மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தென் ஆப்பிரிக்காவின் தாய் – வின்னி மண்டேலா !!

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Apr 6, 2018

siragu winne1

வின்னி மண்டேலா ஏப்ரல் 2 ஆம் தேதி, 2018 அன்று மறைந்தார். சில தொலைக்காட்சி செய்திகளும், தமிழ் நாளிதழ்களும் வின்னி மண்டேலாவின் மறைவைப் பற்றி இரங்கல் தெரிவித்திருந்த போதிலும், அவரை நெல்சன் மண்டேலா அவர்களின் முன்னாள் மனைவி, அவரோடு இணைந்து நிற வெறிக்கு எதிராகப் போராடியவர் என்ற வரிகளோடு இரங்கற் செய்தியை முடித்துக் கொண்டனர். ஆங்கில நாளிதழ் ஒன்று அவரைப் பற்றிய இரங்கற் செய்தியில், “Winnie Mandela, South African anti-apartheid crusader, dies at 81″ என்று எழுதியிருந்தது. இது தான் தமிழ் நாளிதழ்களுக்கும் -ஆங்கில நாளிதழ்களுக்கும் உள்ள வேறுபாடாக நாம் பார்க்க வேண்டும். ஒரு பெண்ணின் சாதனைகளை முன் நிறுத்துவதில் உள்ளச் சிக்கல்.

siragu winne3

கொலைக் குற்றம் சாட்டப்பட்டு பின் கடத்தலுக்கான அபராதத் தொகை கட்டி வெளிவந்து, தன் அரசியல் வாழ்க்கையை மீண்டும் தொடங்கியதில் பல சறுக்கல்கள், தவறுகளை வின்னி செய்ததாக அவரின் நாட்டு மக்கள் கூறினாலும், நிற வெறியை எதிர்த்து அவர் போரிட்டதை, அம்மக்கள் நினைவு கூர்ந்து, அவருக்கு தங்கள் அரசு இறுதி வணக்கம் செலுத்தும் என்று கூறியுள்ளனர். பல்வேறு கருத்து மாறுபாடுகள் இருந்தாலும், நெல்சன் மண்டேலாவிடம் இருந்து மண விலக்கு பெற்றபோதிலும், அவர் தன் மரணம் வரை தென் ஆப்பிரிக்காவின் தாய் “Mother Of South Africa” என்றே இன்றும் அழைக்கப்படுகின்றார்.

செப்டம்பர் 26, 1936 இல் வின்னி பிசான, கிழக்கு கேப் மாநிலத்தில் பிறந்தார். மருத்துவமனை ஒன்றில் சமூக நலப் பணியாளராக பணியாற்றினார் வின்னி மண்டேலா. அந்த சமூக நல பணியாளர் வேலையின் தன்மையால் தான் இந்தச் சமூகத்தில் உள்ள பெரும் பகுதி மக்கள் எப்படி வறுமையில் உழல நிர்பந்திக்கப்படுகின்றனர் என்றும், இந்தச் சமூக அமைப்பின் ஏற்றத்தாழ்வுகளையும் புரிந்து கொள்ள முடிந்தது என்கின்றார் வின்னி. 1958 ஆம் ஆண்டு வின்னி நெல்சன் மண்டேலாவை திருமணம் செய்து கொண்டார். திருமண மகிழ்ச்சி வாழ்க்கை என்பது வெகு சில காலமே அவர்களுக்கு நிலைத்தது. நெல்சன் மண்டேலாவின் கைதிற்குப் பின்னர், தொடர்ந்து நிறவெறிக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்த வின்னி மண்டேலா கைது செய்யப்பட்டு பல கொடுமைகளுக்கு ஆளானார்.

siragu winne2

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் உயிர் இழக்கவும் தான் தயார் என்று நெல்சன் மண்டேலா அறிவித்த பின்னர், அவரை கைது செய்து 27 ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைத்தது தென் ஆப்பிரிக்க அதிகார அரசு. நெல்சன் மண்டேலாவின் தொடர் போராட்டங்களுக்கு அவரின் கைது மூலம் முற்றுப்புள்ளி வைத்ததாகவே கருதியது, ஆனால் அவரின் மனைவியான இரும்பு உள்ளம் கொண்ட வின்னி மண்டேலாவின் போராட்டங்களை எந்த சிறைக் கொடுமைக்கும் அஞ்சாத அவரின் மனத் திண்மையை உடைத்திட முடியவில்லை. வின்னி மண்டேலாவின் நிற வெறிக்கு எதிரான எழுச்சிமிகு போராட்டங்களே நெல்சன் மண்டேலாவின் பெயரை, அவரின் பணியை, மக்கள் மனதில் அவரின் கைதிற்குப் பின்னரும் நினைவில் நிறுத்த உதவியது எனின் அது மிகையல்ல.

வின்னி மண்டேலா 1986 ஆம் ஆண்டு பேசிய உரை, மிகப்பெரிய சர்ச்சையை சந்தித்தது. “With our boxes of matches and our necklaces we shall liberate this country.”என்றார், (necklacing என்றால், மனிதர்களை உயிரோடு கொளுத்திக் கொல்வது ஆகும்.)

2011 இல் வின்னி மண்டேலா வாழ்க்கைப் படமாக எடுக்கப்பட்டது. பிரித்தானியா இயக்குநர் லாபிசே (lampche) என்பவரால் எடுக்கப்பட்ட படம் பலரின் வரவேற்பையும், விமர்சனங்களையும் பெற்றது. படத்தின் இயக்குனர் படத்தினை பற்றிக்கூறும் போது இவ்வாறு குறிப்பிடுகின்றர்.

“Patriarchy operates all over the world,” says Lamche, who won a Sundance directing award for her treatment of Winnie in the film.
“But what is really astounding in South Africa is that on both sides of the apartheid divide – with the white Afrikaner nationalists and the black nationalists – they agreed on what a woman should be, which is to be a wife and stay at home and toe the line. And of course Winnie never toed the line: she was volatile and uncontrollable, and that was punished.”

அமெரிக்காவின் நடிகை மற்றும் தயாரிப்பாளர் viola davis தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட இரங்கற் செய்தியில், “A woman who epitomized how the power of a woman’s love, intelligence and vision can change a culture” என்று தெரிவித்திருந்தார். வின்னி உண்மையில் ஆண்டாண்டு காலங்களாக அழுத்தப்பட்ட கறுப்பின மக்களின் விடுதலைக்கு மட்டுமன்று, ஒடுக்கப்படும் பெண்களுக்கும் அரசியலில் எவ்வாறு திறம்பட செயல்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர்.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தென் ஆப்பிரிக்காவின் தாய் – வின்னி மண்டேலா !!”

அதிகம் படித்தது