மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தொண்டி தூய சிந்தாத்திரை அன்னை ஆலய வழிபாடும், விழாக்களும் பகுதி – 2

ஜா. சுஜாபிரின்ஸி

Dec 4, 2021

siragu annai aalayam1

கடவுள் என்பவர் வழிபடத்தக்கவர். மனிதன் அவரைவழிபட்டு மேன்மை அடைகிறான். தன் நலனுக்காகவும், மற்றவர் நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும், உலக நலனுக்காவும் மனிதன்  கடவுளை வழிபடுகிறான். அவ்வாறு வழிபடும் நிலையில் கடவுளர்க்கு உரிய வழிபாட்டுப் பொருள்களை வழங்கி அத்தெய்வத்திற்கு மகிழ்ச்சி உண்டாக்கித் தானும் மகிழ்கிறான்.  மற்றவர்களையும் மகிழ வைக்கிறான். இவ்வழிபாட்டில் சடங்குகள் ,  வழிபாட்டு முறைகள் பல அமைக்கப்படுகின்றன.

தூய சிந்தாத்திரை அன்னை ஆலயத்திலும் பல வழிபாடுகள் இயற்றப்படுகின்றன. நாள் வழிபாடுகள், சிறப்பு வழிபாடுகள் என்ற நிலையில் அவை சிறப்புடன் நிகழ்ந்துவருகின்றன. இவ்வழிபாடுகளை நிகழ்த்த தனி குருமார்கள் அமைந்து அதனைச் செம்மையுடன் நடத்தி வருகின்றனர். இவற்றை விவரிப்பதாக இவ்வியல் அமைகிறது.

சபை வழிபாடு

தூய சிந்தாத்திரை ஆலயத்தில் உருவ வழிபாடு நடைபெறுகிறது.  இங்கு பாடல்கள் பாடியும் திருப்பலி நிறைவேற்றியும் வழிபாடு நிகழ்த்தப்படுகிறது. ஆலயத்தில் திருப்பலியின்போது பெண்கள் தலையில் முக்காடு போட்டுக் கொள்ள வேண்டும். வணங்கும் முறையாக முழங்காலில் மன்றாடி நிற்க வேண்டும். மேலும் கண்களை மூடி, கைகளை கூப்பி செபிக்க வேண்டும்.

திருப்பலி ஆரம்பிக்கும் நிலையில் பாடல்கள் பாடப்பெறும். பீடச்சிறுவர்கள் முன் செல்ல, தொடர்ந்து குருவானவர் செல்வார். ஆலயத்தின்  பீடத்திற்கு சென்றவுடன் குருவும் மக்களுடன் சேர்ந்து பாடல்களை பாடுவார். திருப்பலியில் பாடல்கள் பாடும் பொழுது சிறுவர்களால் இசைக்கருவிகள் வாசிக்கப்படும். இதன் பின்னணியில்  பாடல் குழுவினர் பாடல்களை பாடுவர். அவர்களுடன் இணைந்து மக்களும் பாடல்களை பாடி வணங்குவர். மேலும் திருப்பலியின் போது  ஜெபங்களை குருவுடன் இணைந்தும் ஜெபிப்பர்.

பின்பு திருவிவிலித்தில் இருந்து வசனங்கள் வாசிக்கப்படும். பின்னர் தந்தை மறையுரை ஆற்றுவார். இயேசு அவர் வாழ்க்கையில் செய்த அற்புதங்களையும், வசனங்களின் அர்த்தங்களையும்,  மறையுரையில் தந்தை மக்களுக்கு வழங்குவார். பின்னர் மக்கள் தங்கள் காணிக்கைகளை செலுத்துவார்கள்.

இதன் பின்னர் திருவிருந்து நடைபெறும். இதில் ஞானஸ்தானம் பெற்று புதுநன்மை எடுத்தவர்கள் மட்டுமே பங்கு கொள்ள முடியும். பின்னர் கடவுளுக்கு நன்றி செலுத்துவார்கள். இவ்வாறு வழிபாடு நடைபெறும்.

கூட்டு வழிபாடு

கூட்டு வழிபாடு என்பது ஆலயத்திற்கு வரும் மக்கள் அனைவரும் கூடி இறைவனிடமும், அன்னையிடமும் அனைவரின்  ஜெபம் செய்து வேண்டுவார்கள். இவ்வழிபாடானது வாரத்தின் முதல் நாள் நடைபெறும். வாரத்தின் முதல் நாளான ஞாயிறு அன்றைக்கு தான் இயேசு கிறிஸ்து மரித்து உயிரோடு எழுந்த நாள் ஆகும். எனவே இந்நாளில் இது நடத்தப்படுகிறது.

அன்றைக்கு ஆலயத்தில் அனைவரும் கூடி திருப்பலியில் பங்கெடுப்பார்கள். அனைவரும் கூடி இயேசுவையும் அவரின் புனித தாயான மரியாவையும் துதிப்பார்கள். இது கூட்டு வழிபாடு என்ற தன்மையில் அமைவதாகும்.

