கு கிடைக்கும். இந்தத் துளசியை நாம் சாதாரணமாக வீட்டில் வளர்க்கலாம். மிகச் சாதாரணமாக வளரக்கூடிய ஒரு அற்புதமான செடி எதுவென்றால் துளசி என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அந்த துளசியைப் பார்க்கும் பொழுது தனக்குள் பல்வேறுபட்ட மருத்துவ குணங்களை சுமந்துகொண்டு என்னை நீ கவனிக்க மாட்டாயா? என்று அந்த துளசி சொல்வது நமது காதுகளில் விழுவதில்லை.

thulasi1துளசி என்பது மிகவும் சாந்த குணமுடையது. ஒரு மனிதனை மிகுந்த சாந்த நிலையில், அறிவுப்பூர்வமான நிலையில், அறிவாற்றலை அதிகப்படுத்தக்கூடிய நிலையில் கொண்டு செல்லக்கூடிய ஒரு பொருள் எதுவென்றால் துளசி. இந்த துளசியில் பல்வேறு வகைகள் உண்டு. சாதாரணமாக இருக்கக்கூடிய பச்சைத் துளசி உண்டு, அசாதாரணமாகக் காணக்கூடிய கருந்துளசி உண்டு, கஞ்சாங்கோரை என்று சொல்லக்கூடிய நாய்துளசி உண்டு. இந்த துளசி மூன்று வகையாக இருந்தாலும் மிகச் சாதாரணமாக அதாவது மாலைகளில் கட்டக்கூடிய சாதாரண துளசி இருந்தால் கூட பல்வேறு நோய்களை விரட்டக்கூடிய ஒரு அருமையான வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். இன்று இருக்கக்கூடிய வாழ்க்கை சூழல் என்பது மிகவும் மனஉளைச்சலுக்கு நம்மை உட்படுத்தக்கூடியது. அவ்வளவு மனக்குழப்பம் நிறைந்த ஒரு வாழ்வியல் சூழலை ஒவ்வொரு மனிதனும் மேற்கொண்டு வருகிறான்.

இதற்கு முன் நாம் எடுத்துக் கொண்ட உணவுகள் என்பது உடல், மனம், ஆன்மா இந்த மூன்றையும் மெருகேற்றக்கூடிய, மேன்மைப்படுத்தக்கூடிய தன்மையைக் கொண்டிருந்தது. ஆனால் இன்றைய உணவுகள் எல்லாமே பார்க்கும் பொழுது நமது உடம்பைக் கெடுக்கக்கூடிய, சிதைக்கக்கூடிய, ருசியை மட்டுமே பிரதானமாகக் கொள்ளக்கூடிய உணவுகளை நாம் உண்டு வருகிறோம். அதனால் பல்வேறுபட்ட இடற்பாடுகளுடன் இந்த உடலை நாம் சுமந்து கொண்டு இருக்கிறோம் என்றால் அது மிகையில்லை.

இந்த துளசி சொல்வதற்கு எளிது, அதே போல் அதை வளர்ப்பதற்கும் எளிது, அதை உண்ணுகிற பொழுது, அது கொடுக்கக்கூடிய மருத்துவ குணங்கள் ஏராளம் என்றே சொல்லலாம். நான் மனதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன், ஒரு மனிதனுக்கு மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை என்பது சித்தர்களுடைய வாக்கு. ஆக மனதை வலுப்படுத்த, மனதை வசியப்படுத்த மருந்தொன்று உண்டா என்று கேட்கும் பொழுது, நான் துளசியைத்தான் சொல்வேன். துளசி அப்பேற்பட்ட அற்புதமான மருந்து.

