ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

தொகுப்பு கவிதை(தவறிழைக்கக் கூடாதவை, இசை மேதைமை)

இல. பிரகாசம்

Oct 19, 2019

தவறிழைக்கக் கூடாதவை

siragu thavarilaikkakoodaadhavai1

நீங்கள் ஒருநாள் கொலைக் குற்றவாளியின் நிழலில் நடந்து செல்கிறீர்கள்.
அவன் இரக்கமற்றவன், கொடூரமானவன், கோபமுடையவன்,
எவர் மீதும் அன்பு என்ற ஒன்றைக் காட்டாதவன் என்ற எண்ணம்
உங்களுக்குத் தோன்றலாம் அல்லது தோன்றாமல் கூட போகலாம்.

அவன் ஒரு குற்றவாளி அல்ல என்ற தீர்ப்பிற்கு பின்பு,
அவனை நீங்கள் சாதாரனமான பார்வையுடன் பார்க்க வேண்டிய
கட்டாயம் அல்லது சூழல் உங்களுக்கு ஏற்படலாம்.

அதுநாள் வரை, இடையில்
குற்றஞ்சாட்டப்பட்ட நபர் என்ற காரணத்திற்காக
செய்யாத குற்றத்திற்கு தண்டனையாக
கூனிக் குறுகி ஒரு புழுவைப் போல
நெளியும் அவனை
எப்போதாவது நீங்கள் சந்திக்க நேர்ந்தால்
கூறப்படாத, அல்லது ஒத்திவைக்கப்பட்ட நீதிபரிபாலனத்திற்கு முன்பு
அவனை ஒரு குற்றவாளி என்று தீர்மானித்து ஒருதலைபட்சமாக
எளிதில் தடுமாறுகிற மனதில் அவன் குறித்தான பார்வையில்
தவறிழைத்துவிடாதீர்கள்.

அத்தீர்ப்பு தவறுமெனின்
பாண்டியன் நெடுஞ்செழியன் நிலையை
நீங்கள் அடைய நேரிடலாம். அப்போது
அந்தத் தீர்ப்பின் அசலை கிழித்துவிட்டு
எந்த நீதிபரிபாலன அமைப்பினாலும் மாற்ற முடியாமல் போகலாம்.
அது ஒரு பட்சமானதாகவோ அல்லது
சார்பற்ற தன்மையானதாகவோ இருந்தாலும் கூட.
ஆராய்ந்தறியாது ஒருகண்ணோடும் போழ்து
நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்றோதிய நக்கீரன் நா கூட
தடுமாறலாம் இல்லையா?

இசை மேதைமை

siragu kitaar1

என்னை ஒரு இசைக்கருவியென சந்தையில்
பணம் கொடுத்து ஒருவன் வாங்கி வந்தான்.
தன் கோபம் கொப்பளிக்கும் வேளையில்
தரையில் போட்டு உடைப்பான். மீண்டும்,
என்னை சுவரின் ஓரத்தில் மாட்டிவைத்து
கொஞ்சம் புகையை அறை முழுக்க ஊதித் தள்ளுவான்.

புதிதாய் உடைபடவென அவனது அறைக்குள் நுழைந்த
இசைக் கருவியென மற்றொன்று
அவ்வறையில் இறந்த உடலை எண்ணி வருந்தியது.

நெடுநாளாய் மீட்டாததால், தன் உணர்வை
வெளிப்படுத்த இயலாது பிரக்ஞையிழந்த
இந்த கிடாரை பார்ப்பதற்கு கொஞ்சம் வருத்தம் தான்.


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொகுப்பு கவிதை(தவறிழைக்கக் கூடாதவை, இசை மேதைமை)”

அதிகம் படித்தது