ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

தொல்லியல்

வே.இராஜகுரு

Oct 12, 2019

siragu tholliyal3

தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் சொல்லப்படும் முல்லை, பாலை, நெய்தல், குறிஞ்சி, மருதம் ஆகிய ஐவகை நிலங்களில் குறிஞ்சி தவிர்த்த நால்வகை நிலங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளன. கடலாடி, பரமக்குடி, இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகள் முல்லை நிலமாகவும், திருவாடானை வட்டம் மருதநிலமாகவும், சுந்தரபாண்டியன் பட்டினம் முதல் கன்னிராஜபுரம் வரையிலான கடற்கரைப்பகுதி நெய்தல் நிலமாகவும்கமுதி, முதுகுளத்தூர், கடலாடியின் சில பகுதிகள் முல்லை திரிந்த பாலை நிலமாகவும் உள்ளன. இதற்கு ஆதாரமாக ஊர்ப் பெயர்கள், தாவரங்கள், விலங்குகள், நிலஅமைப்பு ஆகியவற்றைக் கொள்ளலாம்.

மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் இம்மாவட்டம் கீழ்ச்செம்பில் நாடு, வடதலை செம்பில் நாடு, செவ்விருக்கை நாடு, முத்தூற்றுக் கூற்றம், வரகுணவளநாடு, அரும்பூர்க் கூற்றம், துகவூர்க் கூற்றம், களாத்திருக்கை நாடு, இடைக்குளநாடு, ஏழூர் செம்பில் நாடு, அளற்றுநாடு, சுந்தரபாண்டியவளநாடு, உலகு சிந்தாமணி வளநாடு, கானப்பேர்க்கூற்றம், கோடிநாடு ஆகிய நாட்டுப் பிரிவுகளில் இருந்துள்ளது. பாண்டி மண்டலத்தின் ஒரு பகுதியான இம்மாவட்டம், பாண்டியர், சோழர், டில்லி சுல்தான்கள், விஜயநகர மன்னர்கள், மதுரை நாயக்கர்கள், சேதுபதிகள், ஆங்கிலேயர் ஆகியோர்களால் ஆளப்பட்டது.

சுந்தரபாண்டியன்பட்டினம், மருங்கூர்ப்பட்டினம், தீர்த்தாண்டதானம், பாசிப்பட்டினம், முத்துராமலிங்கபட்டினம், தொண்டி, நானாதேசிப்பட்டினம் (தளிர்மருங்கூர்), புதுப்பட்டினம்,  தேவிபட்டினம், முடிவீரன்பட்டினம், அழகன்குளம், இராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன்,  பெரியபட்டினம், கீழக்கரை, இடைவழியான எறிவீரபட்டினம் ஆகிய பல துறைமுகங்கள் புகழ்பெற்று விளங்கி இருந்துள்ளதை கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகிறது. இங்கு வைகை, குண்டாறு, கிருதுமால், விரிசிலை, கோட்டைக்கரை, சருகணி, மணிமுத்தாறு, பாம்பாறு ஆகிய பல ஆறுகள் ஓடுகின்றன.

தொல்பழங்காலத்  தடயங்கள்

siragu tholliyal5

இம்மாவட்டத்தில் பழைய கற்கால, நுண்கற்கால, புதிய கற்காலக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இம்மாவட்டம் இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதன் வாழ்ந்த இடமாக இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. பழைய கற்காலக் கருவிகள் கமுதி அருகே கல்லுப்பட்டியில் கிடைத்துள்ளன. இதை பேரையூரைச் சேர்ந்த கு.முனியசாமி என்ற ஆசிரியர் கண்டெடுத்துள்ளார்.
நுண்கற்காலக் கருவிகளைப் பேரையூரில் ஆசிரியர்கு. முனியசாமியும், காரேந்தல், செய்யாமங்கலம், காஞ்சிரங்குளம் ஆகிய இடங்களில் வீ.செல்வகுமாரும், தெற்குத்தரவையில் ஆ.இராஜாவும் கண்டுபிடித்துள்ளனர். தேரிருவேலி அகழாய்விலும் நுண்கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளன. போகலூரில் புதிய கற்காலக் கருவியை இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் கண்டெடுத்துள்ளனர்.

இரும்புக்கால கருப்பு சிவப்பு பானை ஓடுகள் மற்றும் முதுமக்கள் தாழிகள், இராஜசிங்கமங்கலம் அருகே செங்கமடை கோட்டை, லாந்தை, பேரையூர், கீழச்சீத்தை ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இரும்பு உருக்காலைகள் இருந்ததற்கான தடயம் சாயல்குடி அருகே கொக்கரசன்கோட்டையில் கிடைத்துள்ளது.

