மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தொண்டி தூய சிந்தாத்திரை அன்னை ஆலயத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

ஜா. சுஜாபிரின்ஸி

Sep 11, 2021

siragu annai aalayam1

தமிழகம் பல்வேறு சமயங்களின் இருப்பிடமாக விளங்கி வருகின்றது. சமணம், பௌத்தம், சைவம், வைணவம், கிறித்தவம், இசுலாம் போன்ற பல சமயங்களின் நிறுவனங்களையும், வழிபாட்டு இடங்களையும் உடைய மாநிலமாகத் தமிழகம் விளங்கி வருகின்றது. தமிழ் மொழியும் பல்வேறு சமயம் சார்ந்த இலக்கியங்களைப் பெற்று அனைத்து சமயத்தாரும் நலமுடன் வாழும் மத நல்லிணக்கத்தை உலகத்திற்கு உணர்த்தி வருகின்றது.

 மனிதனுக்கு அன்பு, அருள் போன்ற பண்புகளைத் தந்து மனிதனை நெறிப்படுத்துவன சமயங்கள் ஆகும். ஒவ்வொரு சமயத்திற்கென தனித்த அடையாளங்கள், தனித்த கொள்கைகள், தனித்த வழிபாட்டிடங்கள், வழிபாட்டு மரபுகள் உள்ளன.

கடற்கரை சார்ந்த பகுதிகளில் பெரும்பாலும் கிறித்துவ மதம் சார்ந்த பல அடையாளங்கள் இடம்பெற்றிருக்கின்றன. தொண்டி என்ற சிறு நகரமும் கிழக்குக் கடற்கரை சார்ந்த பகுதியாகும். இப்பகுதி பாண்டியர் காலத்தில் சிறந்த துறைமுக நகரமாக விளங்கி வந்துள்ளது. இந்நகரத்தில் கிறித்துவர்கள் வழிபடும் வழிபாட்டிடமாக  தூய சிந்தாத்திரை அன்னை ஆலயம் விளங்குகின்றது.

தொண்டியில் சைவ, வைணவ, இசுலாமிய வழிபாட்டிடங்களும் அமைந்துள்ளன. இவற்றில் கிறித்துவர்களுக்கு வழிபாட்டு இடமாக தூய சிந்தாத்திரை அன்னை ஆலயம் விளங்குகின்றது. இவ்வாலயத்தை மையமாக வைத்து இவ்வாய்வு செய்யப்படுகிறது. இவ்வியலில் இவ்வாலயம் பற்றிய அறிமுகச் செய்திகளும், இவ்வாலயத்தின் வரலாறும் எடுத்துரைக்கப்பெறுகின்றன.

இராமநாதபுரம் மாவட்டம் 

தொண்டி சிந்தாத்திரை அன்னை தேவாலயம் அமைந்திருக்கும்  மாவட்டம் இராமநாதபுரம் மாவட்டம் ஆகும்.  இம்மாவட்டம் வரலாற்றுச் சிறப்பும், அரச மாண்பும், மக்கள் பெருக்கமும் கொண்ட மாவட்டம் ஆகும். இம்மாவட்டம் ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டம் ஆக மிகப்பெரியதாக இருந்தது. தற்போது இம்மாவட்டத்தில் இருந்து சிவகங்கை, விருதுநகர் போன்ற மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அவை தனித்த மாவட்ட மதிப்பினைப் பெற்றுள்ளன.

இதனை ராம்நாடு என்றும் முகவை என்றும் மக்கள் அழைத்து வருகின்றனர்.  சராசரியாக கடல்மட்டத்திலிருந்து ஆறு அடி உயரத்தில்  அமைந்துள்ள இராமநாதபுரம் இம்மாவட்டத்தின் தலைநகராகும். இத்தலைநகரம் மாவட்டத்திற்கு உரிய அனைத்து அமைப்புகளையும் பெற்று விளங்குகின்றது.

மாவட்டத்தின் வரலாறு

இராமநாதபுர மாவட்டப் பகுதிகள் சங்க காலம் தொடங்கி இந்தியா விடுதலை பெறும் வரை பல மன்னர்களின் ஆளுகையின் கீழ் இருந்து வந்துள்ளது. இந்திய விடுதலைக்குப் பின் இந்தியக் குடியாட்சியின் அமைப்பின் கீழ் இருந்து வருகிறது.

