செப்டம்பர் 18, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

தொகுப்பு கவிதை (நிவப்பு நிழலாய் படரும்!!, அணையாத தீபமே!)

தொகுப்பு

Oct 3, 2020

நிவப்பு நிழலாய் படரும்!!

-கனிமொழி

siragu poraattam1

வால்மீகி கொண்டாடப்படும் நாட்டில்
வால்மீகி மனிஷாக்கள் நசுக்கப்படுகின்றனர்;
வாடாத மணமுள்ள நங்கையை
வக்கிரத்தோடு சிதைத்து நசுக்கியது
நாற்றமெடுக்கும் சாதிவெறி, குமட்டும் மதவெறி;

நாடோ காடோ என  நினைக்கையில்
நகைக்கும் கண்முன் பாசிசம்;
நயம்பட பேசி குழைந்து
நாடற்றோராக்கிடும், கழுத்தறுத்து வீசிடும்,
நடைப்பிணமாக வாழ்தல், விதைக்கப்பட்ட மனுநீதி;

நாக்கறுத்து, கழுத்துடைத்து, வன்புணர்ந்து
நாணாது நாக்கெழுப்பி உரைக்கின்றனர்
நன்மகள் தானாய் மரித்தாளாம்;
தானாய் முதுகெலும்பும் முறுக்கிக்கொண்டதாம்
நீதிமன்றங்களின் நீதி பூணூலில்;

நானிலத்தில் ராமன்களின் ரோமங்கள்
நிவப்பத் துடிக்கின்றது, பஞ்சகச்சம் கட்டிக்கொண்டால்
நீதியின் படிக்கட்டுகள் உடைபடும்;சல்லியாகும்;
நிவப்பு நிழலாய் படரும்; வீழ்த்தப்பட்டோரின்
நிறைவுறா போராட்டம் தொடரும்;

அணையாத தீபமே!

- ராஜ் குணநாயகம்

siragu anayaa dheepam

உன் மூச்சுக்காற்றை

உனக்குள்ளே நிறுத்திக்கொண்டாய்

இத்தேசத்தில்

தமிழர்கள் சுதந்திரக்காற்றை

சுவாசித்திட வேண்டுமெனவே!

காந்தி

புத்தன்

புராணம் பாடும் கூட்டம்

உன் தியாகத்தின் தார்ப்பரியம்

அன்றும் உணர்ந்து கொள்ளவில்லை

இனியும் உணரத்தலைப்படுமென நம்பிக்கையுமில்லை.

ஆயிரமாயிரம் இளைஞர்களுக்குள்

விடுதலைத்தீயை மூட்டிச்சென்றவனே

உனக்காய்

ஒரு தீபம் ஏற்றிடவும்

இத்தேசத்தில் சுதந்திரம் இல்லையே!

இவர்கள் யார்

தடைபோட

அவர்கள் காட்டுச்சட்டங்கள் அவர்களோடு.

உனக்கென ஆயிரமாயிரம் தீபங்களை

எங்கள் இதயங்களில் ஏற்றிவைப்போம்!

எங்கள் அணையாத தீபமே

உனக்கென்றும் அழிவில்லை

தமிழுள்ளவரை!

-ஈழன்-


தொகுப்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொகுப்பு கவிதை (நிவப்பு நிழலாய் படரும்!!, அணையாத தீபமே!)”

அதிகம் படித்தது