சனவரி 22, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

தொகுப்பு கவிதை (குளவிக் கூடு, ஒளிப்பிழம்பான பாதை, ஓய்வு, அச்சு)

இல. பிரகாசம்

May 25, 2019

குளவிக் கூடு

 

siragu kulavi koodu1கூடு கட்டிய குளவியின்

‘ஈ’ என்ற ஓசை காதுக்குள் புகுந்து கொள்கிறது.

அது, தான் கட்டிய கூட்டிற்குள் நுழைய

ஏன் என்னிடம் அனுமதி கேட்கிறது?

 

கஜா புயல் தாக்கிய போது எங்கே சென்றது

அந்தக் குளவி?

எங்கே ஒளிந்திருக்கும்?

அதன் பிள்ளைகள் என்ன ஆனது?

என்ற கேள்விகள்

அதனுடைய ‘ஈ’ ஒலியோடு துளைத்துக் கொண்டிருந்தது.

 

யாரும் குளவிக்கு அடைக்கலம் தருவதில்லை

எனத் தீர்மானித்து விட்டார்கள் என நினைக்கிறேன்.

குளவியின் கூடுகளில் லார்வாக்களும், சில பூச்சிகளும்

அடைக்கலம் கொள்கின்றன.

எனது அறை முழுக்க குளவிக் கூடுகள்

அதில் எனக்கும் ஒரு அறையை ஒதுக்கும் படி

ஒப்பந்தம் செய்து கொண்டேன்.

 

‘ஈ’யெனப் பறக்கும் குளவியானேன்

கூடு பெரிதாகிக் கொண்டிருக்கிறது,

இன்னும் சில நாட்களில் அதில் கரையான்கள் குடிகொள்ளும்

பின்பு பாம்புகள்.

 

ஒளிப்பிழம்பான பாதை

 

Siragu ovvoru nodiyilumஅவன் தனது பாதையில்

ஒளிப்பிழம்பு வழிந்தோடிய பாதையில்

ஒளிப்பிழம்பு போய்க்கொண்டிருந்த அதன் பாதையில்

ஒளிப்பிழம்பு ஒளிர்ந்தபடியே பெயர்ந்து கொண்டிருந்த

அதனுடைய பாதையில்

தானும் நடந்து கொண்டிருந்தான்

பாதை ஒளிப்பிழம்பாய் இருந்தது

அவனும் அதன் ஒளிப்பிழம்பில் தான் செல்லவேண்டிய

பாதையெதுவென கண்டடையும் பேராவல் கொள்ள

அவனுடைய பாதையருகில் அவனைக் கடந்து சென்றுகொண்டிருந்தது

அதே சாயலிலான வேறொரு ஒளிப்பிழம்பு.

ஓய்வு

 

siragu oivu1

வலதுகாலின் மேல் இடதுகாலை கொஞ்ச நேரம்

இடதுகாலின் மேல் வலதுகாலை கொஞ்ச நேரம்

நடந்து நடந்து நடந்து அசதி அசதி என்றபடி

ஓய்வுதேடும் கால்களுக்கு நரம்புகளுக்கு வலிமருந்தாய்

ஆப்பிள் ஒயின்கொஞ்சம் கேட்கும்

சோர்ந்து போகும் உடலை கிடத்த.

 

அச்சு

 

siragu achu2

படுக்கையில் உடலின் அச்சு பதிந்திருந்தது

வெறுந்தோல் மட்டும் என்னுடன்

மிச்சம் இருப்பதெல்லாம் எவையென

நான் எங்ஙனம் விளங்கிக்கொள்ள.

 


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொகுப்பு கவிதை (குளவிக் கூடு, ஒளிப்பிழம்பான பாதை, ஓய்வு, அச்சு)”

அதிகம் படித்தது