திருவழிபாட்டு நாட்களும்,நேரமும்

தொண்டி தூய சிந்தாத்திரை அன்னை ஆலயத்தில் குறித்த நேரங்களில் குறித்தவாறு வழிபாடுகள் நிகழ்த்தப்படுகின்றன. அவை

 • ஞாயிறு காலை 9.00 மணிக்குப்  பொது திருப்பலி நடைபெறுகிறது.
 • மாதத்தின் முதல் வெள்ளி  – மாலை 7 மணிக்கு – திருப்பலியும், நற்கருணை ஆசீரும்  நடைபெறுகிறது.
 • மாதத்தின் மூன்றாம் சனி – மாலை 6 மணி – ஜெப வழிபாடு, குணமளிக்கும் நற்கருணை ஆராதணை, திருப்பலி, திருஎண்ணெய் பூசுதல ஆகியன நிகழ்கின்றன.
 • மற்ற வார நாட்களில் – அதாவது புதன், சனி ஆகிய நாள்களில் மாலை 7 மணி அளவில் திருப்பலி நடைபெறும்.
 • மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமைகளில் குழந்தை வரம், திருமண தடை நீங்க, விவசாயம் செழிக்க, வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெறும்.

இவை திருவிழாக் காலங்களில் சற்று மாறுதலுக்கு உட்பட்டு நடைபெறும்.

மறைக்கல்வி வகுப்பு

தொண்டி சிந்தாத்திரை அன்னை ஆலயத்தில், மறைக்கல்வி வகுப்பானது ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் திருப்பலி முடிந்தவுடன் சிறுவர் சிறுமியர்களுக்கு நடத்தப்படுகிறது. இவ்வகுப்பில் சிறுவர்களுக்கு ஜெபிக்கும் முறை சொல்லித்தரப்படும். மேலும் இறை வணக்கப்  பாடல்கள் சொல்லி கொடுப்பார்கள். இயேசுவை பற்றிய கதைகள் சொல்லப்படும்.  திருவிவிலிய வசனங்களின் மூலம் பிள்ளைகள்  வீடுகளில் பெற்றோர்களிடமும், பள்ளிகளில் ஆசிரியர்களிடமும் நடக்கும் முறைகள் பற்றிச் சொல்லித்தரப்படும். இதற்கென்று அருட்ச்சகோதரிகளையும், ஆசிரியரையும் நியமித்து இவ்வாலயம் இப்பணிகளைச் செய்து வருகிறது.

இவ்வாறு இந்நிகழ்வுகளில் ஆர்வமுடன் கலந்து கொள்ளும் பிள்ளைகளுக்கு வகுப்புகளில் இனிப்பு வழங்கப்படும். இதன் வழியாகப் பிள்ளைகள்  திருப்பலியின்போது இறை வணக்கப் பாட்டுகள் பாடுவார்கள். இறை வசனங்களை கூறுவார்கள்.

திருவிருந்து ஆராதனை

திருவிருந்து ஆராதனை என்பது இயேசு சிலுவையில் அறையப்படும் முன்பு தம்முடைய சீடர்கள் பன்னிரண்டு பேரோடு அமர்ந்து பந்தியில் உணவு அருந்திய நிகழ்வினை நினைவு படுத்தும் நிகழ்ச்சியாகும். இயேசு பிரான் அவ்விருந்தின்போது, ஒரு அப்பத்தை எடுத்து துண்டு துண்டாக பிட்டு சீடர்கள் அனைவருக்கும் கொடுத்தார். திராட்சை ரசத்தை ஒரு கின்னத்தில் எடுத்து அனைவருக்கும் கொடுத்தார். அப்போது இயேசு நான் மீண்டும் வருமளவும், என்னை நினைவுக்கூர்ந்து இதை செய்யுங்கள் என்றார்.

இயேசு பந்தியில் பங்கு கொள்ளும் முன்பு ஒருவரை ஒருவர் தழுவி பந்தியில் பங்கு கொள்ள வேண்டும் என்றார். அதை நினைவு கூற அவரின் சிலுவைப் பாடுகளை நினைவுகூர்ந்து ஒருவர் கால்களை மற்றொருவர் தண்ணீர் ஊற்றி கழுவி துண்டு வைத்து துடைத்து ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து முத்தம் இடும் நடைமுறை இத்திருவிருந்தின்போது கடைபிடிக்கப்படுகிறது.

திருவிருந்து நிகழ்வின்போது பெண்கள் ஒருபுறமும்,ஆண்கள் ஒருபுறமும் வரிசையில் நிற்பர். அருட்தந்தை அப்பத்தையும், இரசத்தையும் தயார் செய்து வைத்திருப்பார். மக்கள் இயேசுவின் பாடுகளை நினைத்து பிராத்தனை செய்வர். வசனம் வாசிக்கப்படும். வழிபாடு முடியும் வரை முழங்காலில் நிற்க வேண்டும். அப்போது அருட்தந்தை அப்பத்தை எடுத்து அண்ணாந்து பார்த்து ஜெபித்து அதைப் பிட்டு மக்களுக்கு கொடுப்பார். திராட்சை ரசம் ஒரு கின்னத்தில் ஊற்றப்பட்டு  அப்பத்தை எடுத்து அதை திராட்சை ரசத்தில் நனைத்து மக்களுக்கு வழங்கப்படும்.