சங்க காலம் முதல் இராமநாதபுர மாவட்டப் பகுதிகள் பாண்டியர் ஆட்சியின் கீழே இருந்துவந்தன. இருப்பினும் அவ்வப்போது சோழர்களின்  ஆட்சிக்குக் கீழும் இப்பகுதி இருந்துள்ளது.

கி.பி. 1063 ஆம் ஆண்டில் முதலாம் ராஜேந்திர சோழன் இந்நகரை தன் ஆளுமையின் கீழ் கொண்டு வந்ததனால் சோழப் பேரரசின் கீழ் சிறிது காலம் இப்பகுதிகள் இருந்தன. பின்னர் கி.பி. 1520 ஆம் ஆண்டளவில்  விஜய நகர பேரரசை சேர்ந்த நாயக்கர்கள் இப்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். நாயக்கரின் ஆட்சியின் கீழ் 17-ஆம் நூற்றாண்டுவரை இப்பகுதிகள் இருந்தன.

கி.பி. 1730 ஆம் ஆண்டு ஆற்காடு நவாப் சந்தா சாகிப் ராமநாதபுரத்தை கைப்பற்றினார். அதன்பின்னர் இந்த பகுதிகள் கி.பி.  1741 ஆம் ஆண்டளவில் மராத்தியர்களின் கீழும் பின்னர்  அதாவது கி.பி. 1744 ஆண்டளவில்  நிஜாமின்  கீழும் இருந்தன. கி.பி. 1752 ஆம் ஆண்டளவில் நவாபின் மேல் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக கடைசி நாயக்க மன்னனின் தலைமையில் உள்ளூர் தலைவர்கள் கலகம் செய்தனர். அந்நேரத்தில் ஆற்காடு நவாப் அரியாசனத்தில் சந்தா சாஹிப் மற்றும் முகமது அலி ஆகிய இருவர் இருந்தனர்.

இதன்பின்னர் இராமநாதபுரப் பகுதிகள் சேதுபதி மன்னர்களின் ஆளுகைக்கு வந்தது. கி.பி. 1892 ஆம் ஆண்டில் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டு பிரித்தானிய ஆட்சியர் நிர்வாகத்திற்காக நியமிக்கப்பட்டனர்.  கி.பி. 1910 ஆம் ஆண்டில் மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் பகுதிகளைக் கொண்டு ராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இப்பகுதிக்கு ஜே. எப். .பிரைண்ட் முதல் மாவட்ட ஆட்சியர் ஆனார்.

பிரித்தானியர்களின் காலத்தில் இந்த மாவட்டம் ராம்நாடு என அழைக்கப்பட்டது இந்தப்பெயர் சுதந்திரத்திற்கு பின்பும் நீடித்து பின்னர் தமிழ் பெயராகிய ராமநாதபுரம் என்ற பெயர் இம் மாவட்டத்திற்கு சூட்டப்பட்டது.

இந்த பகுதியின் மற்றொரு பெயர் முகவை என்பதாகும். முகவை என்றால் வைகையின் முகம் அதாவது வைகை நதி கடலில் சங்கமிக்கும் இடம் என்னும் பொருள் ஆகும். இதனால் இப்பகுதிக்கு முகவை என்ற பெயரும் அமைந்தது.

இராமநாதபுரம் மாவட்டத்தின் வட்டங்கள்

ராமநாதபுரம் மாவட்டமானது, ராமநாதபுரம், ராமேஸ்வரம், கடலாடி, பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், திருவாடானை, ராஜசிங்கமங்கலம் போன்ற வட்டங்களை உள்ளடக்கியதாகும்.

இவற்றுள் திருவாடானை வட்டத்தில் தொண்டி என்ற ஊரில் தூய சிந்தாத்திரை அன்னை ஆலயம் அமைந்துள்ளது.

 

தொண்டியின் வரலாறு 

சேரர்களின் துறைமுக நகரம் தொண்டியாகும். இந்தத் தொண்டி என்னும் ஊர் கேரள மாநிலத்தில் உள்ளது. இந்நகரைப் போன்றே பாண்டியர்கள் தொண்டி என்ற நகரை கிழக்குக் கடற்கரையில் உருவாக்கினர். இங்கு கடல் வணிகம் நடைபெற்றது.

