செப்டம்பர் 19, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

தொகுப்பு கவிதை (போரின் பறையொலி !!, என்னால் மூச்சு விட முடியவில்லை!)

தொகுப்பு

Jun 13, 2020

 

 

போரின் பறையொலி !!

- கனிமொழி

siragu porin parayoli1

விடுதலை உணர்வால்

வீதியில் கூட்டம்

கூவிடுதே;
கனலாய் இடியாய்
குமறிடும் நெஞ்சங்கள்
களத்தில் முரசறைகிறதே;
கொரோனாவும் கொஞ்சம்
பதுங்கிடுதே; போராட்டத்
தணலில் வெந்திடுதே;
உயிரா? மானமா?- எனின்
மானம் மானமென
பகன்றிடுதே ;
கழுத்தை நசுக்கும்
வஞ்சகத்தை
வெஞ்சினத்தால்
முறித்திடுதே ;
கறுப்பு வேங்கைகள்
சுழலும் புயலாய்
காலங்கள் கடந்தும்
வெறுப்பு சுமப்பதா?
உரிமை மறுப்பதா?
கொல்லும் உரிமை
கொடுத்தவனெவனடா?
தடுத்து நிறுத்து
கொலைகளெனச்
சாலைகள் நோக்கி
முழக்கமிடுகிறதே;

எங்கள் மூச்சுள்ளவரை
நீதிப் பயணம் தொடரும்
என்றே பொங்கியெழுகிறதே;
பிரித்தாளும் நிறவெறி
துரத்த வீறுகொண்டு
பாதைகளில் சங்கொலி
கேட்கிறதே;
அடிமை விலங்கொடிக்கும்
சங்கொலி ;
சமத்துவப் போரின் பறையொலி !!

 

————————-

என்னால் மூச்சு விட முடியவில்லை!

- ராஜ் குணநாயகம்

eelam-fi

என்னால் மூச்சு விட முடியவில்லை

அடக்கி ஒடுக்கப்படும்

மனிதக்கூட்டத்தின்

தேசிய கீதமோ?

ஆர்மேனியா தொடங்கி

முள்ளிவாய்கால்

புளோய்ட்டுக்கள் என

பல்லாயிரம் ஆன்மாக்களின்

இறுதி மரண ஓலமோ?

ஆளும் வர்க்கத்தின்

துவேசக்கரங்கள்

எங்கள் சுதந்திரம் எனும் குரல்வளையை

எப்போதுமே நசித்துக்கொண்டுதான் இருக்கின்றது..

எங்களால் மூச்சு விட முடியவில்லை!

இதுவே முடிவுமல்ல

அஃதே

தொடக்கமுமல்ல..

இது ஓர் தொடர்கதை

அவ்வப்போது

ஆளும் வர்க்கம் எழுதிக்கொண்டேயிருக்கும்

தர்மம் புதைக்கப்பட்டு

அநீதி விதைக்கப்பட்டுக்கொண்டிருக்கும்

இப்பூமியில்!

-ஈழன்-


தொகுப்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொகுப்பு கவிதை (போரின் பறையொலி !!, என்னால் மூச்சு விட முடியவில்லை!)”

அதிகம் படித்தது