இந்த நற்கருணை திருவிருந்தில் திருமுழுக்குப் பெற்றவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். திருமுழுக்கு பெறாதவர்கள் கலந்துகொள்ளக் கூடாது. இதன் மூலம் ஏற்றத்தாழ்வுகள் நீங்கும். ஜாதி வித்தியாசம் இருக்காது.

நற்கருணை திருவிருந்தானது திருப்பலி எப்பொழுதெல்லாம் நடைபெறுகின்றதோ அப்பொழுதெல்லாம் நடைபெறலாம். மீதி அப்பமும் திராட்சை ரசமும் இருந்தால் அதை மற்றவர் யாரும் சாப்பி்க்கூடாது. அருட்தந்தை மட்டுமே உண்ண வேண்டும். அவர் அனுமதி இல்லாமல் சாப்பிட்டால் குறைபாடு ஏற்படும். அவர் அனுமதித்தால் சாப்பிடலாம். சிறுவர்கள் சாப்பிடக்கூடாது.

திருமுழுக்கு

திருமுழுக்கு என்பது இயேசு முப்பதாம் வயதில் வனாந்தரத்தில் யோவான் தண்ணீரில் மூழ்கி எடுத்தார். அப்பொழுது தூய ஆவியானவர் புறாவைப் போல் இயேசு மீது இறங்கி ”இவரே என் அன்பார்ந்த மைந்தன் இவன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்என்றார்.

இதேபோல்  இயேசுவை பின்பற்றி வாழும் கத்தோலிக்க மக்கள் தன் குழந்தைப் பருவத்திலேயே திருமுழுக்கு பெற வேண்டும் என்பது திருஅவையின் சட்டத்தில் உள்ளது. இந்தத் திருமுழுக்கு சடங்கானது ஆலயத்தில் குருவானவர் முன்னிலையில் நடைபெறும் ஒரு கத்தோலிக்க சடங்கு முறையாகும்.

பாவம் கழுவி சுத்திகரிக்கப்பட்டு விடுதலை பெறுவோம் என்பது இதன் பொருள். அப்பொழுது பழைய குணங்கள் மறைந்து புதியவை தோன்றும். இனி பாவம் செய்யக்கூடாது. திருவிவிலியத்தில் கூறப்பட்டிருக்கும் வசனங்களை கேட்டு நடக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.

திருமுழுக்கு பெற்றால் மட்டுமே கத்தோலிக்க கிறிஸ்த்தவர்களாக அங்கம் வகிக்க முடியும் . திருமுழுக்கு ஒருவர் ஒருமுறை மட்டுமே எடுக்க வேண்டும் இவ்வாறு வழிபாடுகள் ஆலயத்தில் நடத்திக் கொள்ளப்படுகின்றன.

சிறப்பு விழாக்கள்

விழாக்கள் என்றாலே சாதி இனம் வேறுபாடு களைந்து அனைவரும் ஒன்று கூடி கொண்டாடுவதே விழா ஆகும். தூய சிந்தாத்திரை ஆலயமானது அன்னை மரியாளின் கோவில் என்பதால் மாதாவின் விழாக்கள் அனைத்துமே இவ்வாலயத்தில் சிறப்பு விழாக்களாக கொண்டாடப்படுகின்றது.

மே மாதத்தினை மாதவிற்குரிய மாதமாக இங்குச் சிறப்புடன் கொண்டாடுகிறார்கள்.  சிறப்பாக மாதாவின் பிறந்தநாள் விழாவானது செப்டம்பர் – 8 ம் தேதி கத்தோலிக்க திருச்சபையில் சிறப்பு விழாவாக கொண்டாடப்படுகிறது.

இதே போன்று மரியாவின் அமல உற்பவம் நாள் விழா கொண்டாடப்படுகின்றது. மரியா இயேசுவின் தாயாகுமாறு இறைவனின் அருளால் பாவக் கறைகளில் இருந்து பாதுகாக்கப்பட்டதே அமல உற்பவம் ஆகும். இந்நாளை பங்கில் மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர். இவ்விழாவினை ஆலயத்தின் பங்கில் உள்ள அமலவை அருட்ச்சகோதரிகள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

மேலும், சனிக்கிழமைகளில் சகாய அன்னை நவநாள் மேற்கொள்ளப்பட்டு, திருப்பலி நடைபெறுகின்றது. இவ்வாறாக மாதாவின் விழாக்கள் அனைத்துமே சிறப்பு விழாக்களாக இவ்வாலயத்தில் கொண்டாடப்படுகின்றன. இப்பங்கில் மாதத்தின் முதல் ஞாயிறு திருமுழுக்கு அளிக்கப்படுகின்றது.

பொது சிறப்பு வழிபாடு

வருடத்தில் மூன்று நான்கு முறை இந்த பொது வழிபாடு நடைபெறும். இவ்வழிபாடு பொதுமக்கள் அனைவரும் இயேசுவைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும், என்பதற்காகவும். உலக மக்களின் நலனுக்காகவும், உலக மக்கள் அழிவில் இருந்து காக்கப்பட்ட வேண்டும். என்பதற்காகவும் ஆராதனையும், திருப்பலியும் உள்ளடக்கியதாக நடைபெறும் .

