பிப்ரவரி 27, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

தேனி பெண்ணின் விண்வெளி கனவு..

சா.சின்னதுரை

Jan 23, 2016

vinveli kanavu1உதய கீர்த்திகா… ஒரு சாதாரண நடுத்தர குடும்ப தேனி பெண்ணுக்கு உக்ரைன் நாட்டிலுள்ள, உலகின் சிறந்த விண்வெளிக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான Kharkov Air Force பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு படிக்க இடம் கிடைத்திருக்கிறது. அவரது விண்வெளி கனவுகளும், திறமைகளும், ஆர்வங்களும் வியப்பூட்டக் கூடியவை. அவருடன் ஒரு நேர்க்காணல்:

உங்களைப் பற்றி?

உதய கீர்த்திகா: சொந்த ஊர் தேனி. அப்பா ‘அல்லிநகரம்’ தாமோதரன் சிறுகதை எழுத்தாளர், ஓவியர். அம்மா அமுதா வழக்கறிஞர் ஒருவரிடம் தட்டச்சராக வேலை பார்க்கிறார். வீட்டுக்கு நான் ஒரே மகள். பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 500 க்கு 487 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதல் மதிப்பெண். +2 வில் 1030 மதிப்பெண்கள். அறிவியல் பாடத்தில் நூற்றுக்குநூறு. தமிழ்வழிக் கல்விதான் பயின்றேன். தற்போது உலகின் சிறந்த விண்வெளி கல்வி நிறுவனங்களில் ஒன்றான மேற்குஉக்ரைன் நாட்டில் உள்ள Kharkov Air Force பல்கலைக்கழகத்தில் விண்வெளி ஆய்வு தொடர்பான Aerospace engineering என்ற படிப்பில் சேர்ந்திருக்கிறேன்.

விண்வெளி துறையில் ஆர்வம் எப்படி வந்தது?

உதய கீர்த்திகா: நிலவைக் காட்டி அப்பா கதை சொன்ன காலத்திலேயே, ‘என்னை நிலாவுக்குக் கூட்டிக்கிட்டுப் போங்கப்பா’-ன்னு அடம்பிடிச்சிருக்கேன். 9-ம்வகுப்புப் படித்தபோது, எந்தத் துறையைத் தேர்வு செய்தால் என் சுபாவத்துக்கு நன்றாக இருக்கும் என்று யோசித்தபோது, விண்வெளி ஆராய்ச்சிதான் என்ற முடிவுக்கு வந்தேன். மாணவர்களுக்கு விண்வெளி தொடர்பாக எங்கே, எந்தப்போட்டி நடந்தாலும் உடனே என் பெயரைக் கொடுத்து விடுவேன்.

நிலா, வானம், அண்டம், விண்வெளி, விண்வெளிவீரர் தொடர்பான நூல்களைத் தேடித்தேடிப் படிப்பேன். அவை தொடர்பான தகவல்கள், துணுக்குகளை குறிப்பு எடுத்துவைத்துக் கொள்வேன். அதுதான் பல விண்வெளி ஆய்வுப்போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வாங்க உதவியது. +2 க்குப்பிறகு விண்வெளித்துறை சார்ந்த படிப்புதான் படிக்கவேண்டும் என்ற உறுதியான கனவோடு இருந்தேன். இப்போது அந்தக்கனவு நனவாகியிருக்கிறது.

vinveli kanavu2கல்வி கட்டணத் தேவைகளை எப்படி சமாளிக்கிறீர்கள்?

உதய கீர்த்திகா:நான்கு ஆண்டு ஏரோஸ் பேஸ் இன்ஜினீயரிங் படிக்க, சுமார் 12 லட்சம் ரூபாய் செலவு ஆகும். இவ்வளவு பெரியதொகைக்கு எங்கு போவது? சேர்க்கையின்போது அப்பா பல இடங்களில் கடன் வாங்கி 7 லட்சம் வரை கட்டணம் செலுத்தினார். வேறு சில நல்ல உள்ளங்களும் உதவிக்கரம் நீட்டினர். நடிகர் ராகவா லாரன்ஸும் உதவி செய்தார்.

விண்வெளி துறையில் பெண்களின் பங்கு எந்த நிலையில் உள்ளது?

உதய கீர்த்திகா:பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர் எனக்கூறி பெருமைப்படுகிறோம். ஆனால் நமது நாட்டின் மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது பெண்களின் பங்கேற்பு மிகவும் குறைவு. பெண்கள் விண்வெளியில் ஆறுமாதங்கள் தங்கும் அளவிற்குத் தயாராகி விட்டார்கள். ஆனால் பெண்களை இரண்டாம் தரப்பிறவிகளாகவே கருதும் நிலை இன்னும் உள்ளது. இப்போதும் உலகஅளவில் கணக்கெடுக்கும்போது அறிவியல் தொழில்நுட்பத்திலோ, ஆராய்ச்சியிலோ சிறந்து விளங்குகிறவர்களின் பட்டியலில் பெண்களைத் தேட வேண்டியிருக்கிறது. விண்வெளியில் தொடக்க காலச்சாதனை புரிந்த ரசியாவின் வாலென்டினா தெரஸ்கோவாவின் காலம்முதல் விண்வெளி ஆராய்ச்சிகளில் பெண்களின் பங்கு குறைத்து மதிப்பிட முடியாத ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது.

