ஆகஸ்டு 17, 2019 இதழ்
தமிழ் வார இதழ்

தொகுப்பு கவிதை (வா பகையே வா!, பேசும் மௌனம்)

தொகுப்பு

Jun 30, 2018

வா பகையே வா!

-

-வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

 

 

Siragu-eththunai2

யாது கேட்டனர் எம் மக்கள்?

பொன் வீதிகளா? வைர அணிகளா?

வறுமை ஒழிக்கவா? பசி ஆற்றவா?

மூச்சை நிறுத்தும் புற்றின் வேரறுக்க

போர்த்தொடுத்தனர் அமைதி வழியில்

ஓநாய் கனவான்களே, குற்றமோ அது?

காற்றும், நீரும் உயிர்க்கொல்லும் கோடரி

ஆவதை தட்டிக் கேட்டதற்கா பொட்டில்

சுட்டீர்கள்? சிட்டுப் பெண்ணின் உதட்டை

கிழித்தெறிந்தீர்கள்? ஈயத் தாது தண்ணீரும்

மாசடைந்த காற்றும் இல்லா புதிய பூமி புதிய வானம்

வேண்டும் என்றதற்கா கொழுந்து விட்டெரியும்

தீயில் இறுக மூடிய கொதிகலனுள் எம் மக்களை எரித்தீர்கள்? எரிந்த எங்கள் பிள்ளைகளின் கனவையும்

சாம்பலையும் ஏந்தி நீல விழிகளோடு சாக்காட்டின் அருகில் உங்கள் வேரறுக்க காத்துக் கிடக்கிறோம்

வா பகையே வா, சாக்காடு உனக்கும் உண்டு!

 

 

பேசும் மௌனம்

- அம்பிகா குமரன்

 

siragu mounam1

 

பேசும் நேரங்களைவிட
மௌனத்திற்கே அதிகச்
சொற்கள் தேவைப்படுகின்றன

திராவகச் சொற்களில்
எரியும் நிமிடங்கள்தான்
நகர்தலுக்கான
திசைகளை மாற்றியமைக்கின்றன

உமிழப்படும் எச்சிலின்
எதிர்மறை வினையில்தான்
நேர்மறைகள்
நனைந்து கொண்டிருக்கின்றன

பிரித்தறியும் உள்அழுக்குகள்
அடுத்தவர் முதுகையே
தேர்ந்தெடுக்கின்றன

உள்ளத்தின் நிறையாமை
நடுநிலையை வென்றுவிட்டு
சுயநலச் சேற்றில் பரிதவிக்கிறது

இங்கே

மௌனத்திற்கே அதிக
சொற்கள் தேவைப்படுகின்றன

 


தொகுப்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொகுப்பு கவிதை (வா பகையே வா!, பேசும் மௌனம்)”

அதிகம் படித்தது