இவ்வாராதனையால் நோயுடையோர் நோய்கள் நீங்கி சுகம் பெறுவர். இதற்காக சிறப்பாக, ஜெபம், ஆராதனை ,திருப்பலி நடைபெறும்.

இங்கு பொதுச் சிறப்பு வழிபாடுகளுள் ஒன்றாக கிறிஸ்துமஸ் வழிபாடு  கொண்டாடப்படுகின்றது. இயேசு கிறிஸ்து இஸ்ரேல் நாட்டில் எருசலேம் நகரில் பெத்தலேகம் என்னும் ஊரில் பிறந்தார். இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாள் விழாவை நினைவு கூறவே கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

கிறிஸ்துமஸ் – கிறிஸ்து + மஸ் என்பது முன்பு கிறிஸ்து + மாஸ் என்று இருந்தது. பின்பு தான் கிறிஸ்துமஸ் என்றானது. கிறிஸ்து என்றால் இயேசுவைக் குறிக்கும். மாஸ் என்றால் – திருப்பலியைக் குறிக்கும் இயேசவை பிராத்தனை செய்ய வேண்டும் என்று பொருள்  கொள்ளவேண்டும். ஆகவே கிறிஸ்து பிறந்த நாளை முன்னிட்டு டிசம்பர் 25 –ம் நாள் ஆண்டுதோறும் உலக மக்கள் அனைவராலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப் படுகின்றது. அன்றைக்கு மக்கள் அனைவரும் புத்தாடை உடுத்தி பகல் 12 மணியளவில் பிராத்தனை செய்து திருப்பலியில் பங்கெடுப்பார்கள் . கிறிஸ்மஸ் நாள் வருவதற்கு முன்பு டிசம்பர் மாதம் முதலிலே ஒவ்வொரு வீடாகச் சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறி பிரார்த்தனைகள் தொடங்கிவிடும்.

கிறிஸ்துமஸ் அன்று இரவு ஆலயத்தில் திருப்பலி நடைபெறும் பின்னர் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும், வாழ்த்துக்களை கூறுவர்.

தவக்கால தவநாட்கள்

தவக்காலம் என்பது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பாடுகளையும், துன்பங்களையும் கூறும் துயர நாட்கள் ஆகும். கடவுளோடும் சக மனிதர்களோடும் நல்லுறவை ஏற்படுத்த கிறிஸ்தவர்கள் பயிற்சி செய்யும் காலமாக தவக்காலம் அமைந்துள்ளது. உலகு எங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் புதன்கிழமை அன்று தவக்காலத்தை தொடங்குவர்.

இது சாம்பல் புதன் கிழமை நாளில் தொடங்குகின்றது. சாம்பல் புதன் முதல் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்த நாற்பது நாட்களை கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைப்பிடிக்கின்றனர்.

இத்தவக்காலத்தில் உடல் மற்றும் உள்ளத்தின் விருப்பங்களையும், உணவுகளையும் கட்டுப்படுத்தி பிறருக்கு உதவி செய்யும் செயல்களில்தம்மை கிறிஸ்துவர்கள் ஈடுபடுத்திக் கொள்வர். சாம்பல் புதன் மற்றும் புனித வெள்ளி ஆகிய நாட்களில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஒரு வேளை உணவு  உட்கொள்வார்கள். தற்காலத்தில் பொதுவாக அசைவ உணவுகளைத் தவிர்க்கும் வழக்கம் அனைத்து கத்தோலிக்க கிறிஸ்தவர்களிடம் உள்ளது. ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு ஒரு பாதி உணவுகளை, ஏழை எளியவர்களுக்கு கொடுத்து உதவுவர். சக மனிதர்களுடன் உறவும்,வழிபாடுகளில் அதிகமாக பங்கேற்றல், இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானித்து செபித்தல் ஆகியவற்றின் மூலம் கடவுளுடனான ஆன்மிக உறவை ஆழப்படுத்த இத்தவக்காலம் உதவுகின்றது.

“மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச்செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைமாறு கிடைக்காது ”

“நீங்கள் தர்மம் செய்யும் போது உங்களைப் பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர் மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக் கூடங்களிலும், சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ”

“நீங்கள் தர்மம் செய்யும் போது உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்” என்ற அழகிய வழிமுறைகளை இயேசு கற்பித்தார். இதன் வழியே தவக்கால முயற்சி அமையும். தவக்காலத்தின் முதல் நாளான சாம்பல் புதன் அன்று கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பலைக் கொண்டு சிலுவை அடையாளம் வரைந்துகொள்வர்.

“நீங்கள் நோன்பு இருக்கும் போது முகவாட்டமாய் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்கவேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ”

“நீங்கள் நோன்பு இருக்கம் போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து முகத்தைக் கழுவுங்கள் ”

இவ்வாறு தவக்காலங்களில் நோன்பு இருப்பதை பற்றி இயேசு ஆண்டவர் வெளிப்படுத்துகிறார். இத்தவகாலத்தின் முக்கிய நோக்கமாக இருப்பதே செய்த பாவங்களுக்காக மனம் திரும்புதல், செய்த பாவங்களை அறிக்கையிடுதல். செபம் செய்தல் பிறருக்கு உதவுதல் போன்றவை தவக்காலத்தின் முக்கிய நோக்கமாகும்.