உயர் ரத்த அழுத்தம் என்று சொல்லுவோம் மன அழுத்தத்தால் வரக்கூடியது, மன உந்தலால் வரக்கூடியது, மனவேதனையால் வரக்கூடியது, உணவு முரண்பாட்டால் வரக்கூடியது, தேவையில்லாத முரண்பாடான சிந்தனைகளால் வரக்கூடியது இந்த இரத்த அழுத்தம். இந்த இரத்த அழுத்தத்தை முழுமையாக சரிசெய்யக்கூடிய தன்மை துளசிக்கு உண்டு. ஏனென்றால் இரத்த அழுத்த நோய் என்பது நேரடியாக இதய நோயோடு தொடர்புடையது. நமது உடம்பிலே பார்க்கும் பொழுது இதயம் என்பது மிகவும் கருணைக்கு உரியது, இரக்கத்திற்கு உரியது, காதலுக்கு உரியது, அன்புக்கு உரியது, நேசத்திற்கு உரியது என்று நாம் சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவிற்கு இதயம் மிகச் சிறந்த ஒரு உறுப்பு. நம்மை அறியாமல் செய்யக்கூடிய தவறுகளில் கூட நாம் சொல்லக்கூடியது “உனக்கு இதயமே இல்லையா” என்று கேட்கிறோம் என்றால், கண்டிப்பாக அந்த இதயத்தின் முக்கியத்துவம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆக இந்த இரத்த அழுத்தத்தை முறைப்படுத்தக்கூடிய ஒரு அற்புதமான சுத்தமான மருந்து துளசி. துளசியை இரத்த அழுத்தத்திற்கு மருந்தாக மாற்றுவது என்றால் அது மிக எளிது. மிக எளிதாக துளசியை நம்மால் மருந்தாக மாற்ற முடியும்.

thulasi6துளசி மல்லி கசாயம் என்று நாம் சொல்லுவோம், இதனை மிக எளிமையாக செய்யலாம். ஒரு கைப்பிடியளவு துளசி இலை, ஒரு தேக்கரண்டி அளவு மல்லி , சிறிது சுக்கு, நான்கு ஏலக்காய் இவையனைத்தையும் ஒன்றிரண்டாக சிதைத்து தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி பனைவெல்லம் சேர்த்து நாம் அருந்தினோம் என்றால் கண்டிப்பாக இரத்த அழுத்தம் முழுமையாக சரியாகும். இந்த இரத்த அழுத்தம் வருவதற்கான காரணம் என்னவென்றால், ஒரு சிலருக்கு உணவு முரண்பாடால் வரக்கூடிய கொழுப்பு நோய்கள் அதாவது lipid profile என்று சொல்லுவோம். கொழுப்பில் பல்வேறு வகை உண்டு. மொத்தமான கொழுப்பளவு ஒன்று பார்ப்போம், அது இல்லாமல் இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த நாளங்களில் படியக்கூடிய கொழுப்பளவைப் பார்ப்போம், கெட்ட கொழுப்பளவைப் பார்ப்போம் அதாவது Triglycerides என்று சொல்லக்கூடிய கொழுப்பு, LDL என்று சொல்லப்படுகிற கொழுப்பு, உடம்பை மேம்படுத்தக்கூடிய கொழுப்பு என்பது HDL கொழுப்பு, VLDL கொழுப்பு இவையெல்லாம் நாம் அளந்து பார்ப்பது உண்டு. அந்த மாதிரி பார்க்கிற பொழுது இந்த Triglycerides என்று சொல்லக்கூடிய கொழுப்பும் LDL என்று சொல்லப்படுகிற கொழுப்பும் மிகுதியாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக இரத்த அழுத்தம் வரும்.

