மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தூதுவளையின் மகத்துவம்

சித்தமருத்துவர் - அருண் சின்னையா நிறுவனர்- தமிழர் சித்த உணவியல் இயற்கை மருத்துவ சங்கம்

Mar 28, 2015

arun chinnaiahவணக்கம் சிறகு இணையதள நேயர்களே, ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் நான் உங்களை எனது கட்டுரைகள் மூலம் சந்திக்கிறேன். இன்று நாம் பேசக்கூடிய விசயம் என்பது ஒவ்வொரு வீடுகளிலும் நாம் பார்க்கிற பொழுது நோய் என்று வருவதற்கு முன் நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஒரு நோய் என்று வந்துவிட்டால் நாம் அதிர்ச்சிக்குள்ளாகிறோம். ஆக நம் வீடுகளிலேயே இருக்கக்கூடிய சில மூலிகைகளை வீடுகளிலே வளர்க்கக்கூடிய சில மூலிகைகளை நம்பி நம்முடைய வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்திக் கொள்கிற பொழுது மிகச் சிறந்த ஒரு ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையுடன் வெற்றிநடை போட இயலும். நமது பண்டைய தமிழ்ச் சமூகத்திலே பார்க்கிற பொழுது நிறைய வீடுகளில் நிறைய மூலிகைகள் வைத்திருந்த ஒரு காலம் இருந்தது. இன்று நாம் தொகுப்பு வீடுகள் என்று சொல்லக்கூடிய (Apartments) ஒரு சிறைச்சாலை வாழ்க்கையை வாழக்கூடிய சூழலுக்கு வந்துவிட்டோம்.

அன்றைய காலங்களில் தமிழ்ச் சமூகத்தில் பார்த்தோம் என்றால் ஒரு வீடு என்று இருந்தால் அந்த வீட்டிற்குப் பின்பாக ஒரு தோட்டம் இருக்கும், வீட்டிற்கு முன்பாகவும் தோட்டம் இருக்கும். அங்கு பார்க்கும் பொழுது நிறைய மூலிகைகளை வளர்க்கக்கூடிய நிலை இருந்தது. ஒவ்வொரு வீட்டிற்குப் பின்புறமும் ஒரு முருங்கை மரம் இருக்கும், ஓமவள்ளி என்று சொல்லக்கூடிய கற்பூரவள்ளி, தூதுவளை, துளசி, ஆடாதொடா, கண்டங்கத்திரி, முசுமுசுக்கை, கல்யாண முருங்கை இப்படி பல்வேறு மூலிகைகள், மரங்கள் இவைகளை எல்லாம் கொண்ட ஒரு வீடு இருக்கும். ஆனால் அதிலிருந்து நாம் முரண்பட்டு போய்விட்டோம், மாறிவிட்டோம் என்றுதான் நாம் சொல்ல வேண்டும். மறுபடியும் அதேமாதிரி ஒரு ஆரோக்கியத்துடன் கூடிய ஒரு வீட்டமைப்பை நம்மால் உருவாக்க இயலுமா என்றால் கண்டிப்பாக முடியும் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு நாம் முயற்சி செய்யவில்லை அவ்வளவுதான். ஆனால் நாம் முயற்சி செய்கிற பொழுது கண்டிப்பாக அதற்கான பலன் கிடைக்கும். அந்த வகையில் இன்று நான் உங்களுடன் வீட்டிலேயே வளர்க்கக்கூடிய தூதுவளை என்ற மூலிகையைப் பற்றி நான் பேச இருக்கிறேன்.

