செப்டம்பர் 19, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

தொகுப்பு கவிதை (நெய்தலெனும்… !, மாலுமியுமாக நானேயிருக்கிறேன்)

தொகுப்பு

Jul 13, 2019

 

நெய்தலெனும்… !

-கனிமொழி

 

siragu neithal1

நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பல்

தண்காற்று வீசிடும் நீலக்கடல்

பாறையில் தாளமிடும் அலைகள்

மணலில் கோலமிடும் நண்டுகள்

சிரிப்பொலி மழலையின் துள்ளல்கள்

முகமறைத்து முத்தொலியில் காதலர்கள்

கனப்பொழுதில் முகமதில் உப்புக்கரிப்பு

கடற்மேற் பறந்திடும் நீர்ப்பறவைகள்

கால்தனை முத்தமிடும் வெண்சங்குகள்

ஈரமணலின் இதமான மென்மை

வானம் வியந்துக்காணும் கண்கள்

தளிர்மேனி தழுவும் தென்றல்

ஆழ்கடலில் துள்ளிக்குதிக்கும் மீன்கள்

ஒய்யாரமாய் ஓய்வெடுக்கும் ஓடங்கள்

உலர்த்தப்பட்ட பிண்ணிய வலைகள்

சுண்டல்  விற்கும் அரும்புகள்

மௌனவலி  ஆழிப்பேரலையின் நினைவுகள்

நெஞ்சின் கூட்டிற்குள் அழகியலையும்

வலிகளையும் காட்சிகளையும் இயற்கையின்

நறுமணத்தையும் எப்போதும் நிரம்பிய கோப்பையாய் தந்துகொண்டே இருக்கிறது

நெய்தலெனும் கொடை நிலம் !

கோடையில் ஈட்டம் இளைப்பாறும்

நிழற்குடை ஈர நிலம்!

 

மாலுமியுமாக நானேயிருக்கிறேன்

-இல.பிரகாசம்

 

siragu maalumiyaaga1ஒரு நொடியில்

உயிர் போய்விடவேண்டும்.

கருணையற்று இருக்கிறது இந்த உலகம்.

 

யாருமற்ற பெருவெளி நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

இருமருங்கிலும் இருளின் அலைகள்.

பார்வையற்ற மாலுமியுமாக நானேயிருக்கிறேன்.

கலத்தை தேர்ந்தெடுப்பதில் கைதேர்ந்தவன் எவனுமில்லை.

துடுப்பைத் தேர்ந்தெடுப்பதிலும் அப்படியே.

 

ஆழ்கடல் பயணத்தின் நடுவே வீசிக் கொண்டிருப்பது, நீர்ப்புயல் அல்ல.

இருளின் அலையை ஒத்திருக்கும் மரணம் அது.

 

இவ்விருளின் கரையெங்குள்ளதென யான் அறிந்திலன்.

கலம் அக்கரையைச் சேருமென்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

 

அதனால், இப்பயணத்தில் என் வாழ்நாளை

சுகமாக அமைத்துக் கொள்ள எண்ணுகிறேன்.

அதனால், இப்பயணம் இனி எனக்கு சுகமானதாகவே அமையும்.

அதுவும் நம்பிக்கையாகவே எனக்கு இருக்கிறது.

 

கலம் செல்லும் திசையெங்கும் கரைகள் இருக்க வேண்டும் என்று எண்ணுவது

போராளியாக இல்லாதவனின் மனதில்

நம்பிக்கைகள் உறுதியற்றவை என்ற அளவில் இருக்கும்.

 

ஏழுகடல் என்ற பிறவியை யாரும் எளிதில் கடந்துவிடமுடியும்.

இருளின் தன்மையை ஒத்திருப்பவை எவையென கண்டுகொண்டால்

மட்டுமே அது சாத்தியம்.

 

இன்னும் கலத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறேன்.

எதிரில் இருக்கும் இருளின் புயலை எதிர்கொண்டு

 

ஒளியலைப் பாய

கலத்தைச் செலுத்தும் மாலுமியுமாக நானேயிருக்கிறேன்.

 


தொகுப்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொகுப்பு கவிதை (நெய்தலெனும்… !, மாலுமியுமாக நானேயிருக்கிறேன்)”

அதிகம் படித்தது