தவக்கால வெள்ளி

தவக்காலத்தில் வருகின்ற நாற்பது நாட்களில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் ஆண்டவரின் பாடுகளை செபிக்கும் வண்ணம் வெள்ளிக் கிழமைகளில் திருச்சிலுவைப் பாதை நடக்கும். இத்திருச்சிலுவைப் பாதையானது இயேசுவின் துயரமான சிலுவைப் பயணங்களையும், துன்பம் நிறைந்த பாடுகளையும் குறித்து ஜெபிப்பது ஆகும். இது பதினான்கு நிலைகளை கொண்டது.

அவற்றின் நிலைகளை பின்வருமாறு .

 1. இயேசுநாதரை சாவுக்குத் தீர்வையிடுகிறார்கள்.
 2. இயேசவின் மீது பாரமான சிலுவையைச் சுமத்துகிறார்கள் .
 3. சிலுவையின் பாரத்தால் முதல் முறை தரையில் விழுகிறார்.
 4. இயேசு தமது புனித தாயான மரியாளைச் சந்திக்கிறார்.
 5. இயேசுவின் சிலவையைச் சுமக்க சீமோன் உதவி செய்கிறார்
 6. இயேசுவின் திருமுகத்தினை வெரோணிக்காள் என்ற பெண் துடைக்கிறாள்.
 7. சிலவை பாரத்தால் இயேசு இரண்டாம் முறை தரையில் விழுகிறார்.
 8. யூதப் பெண்களுக்கு இயேசு ஆறுதல் கூறுகிறார்.

9. சிலவை பாரத்தால் இயேசு மூன்றாம் முறை தரையில் விழுகிறார்.

 1. இயேசுவின் ஆடைகளை களைகிறார்கள்.
 2. இயேசுவை சிலுவையில் அறைகிறார்கள்.
 3. இயேசு சிலுவையில் உயிர் விடுகிறார்.
 4. இறந்த இயேசுவை அவரின் தாய் மடியில் அமர்த்துகிறார்கள்.
 5. இயேசுவை கல்லறையில் அடக்கம் செய்கின்றனர்.

என பதினான்கு நிலைகளைக் கொண்டு, வெள்ளிக் கிழமைகளில் பங்கு ஆலயத்தில் சிலுவைப்பாதை நடைபெறும். அதில் அனைவரும் கலந்து கொண்டு இயேசவின் திருப்பாடுகளைக் குறித்து ஜெபிப்பர். சிலுவைப்பாதை முடிந்தவுடன் திருப்பலி நிறைவேற்றப்படும். தவக்காலத்தின் இறுதி வெள்ளிக்கிழமையானது புனித வெள்ளி என அழைக்கப்படுகின்றது. அன்று மிகவும் துக்கம் நிறைந்த நாளாக திருச்சபையால் அனுசரிக்கப்படுகிறது. அன்று மாலை ஆலயத்தில் சிலுவைப்பாதையும், பாடல்களை பாடியும், நற்கருணை ஆராதனையும், திருப்பலியும் நடைபெறும். அன்று இயேசுவின் திருப்பாடுகளை எண்ணி மக்கள் அனைவரும் உருக்கமாக ஜெபிப்பர்.

குருத்து  ஞாயிறு

எருசேலம் நகருக்குள் இயேசு கிறிஸ்து வெற்றி ஆர்ப்பரிப்போடு சென்ற நிகழ்ச்சியை நினைவு கூறும் விழா குருத்து ஞாயிறு ஆகும்.

இயேசு கிறிஸ்து துன்பத்திற்கு ஆளாகி இறப்பதற்கு ஏறக்குறைய ஒரு வாரத்திற்கு முன் எருசேலம் நகருக்குள் நுழைந்தார். அப்போது அவர் ஒரு கழுதையின் மீது ஏறி அமர்ந்து வந்தார்.அப்போது வழியெங்கும் தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டு கைகளில் பேரிச்சை மரத்தின் குருத்துகள், ஒலிவ மரத்தின் கிளைகளை கையில் ஏந்தி இயேசுவை முன்னால் போகச் செய்து மக்கள் அணிவகுத்துச் சென்றனர்.

எருசேலம் பவனியின் போது மக்கள் உரத்த குரலில் ‘‘ஓசன்னா” என்று கூறி சென்றார்கள். குருத்தோலை ஞாயிறு , பாடுகளின் குருத்து ஞாயிறு என கத்தோலிக்க திருச்சபையில் அழைக்கப்படுகிறது.

இக்குருத்தோலை ஞாயிறானது, சிந்தாத்திரை அன்னை ஆலயத்தில் காலை 7.30 மணி அளவில் தொடங்கப்படுகின்றன. பவனியின் போது குருவானவர் முன்னர். தன் கைகளில் குருத்தோலையை ஏந்திச் செல்வார். பின்னர் சிறுவர்கள் பெண்கள் ஆண்கள் என அனைவரும் குருத்தோலையினை கையில் ஏந்தி பவனியாக செல்வார்கள். இப்பவனியானது தொண்டி நகரினை சுற்றிலும் பவனியாக நடைபெறும். பவனியின் பொழுது மக்கள் அனைவரும்  குருத்தோலையை கையில் ஏந்தி ‘‘ஓசன்னா ” ‘‘ஓசன்னா” என்று பாடலை பாடுவார் .இவ்வாறாக இப்பவனியானது நடைபெறும். பின்னர் பவனியானது மீண்டும் ஆலயத்தை வந்தடையும் . ஆலயம் வந்ததும் குருவானவரால் திருப்பலி நடைபெறும் . இவ்வாறாக குருத்தோலை ஞாயிறு வழிபாடு அமையும்.

