சூன் 19, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

தொகுப்பு கவிதை (இரத்தத்தின் மதிப்பு, நிலவு, டப்பா)

குமரகுரு அன்பு

Sep 26, 2020

இரத்தத்தின் மதிப்பு

siragu save bloodஇரத்தத்தின் நிறத்தை பிரித்தார்கள்
எதிலுமே சேராத இரத்தத்தை தெருவிலோட விட்டார்கள்
அப்போது அவர்களின்
கெக்கலிப்பின் ஒலியை கண்டு
ஒருத்தன் சிரித்து கொண்டிருந்தான்
அவனை கண்டு மட்டுமே பயந்தார்கள்
அவன் இரத்தத்தையும் தெருவிற்குள்
ஊற்ற முனைந்த போதெல்லாம்
அவன் சிரித்து கொண்டேயிருந்தான்
ஒப்புக்கு அவனை பைத்தியம்
என்றபடி இரத்தம் பிரிப்பதை தொடர்ந்தார்கள்
அந்த நாள் வந்தது
அன்று,
அவர்களின் சுண்டிய சூடான ரத்தத்தை
அவன் வெளியேற்றுவானென்றுதான்
அவர்கள் நினைத்திருந்தார்கள்…
அருகில் வந்த அவனோ…
சகோதரா!
இரத்தத்தின் பிரிவுகளைத் தான் நீ அறிவாய்…
நான் இரத்தத்தின் மதிப்பறிவேன்!…
என்று சிரித்து கொண்டே சொன்னான்…
*********************************************

நிலவு

siragu moon
இரவைப் பிழிந்து ஊற்றுகிறது நிலா
பொழியும் கறுமையைத் தாங்கிய
பகலின் ஓலம் எங்கும்
கானகத்தின் முதல் இடுக்கில் நுழையும் காற்று
மெல்ல ஊடுருவி
நிழல் நதி மீது படர்ந்து விரிந்து
இலைகளை உலுப்பி
கோதுகிறுது
இவ்வுலகின் இரவுகள் உருண்டு கொண்டிருக்கின்றன
இங்கொன்றும் அங்கொன்றுமென
சிதறி தெறிக்கும் இரவுகளை
விடியலில் பார்த்திருக்கிறேன்
மணியடித்ததும் ஓடும் பிள்ளைகளைப் போல்
துப்பாக்கி சப்தம் கேட்டு பறக்கும் புறாக்களைப் போல்
*********************************************

டப்பா

siragu dappaa1யாரோ ஒருவர் விட்டு சென்ற டப்பா
பூங்காவின் பெஞ்சில்.
அதை யாருமே பார்க்கவில்லை
அந்த டப்பாவைப் பார்த்தால்
யாரோ சிறுவனோ சிறுமியோ
விட்டு சென்றதாக புரிகிறது
அருகில் சென்று காணும் போதுதான்
“J. Vishnu
1 B”
என்றவன் அம்மாவோ அப்பாவோ எழுதிய எழுத்தில்
தெளிவாக தெரிந்தது
காலியான டப்பாவில்
சின்ன சின்னதாய் பொடிந்த
ரொட்டி துணுக்குளிருந்தன
ஜாமின் வாசனையும்…
அருகிலிருந்த குழாயில்
டப்பாவை
கழுவி பெஞ்சில் வைத்துவிட்டேன்
நாளை அவன்
டப்பாவின் வாயைத் திறந்ததும்
டப்பா முழுவதும்
அவனிடம் சொல்ல
ததும்ப ததும்ப
கதைகள் இருக்கும்

குமரகுரு அன்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொகுப்பு கவிதை (இரத்தத்தின் மதிப்பு, நிலவு, டப்பா)”

அதிகம் படித்தது