தொண்டி என்னும் ஊர் விவசாயம் கடல் தொழில் வணிகம் போன்ற பலவகை தொழில் நிறைந்து காணப்படும் ஊராகும். கடல் வளங்களும் கடல் சார்ந்த வளங்களும் மிகுந்து காணப்படும் ஊருமாகும். இந்நகரில் அதிக அளவில் பல்பொருள் அங்காடிகள், உணவகங்கள், கல்வி நிலையங்கள், அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள், மாலை நேர கல்லூரி, விளையாட்டு மைதானங்கள், ஆரம்ப சுகாதார நிலையம், துணிக்கடைகள், வங்கிகள் அமைந்துள்ளன. இங்கு அதிக அளவில் இந்து மக்களும், இஸ்லாம் மக்களும் குறைந்த அளவிலான கிறிஸ்தவ மக்களும்  சமுதாய ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர் .

இங்கு இஸ்லாம் மதத்தினர் வழங்கக்கூடிய பள்ளிவாசல் உள்ளது.  இந்து மதத்தினர் வணங்கக்கூடிய சிவன் கோவில், உந்தி பூத்த பெருமாள் கோவில், தொண்டி அம்மன் கோவில், விநாயகர் கோவில் போன்ற தலங்கள் அமைந்துள்ளன. கிறிஸ்தவ சமயத்தவரின் வழிபாட்டுத்தலமாக தூய சிந்தாத்திரை அன்னை ஆலயம் அமைந்துள்ளது.

தேவாலயத்தில் அமைவிடம் 

தூய சிந்தாத்திரை அன்னை ஆலயம் தொண்டி நகரில் அமைந்துள்ளது. கிழக்கு கடற்கரை சாலையான இராமநாதபுரத்தில் இருந்து  நாகப்பட்டினம் செல்லும் சாலையில்,  வங்கக்கடலின்  அருகே அழகுற  இவ்வாலயமானது அமைந்துள்ளது. இவ்வாலயம் கத்தோலிக்க திருச்சபையின் மேற்பார்வையின் கீழ் இயங்கி வருகிறது.

கத்தோலிக்க திருச்சபை

கிறிஸ்தவர்களின் தலைமையிடம் எருசலேம் ஆகும் அங்கு தான் இயேசு கிறிஸ்து பிறந்த தேவாலயம் உள்ளது. இயேசு கிறிஸ்துவுக்குப் பின் அவரின் சீடர்கள் அவரின் கொள்கைகளை உலகம் முழுவதும் பரப்பினர். அவ்வாறு பரப்பிய அமைப்புகளுள் ஒன்று கத்தோலிக்க திருச்சபை என்பதாகும்.

கத்தோலிக்க திருச்சபை மிகப்பெரிய கிறிஸ்தவ மத பிரிவாகும். கத்தோலிக்கர்கள் இயேசுவை தங்களது கடவுளாக ஏற்றுக் கொள்கின்றனர். கத்தோலிக்க திருச்சபையின் கோட்பாடுகளாக கிறிஸ்து  கற்பித்த ஜெபம்,  பத்து கட்டளைகள், விசுவாச அறிக்கை போன்றவற்றை கடைப்பிடித்து அவற்றின் வழியில் நடப்பதாகும். மேலும் கத்தோலிக்கத் திருச்சபையானது இயேசுவை மட்டும் ஏற்றுக் கொள்ளாமல் அவரின் தாய் மரியாவையும் ஏற்றுக் கொள்கின்றது.

அன்னை மரியாவிற்கும் ஆலயங்கள்  ஏற்படுத்தி வழிபட்டு வருதல் என்பதும் இப்பிரிவின் ஒருபகுதியாக அமைந்தது.

தமிழகத்தில் கத்தோலிக்கத் திருச்சபை

தமிழகத்தில் பதினெட்டு மறை மாவட்டங்களாகப் பிரிக்கப் பெற்று ஒவ்வொரு மறை மாவட்டமும் ஒரு தனித்த ஆயரின் தலைமையின் கீழ் நடைபெற்றுவருகிறது. இதில் அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள் பலரும் பணிபுரிகின்றனர். மருத்துவப் பணிகள், கல்விப்பணிகள், அனாதை இல்லங்கள், முதியோர் காப்பகங்கள் போன்றவற்றை ஏற்படுத்தி சமுதாயத் தொண்டுகள் பலவும் இவ்வமைப்பினரால் செய்யப்பெற்று வருகின்றன.

தொண்டி சிந்தாத்திரை அன்னை ஆலயம் சிவகங்கை மறை மாவட்டத்தின் கீழ் அமைந்துள்ளது.