இரத்த அழுத்தம் அடிப்படையில் இதய நோய் வரும். அந்த இதய நோய் அடிப்படையில் கண்டிப்பாக நுரையீரல் தனது பணியை செய்ய இயலாத, தடுமாற்றத்திற்கு உட்படக்கூடிய சூழல், மூச்சுத் திணறல் போன்றவை உண்டாகும். எல்லாமே பார்க்கிற பொழுது ஒரு இணையான நோயாக வெளிப்படும். ஆக நமது உடம்பில் இருக்கக்கூடிய நுரையீரலையும், நமது உடம்பின் பிரதான உறுப்பான இதயத்தையும், இரத்த ஓட்டத்தையும் முறைப்படுத்தக்கூடிய ஒருஅற்புதமான உணவுப் பொருள் எதுவென்றால் துளசி என்றுதான் நாம் சொல்ல வேண்டும். இந்த துளசியை துளசி மல்லி கசாயமாக ஒவ்வொருவரும் வீடுகளிலும் பழக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நான் சிறகு இணையதள நேயர்களுக்கு இந்த கட்டுரையில் மிக்க எளிய முறையில் தெளிவாக சொல்லிக்கொண்டிருக்கிறேன். இந்த துளசி மல்லி கசாயத்தை தொடர்ந்து அருந்துகிற பொழுது உங்களுக்கு எலும்புகள் சார்ந்த எந்தப் பிரச்சனைகளும் இருக்காது, Infections இருக்காது. Sinusitis என்று சொல்லக்கூடிய தும்மல் அதாவது நச் நச்சென்று தும்மிக்கொண்டே இருக்கக்கூடிய சூழல் இருக்காது. மிகவும் ஒரு சாந்தமான குணத்துடன் அறிவாற்றலை மேம்படுத்திய ஒரு சூழலுடன் மிகச்சிறந்த காரியங்களை நீங்கள் செய்வீர்கள் என்பதை அழுத்தமாக ஆணித்தனமாக கூறுகிறேன். ஆக துளசி மல்லி கசாயம் என்பது உங்கள் வீடுகளில் கண்டிப்பாக வலம் வர வேண்டும்.

thulasi5இரத்த அழுத்தத்திற்கு இன்னொரு மருந்து பார்ப்போம். துளசி இலை ஒரு கைப்பிடியளவு, வில்வம் இலை ஒரு கைப்பிடியளவு இவையிரண்டையும் தண்ணீர்விட்டு நன்றாக அவித்து வடிகட்டி கூடவே ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து, அதில் ஒரு பல் பூண்டை பச்சையாக சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து நீங்கள் சாப்பிட்டுப் பாருங்கள் இரத்த அழுத்தம் உடனே சரியாகும். இதயம் சார்ந்த நோய்கள், இதய வால்வுகளில் உள்ள அடைப்புகள் அனைத்துமே நீண்ட நாள் உபயோகத்தில் கண்டிப்பாக சரியாகும். மூச்சுத்திணறல் இல்லாத ஒரு சூழல் சீரான சுவாசம் மேம்படும். ஆக மிக எளிமையாக செய்யக்கூடிய ஒரு துளசி வில்வக் கசாயத்தால் கிடைக்கக்கூடிய பலன்கள் ஏராளம் என்றுதான் நாம் சொல்ல வேண்டும். ஆக உடலையும் மனதையும் சாந்தப்படுத்தக்கூடிய தன்மை இந்த துளசிக்கு உண்டு.

இன்று இருக்கக்கூடிய வாழ்க்கை சூழலில் நிறைய நபர்களுக்கு அதாவது, கடுமையான உழைப்பைக் கொடுத்தால் கூட இரவுநேரத்தில் படுக்கையில் படுக்கும் பொழுது அந்த படுக்கை என்பது முள்ளாக குத்தக்கூடிய சூழலை நாம் இன்றும் உணர்கிறோம். அதற்கான காரணம் என்பது, நாம் சந்தித்த மனிதர்கள், அவர்கள் பேசிய பேச்சுக்கள், நமக்கு ஏற்பட்ட மனக்குறைகள், மனத்தாங்கல்கள் இவை அனைத்தும் சேர்ந்து உடல் சோர்வுற்று இருந்தாலும் நம்மை தூங்கச் செய்யாமல் வலித்துக்கொண்டே இருக்கக்கூடிய சூழலை உண்டாக்குகிறது. எனவே இந்த மாதிரி தூக்கமின்மை என்ற வியாதிக்கு மாத்திரைகளைப் போட்டு பழக்குவது என்பது மிகத் தவறானது, நவீன மருந்துகள் கொடுக்கக்கூடிய மாத்திரைகளை சாப்பிடக்கூடியவர்களுக்கு, தூக்கமாத்திரை எடுப்பவர்களுக்கு தூக்கம் வராது, அது ஒருவகை மயக்கம் என்றுதான் சொல்லவேண்டும். எவராவது ஒருவர் தூக்கமாத்திரை போட்டு தூங்குகிறார் என்றால் அவர் இயற்கையாய் தூங்கியவர் போல் மறுநாள் காலையில் செயல்படுவாரா என்றால் கண்டிப்பாக முடியாது என்றுதான் நாம் சொல்ல வேண்டும். ஆக தூக்க மாத்திரை எடுத்துவரும் தூக்கம் என்பது மயக்கம், தூக்கம் என்பது இயற்கையாக வரவேண்டும். அந்த இயற்கையான தூக்கத்திற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்று நாம் அடிக்கடி யோசிக்க வேண்டும்.