தியான வழிபாடு

தவக்காலத்தின் நாற்பது நாட்களில் ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமையில் தியான வழிபாடு நிகழ்வு நடைபெறும் . தியான வழிபாடு என்பது தவநாட்களில் ஞாயிற்றுக் கிழமையில் காலை 8 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் வழிபாட்டு நிகழ்வு ஆகும். இந்நிகழ்வில் வெளியூரில் இருக்கும் குருக்கள் இத்தியான வழிப்பாட்டில் கலந்து கொண்டு பல்வேறு மறையுரைகளை வழங்குவர். வசனங்கள் வாசிக்கப்பட்டு பாடல்கள் பாடப்படும்.11 மணி அளவில் தேநீர் வழங்குவர். அதனைத் தொடர்ந்து மீண்டும் தியானம் தொடங்கப்படும். பின்னர் 1 மணி அளவில் மதிய உணவு இடைவேளை தரப்பெற்று பங்கு ஆலயத்திலேயே அனைவருக்கும் உணவு வழங்கப்படும். பின்னர் 2 மணி அளவில் தியானம் மீண்டும் தொடங்கும். தியான நிகழ்வில் மிகவும் உருக்கமாக ஜெபிக்கப்படும். பின்னர் திருப்பாடுகளின் சிலுவைப்பாதை நடைபெறும். பின்னர் ஒப்புரவு அருட்சாதனம் நடைபெறும் ஒப்புரவின் பொழுது அனைவரும் தங்களின் பாவங்களை நினைவு கூர்ந்து அதனை அறிக்கையிட குருவாவனரிடம் சென்று தன்னுடைய பாவங்களை அறிக்கையிட வேண்டும். பின்னர் குருவானர் கூறும் செபங்களை கூற வேண்டும். இத்தவக்காலத்தில் கண்டிப்பாக ஒவ்வொரு கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் ஒப்புரவு செய்ய வேண்டும். ஒப்புரவினை தொடர்ந்து பின்னர் திருப்பலி நடைபெறும். தியான வழிபாட்டின் பொழுது நற்கருணை ஆராதனையும் நடைபெறும். இத்தியான நிகழ்வில் தொண்டி பங்கு மக்கள் மட்டுமல்லாமல் தொண்டியின் அருகே உள்ள குருமிலாங்குடி ,சம்பை , காரங்காடு , பங்கு மக்களும் கலந்து கொள்வார்கள். இதே போன்று மற்ற பங்குகளில் தியானம் நடைபெறும் பொழுது தொண்டி பங்கு மக்கள் கலந்து கொள்வார்கள்.

தவக்கால திருயாத்திரை

திருயாத்திரை என்பது புனித தலங்களுக்கு செல்லுதல் ஆகும் . இப்பங்கு ஆலயத்தில் தவக்கால நாட்களில் பல்வேறு கிறிஸ்த்தவ தலங்களுக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாள்கள் பங்கு மக்கள் அனைவரும் பங்கு தந்தையின் அறிவுறுத்தலின் படி அதற்கேற்ப திருயாத்திரை மேற்க்கொள்வர். இவ்வாறு தவ நாட்களில் புனித யாத்திரைகளை மேற்க்கொண்டு பக்தியுடன் செபிப்பர்.       

ஈஸ்டர் திருவிழா

குருத்து ஞாயிறு, புனித வியாழன், புனித வெள்ளி போன்ற தவ நாட்கள் முடிந்த பிறகு சனிக்கிழமை இரவு பதினொரு மணி அளவில் பட்டாசுகள் வெடிக்க பட்டு உயிர்த்த ஆண்டவரின் திருஉருவம் திறக்கப்பட்டு கூட்டுப்பாடல் திருப்பலியும் நடைபெறும்.பின்னர் திருப்பலி முடிந்தவுடன் அனைவரும் உயிர்த்த ஆண்டவரின் ஈஸ்டர் பெருவிழா வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வர்.

