மே 21, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

தொக்கணம் – நரம்பு, தசை மற்றும் மூட்டு நோய்களுக்கான சிறந்த சிகிச்சை முறை

சித்த மருத்துவர் ஜெரோம் சேவியர் B.S.M.S, M.D

Oct 17, 2015

மருத்துவம் என்றாலே நம் நினைவுக்கு வருவது மருத்துவமனை. மருத்துவர், அவர் எழுதித்தரும் மருந்துச்சீட்டு, அதைக்கொண்டு வாங்கப்படும் மருந்து மாத்திரைகள், இதைத்தாண்டினால் அறுவை சிகிச்சை, அவ்வளவுதான்.

ஆனால் சில நோய்களிலிருந்து முழுமையாக விடுதலை பெறுவதற்கு புற சிகிச்சை முறைகளும் அவசியமாகின்றன. குறிப்பாக நரம்பு சம்பந்தமான நோய்கள், மூட்டுகளில் ஏற்படும் நோய்கள், இரத்தக்குழாய்களில் ஏற்படும் பிரச்சனைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, தசைகளில் ஏற்படும் பிரச்சனைகள் போன்றவற்றிக்கு தொக்கணம் எனப்படும் புறசிகிச்சை மிகவும் அவசியம்.

பெரும்பாலான நோய்களுக்கு ஏதோ ஒரு வடிவத்தில் ‘மருந்து’ உடலுக்குள் செலுத்தப்படுகிறது. எனவே மருத்துவம் என்றாலே மருந்து என்கிற நம்முடைய சிந்தனைக்கு இயல்பானதே.

ஆனால் ஒரு முழுமையான மருத்துவம் அல்லது வாழ்வியல் மருத்துவத்தில் மருந்தைத்தாண்டி அநேக விடயங்களும் உள்ளன. அவற்றுள் புற மருத்துவ சிகிச்சைகளுக்கு முக்கிய பங்கிருக்கிறது. ஒரு சுலபமான புரிதலுக்காக சொல்லவேண்டுமானால், இப்படிப்பட்ட புற மருத்துவ சிகிச்சைகளுக்கு ‘தெரபி’ (Theraphy) என்று பெயர். ‘பிசியோதெரபி’ (இயல்முறை மருத்துவம்) என்றும் உடனே உங்களுக்குப் புரியும்.

இப்படிப்பட்ட புற சிகிச்சை முறைகள் சித்தமருத்துவத்தில் பல உள்ளன. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் 32 வகையான புற சிகிச்சை முறைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. இவற்றுள் ஒன்றுதான் ‘மசாஜ்’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற புறசிகிச்சை முறை, இதற்கு சித்த மருத்துவத்தில் ‘தொக்கணம்’ என்று பெயர்.

அந்த 32 வகையான புற சிகிச்சை முறைகளின் பெயர்களை மட்டும் இங்கே உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

 1. கட்டுதல்
 2. பற்று
 3. ஒற்றடம்
 4. பூச்சு
 5. வேது
 6. தொக்கணம்
 7. பொட்டணம்
 8. புகை
 9. மை
 10. பொடி திமிர்தல்
 11. கலிக்கம்
 12. நசியம்
 13. ஊதல்
 14. நாசிகாபரணம்
 15. களிப்பு
 16. சீலை
 17. நீர்
 18. வர்த்தி
 19. சுட்டிகை
 20. சலாகை
 21. புகை
 22. களி
 23. பொடி
 24. முரிச்சல்
 25. கீறல்
 26. காரம்
 27. அட்டை விடல்
 28. அறுவை
 29. கொம்பு கட்டல்
 30. உரிஞ்சல்
 31. குருதி வாங்கல்
 32. பீச்சு

இதில் தொக்கணம் என்பதுதான் மசாஜ். ஓவ்வொரு குறிப்பிட்ட நோய்களுக்கும் ஒரு குறிப்பிட்ட புற சிகிச்சை முறை தேவைப்படும்.

இதில் மசாஜ் அல்லது தொக்கண சிகிச்சை எதற்காக?

உடலில் நோய் ஏன் வருகிறது?

இதற்கான பதிலை திருக்குறளில் வள்ளுவர் ‘மருந்து’ எனும் அதிகாரத்தில் முதல் குறளிலேயே நெற்றிப்பொட்டில் சுட்டதுபோல குறிப்பிடுகிறார்.

தமிழ்கூறும் நல்லுலகம் திருக்குறளில் ‘மருந்து’ எனும் அதிகாரத்தை, கண்டிப்பாக படிக்க வேண்டுமென அன்பு கட்டளையிடுகிறேன்.

