சூன் 19, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

தொகுப்பு கவிதை (அமெரிக்க சனாதிபதி வாழ்க! வாழ்க!!, முந்தானை)

குமரகுரு அன்பு

Sep 12, 2020

 

அமெரிக்க சனாதிபதி வாழ்க! வாழ்க!!

siragu america

எங்கள் பிரச்சனை உங்களுக்கெப்படி புரியும்?

நாங்கள் சோற்றுக்கு வழியற்று
பிழைக்க வந்த நாளில்
நீங்கள் அமெரிக்காவிற்கு செல்பவர்களின்
விசா நேர்காணல் வரிசையில் நின்றிருந்தீர்கள்

நாங்கள் வெயிலை அண்ணாந்தபடி
செங்கல் பாண்டை தூக்கி செல்கையில்
உங்களைத் தூக்கி கொண்டு
பறந்ததொரு
விமானம்

அங்கே சென்றதும் நீங்கள் இங்கே
வருவதைப் பற்றி யோசிக்க போவதில்லை
நாங்களோ எப்போது ஊருக்கு
திரும்ப முடியும்
என ஏங்கியபடி நடந்து கொண்டேயிருக்கிறோம்

கடல் தாண்டுதலை விட
நிலம் தாண்டுதல் கடுமையாகி
போன காலமிதில்
எல்லோரும் மேலும் கீழுமாக
மிதந்து கொண்டிருக்கிறோம்

இழந்தவற்றைப் பற்றிய
கவலைகளின்றி
வாழவும் பழகிவிட்டோம்

பூச்சியத்தை ஒன்றாக்கும் எங்கள்
மீது ஒன்றை நான்காக மாற்றத்தானே
பறந்து போகின்றீர்
நாளைய அமெரிக்க சனாதிபதியே!

———–

 

முந்தானை

siragu kulam

ஊர் ஊராக

பயணித்த மழைக்குள்

அடைந்து கொண்ட

குளத்தின் மீன்களும்

அல்லி பூக்களும்

நீர் சிலந்திகளும்

தண்ணீர் பாம்புகளும்

நீர் கோழிகளும்

தான் பெருகிட

புணர தொடங்குகையில்

 

பேறு காலத்தின்

இராகருப்பையென

குலுங்குகிறது

ஒற்றை நிலா

 

வெட்கியபடி அல்லி இலைகளாலான

முந்தானையை இழுத்து மூடி கொண்டது

குளம்!

————-

 


குமரகுரு அன்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொகுப்பு கவிதை (அமெரிக்க சனாதிபதி வாழ்க! வாழ்க!!, முந்தானை)”

அதிகம் படித்தது