அந்த வகையில் பார்க்கும் பொழுது தூக்கமின்மையை சரிசெய்யக்கூடிய ஒரு அற்புதமான மருந்து நமது துளசி என்றே சொல்ல வேண்டும். ஒரு கைப்பிடி துளசி இலை, நான்கு தாமரை இதழ்கள்( பச்சையாகவும் இருக்கலாம் உலர்ந்ததாகவும் இருக்கலாம்) இதனுடன் சிறிது சுக்கு மற்றும் ஏலக்காய் சேர்த்து கசாயமாக செய்து வடிகட்டி பனைவெல்லம் சேர்த்து இரவுநேரத்தில் அருந்துகிற பொழுது மிக அற்புதமான பலனைக் கொடுக்கும். நல்ல கனவுகள் என்பது கொடுத்து வைத்தவர்களுக்குத்தான் வரும் என்று சொல்வோம். ஆக இரவுநேர தூக்கத்தில் மிகவும் ஏகாந்தமான கனவுகளோடு அல்லது கனவே இல்லாத நிலையில் அற்புதமாக தூங்கவேண்டும் என்றால் இந்த துளசி, தாமரைஇலை, சுக்கு, ஏலக்காய் சேர்த்த கசாயத்தை அருந்துகிற பொழுது மிகவும் அற்புதமான தூக்கத்திற்கு சொந்தக்காரர்களாக ஆவீர்கள். மறுநாள் காலையில் நீங்கள் மனத் தெளிவுடன், மிகுந்த உற்சாகத்துடனும் உங்களது பணிகளை நீங்கள் செய்கிற பொழுது அந்த செயல்பாடுகளில் இருக்கக்கூடிய மனநிறைவை நீங்கள் உணர்வீர்கள்.

அவ்வளவு அற்புதமான துளசியை பருகுவதற்கு ஏன் தயங்க வேண்டும். இன்று சென்னையில் மிக சாதாரணமாக நிறைய பூங்கா மற்றும் கடற்கரைகளில் பார்த்தோம் என்றால் இந்த துளசி இலைச் சாறு விற்பனைக்கு வந்திருக்கிறது. அந்த துளசி இலைச்சாறையாவது நாம் அருந்துகிற பொழுது கண்டிப்பாக மிகச்சிறந்த நல்ல பலனை நாம் பெற முடியும். ஆக தனக்குள் அபாரமான பலன்களை கொண்ட ஒரு அற்புதமான மருந்து எது என்றால் துளசி என்றுதான் சொல்ல வேண்டும். துளசியை ஒரு ஆன்மீக மூலிகையாகவும் கொள்ளலாம்.