thoothuvalai2தூதுவளையை நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள். அதனது இலை வட்டவடிவமென்று சொல்லமுடியாது, நீள் வடிவமென்றும் சொல்லமுடியாது, நீள்வட்டவடிவமாக இலைகள் இருக்கும். கரும்பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய அந்த இலைகளிலே நிறைய முட்கள் இருக்கும் இதுதான் தூதுவளை. இந்த தூதுவளையை கிராமங்களில் இருப்பவர்கள் சாதாரணமாக தோட்டத்தில் வைத்து வளர்க்க இயலும். வேலிகளில் கொடிபோல் படரக்கூடிய தன்மை உடையது. நகரத்தில் இருப்பவர்கள் இந்த செடியை ஒரு அகன்ற தொட்டிகளில் வைத்து வளர்க்க இயலும். நமது உடம்பில் இருக்கக்கூடிய நுரையீரலின் செயல்பாடு என்பது இதயத்தோடு இணைந்த செயல்பாடு அதாவது நுரையீரல் எந்த பிரச்சனையுமின்றி சரியான முறையில் அதனுடைய வேலையை செவ்வனே செய்கிற பொழுதுதான் நுரையீரலிலிருந்து ஆக்சிஜன் இதயத்திற்குச் சென்று இதயம் வரக்கூடிய இரத்தத்தை முறையாக சுத்திகரித்து மறுபடியும் உடல் செயல்பாடுக்குக் கொண்டு செல்லக்கூடிய ஒரு அற்புதமான பணியை செய்யும். அந்த வகையில் இந்த நுரையீரலில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல், நுரையீரலில் ஒவ்வாமை இல்லாமல், நுரையீரலில் எந்தப் புண்களும் வராமல் பாதுகாப்பதற்கு ஏற்ற ஒரு உணவியல் சூழலை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

கண்ட கண்ட உணவுகளை நாம் எடுக்கிற பொழுது, காரசாரமான உணவுகளை நாம் சாப்பிடுகிற பொழுது, மிகுந்த கோபத்தில் இருக்கும் பொழுது, மிகுந்த துக்கத்தில் இருக்கும் பொழுது அதிக பயணத்தில் இருக்கும் பொழுது, நிறைய குளுமையான உணவுகளை உண்ணுகிற பொழுது, ஆவேசப்படுகிற பொழுது, திறனுக்கு மீறிய வேலைகளை செய்கிற பொழுது அப்பொழுதெல்லாம் இந்த நுரையீரல் பாதிக்கப்படும். அந்த நுரையீரலை சரிபண்ணுவதற்கான உணவுகளை மருந்துகளை நாமே தயார் செய்கிற பொழுது நேரம் மிச்சம் அதே போல் பணம் மிச்சம் இவையெல்லாமே ஏற்படுத்திக்கொள்ள இயலும். ஏனென்றால் இன்றைய சமூக அமைப்பில் மருத்துவம் சார்ந்த வணிகம் என்பது நாம் எல்லோருமே பார்த்து மிரளக்கூடிய விசயமாக இருக்கிறது.

thoothuvalai4ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவர் அது சார்ந்து மருத்துவமனைகளுக்குச் செல்கிற பொழுது அவர் பொருளாதார ரீதியாக பின்தங்கக்கூடிய சூழலுக்கு உள்ளாக்கப்படுகிறார். ஏனென்றால் மருத்துவம் இன்று வணிகமாக பார்க்கப்படுகிறது. எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும் நிலையான ஆரோக்கியம் வேண்டுமென்றால் கண்டிப்பாக உணவு, இருக்கக்கூடிய சூழல் எல்லாவற்றையும் ஒழுங்குமுறைப்படுத்துகிற பொழுதுதான் அது சரியாக இருக்கும். அந்த வகையில் இந்த தூதுவளையை வீட்டில் தொட்டியில் வளர்க்கலாம், தோட்டத்தில் வளர்க்கலாம். தமிழில் ஒரு பழமொழி சொல்வோம் “தூதுளை மாதுளை இருக்கும் வீட்டில் மார்பிலும் வயிற்றிலும் கலங்கம் இல்லை” மார்பில்தான் நுரையீரல் இருக்கிறது தூதுவளையை யார் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு இந்த மார்பு வியாதிகள் எதுவுமே வராது என்று சித்தர்கள் சொல்கிறார்கள். மார்பு வியாதி என்று பார்க்கிற பொழுது நுரையீரல் சார்ந்த நோய்கள், கல்லீரல் சார்ந்த நோய்கள், நரம்பு சார்ந்த நோய்கள், இதயம் சார்ந்த நோய்கள் இவை அனைத்திற்கும் ஒப்பற்ற மருந்து இந்த தூதுவளை.