பங்கின் ஆண்டு பெருவிழா 

மே மாதம் மாதாவிற்கு உகந்த மாதம் என்று கத்தோலிக்க திருச்சபையால் கருதப்படுகின்றது.   தொண்டி பங்கு ஆலயமான தூய சிந்தாத்திரை அன்னை ஆலயத்தில் ஆண்டு பெருவிழாவும் மே மாதம்  இறை மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

ஏப்ரல் மாத வாரத்தின் இறுதி நாட்களில் பங்கு ஆலய திருவிழாவிற்காக பங்கு தந்தையால் கொடியேற்றப்பட்டு மே மாதம் முதல் வாரத்தில் ஆண்டு பெருவிழாவானது நடைபெறும். ஏழு நாட்கள் நவ  நாட்கள் என்ற தொகுப்பு விழா நடைபெறும். எட்டாம் நாள் திருவிழா நடைபெறும்.  ஒவ்வொரு நாளும் இரண்டு கிராமங்களும் அல்லது மூன்று கிராமங்களும் இணைந்து பொருள் செலவு செய்து நவ நாளினை சிறப்பிப்பர். இவ்வாறாக ஏழு நாட்களும் நவ நாட்கள் நடைபெறும்.  நவ நாள்களில் மாலை ஐந்து மணி அளவில் திருச்செபமாலையும் அதனை தொடர்ந்து அன்னையின் திரு உருவம் தாங்கிய சிறிய சப்பர பவனியும் நடைபெறும். மாதாவின் மன்றாட்டு மாலைகள் பாடப்படும். அதனை தொடர்ந்து திருப்பலியும் நடைபெறும். எட்டாம் நாள்  தூய சிந்தாத்திரை அன்னை ஆலயத்தில் ஆண்டு பெருவிழா நடைபெறும். ஆண்டு திருவிழாவின் போது சாதி சமயம் பாராமல் அனைத்து மக்களும் இத் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

ஆலய திருவிழாவானது மாலை ஆறு மணி அளவில் திருசபை மாலையுடன் தொடங்கும். பின்னர் கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெறும் இத்திருப்பலியில் பல ஊர்களிலிருந்து பங்குத் தந்தைகளும் அருட் சகோதரிகளும் பங்கேற்பர். திருப்பலி முடிந்த பின்பு அன்னை திரு உருவம் தாங்கிய சப்பரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பவனி ஆனது ஆலயத்தை விட்டு கடற்கரை சாலை வழியாகச் செல்லும்.  பின்னர் கடை தெருக்களின் வழியே வரும்.

பவனி வருகின்ற வழியில் ஜெபங்கள்  செபிக்கப்பட்டு பாடல்கள் பாடப்படும். வழியில் காணும் மக்கள் அனைவரும் சாதி மதம் கடந்து தூய சிந்தாத்திரை அன்னையை வரவேற்று பூமாலைகள் வழங்குவர். வழிபாட்டிற்கு மெழுகுவர்த்திகளை வழங்குவர் வானவேடிக்கையுடன் வெகு சிறப்பாக இப்பவனி நடைபெறும். பின்னர் பேருந்து நிலையம் வழியே தேர்பவனி  சென்று ஆலயம் வந்தடையும். தேர் பவனி வந்த அன்னையின் திருவுருவச் சிலை ஆனது அனைவரும் வணங்குவதற்காக ஆலயத்தின் உள்ளே வைக்கப்படும் பின்னர் வானவேடிக்கை நடைபெறும். வானவேடிக்கை முடிந்த பிறகு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். அன்று இரவு திருவிழா நடந்து முடிந்த பிறகு மறுநாள் காலை பங்கில் உள்ள சிறுவர் சிறுமியர்களுக்கு புதுநன்மை விழா நடைபெறும். புதுநன்மை பெறுவதற்குப் பங்கு ஆலயத்திலேயே வேதியரை கொண்டு வகுப்பு நடைபெறும்.  இதில் புதுநன்மை பெற விரும்பும் சிறுவர்-சிறுமியர் கலந்து கொள்வர். வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கே பங்கு தந்தை அவர்கள் புது நன்மை தருவார். இவ்வாறாக காலை ஒன்பது மணி அளவில் புதுநன்மை விழா நடைபெறும். பதினோரு மணி அளவில் கொடியிறக்கம் நடைபெறும். இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்வர் கொடி இறக்கத்துடன் திருவிழாவானது நிறைவடையும்இ இவ்வாறாக தூய சிந்தாத்திரை அன்னை ஆலய ஆண்டு திருவிழாவில் நடைபெறும்.

தொகுப்புரை

தொண்டி தூய சிந்தாத்திரை அன்னை ஆலயத்தில் நாள்வழிபாடுகள், சிறப்பு வழிபாடுகள், திருவிழா வழிபாடுகள் நிகழ்ந்து வருகின்றன. ஞாயிறு தோறும் வார அளவில் திருப்பலி நடைபெறுகிறது. மேலும் புனித மரியாள் அன்னையின் திருவிழாக்கள் அனைத்தும் இவ்வாலயத்தில் நடைபெறுகின்றன. கிறிஸ்துமஸ் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தவக்காலமும் சிறப்புடன் கொண்டாடப் படுகிறது.

ஆண்டுப் பெருவிழா ஆண்டுதோறும் மே மாத முதல் வாரத்தில் மிகச் சிறப்புடன் சப்பர பவனியுடன் கொண்டாடப்படுகிறது.

இவ்வாறு மிகச் சிறந்த வழிபாடுகளைத் தொண்டி சிந்தாத்தினை அன்னை ஆயலம் பெற்று சிறப்புடன் நடைபெற்று வருகிறது.

முடிவுகள்

”தூய சிந்தாத்திரை அன்னை ஆலயத்தின் தோற்றமும் வளர்ச்சியும்”   என்ற தலைப்பிலான இவ்வாய்வின் வழியாகப்  பெறப்பட்ட முடிவுகள் பின்வருமாறு.