அறிவியல் என்றால் மருத்துவத்துறையை மட்டுமே நோக்கியதாக இருக்கிறது பெற்றோர்களின் இலக்கு. மகன்களைத் துணிச்சலுடன் ஆராய்ச்சிப் படிப்புகளை நோக்கி நகர்த்தும் பெற்றோர், தங்கள் மகள் அதை நோக்கி நகர்வதை அவ்வளவாக விரும்புவதில்லை. இந்தத் தயக்கம்தான் பெண்களை, குறுகிய வட்டத்துக்குள்ளேயே நிறுத்திவிடுகிறது. எல்லைதாண்டி சிந்திக்கவிடாமல் முடக்கிவிடுகிறது. உண்மையில் அறிவியல் அறிவில் ஆண்களைக் காட்டிலும் சிறந்து விளங்கும் திறமை பெண்களுக்கு இருக்கிறது. அதைத்தான் வரலாறும் சொல்கிறது.

விண்வெளிக்குச் சென்ற பெண்களிலேயே அதிகநாட்கள் விண்வெளியில் தங்கி சாதனை படைத்தவர் சுனிதா வில்லியம்ஸ் ஆவார். இவர் விண்வெளியில் 195 நாட்கள் இருந்தார். இதனால் இவரை விண்வெளியில் சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ் எனலாம். பெண் ஆணிற்கு எந்தவிதத்திலும் சளைத்தவள் அல்ல என்பதை அவர் நிரூபித்துள்ளார். விண்வெளிதுறையில் கால்பதிக்கவிரும்பும் பெண்கள் சுனிதா வில்லியம்ஸின் சாதனைகளைப் படிக்கும்போது பெண்களிடையே ஏதாவது சாதனை புரியவேண்டும் என்கிற ஆர்வம் உண்டாகும்.

விண்வெளி ஆய்வில் இந்தியாவின் பங்களிப்பு மற்றும் முன்னேற்றம் எந்தநிலையில் உள்ளது?

உதய கீர்த்திகா:கடந்த ஓரிரு ஆண்டுகளில் விண்வெளித்துறை தொழில்நுட்பத்தில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்தத் துறையில் நாம் மிக துல்லியமான தொழில்நுட்ப மேம்பாட்டை எய்தியுள்ளதால் பலநாடுகளைவிட, நாம் முன்னோடியாகத் திகழ்கின்றோம். இதனால், தங்களது செயற்கைக் கோள்களை இந்தியாவில் இருந்து ஏவ நிறைய சிறிய நாடுகள் விருப்பம் காட்டிவருகின்றன.

இந்தியாவின் 27 செயற்கைக்கோள்கள் தற்போது விண்வெளியில் வெற்றிகரமாக சுற்றி வந்துகொண்டுள்ளன. இவற்றில் 12 செயற்கைக்கோள்கள் பூமியை கண்காணித்து வருகின்றன. 11 செயற்கைக்கோள்கள் தொலைத்தொடர்பு இணைப்புகளை நிர்வகித்து வருகின்றன. 3 செயற்கைக்கோள்கள் திசை மற்றும் வழிகாட்டும் சேவையாற்றுகின்றன. மற்றொரு செயற்கைக்கோளான ’மங்கல்யான்’செவ்வாய் கிரகத்தை சுற்றிவந்து ஆய்வு நடத்துகின்றது.

வணிகரீதியிலான செயற்கைக்கோள்களை ஏவும் சந்தையிலும் தடம் பதித்துள்ள இந்தியா, எதிர்கால செயற்கைக்கோள் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டியுள்ளது. புயல் மற்றும் இயற்கை பேரழிவு தொடர்பாக இந்தியாவின் கணிப்புகள் அனைத்தும் துல்லியமாக அமைந்துள்ளதால் வானிலை ஆய்வுத்துறையிலும் சமீபகாலமாக இந்தியா சிறப்பிடம் வகித்து வருகின்றது.

எதிர்கால லட்சியம் :

உதய கீர்த்திகா:விண்வெளி ஆய்வு தொடர்பான பொறியியல் படிப்பை முடித்து விண்வெளி வீராங்கனையாகவும், அப்துல்கலாம் போல மிகச்சிறந்த விஞ்ஞானியாகவும் ஆவேன். உக்ரைன் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்துவிட்டு, இந்திய விண்வெளி ஆய்வுத்துறைக்கு எனது பங்களிப்பைச் செலுத்துவேன். ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு உதவியாக இருப்பது, அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி, ஏழை மாணவர்களும், விண்வெளி ஆய்வு தொடர்பான கல்வி கற்பதற்கு வழிவகை செய்வேன்.