சரி இந்த தூதுவளையை எப்படி உணவாகக் கொள்வது?, எப்படி மருந்தாகக் கொள்வது?, தூதுவளை என்பது உணவா மருந்தா? இந்த கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில் தூதுவளை மிகச் சிறந்த உணவு. பண்டைய தமிழர்கள் மருந்தே உணவு, உணவே மருந்து என்ற உன்னத ஆரோக்கிய கோட்பாட்டின் படி வாழ்ந்தவர்கள். உலகமெல்லாம் ஒப்பிடுகிற பொழுது தமிழனைப் போல் மிகுந்த ஆரோக்கியம் உள்ளவன் இந்த உலகத்தில் எவனும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் அந்த அளவுக்கு ஆரோக்கியத்தின் அடிப்படையாக, ஆரோக்கியத்தின் மூலாதாரமாக இருந்தவன் தமிழன். அதற்கான காரணம் என்ன என்றால் அவன் பயன்படுத்திய உணவுகள். பண்டைய தமிழ் மரபிலே பார்த்தோம் என்றால் ரசம் என்பது தமிழனுக்கே சொந்தமான ஒரு உணவுப் பொருள். ரசம் என்பது நாம் இன்று எலுமிச்சை ரசம் வைப்போம், பாசிப்பயறில் ரசம் வைப்பது உண்டு, அதே மாதிரி இன்னும் பல்வேறு வகையான ரசங்கள் இன்று நாம் செய்துகொண்டிருக்கிறோம். இன்றைய வீடுகளில் ஏதாவது ஒரு வீட்டில் தூதுவளை ரசம் கமகமவென்று மணக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இன்றும் பழைய தமிழ் மரபுகளில் ஊறிப்போன குடும்பங்களில் இந்த தூதுவளை ரசத்தை மிக மணமாக அருந்துவதை நாம் உணரலாம். இந்த தூதுவளையானது நெஞ்சில் உறைந்து கிடக்கக்கூடிய கபத்தை முழுமையாக அகற்றக்கூடிய வல்லமை உள்ளது. இந்த கபம் என்பது சளி எனக் கொள்ளப்படும்.

thoothuvalai7வாதம், பித்தம், கபம் என்று சொல்கிறோம் அல்லவா அந்த மாதிரி இந்த கபத்தை அதாவது சளியை முழுமையாக அகற்றக்கூடிய வல்லமை உள்ள ஒரு மூலிகை எது என்றால் தூதுவளை என்று நாம் சொல்ல வேண்டும். பண்டைய தமிழ்மரபுகளிலே இந்த ரசம் எப்படி வைப்பார்கள் என்றால் வெள்ளை மிளகு, சோம்பு, சீரகம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, கொத்துமல்லி இவையனைத்தையும் நல்லெண்ணெய் விட்டு வதக்கி ஒன்றிரண்டாக பொடித்து அதனுடன் இந்த தூதுவளை இலையை முள்நீக்கிவிட்டு நெய்யில் நன்றாக வதக்கி அதை விழுதாக அரைத்து நாம் ஏற்கனவே சொன்ன கலவையோடு சேர்த்து லேசாக நல்லெண்ணெய் விட்டு வதக்கி சிறிது புளியைக் கரைத்து ஊற்றி ரசமாக வைப்பார்கள். இந்தத் தூதுவளை ரசத்தை நாம் சாப்பிட்டுப் பார்த்தோம் என்றால் அன்றைக்கு மட்டுமல்ல பத்து நாட்களுக்கு உங்களது குரலே மிகுந்த வளமையாக, இளமையாக பளிச்சென்று பளீர் என்ற குரலுக்கு சொந்தக்காரராக உங்களை மாற்றும். அப்பேற்பட்ட தூதுவளையை நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து வாரத்தில் இருமுறையாவது நாம் உட்கொள்ள வேண்டுமா இல்லையா. ஆகவே சிறகு இணையதள நேயர்களே தூதுவளை உங்கள் வீட்டில் இனி வளம் வரவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் நான் இந்தத் தகவலை ஒரு கட்டுரையாக எழுதிக்கொண்டிருக்கிறேன்.