தூய சிந்தாத்திரை அன்னை ஆலயத்தின் வரலாறு

தொண்டியில் மிகக் குறைந்த அளவிலேயே கிறித்துவர்கள் வாழ்ந்து வந்த நிலையில் அவர்கள் தங்கள் சமய நெறிமுறைகளை குருமிலாங்குடி ஆலயத்திற்கு சென்று செய்து வந்தனர். தொண்டியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இவ்வாலயம் இருந்தது.  புனித சுவக்கின் அன்னாள் ஆலயம்  என்ற இவ்வாலயத்தில்  தொண்டி சார்ந்த மக்கள் வழிபாடு நடத்தினர். இவ்வாலயம் பழமையானது. தற்போது நூற்றாண்டு கொண்டாடப்பட உள்ளது.

தொண்டியில் கிறித்து ஆலயம் கட்ட  பலர் முயற்சி செய்தனர். அவர்களுன் மட்டியரேந்தல்  என்ற கிராமத்தைச் சார்ந்த, இரோணிமூஸ் – மரிய முத்தம்மாள் என்பவரின் மகளான பாக்கியம் என்பவர் தொண்டியில் வாழ்ந்தபோது இங்கு ஓர் ஆலயம் கட்ட வேண்டும் என எண்ணினார். எனவே இவர் இதுகுறித்து குருமிலாங்குடி பங்குத் தந்தையை அணுகினார். சில காரணங்களால் இம்முயற்சி தக்க பலன் தரவில்லை. எனவே பாக்கியம் அம்மையார் அப்போது  மதுரை பேராயராக இருந்தவரை பாக்கியம் அவர்கள் நேரடியாக சந்தித்து ஆலயம் கட்டும் முயற்சிகளில் இறங்கினார.

கி.பி. 1956 ஆம் ஆண்டு தற்போது ஆலயம் உள்ள இடம் விலை கொடுத்து வாங்கப்பட்டது. பின்னர் பல ஆண்டுகளாக இவ்விடம் பயன்பாடு எதுவும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில்  தொண்டி ஊராட்சி மன்றத்தில் புறம்போக்கு நிலம் என இவ்விடம் எடுத்துக் கொள்ளப்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதனை அறிந்த பாக்கியம் அம்மாள், இவருடைய மகன் மரியதாஸ் வழியாக கோயில் அமைய வேண்டிய இடத்தில் நான்கு மூலைகளிலும் மூன்று அடி உயரத்தில் சுற்றுச்சுவர் எழுப்பி அதில் நடுவில் ஆறடி உயர  சிலுவை அடையாளத்தைச்  செய்து வைத்தார்.

இவ்வகையில் அந்த இடம்  ஆலயத்திற்கு சொந்தமான இடம் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. எனினும் எவ்வித மேம்பாடும் இல்லாமல் அவ்விடம் பாக்கியம் அம்மாள் அவர்களின் வழிபாட்டுடன் இருந்து வந்தது. மற்றவர்கள் குருமிலாங்குடி பங்குக் கோயிலுக்குச் சென்று வந்தனர்.

சில ஆண்டுகள் கழித்து அரசு பணி காரணமாக தொண்டிக்கு குடி வந்த  கிறிஸ்தவ குடும்பங்கள் தொண்டியில் ஆலயம் அமைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தனர். எனவே அவர்கள் ஆலயம் அமைய முயற்சித்தனர்.

இந்நிலையில் அருள்திரு பாக்கியம் அடிகளார் அவர்கள் குருமிலாங்குடி  புனித அன்னாள் சுவக்கின் ஆலயத்தில் பங்கு பணியாளராக இருந்தார். இவர் மக்களின் நிலையையும் வேண்டுதல்களையும் ஏற்று ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை ஐந்து மணிக்கு எஸ்.எஸ். அரிசி ஆலையில் திருப்பலி நிறைவேற்றி வழிபாடுகள் செய்தார்.

இதனைத் தொடர்ந்து கிறிஸ்துவ சமய விழாக்கள்  மற்றும் கிறிஸ்மஸ் நாட்களிலும் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

இவருக்குப்பின் குருமிலாங்குடி பங்குப் பணியாளராக இருந்த அருள்திரு ஆர்.எஸ். பீட்டர் அவர்களின் காலத்திலும் முன்னர் சுட்டிய அரிசி ஆலையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

திருமதி பாக்கியம் அவர்களின் மகன் திரு எஸ். பி. மரியதாஸ் அவர்கள் தொடர்ந்து தொண்டியில் ஆலயம் கட்டும் பணியை விரைவுபடுத்தி வந்தார். இவரின் வற்புறுத்தலால் அருள்திரு ஆர்.எஸ்.பீட்டர்  அடிகளார் அவர்கள் கோயில் கட்ட நிதியுதவி அளித்தார். மேலும் அப்போது மதுரை பேராயராக இருந்த அருள்திரு பி. ஐஸ்டின் திரவியம் அவர்கள் தேவகோட்டை வட்டார அதிபரிடம் நிதி தந்து,  தொண்டியில் ஒரு சிற்றாலயம் கட்ட பணிந்தார்.