thulasi7சிலநேரங்களில் நம் உடம்பை முழுமையாக ஆசீர்வதிக்கக்கூடிய, கட்டுப்படுத்தக்கூடிய, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கக்கூடிய தன்மை இந்த துளசிக்கு உண்டு. காமத்தை அடக்கக்கூடிய தன்மை இந்த துளசிக்கு உண்டு அதாவது ஒரு சிலருக்குள் ஒரு தவறான அபிப்ராயம் உண்டு துளசி நிறைய சாப்பிடுகிற பொழுது ஆண்மை பறிபோகும் என்று நம்பக்கூடியவர்கள் நிறைய நபர்கள் இருக்கிறார்கள். அதுமாதிரி எதுவும் ஆகாது என்று இந்த கட்டுரை வாயிலாக சிறகு இணையதள நேயர்களுக்கு சொல்கிறேன். துளசி மனக்கட்டுப்பாட்டைத் தரக்கூடிய ஒரு மிகச்சிறந்த உணவு. ஒரு மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு இல்லை என்றால் கண்ட பெண்கள் மேல் எல்லாம் காதல் வரும். ஒரு மனிதனுக்கு மனசஞ்சலம் அதிகமாக இருந்தது என்றால் போகிற வருகிற பெண்கள் மீதெல்லாம் தமது காமப்பார்வை வரக்கூடிய சூழல் உண்டாகும். ஆனால் துளசி அப்படிப்பட்டதல்ல, துளசியை மருந்தாக சாப்பிடுகிற பொழுது அந்த உணர்ச்சி என்பது தனக்குள் கட்டுக்குள் இருக்கும். தன்னுடைய மனைவியை மட்டும் தொடுகிற பொழுது, ஒருவனுக்கு ஒருத்தியாக இருக்கிற பொழுது தன் மனைவியிடம் போகிக்கக்கூடிய அந்தத்தருணங்களில், தாம்பத்தியம் அனுபவிக்கக்கூடிய அந்தத் தருணங்களில் துளசி தன்னுடைய வல்லமையைக் காட்டி நல்ல ஆழ்ந்த நீண்ட ஒரு சந்தோசமான புணர்ச்சிக்கு வழிகொடுக்கும் . ஆக துளசியைப் பற்றிய தவறான அபிப்ராயம் யாருக்கும் வேண்டாம், எவருக்கும் வேண்டாம்.

thulasi2இதயநோய்கள் போன்ற அனைத்து நோய்களையும் சரிசெய்யக்கூடிய ஒரு அற்புதமான உணவுப் பொருள் எது என்றால் துளசி. இந்த துளசியை சாதாரணமாக தொட்டிகளில் வளர்க்கலாம். நீங்கள் கசாயமாக செய்து சாப்பிடக்கூடிய நேரமின்மை இருந்தால்கூட தினசரி ஐந்து துளசிஇலை, மூன்று மிளகு நன்றாக மென்று சாப்பிட்டு ஒரு டம்ளர் வெந்நீர் அருந்தி வந்தீர்கள் என்றால் உங்களுக்கு சளி, இருமல், கபம் போன்ற எந்த நோய்களும் வராது, இரத்த அழுத்தம் வராது, இதயநோய் வராது, நுரையீரல் சரியாகும், மனம் தெளிவாகும், புத்தி கூர்மையாகும், செயல் அதிகமாகும், சிந்தனை எண்ணிலடங்கா அளவு வளமாகும் அதனடிப்படையில் உங்களது இலக்கு வெகுவிரைவிலே கைகூடும் என்று கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா

எண்: 155, 94  வது தெரு,

15 வது செக்டார், கே.கே.நகர்,

சென்னை – 78

அலை பேசி: 98840 76667

இணைய தளம்: www.drarunchinniah.in

 

மருத்துவர் அருண் சின்னையாவின் சித்த மருத்துவம் தொடர்பான காணொளிகள் மற்றும் மின் புத்தகங்களைப் பெற அவரது இணையதளத்தைப் பார்க்கவும்.

சித்த மருத்துவர் அருண் சின்னையா அவர்களின் சித்த மருத்துவ (குறிப்பு) நூல்களை (e-book) படிக்க…

சித்த மருத்துவ மின் புத்தகங்களை பெற…

 

Android App                 

https://play.google.com/store/apps/details?id=com.book.arunchinniah

 

iOS App                    

https://itunes.apple.com/us/app/dr-arun-chinniah/id955245481?ls=1&mt=8


சித்தமருத்துவர் - அருண் சின்னையா நிறுவனர்- தமிழர் சித்த உணவியல் இயற்கை மருத்துவ சங்கம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “துளசியின் மகத்துவம்”

அதிகம் படித்தது