இன்னமும் வாடகை வீட்டில்தான் இருக்கிறோம். இணைய இணைப்பு வசதி கிடையாது. அப்பா குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கிறார். அப்பாவிடம், ஆய்வுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கித்தரச் சொல்வேன். எல்லாமே அதிக விலை இருக்கும். சிலசமயம் சாப்பிடாமல் கூட பணம் சேர்த்து வைத்து ஆய்வுப்புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பார். அப்படிப்பட்ட அப்பாவுக்கு விண்வெளித் துறையில் சாதனை படைப்பதுதான் நான் செய்யும் கைம்மாறு.

இதுவரை பெற்ற விருதுகள் மற்றும் பரிசுகள் ?

உதய கீர்த்திகா:

* 2005-ஆம் ஆண்டு திண்டுக்கல் நேருகலைமன்றம் சார்பாக மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவியருக்கிடையே நடைபெற்ற ஓவியப்போட்டியில் முதல்பரிசு.

* 2007-ஆம் ஆண்டு மதுரை உயர்மாவட்ட பல்சமய உரையாடல் பணிக்குழு சார்பாக நடத்தப்பட்ட உரையாடல் போட்டியில் மூன்றாம் பரிசு.

* 2007-ஆம் ஆண்டு தேனி மேரிமாதா மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியில் இரண்டு நிமிடங்களில் 53 திருக்குறள்களை ஒப்புவித்து 2-ஆம் பரிசு.

* 2009-ஆம் ஆண்டு என்னுடைய கவிதை, கட்டுரை, ஓவியம் மற்றும் கல்வித்திறன்களைப் பாராட்டி, பாரதியுவகேந்திரா என்ற தன்னார்வ நிறுவனம் சார்பாக, “யுவஸ்ரீகலாபாரதி’ என்ற விருது.

* 2010-ஆம் ஆண்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் குழந்தைகள் தினவிழாவையொட்டி மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவியர்களுக்கிடையில் நடத்தப்பட்ட குழந்தைத் தொழிலாளர்முறை ஒழிப்புப் பற்றிய கட்டுரைப் போட்டியில், முதல் பரிசாக தங்கப் பதக்கம் பெற்றேன்.

* 2010-ஆம் ஆண்டு தேனி ஜூனியர் சேம்பர்ஸ் இண்டர்நேஷனல் என்ற அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு போட்டியில் முதல்பரிசு.

* 2011-ஆம் ஆண்டு மத்தியஅரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை சார்பில் நடத்தப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புப் போட்டியில், அறிவியல் கண்டுபிடிப்பைச் சமர்ப்பித்ததற்காக, அறிவியல் விருது.

* 2011-ஆண்டு என் கவிதை, ஓவியம், கட்டுரை மற்றும் கல்வி ஆற்றலைப் பாராட்டி, மதுரையில் உள்ள ரோஜா கலைமன்றத்தின் சார்பில் சுவாமி விவேகானந்தர் விருது. 2012-ஆம் ஆண்டில் தேனி மாட்டஅளவில் பள்ளி மாணவ-மாணவியருக்கிடையில் நடத்தப்பட்ட தனித்திறன் மற்றும் நாட்டுப்புற நடனம் போட்டியில் முதல்பரிசு.

* 2013-ஆம் ஆண்டு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றதற்காக பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்.

* 2013 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் சர்வதேச நுகர்வோர் தினவிழாவை முன்னிட்டு மாவட்டஅளவில் உள்ள பள்ளிமாணவ-மாணவியருக்கிடையில் நடத்தப்பட்ட விழிப்புணர்வுக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு.

* 2012-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள விண்வெளி ஆய்வு மையம் சார்பில் “சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் விண்வெளி ஆய்வின் பங்கு’ என்ற தலைப்பில் மாநிலஅளவில், நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில், பெங்களுரு இஸ்ரோ மைய விஞ்ஞானி இராம கிருஷ்ணனிடமிருந்து விருது பெற்றேன்.

* 2014-ஆம் ஆண்டும் மகேந்திரகிரி விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) சார்பில் மாநிலஅளவில் பள்ளிமாணவ-மாணவியருக்கிடையில் “வழிநடத்தும் விண்வெளி’ என்ற தலைப்பில் நடத்தப்பட்டக் கட்டுரைப் போட்டியில் முதல்பரிசு. இதன் மூலமாக பெங்களூரில் உள்ள விண்வெளி ஆய்வுமையத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகளையும் பி.எஸ்.எல்.வி., மங்கள்யான் ராக்கெட்டுகளை உருவாக்கிய விஞ்ஞானிகளையும் சந்தித்துப்பேசும் வாய்ப்பு கிடைத்தது.

(பட்டியல் நீள்கிறது…)


சா.சின்னதுரை

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தேனி பெண்ணின் விண்வெளி கனவு..”

அதிகம் படித்தது