பின்னர் கி.பி. 1977 ஆம் ஆண்டில் மதுரை பேராயர் அருள்திரு. பி.  ஐஸ்டின் திரவியம்  அவர்கள் வருகை தந்து ஆலயப் பணிகளை மேற்பார்வை செய்தார்.  அதனைத் தொடர்ந்து ஆலயத்திற்கும் திரு பாக்கியம்  குடும்பத்தினர் தேவையான பொருள்கள் அனைத்தையும் அன்பளிப்பாக தந்தனர். இந்த ஆலயம் கடற்கரை அருகில் அமைந்திருப்பதால் பேராயர் அவர்கள்  இந்த ஆலயத்திற்குப் புனித சிந்து யாத்திரை மாதா  ஆலயம் என்று பெயரிட்டார். இவ்வாறு  ஆலயம் தன் இறைபணிகளைத் தொடங்கியது.

இவ்வாலயத்திற்குக் குருமிலாங்குடி பங்கு பணியாளராக வந்த அருள்திரு பி.ஜோசப் அடிகளார் அவர்கள் ஞாயிறு மாலை திருப்பலியையும்,  புதன் மாலை சகாய மாதா நவநாள் பூசையையும்,  திருப்பலியையும்,  திங்கள் காலை திருப்பலியையும், வியாழன் காலை திருப்பலியையும் நடத்தி வந்தார்.

இதனைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் மற்றும் அனைத்து விழா காலங்களிலும் வழிபாடு நடத்தப்பட்டது.

கி.பி. 1987 ஆம் ஆண்டு இப்பகுதி புதிய பங்கு தளமாக உருவாக்கப்பட்டது. அதுமுதல் பங்கு பணியாளராக அருள்பணி எஸ். ஏ. அருள் ஜீவா பொறுப்பேற்றார். 1988ஆம் ஆண்டு அருள்பணி ஜி வின்சன்ட் அமல்ராஜ் அடிகளார் பங்கு பணியாளராக பொறுப்பேற்றார் அவர் பங்கு மக்களின் நன்கொடையோடும் மறைமாவட்டத்தின் உதவியோடும் இப்பொழுது உள்ள புதிய பங்கு ஆலயத்தை கட்டி முடித்தார்.

பின்னர் குருமிலாங்குடியில் இருந்து தொண்டி தனி பங்காகப் பிரிக்கப்பெற்றது.  வணக்கத்திற்குரிய சிவகங்கை முன்னாள் ஆயர் அமரர் மேதகு எஸ் எட்வர்ட் பிரான்சிஸ் அவர்களால் 29. 09.1990 ஆம் நாளில் புனிதர் சிந்தாத்திரை அன்னை ஆலயம் புனிதப் பட்டது .

ஆயர்தம் அருள்பணி ஆய்வு

இவ்வாலயத்தில் செப்டம்பர் மாதம் 1990 ஆண்டு 29 30 தேதிகளில் அருள்பணி ஜி வின்சன்ட் அமல்ராஜ் அவர்கள் அருள்பணி ஆய்வு மேற்கொண்டார். 1998 ஆம் ஆண்டு மே மாதம் 27 மற்றும் 28 தேதிகளில் அருள்திரு புஷ்பராஜ்  அவர்கள் காலத்திலும் அமரர் மேதகு ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ்  அவர்களால் பங்கு அருள்பணி ஆய்வு மேற்கொள்ளப்பெற்றது. இவ்வாய்வின்போது சிறுவர் சிறுமியர்களுக்கு உறுதிப்பூசுதல் வழங்கப்பட்டது

2009 ஆம் ஆண்டு மே மாதம் 29, 30, 31 ஆம் தேதிகளில் அருள்பணி எஸ்.எட்வின்  ராயன் காலத்திலும் மேதகு ஆயர் ஜே. சூசை மாணிக்கம்  அவர்களால் பங்கு அருட்பணி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பணியில் உள்ள சிறுவர் சிறுமிகளுக்கு உறுதிப்பூசுதல் வழங்கப்பட்டது.

