சனவரி 22, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

தொகுப்பு கவிதை (பெண்ணின் பெருந்தக்க யாவுள, கடவுச்சீட்டு)

இல. பிரகாசம்

Sep 28, 2019

பெண்ணின் பெருந்தக்க யாவுள.

siragu pennin1
அவளுடைய கைப்பைகளில்
திருட்டுத்தனமாய்
சில்லறைக் காசுகளைத் துளாவிய போது
எதிர்பாராது
கையில் கிடைத்தன நாப்கின்கள் மூன்று.

அவளுடைய இந்த நாளை வெட்கமில்லாமல்
முகத்தில் அறைந்தார் போல்
முத்தமிட்டு எனது வேதனையை புரிந்து கொள்
என்றாள்.

கடவுச்சீட்டு

siragu passport2

மின்னஞ்சல்கள் என்னுடைய உட்பெட்டியில் நுழைந்து
நாள்தோறும் அழைப்புகள் விடுக்கின்றன.
அவைகள் என்னுடன் நட்புறவு பாராட்டுகின்றன.

அமெரிக்க நிறுவனமொன்றின் விளம்பரம்
டாலர்களில் சம்பளம் தருவதாக கூறுகிறது.
அரபுநாட்டு நிறுவனமொன்றின் விளம்பரம்
தினார்களில் சம்பளம் தருவதாக கூறுகிறது.

டாலர்கள் … டாலர்கள்..
தினார்கள் … தினார்கள் ..
வீட்டின் மூலையில் முடங்கிக்கிடந்த செய்தித்தாள் ஒன்று
பன்னாட்டு நிறுவனங்களின் நிகரலாப வர்த்தகத்தை
மதிப்பீடு செய்து பட்டியலிட்டது.

இந்திய ரூபாய் — டாலர்
இந்திய ரூபாய் — தினார்
என எண்ணிக் கொண்டிருக்க
மூளையில் ரூபாயின் எக்ஸ்சேஞ்ச் மதிப்புகள்
கற்பனையில் பறந்து கொண்டிருந்தன.

இன்றைய டாலர் மதிப்பு உயர்வு
இன்றைய தினார் மதிப்பு உயர்வு
தேசாந்திரி என்பான் ஒருவன்
உள்ளே உருக்கொண்டான்

தனக்கு டாலர்…
தனக்கு தினார்…
அவன் கண்ட கனவு பங்குச்சந்ததை
ரூபாயின் மதிப்பை போல் பச்சைக் குறியீட்டுடன்
மின்னிக் கொண்டிருந்தது.

பாஸ்போர்ட் விற்பணைக் கூடத்தில்
அவனது கனவு வெற்றுக் காகித்தைப் போல

அவன் ரூபாய்களிலிருந்து
டாலர்கள் — தினார்கள் … ரிங்கிட்கள்
எனத் தன்னைத் தன்னிலையிலிருந்து
பரிவர்த்தனை செய்து கொண்டிருந்தான்

டாலர்கள் — தினார்கள்
ரிங்கிட்கள் — ரூபிள்கள்
திறந்தவெளியில் ஏலம் விடப்பட்ட அடிமைபோல்
இத்தேசத்தின் இளைஞனொருவன்
டாலரிலும் தினாரிலும்
ரிங்கிட்கள் ரூபிள்களுக்குமாக விற்கப்பட்டுக் கொண்டிருக்கிறான்
சர்வதேச சந்தைக்கு இணையத்தில்.


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொகுப்பு கவிதை (பெண்ணின் பெருந்தக்க யாவுள, கடவுச்சீட்டு)”

அதிகம் படித்தது