பாண்டியர் காலத் துறைமுக நகரமாக விளங்கியது தொண்டியாகும். இத் தொண்டியில் இந்து, இசுலாம், கிறித்துவ மக்கள் மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்து, இசுலாம சமயத்தவர்கள் அதிக அளவில் வாழ்ந்து வரும் நிலையில் கிறித்துவர்கள் ஓரளவு கணிசமான எண்ணிக்கையில் தொண்டியில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் வழிபடுவதற்குத் தொடக்க காலத்தில் கிறித்துவ ஆலயங்கள் தொண்டியில் இல்லை. தொண்டியில் இருந்த ஒரு சில கிறித்துவ குடும்பத்தார்கள் குருமிலாங்குடி தேவாலயத்திற்குச் சென்று வழிபட்டு வந்தனர்.

இருப்பினும் 1956 ஆம் ஆண்டளவில் திருமதி பாக்கியம் என்பவர் தொண்டியில் கிறித்துவ தேவாலயம் கட்ட வேண்டு்ம் என்ற எண்ணத்துடன் தற்போது தூய சிந்தாத்திரை அன்னை ஆலயம் உள்ள இடத்தைத் தன் சொந்தபொருட் செலவில் வாங்கினார். இதன் பிறகு 1977 ஆம் ஆண்டளவில் மதுரை பேராயர் மற்றும் பலர் நிதி உதவி செய்ய கிறித்துவ தேவாலயம் உருவானது.

தமிழகத்தில் அமைந்த கத்தோலிக்க திருச்சபையின் ஆளுகையின் கீழ் இவ்வாலயம் தனிப் பங்கு அளவிற்கு 1988 ஆம் ஆண்டளவில் உயர்ந்தது.

இவ்வாலயம் கிழக்கு நோக்கி கடலைப் பார்த்த வண்ணம் அமைந்துள்ளது. இதனுள் ஸ்தலம், புனிதஸ்தலம், மகா புனித ஸ்தலம் ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. மகா புனித ஸ்தலப் பகுதியில் புனித சிந்தாத்திரை அன்னை இயேசுவை ஒரு கையிலும், மற்றொரு கையில் கடல் போக்குவரத்தின் அடையாளமாக விளங்கும் படகினையும் ஏந்திய நிலையில் காட்சி தருகிறாள்.

மேலும் தூய ஜோசப் உருவச் சிலையும் இங்கு இயேசுவை சுமந்த நிலையில் அமைந்துள்ளது. இவை தவிர புனிதச் சின்னமான சிலுவையும் அமைந்துள்ளது.

இவ்வாலயத்தின் நிர்வாகம் என்பது பேராயார், ஆயர், குரு, அருட்சகோதரிகள், கோயில் பிள்ளை போன்றோர் சார்ந்து அமைந்துள்ளது. இயேசுவின் கண்மணிகள் இயக்கம்,  தூய வின்சென்ட் தே பவுல் சபை ஆண்கள் பிரிவு,  தூய வின்சென்ட் தே பவுல் சபை பெண்கள்  பிரிவு ,  மரியாவின் சேனை போன்ற அமைப்புகள் இத்தேவாலயம் சார்ந்து அமைந்து சிறப்பாக அருட்பணிகளைச் செய்து வருகின்றன.

தொண்டி தூய சிந்தாத்திரை அன்னையின் அருளுக்கான அடையாளங்கள் அவ்வப்போது இவ்வாலயத்தில் நிகழ்ந்துள்ளன. சிறிய ஊக்கினை விழுங்கிய பெண்ணின் உயிரைக் காத்தல், நல்ல வாசனையைப் பரவச் செய்தல் போன்ற அருள் அடையாளங்கள் தூய சிந்தாத்திரை அன்னையின் அடையாளங்களாக விளங்குகின்றன.

அன்னை மரியாளின் அருள் வடிவமாக தொண்டியில் தூய சிந்தாத்திரை அன்னையாக விளங்குகிறாள். அன்னை மரியாளின் அத்தனை புனித விழாக்களும் இவ்வன்னைக்கு, இத்தேவலாயத்தில் நிகழ்த்தப்படுகின்றன.

மேலும் தவக்காலம், கிறிஸ்துமஸ், ஆண்டுவிழா போன்ற விழாக்கள் சிறப்பாக தொண்டி தூய சிந்தாத்திரை அன்னை ஆயலத்தில் கொண்டாடப் படுகின்றன. திருமுழுக்கு,  மறைக்கல்வி போன்ற பல புனித செயல்பாடுகளும் நிகழ்த்தப்படுகின்றன.

ஏழை எளிய மக்களுக்கு இத்தேவாலயத்தின் சார்பில் ஆதரவும், அன்பும், உதவிகளும் செய்யப்படுகின்றன.

இவ்வளவில் இறைபணியிலும், சமுதாயப் பணிகளிலும் சிறந்து தொண்டி தூய சிந்தாத்திரைஅன்னை தேவாலயம் விளங்கி வருகின்றது.


ஜா. சுஜாபிரின்ஸி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொண்டி தூய சிந்தாத்திரை அன்னை ஆலய வழிபாடும், விழாக்களும் பகுதி – 2”

அதிகம் படித்தது