உடலில் இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய வாதம், பித்தம், கபம் எனும் இயக்கங்கள் கூடுவதாலும் குறைவதாலுமே நோய்கள் உண்டாகின்றன. எனவே இந்த மூன்று இயக்கங்களும் தத்தம் அளவில் சரியாக இருக்குமாறு வைத்துக்கொள்வதே ஒரு சரியான ஆரோக்கிய வாழ்வியல். இதில் ‘வாதம்’ எனும் இயக்கத்தை சரியான அளவில் வைத்துக் கொள்வதற்கான ஒரு சிகிச்சை முறையே மசாஜ். இதில் வாதம் உடலில் அதிகரிக்கும் போது, வலி, நடுக்கம், வறட்சி, இளைத்தல், மூட்டுகளில் பிரச்சனைகள், எலும்புகள் தொடர்பான பிரச்சனைகள், தோல் பிரச்சனைகள், நரம்பு தொடர்பான பிரச்சனைகள், அதனால் உறுப்புகளில் ஏற்படும் தளர்ச்சி போன்றவை உண்டாகின்றன.

இந்தப் பிரச்சனைகள் வராமல் தடுக்கக்கூடிய, ஒரு நோய் தடுப்பு முறையாகவும் மசாஜ் பயன்படுகிறது.

எப்படி போலியோ வைரஸ் தாக்காமல் இருப்பதற்கு சொட்டுமருந்து போட்டுக்கொள்கிறோமோ, அம்மை நோய் தாக்காமல் இருப்பதற்கு தடுப்பூசி போட்டுக் கொள்கிறோமோ அதைப்போல நரம்பு, மூட்டு, தசை தொடர்பான நோய்கள் வராமல் தடுப்பதற்கு ஒரு நோய் தடுப்பு முறையாக மசாஜ் பயன்படுகிறது.

மசாஜ் அல்லது தொக்கண சிகிச்சையை யார் பரிந்துரைக்கலாம்?

என்ன நோய்க்கு என்ன மாதிரியான மசாஜ் அல்லது தொக்கணம் செய்யவேண்டும் என்பதை முதலில் மருத்துவர் தீர்மானித்து பரிந்துரைக்க வேண்டும். சித்த மருத்துவ பட்டமேற்படிப்பில் ‘சிறப்பு மருத்துவம்’ என்பது ஒரு பிரிவு உள்ளது (M.D- Special Medicine). அதில் மசாஜ் எனப்படும் தொக்கணம் ஒரு சிறப்பு பாடப்பிரிவாகும். எனவே என்ன பிரச்சனைக்கு என்ன மசாஜ் அல்லது தொக்கணம் செய்யவேண்டும் என்பதை M.Dசித்தா சிறப்பு மருத்துவம் படித்தவர்கள் பரிந்துரைப்பது சிறந்தது. ஏனெனில் இவர்களே இத்துறை சார்ந்த சிறப்பு மருத்துவர்கள்(Specialists).

யார் மசாஜ் செய்ய வேண்டும்?

thokkanam4மருத்துவரே மசாஜ் எனப்படும் தொக்கணம் சிகிச்சையை செய்யலாம். மேலும் தற்போது சித்த மருத்துவக் கல்லூரியில் நடத்தப்படும் இரண்டரை வருட சித்த மருத்துவ செவிலியர் மற்றும் சித்த மருத்துவ இயல்முறை மருத்துவ பட்டப்படிப்பை (DNT- Diploma in Nurshing Therapist) படித்தவர்களும் மசாஜ் அல்லது தொக்கணம் செய்யலாம். ஒரு மருத்துவரின் பரிந்துரை அல்லது மேற்பார்வையில் இவர்கள் மசாஜ் செய்வது நல்லது.

மசாஜ் அல்லது தொக்கணம் செய்வதால் ஏற்படும் பயன்கள்:

தசைகளுக்கு இரத்த ஓட்டத்தை(Blood circulation) அதிகரிக்கும், உடல் உழைப்பால் தசைகளில் தேங்கியுள்ள கழிவுப்பொருட்களை நீக்கும், தசையில் தளர்ச்சியை நீக்கும். தசைகளுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். தசை சூம்பிப் போதல் நோய் நிலைகளில் தொக்கணம் மிகவும் அவசியம்.

உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை(Blood circulation)தொக்கணம் சரி செய்யும்.

உடல் முழுவதும் நிணநீர் ஓட்டத்தை(lymphatic circulation) தொக்கணம் சரிசெய்யும்.

உடலுக்கு நோய் எதிர்ப்பு(Immunity) சக்தி அதிகரிக்கும்.

உடலின் மென்தசைகள், மூட்டுகளில் உள்ள இணைப்புத் திசுக்களுக்கு வலிமை தரும்.

தூக்கமின்மைக்கு தொக்கணம் ஒரு நல்ல சிகிச்சை, நல்ல உறக்கம் வரும்.

உடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும்.

மது, போதைப் பொருட்களிலிருந்து விடுபடும் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கு தொக்கணம் நல்லது.

