தொகுப்பு கவிதை (தோழமை போற்றிடுவோம்!, தீராத நதியொன்று)
இல. பிரகாசம்Jan 6, 2018
தோழமை போற்றிடுவோம்!
வருங்காலம் உனதென்று உணர்வாய்
நீயன்றும் நானென்றும் பேசினால்
நம்மிடைத் தோன்றுவது வேற்றுமையே!
நாமென்றும் நமதென்றும் பேசினால்
நம்மிடைத் தோன்றுவது ஒற்றுமையே!
தனிமரம் தோப்பென்று சொல்வரோ? –வளர்த்
தமிழ்ச்ச முதாய மொன்றே தோப்பாகும்!
தானென்றும் தனதென்றும் பேசினால்
தனியுடைமை தீங்கன்றோ தோன்றும்
தோழமை போற்றி வளர்வதாலே
பொதுமைப் பண்பு திகழ்ந்திடுமே
எல்லாரும் ஓர்இனம் ஓர்மக்களே –தீயவை
வலுப்பெற் றிடவழி விடலாமோ?
ஓர்மக்கள் ஓர்இனம் என்று
ஓர்ந்தெண்ணி வாழும் வழிகண்டு
சேர்ந்துவாழ்வ திலன்றோபே ரானந்தம்!
உணர்ந்தெண்ணி தோழமை போற்றிடுவோம்
தீராத நதியொன்று
தீராத நதியொன்று பாயுது இவ்வேளை –நெஞ்சமோ
தீராத ஆசையாலே துள்ளிக் குதிக்குது
தேனான இசையொன்று வீசிவரும் தென்றலிலே
தானதன தானதன வென்றே கூவிடுமே!
அள்ளிப் பருகிட வருமாம் ஆங்கொன்று –குயிலாம்
கிள்ளை மொழித் தமிழால் பாடுமே!
துள்ளி விளையாடத் திரையலை மெல்லமெல்ல
கரைதனைத் தொட்டுத் தொட்டு ஆடுமே!
குவளைப் பூவொன்றி லமர்ந்தபடி இருக்கும் –தேன்சிட்டு
உள்ளம் இரைந்து பாடுமாம் புதுபாட்டு!
தவத்தொடு நின்றசை யாதபடி மலர்கள்
எல்லாம் மயங்கி நிற்கச் சிரிக்கும்!
மலைநாடு தனில்உலவும் உயிர்கள் யாவும் –உள்ளத்தே
விரைந்து வருமென மாலையை எண்ணும்!
மாலைப் பொழுதிரங்கி வரவரத் தும்பிகள்தாம்
தேமதுர குறிஞ்சிப் பண்ணினை இசைக்கும்!
அச்சமில்லை யெனகுருகு நீhக்;கொடி யினடியில் –தாயிடம்
தாலாட்டு பாடெனக் கொஞ்சி நிற்கும்!
இச்சையில்லாக் காதலொன்று மடவன்னப் பறவையிடம்
துளிர்விட்டு நிற்க!எங்கும் எல்லாம் இன்பமே!
வையை நதிக்கரை மிசைதனில் கதிர்மழை
பொழிய! மீனினங்கள் துள்ளி விளையாடும்!
மையல்விழிக் கயலாள் தொடிவளை மாதரசி
நல்லதொரு வீனை தனையாங்கு மீட்டுவாள்!
இல. பிரகாசம்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொகுப்பு கவிதை (தோழமை போற்றிடுவோம்!, தீராத நதியொன்று)”