thoothuvalai5தூதுவளையை சில வீடுகளில் தோசையாக செய்வது உண்டு. தூதுவளை தோசை எப்படி செய்வது? ஏனென்றால் மூலிகையை மருந்தாக சாப்பிடுவதற்கு அஞ்சக்கூடிய சூழலில் இருப்போம். தூதுவளையை தோசையாக செய்யலாம், அடையாக செய்யலாம், ஆக அந்தத் தூதுவளையை என்ன செய்வது என்றால் தூதுவளை இலையை முள் நீக்கி நெய்விட்டு வதக்கி அதனுடன் சிறிது சீரகம் சேர்த்து வதக்கி அதை நன்றாக விழுதாக அரைத்து தோசை மாவுடன் கலந்து நீங்கள் தூதுவளை தோசையாக செய்து சாப்பிடலாம். இந்த மாதிரி தூதுவளை தோசை செய்து சாப்பிடும் பொழுது சளி, இருமல், தும்மல், மூக்கடைப்பு எல்லாமே முழுமையாக சரிசெய்யக்கூடிய ஒரு அற்புதமான பணியை இந்தத் தூதுவளை தோசை பண்ணும். எத்தனையோ உணவகங்களை நாம் பார்க்கிறோம், Restaurant என்று சொல்லக்கூடிய உணவகங்கள் எல்லாமே புளித்துப்போன மாவை காசாக்கும் வித்தையை மிக அழகாகக் கற்றுக்கொண்டு வைத்திருக்கிறது. நிறைய அமிலத்தன்மையை விற்பனையாக்கி நமது வயிறை வாயுவாக்கி அந்த வாயுவின் அடிப்படையில் காசாக்கும் கும்பல் இன்றைக்கு உலகம் முழுக்க நிறைய நிரவி கிடக்கிறது அதுவும் தமிழகம் முழுக்க சொல்லவே வேண்டாம். சோம்பேறிகள் நடத்தக்கூடியது எதுவென்றால் சோம்பேறிகள் செய்யக்கூடிய தொழில், சோம்பேறிகளாக மக்களை மாற்றுவதற்கு செய்யக்கூடிய தொழில் இந்த உணவகம் தான். ஏன் இந்த உணவகங்களில் தூதுவளை தோசையை கொண்டுவரக்கூடாது. கொண்டுவந்தால் அரசு ஏதாவது செய்யுமா? இல்லை தூதுவளை தோசை தடைசெய்யப்பட்ட பொருளா?

அதாவது தூதுவளையின் தன்மை என்னவென்றால் நம் உடம்பில் மிதமிஞ்சிக் கிடக்கக்கூடிய அமிலத்தன்மையை முழுமையாக சரிசெய்யக்கூடிய தன்மை இந்தத் தூதுவளைக்கு உண்டு. ஏனென்றால் நரம்பை நன்றாக ஊக்கப்படுத்தக்கூடிய தன்மை இந்தத் தூதுவளைக்கு உண்டு. தூதுவளை உஷ்ணகாரி அதாவது உஷ்ணத்தை வெளிப்படுத்தக்கூடிய தன்மை, கபத்தை கரைக்கக்கூடிய தன்மை இது எல்லாமே இந்தத் தூதுவளைக்கு உண்டு.

thoothuvalai3தூதுவளை பூவை உலர வைத்து காயவைத்து அதை பொடி செய்து ஒரு மாதம் விடாமல் சாப்பிட்டால் கண்பார்வை பளிச்சென்று தெரியும். இது முற்றிலும் உண்மை. ஆனால் தூதுவளை பூவை முழுமையாக நாமே சேகரித்தால்தான் உண்டு, ஏனென்றால் அது சிரமமான ஒரு விசயம். இந்தத் தூதுவளை பூவை எப்பேற்பட்ட கண் நோய்களுக்கும் உள்மருந்தாக கொடுக்கிற பொழுது கேட்கும் அதற்குக் காரணம் நம் உடம்பிலே கண் சார்ந்த நரம்புகள் மிகவும் நுட்பமானது, உணர்ச்சிகரமானது, உணர்வுப்பூர்வமானது. இந்த கண் நரம்புகளையே வலுப்படுத்தக்கூடிய வல்லமை இந்தத் தூதுவளை பூவிற்கு உண்டு. இதே தூதுவளை பூவையும் சாதிக்காயையும் சம அளவு எடுத்து அரைத்து பொடியாக செய்து கொண்டு காலை இரவு என்று இரண்டுவேளை சாப்பிட்டு வந்தோம் என்றால் நம் உடம்பில் இருக்கக்கூடிய நரம்புகள் எல்லாம் முறுக்கேறும், நரம்புகள் வலுவாகும், ஆண்மை அதிகமாகும், அபாரமான தாம்பத்தியம் உங்களுக்குள்ளே நிலவும்.

