செப்டம்பர் 19, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

தொகுப்பு கவிதை (சாட்சியங்கள், அம்மானை வழக்கு)

இல. பிரகாசம்

Feb 9, 2019

சாட்சியங்கள்

-இல.பிரகாசம்

Siragu pirappokkum1துவைக்கத் தொடங்கியவுடன்
அழுக்குகள் மிஷினைக் கவ்விக் கொண்டன
துணியின் அழுக்குகள் பலவிதமானவை

அவை நீண்டநாள் பாவு நூலுடனும்
வெளிறிப் போன உடலுடனும் பந்தம் கொண்டிருந்தன.
இன்று அதற்கு கொடுக்கப்பட்ட அழுக்கு
புதுவிதமாக இருந்திருக்கும்.

அந்தத் துணியிலிருந்த ரத்தக் கறைகள்
நாற்றம் வீசத் தொடங்கிற்று..
அட, மிஷினே இந்தக் கறையை நீ போக்கு என்றாலும்
போகாத வீச்சம்
அது
எந்த ஆணவக் கொலைக்கு சாட்சியோ என்று
எண்ணியவாறு கரும்புகையை
வெளியிட்டுக் கொண்டிருந்தது.

 

அம்மானை வழக்கு

- -இல.பிரகாசம்

Man beating woman, silhouette

விளையாட்டில் ஏற்பட்ட தகராறு ஒன்றில்

‘நீ நாசமாத்தான்டிப் போவ”

வீட்டுத் திண்ணையில அஞ்சாங்கல்லு வெளையாடயில

அவ கொடுத்துவிட்டுப் போன ‘வாசாப்பு’

 

எவவூட்டுச் சாபமென அவ கையில கிட்டியிருந்த

மண்ணையெல்லாம்

வாய்க்கொரு வாசாப்புச் சொல்லோடு வீசி விட்டெறிஞ்சிப் போனா

அந்தக் குட்டி.

 

தெருவோட போனதென்ன அந்தச் சாபமெல்லாம்

பின்னாடி போனவ தலையிலெல்லாம் கொட்டுச்சாம்

அவளும் இப்படித்தான் சொன்னாளாம்

‘நீயும் நாசமாத்தான்டிப் போவ”

 

‘மண்ணையள்ளி வீசியெறிஞ்ச சொல்லெல்லாம்

அன்னக்கி ராத்திரியே அவளோட வீட்டுலயே

வினையா முளைச்சிருச்சாம்.”

 

அவர்களுடைய விளையாட்டு என்னவோ விபரீதம்

என்றாலும்

மண்ணைத் தூற்றிவிட்ட போது

கோபத்தோடு கேலியும் சிரிப்பும் எக்காளத்தோடும்தான்

அவர்களும் கேட்டார்களாம்.

 

என்றபடிக்கு,

நடந்த கதையைச் சொல்ல வந்தாள்

அதுவும்

தனக்கேவுரிய தலையைச் சொரிந்தபடி.

 

(வாசாப்பு- கிராமத்தில் ஒருவரை ‘உன்னுடைய வாழ்க்கை முழுவதும்

சிதைந்து போக” என்ற பொருளில் கடுங் கோபத்தில் ஏசப்படும் வார்த்தைகள்

இவற்றுள் தொகுத்துக் கூறப்படுகின்றன.)

 

 

 

 

 

 


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொகுப்பு கவிதை (சாட்சியங்கள், அம்மானை வழக்கு)”

அதிகம் படித்தது