சனவரி 23, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

தூக்கில் தொங்கிய மாலை (சிறுகதை)

ம.சர்மிளா

Apr 20, 2019

siragu birds

சூரியன் மெல்ல தன் ஒளிக்கதிர்களை விடுவித்தான். நீர் நிரம்பிய குளத்தில் அழகிய தாமரைமுகம் சிவந்தாள். பறவைகள் விழித்த செய்தி மரங்களில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. அப்போது இரண்டு காகங்கள் மட்டும் கண் விழிக்காமல் கூட்டில் உறங்கிக் கொண்டிருந்தன. புறாக்களும், கொக்குகளும் யானை வடிவத்தையுடைய நீர் கோர்த்த மேகத்தைத் தொட்டுவிடும் அளவிற்கு உயர்ந்து பறந்தன.

சூரியஒளி கூட்டில் பட்டதும் திடீரென அலறி அடித்தடி பதற்றத்துடன் எழுந்தன அவை. சுற்றும் முற்றும் அலைந்து திரிந்து பார்த்தன. ஒரு பறவையும் கண்ணில் தென்படவில்லை. ”ஐயோ நம்மைத் தன்னந் தனியாக விட்டுட்டுப் போயிட்டாங்களே! நாம எப்படி இறை தேடுவது” என்று கவலையுடன் ஒன்றையொன்று பார்த்தன.

முடிவாக, சரி நீ ஒரு பக்கம் போ! நான் ஒரு பக்கம் போறேன்! என மூக்கு உடைந்த காக்காவும் ஒரு கால் உடைந்த காக்காவும் முடிவெடுத்து பறக்க ஆரம்பித்தன.

இரண்டும் நெருங்கிய நண்பர்கள். வேறு எவற்றுடனும் கூட்டணி சேர்ந்து அவை இரைதேடிச் செல்வதில்லை. இப்படித்தான் அவை வெகுகாலமாய் அம்மரத்தில்  ஒன்றாய் வாழ்ந்து வருகின்றன.

பேருந்து நிறுத்தத்தின் அருகில் இருந்த மின் கடத்தியின் கம்பியில் வண்ண வண்ண பூக்களால் தொடுத்த அழிகிய மாலை ஒன்று துாக்கில் தொங்கியிருந்தது. ஆனால் அது இறந்திருக்கவில்லை. “யாராவது தன்னைக் காப்பாற்றி விடமாட்டாங்களா?” என்று ஏங்கியபடி காற்றில் முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருந்தது.

சுட்டெரிக்கும் வெயியில் அந்த மின் கம்பத்தையோ அதில் தொங்கிக் கொண்டிருந்த மாலையையோ அலைமோதும் மக்கள் கூட்டத்தில் ஒருவரும் கவனிக்கவில்லை. கவனிக்க அவர்களுக்கு நேரமும் இல்லை.

“மகா ஜனங்களே! என்னைக் காப்பாற்றுங்கள்! என்னைக் காப்பாற்றினால் உங்கள் எல்லாருடைய சடங்குகளுக்கும் நான் உதவுவேன்” என்ற அம்மாலையின் கதறலை ஒருவர் கூட செவியில் வாங்கவில்லை. நிமிர்ந்து மேலே பார்க்கவுமில்லை.

ஆரண் சத்தமும் அம்மா! தாயே! தர்மம் பண்ணும்மா என்ற அடையாளந் தெரியாத மனிதர்களின் கூக்குரலும் சண்டையிட்டுக் கொண்டிருந்தன.

இடது கையிலிருந்த சில்லரையை மேலும் கீழுமாகக் குலுக்கிய சத்தமும். வாணியம்பாடி ஆம்பூர்…. வேலூர்…. ஏறிவாயா! ஏறிவாயா! என்ற சத்தமும் ஆப்பிள் கிலோ 50… கிலோ 50… என்ற சத்தமும் அவ்வாறே ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருந்தன.

ஆனால் இங்கு யாரும் சமாதானம் செய்ய முன் வரவில்லை. யாரும் யாரையும் காப்பாற்றவும் தாயாராக இல்லை.

”என்ன பெத்தராசா… என்னை உட்டுட்டு போயிட்டியே… என்ராசா… நான் என்ன பண்ணுவேன்….” என்று கதறிய அழுகை ஒலி வின்னைத் தொட்டது. உறவினர் துக்கத்துடன் கொண்டுவந்து பிணத்திற்கு அணிவித்த வண்ண வண்ண மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகள் கொஞ்சநேரம் கூட பிணத்தின் மேல் தங்கியிருக்கவில்லை. அடுத்தவர் கொண்டு வந்து அணிவிக்கும் மாலைகளுக்கு இடங்கொடுக்க அவை பிணத்தின் அருகில் தரையில் ஏற்னவே குவிக்கப்பட்டிருந்த மலைகளின் குவியலில் அடைக்கலம் புகுந்தன.

இறுதிச் சடங்கை முடித்த பிணத்தைச் சுமந்து கொண்டு பாடை கிளம்பியது. மாலைகளால் அலங்கரித்த பாடையின் முன்னால் பட்டாசின் சத்தத்துடம் சேர்ந்து சங்கும் சளைக்காமல் முழங்கிக் கொண்டிருந்தன. பிணம் போகும் பாதையின் இடையிடையே அந்த மாலைகளைப் பிச்சிபிச்சி வழி முழுவதும் போட்டுக் கொண்டே இருந்தனர் சிலர். அப்படிப் பாடையில் இருந்து பிச்சி வீசியெறிந்த மலையில் ஒன்று மின்சார கம்பியில் ஏற்கனவே தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த மாலையின் அருகில் போய் விழுந்தது.

பிண ஊர்வலம் சுடுகாட்டை அடைந்திருக்கும். அப்போது இறைதேடி முடித்துவரும் வழியில் மூக்குடைந்த காக்காவும் கால் உடைந்த காக்காவும் அந்த மின்சார கம்பியில் ஓய்வெடுக்க அமரலாமென நினைத்தன.

அங்கு மாலைகள் இரண்டு சோடியாய் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அவற்றிற்குத் தூக்கிவாரிப் போட்டது.

”ஐயோ! தப்பான முடிவுக்குப் போகாதீங்க” என்று கதறிய காகங்கள் அம்மாலைகளை காப்பாற்றும் பேராட்டத்தில் இறங்கின.


ம.சர்மிளா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தூக்கில் தொங்கிய மாலை (சிறுகதை)”

அதிகம் படித்தது