thoothuvalai6இப்பேற்பட்ட தூதுவளையை தவிர்ப்பது சரியா ஆகவே வீடுகளிலும் வீடுகளில் இருக்கக்கூடிய தொட்டிகளில் கூட இந்தத் தூதுவளையை நீங்கள் வளர்க்கலாம், உங்கள் வீட்டிலும் தூதுவளை ரசம் வைக்கலாம், தூதுவளையை தோசையாக செய்து சாப்பிடலாம், தூதுவளையை அடையாகவும் செய்யலாம். அடை என்பது பச்சரிசி மாவில் செய்யக்கூடியது. அதாவது மிளகு, நெய்யில் வதக்கிய தூதுவளை இலை, சீரகம் இவை எல்லாவற்றையும் நன்றாக அரைத்து அடைக்கான மாவோடு கலந்து அடைசெய்து அதன் மேலே முருங்கை இலையையும் தூவி தொடர்ந்து சாப்பிடுகிற பொழுது நாம் சொன்ன சளி, இருமல், கபம், காசநோய், மூச்சுத் திணறல் எல்லாமே முழுவதுமே சரியாகக்கூடிய தன்மை உண்டு.

பச்சையாக தூதுவளை கிடைக்கிறது என்றால் மூன்று இலை, மூன்று மிளகு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு முழுமையாக அரைத்து சாறு எடுத்து வடிகட்டி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். அந்தமாதிரி சாப்பிடுகிற பொழுது கபம் என்ற பிரச்சனைகளே இல்லாத ஒரு சூழல் வரும். நமது உடம்பிலே மூன்று விதமான நாடிகள் ஓடும் அவைகள் வாதநாடி, பித்த நாடி, கபநாடி. இந்த வாதநாடி என்பது முப்பது வயதுவரைக்கும் மிகுந்த அளவில் ஓடும். வாதநாடி ஒரு மனிதனுடைய செயல்பாட்டை அளக்கக்கூடியது Active என்று சொல்லுவோம். பித்தநாடி ஒரு மனிதனுடைய மனம் சார்ந்த விசயத்தை அளக்கக்கூடியது அதை confuse என்று சொல்லுவோம். கபநாடி ஒரு மனிதனுடைய சோம்பல் நிலையை அளக்கக்கூடியது. எந்த ஒரு மனிதனுக்கு கபம் அதிகமாக இருக்கிறதோ அவனிடமிருந்து செயல்பாட்டை எதிர்பார்க்கமுடியாது. எனவே முழுமையாக ஒரு மனிதன் செயல்பட வேண்டும் என்றால் அந்த கபநாடியை ஒழுங்குபடுத்த வேண்டும். அந்த கபநாடியை ஒழுங்குபடுத்தக்கூடிய வல்லமை இந்தத் தூதுவளைக்கு உண்டு. இந்தத் தூதுவளை இனி உங்கள் ஒவ்வொருவரின் இல்லத்திலும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள், அதை மருந்தாக்குங்கள், அதை உணவாக்குங்கள், உங்கள் உடம்புக்கு விருந்தாக்குங்கள், ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறுங்கள், வாழ்க வளமுடன்.

 

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா

எண்: 155, 94  வது தெரு,

15 வது செக்டார், கே.கே.நகர்,

சென்னை – 78

அலை பேசி: 98840 76667

இணைய தளம்: www.drarunchinniah.in

 

மருத்துவர் அருண் சின்னையாவின் சித்த மருத்துவம் தொடர்பான காணொளிகள் மற்றும் மின் புத்தகங்களைப் பெற அவரது இணையதளத்தைப் பார்க்கவும்.

சித்த மருத்துவர் அருண் சின்னையா அவர்களின் சித்த மருத்துவ (குறிப்பு) நூல்களை (e-book) படிக்க…

சித்த மருத்துவ மின் புத்தகங்களை பெற…

 

Android App                 

https://play.google.com/store/apps/details?id=com.book.arunchinniah

 

iOS App                    

https://itunes.apple.com/us/app/dr-arun-chinniah/id955245481?ls=1&mt=8

 


சித்தமருத்துவர் - அருண் சின்னையா நிறுவனர்- தமிழர் சித்த உணவியல் இயற்கை மருத்துவ சங்கம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தூதுவளையின் மகத்துவம்”

அதிகம் படித்தது