நெடுந்தூரம் தினமும் பைக் அல்லது பேருந்துகளில் பயணம் செய்பவர்கள், உடல் உழைப்பு உள்ளவர்கள் போன்றவர்களுக்கு தொக்கணம் செய்தால் உடல் அலைச்சல் மாறும்.

தோலுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும், தோலில் உள்ள கழிவுகள் நீங்கும், தோல் மென்மை அடையும், சுருக்கம் நீங்கும், வயதான தோற்றம் தள்ளிப்போகும், அழகைப் பராமரிக்க விரும்புபவர்கள் மாதம் ஒரு முறை தொக்கணம் செய்து கொள்வது நல்லது.

எந்தெந்த நோய்களுக்கு தொக்கணம் அல்லது மசாஜ் அவசியம்:

-       நரம்புதொடர்பானநோய்கள்

-       தசைகள்தொடர்பானநோய்கள்

-       மூட்டுகள்தொடர்பானநோய்கள்

-       உறக்கமின்மை

போன்றவற்றுக்கு மசாஜ் அல்லது தொக்கணம் அவசியம்.

மசாஜ் அல்லது தொக்கணம் செய்ய வேண்டிய முறை:

உடலில் மருந்து எண்ணெய்களை தடவியோ அல்லது தடவாமலோ தொக்கணம் செய்யவேண்டியிருக்கும்.

உடலில் அழுத்தம் கொடுத்து செய்வதால் மிகவும் நுணுக்கமாக நல்ல பயிற்சி பெற்று செய்ய வேண்டிய சிகிச்சை முறை இது.

பெரும்பாலும் நரம்புகள், தசைகள், மூட்டுகள் தொடர்பான நோய்களுக்கே தொக்கண சிகிச்சை தேவைப்படுவதால், மிகவும் கவனமாக செய்ய வேண்டும்.

எந்த இடத்தில் தட்ட வேண்டும், எந்த இடத்தில் இழுத்து விட வேண்டும், எந்த இடத்தில் பிடித்து விட வேண்டும், எந்த இடத்தில் பிடிக்க வேண்டும், எந்த இடத்தில் முறுக்க வேண்டும், எந்த இடத்தில் அழுத்த வேண்டும், எந்த இடத்தில் இறுக்க வேண்டும், எந்த இடத்தை அசைக்க வேண்டும் என்ற முறைகள் தொக்கணத்தில் உள்ளன.

மசாஜ் ஒரு வாழ்வியல் மருத்துவம்.

மசாஜ் இன்று நேற்றல்ல, ஆயிரம் ஆண்டுகளாக உலகம் முழுவதும் ஒரு சிகிச்சை முறையாகப் பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. கிரேக்கம் போன்ற மேலை நாடுகளிலும், சீனா, சப்பான் போன்ற கீழை நாடுகளிலும் பல நூற்றாண்டுகளாகவே தொக்கண முறை வழக்கில் இருந்துள்ளது. இன்றும் உலக நாடுகள் முழுவதும் மசாஜ் ஒரு சிகிச்சை முறையாக வளர்ந்து வருகிறது.

நவீன மருத்துவத்திலும் தொக்கணம் முறை ஒரு சிகிச்சை முறையாக வளர்ந்து வருகிறது. ஆனால் முறையாக படிக்காமல், பயிற்சியும் இல்லாமல் ஆங்காங்கே மசாஜ் மையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றிற்கு மருத்துவத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இப்படிப்பட்டவர்களால் தொக்கணம் எனப்படும் சிறப்பான ஒரு மருத்துவ சிகிச்சை முறைக்கு கெட்டபெயர்தான் ஏற்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன், எனது மருத்துவமனையில் பெயர் பலகையில் “மூட்டு நோய்களுக்கு தொக்கணம்” என்பதைப் பார்த்துவிட்டு, “இதற்கு உங்களிடம் உரிமம்(License) இருக்கிறதா?” என சிறுபிள்ளைத்தனமாக காவல் துறையினர் கேட்டனர். அந்த அளவிற்கு மசாஜ் எனப்படும் தொக்கணத்தின் மருத்துவ மதிப்பை மசாஜ் மையங்கள் கெடுத்து வருகின்றனர்.

மருத்துவ ஆலோசனைக்கு:

Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D

சித்தமருத்துவ மையம்,

டாக்டர்ஸ் பிளாசா,

சரவணா ஸ்டோர் எதிரில்,

வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,

வேளச்சேரி, சென்னை.

அலைபேசி எண்: 9444317293

இணையதள முகவரி:www.doctorjerome.com

மின்னஞ்சல் முகவரி :drjeromexavier@gmail.com

முகநூல் முகவரி: https://www.facebook.com/jerome.xavier.5209?fref=ts

 


சித்த மருத்துவர் ஜெரோம் சேவியர் B.S.M.S, M.D

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொக்கணம் – நரம்பு, தசை மற்றும் மூட்டு நோய்களுக்கான சிறந்த சிகிச்சை முறை”

அதிகம் படித்தது