பின்னர் பேரருள்பணி எ.ஜோசப் லூர்து ராஜா அவர்கள் பங்கின் பாரி பாலகராக  இருந்தபோது 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 19 ஆகிய தேதிகளில் மேதகு ஆயர் ஜே.சூசை மாணிக்கம் அவர்களால் தொண்டி பங்கானது ஆய்வு நடத்தப்பட்டு  சிறுவர் சிறுமியர்களுக்கு உறுதிப்பூசுதல் வழங்கப்பட்டது

பின்னர் 2018 ஆம் ஆண்டு அருள்பணி எம். சவரிமுத்து அவர்கள் மே மாதம் தூய சிந்தாத்திரை மாதா ஆலயத்தில் புதிய பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். பங்கு தந்தையின் அரிய முயற்சியாலும், மக்களின் ஒத்துழைப்பாலும் தூய சிந்தாத்திரை அன்னை ஆலயத்தில்   பலிபீடம் 08.12.19 அன்று புதுப்பிக்கப்பட்டது. 18.01.20 லிருந்து சிந்தாதிரை அன்னைக்கு நவநாள் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு சிறப்புடன் நடைபெற்று வருகின்றது .

தூய சிந்தாத்திரை அன்னை ஆலயத்தின் பரிபாலகர்கள்.

 தூய சிந்தாத்திரை அன்னை ஆலயத்தின் பரிபாலகர்களாக பின்வருவோர் விளங்கினர்.

 1. அருள்பணி எல். அமல்ராஜ்  (2013முதல்  - 2015வரை)
 2. அருள்பணி எஸ். ஜேம்ஸ் அந்துவான்தாஸ்(2015 முதல்  - 2017வரை)
 3. அருள்பணி ஜான் பிரிட்டோ ( 2017 ஜூன் முதல் நவம்பர் வரை)
 4. பேரருள் பணி எ. ஜோசப் லூர்து ராஜா (2017 நவம்பர் முதல்)

ஆலயத்தில் அருள் பணியாற்றியவர்கள்

 1. அருள்பணி எஸ் ஏ அருள்ஜீவா (1987-1988 )
 2. அருள்பணி ஜி வின்சன்ட் அமல்ராஜ்  (1988-1991)
 3. அருள்பணி ஏ.ராஜமாணிக்கம் (1991- 1994)
 4. அருள்பணி வி புஷ்பராஜ் (1994 -1999)
 5. அருள்பணி எஸ் பிரான்சிஸ் சேவியர் (1999 – 2004)
 6. அருள்பணி எஸ்.அருள் (2004 -2006)
 7. அருள்பணி எஸ் எட் வின் ராயன் (2008 -2011)
 8. அருள்பணி ஏ அருள்ஜோதி (2011-2013)
 9. அருள்பணி எம். சவரிமுத்து (2018 மே முதல் இன்று வரை .)

இவ்வாறு தொண்டி சிந்தாத்திரை அன்னையின் ஆலய வரலாறு அமைந்துள்ளது. இன்றுவரை சிறப்புடன் அருள்பணியை இவ்வாலயம் செய்து வருகிறது.

தொகுப்புரை

இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை வட்டத்தில் அமைந்துள்ள தொண்டி என்ற நகரில் தூய சிந்தாத்திரை அன்னை தேவாலயம்  அமைந்துள்ளது. இத்தேவாலயம் அருள்பணி பாக்கியம் என்பவரின் முயற்சியால் நிலம் வாங்கப்பெற்று பங்கு, ஆயர் போன்றோர் உதவிகளால் ஆலயம் உருவாக்கப்பெற்றுள்ளது.

குருமிலாங்குடி என்ற கிராத்திற்குத் தொண்டி சார்ந்த கிறித்துவ மக்கள் சென்று வழிபாடு இயற்றுவதில் பல  இன்னல்கள் இருந்த நிலையில்  தொண்டியில் சிந்தாத்திரை அன்னை ஆயலம் தொடங்கப்பட்டு இறை வழிபாட்டிற்கும், சமுதாய சேவைகளுக்கும் வழி வகுத்தது.


ஜா. சுஜாபிரின்ஸி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொண்டி தூய சிந்தாத்திரை அன்னை ஆலயத்தின் தோற்றமும் வளர்ச்சியும்”

அதிகம் படித்தது