நவம்பர் 21, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

தொகுப்பு கவிதை (செப்புச் சிமிழ்களே…, நுரையீரலும் மின்மினிபூச்சிகளும்…)

தொகுப்பு

Oct 17, 2020

செப்புச் சிமிழ்களே…

-வழக்கறிஞர் ம.வீ. கனிமொழி

 

 

siragu nurse1
சேவையின் உருவங்களே அன்பின் தங்கங்களே
கொரோனா நெருக்கடியில் ஆருயிர் காப்போர்களே
தன்னுயிர் போற்றும் தன்னலம் மறந்து
பொதுநலம் காக்கும் தூரிகை ஓவியங்களே
உறக்கம் துறந்து தொண்டாடும் உள்ளங்களே
உதிரச் சொந்தம் மறந்து களமாடும்
ஊக்கங்களே  கனிந்த பார்வை காரிகைகளே
அருவருப்பின்றி நேசம் தூவும்  தூவானமே
தாயின் உருவாய் நோய்த் தீர்க்கும்
தாரகைகளே கொடுந் தொற்று ஒழிக்க
உலாவரும் அர்ப்பணிப்பு பிறை நிலவுகளே
உயிரணையாது தேற்றும்  செப்புச் சிமிழ்களே
செவிலியர்களே வாழ்க நீவிர்!!


 நுரையீரலும் மின்மினிபூச்சிகளும்…

- குமரகுரு அன்பு

 

siragu panaimaram
மின்மினிபூச்சிகளால்
நிரம்பிய வெளிச்சம் நிலவுக்கு போட்டியாக.
அண்ணாந்து பார்த்தால்
நீண்ட மின்விளக்கு கம்பமென
நிற்கிறது பனை மரம்!
தூக்கணாங்குருவிகளை
வீடு காலி பண்ண சொல்ல
பனை மரத்துக்கு ஓனரில்லையே
பதநீர் குடுவை கட்டுபவன்?
இந்த இருட்டில்,
கூட்டில் ஒட்டியிருக்கும்
மின்மினிகளின் ஒளியில்
தலைப்பாகையை விரித்து
அண்ணாந்து படுத்தபடி,
பீடி புகையை வானுக்கு
செலுத்தி கொண்டிருக்கிறான்!
இருளில் பறக்கும் புழுதியில்
வாய்க்கால் தூசுகள்
அவன் மீது படர்ந்து பறக்கின்றன…
ஒரு பழைய தொழிற்சாலையின்
சிம்னியைப் போல கருகி கிடைக்கும்
நுரையீரல்களின் உள்ளே,
ஒரே ஒரு மின்மினி பூச்சியின் மினுங்களில்
ஒரே ஒரு தூக்கணாங்குருவி குஞ்சு
தூங்கி கொண்டிருக்கிறது…

 

 


தொகுப்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொகுப்பு கவிதை (செப்புச் சிமிழ்களே…, நுரையீரலும் மின்மினிபூச்சிகளும்…)”

அதிகம் படித்தது