சங்ககால வாழ்விடங்கள் அழகன்குளம், தேரிருவேலி, சக்கரவாளநல்லூர், தெற்குத்தரவை, இலந்தைக்கூட்டம், கீழச்சீத்தை, இரா.காவனூர், வன்னிக்குடி, உத்திரகோசமங்கை, நல்லிருக்கை, லாந்தை, அரியகுடி புத்தூர், பெருங்களூர், சிறுவயல், சேமனூர், சத்திரக்குடி, தீயனூர், தென்னவனூர், வைரவனேந்தல், பெருஞ்சையூர், கொழுந்துறை, கொக்கரசன்கோட்டை, தளிர்மருங்கூர்ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வணிகமும் துறைமுகங்களும்

siragu tholliyal7

சுந்தரபாண்டியன்பட்டினம் முதல் அழகன்குளம் வரையிலான கிழக்குக் கடற்கரைப்பகுதிகளில் இயற்கையான  உப்பங்கழிகள் அதிகளவில் காணப்படுகின்றன. இதனால் இப்பகுதிகள் பழங்காலத்தில் துறைமுகப் பட்டினங்களாகவும், வணிக நகரங்களாகவும், கப்பல் கட்டும் தளங்களாகவும் விளங்கி உள்ளன.

தமிழகத்தில் சிறப்புடன் விளங்கியவை இரண்டு தொண்டி துறைமுகங்கள். ஒன்று அரபிக் கடலோரம் சேரநாட்டில் உள்ள தொண்டி. மற்றொன்று வங்கக்கடலோரம் பாண்டிய நாட்டில் இருக்கும் தொண்டி. பழங்காலம் முதல் இலங்கை செல்லும் வழியாக தொண்டி இருந்துள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த பலர் இலங்கையில் குடியேறி உள்ளது கருதத்தக்கது. சோழர்கள் இலங்கை செல்ல இத்துறைமுகத்தையே பயன்படுத்தி உள்ளனர்.

பாண்டிய நாட்டின் தொண்டியை, சங்க இலக்கியமான அகநானூறில் “வளங்கெழு தொண்டி” என அம்மூவனாரும், சிலப்பதிகாரத்தில் “வங்க ஈட்டத்துத் தொண்டி என இளங்கோவடிகளும் குறிப்பிட்டுள்ளனர் (மயிலை சீனி.வேங்கடசாமி – பழங்கால தமிழர் வாணிகம் – சங்ககாலம் பக்கம் 73 ஸ்ரீசெண்பகா பதிப்பகம் சென்னை)

பாண்டிக்கோவை என்ற நூல் கி.பி.7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நெடுமாறன் என்ற பாண்டியமன்னனின் துறைமுகமாக தொண்டி விளங்கியதாக தெரிவிக்கிறது. யாப்பெருங்கலக்காரிகை உரையில் கி.பி.9ஆம் நூற்றாண்டில் ஆண்ட வரகுணப்பாண்டியன் காலத்தில் இவ்வூர் வரகுணன் தொண்டி எனஅ ழைக்கப்பட்டதாகக் கூறுகிறது.

கி.பி.13 முதல் 14 ஆம் நூற்றாண்டுகளில் பிற்காலப் பாண்டியர் ஆட்சியின்போது கிழக்கு  நாடுகளுடன் முக்கியமான வாணிகத் துறைமுகமாக தொண்டி விளங்கியது. இவ்வூரிலுள்ள சிவன் கோயிலில் காணப்படும் கல்வெட்டுக்கள் தொண்டியை பவித்திரமாணிக்கப்பட்டினம் என அழைக்கிறது.

தீர்த்தாண்டதானம் சர்வதீர்த்தமுடையார் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் இவ்வூரைதிட்டானம் என்று குறிப்பிடுகிறது. திட்டானம்  என்றால் மரக்கலம் நிறுத்தும்  மேட்டுப்பகுதி என்றுபொருள். இக்கோயிலில் காணப்படும் ஏழு கல்வெட்டுகளில் நான்கு இங்கு தங்கி இருந்த வணிகக்குழுக்களையும், வணிகர்களையும் குறிப்பிடுகிறது. கி.பி.1198 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு இவ்வூரை சிறுகடற்கடை என குறிக்கிறது. கி.பி.1269இல் இவ்வூரில் தங்கி இருந்த அஞ்சுவன்னம், மணிக்கிராமம், சாமந்தபண்டசாலி, தோயாவத்திரச் செட்டிகள், தென்னிலங்கை வளஞ்சியர், கைக்கோளர், தூசுவர், வாணியர், கரையார் ஆகிய வணிகக்குழுவினர் இக்கோயில் எதிரில் சிதைந்த நிலையில் இருந்த மண்டபத்தை பழுதுபார்க்க ஒப்புக்கொண்டுள்ளனர். இதில் அஞ்சுவன்னம் எனும் வணிகக் குழுவினர் அல்லாவைத் தொழும் கலிபா வழியினரான இஸ்லாமியர் என்பது குறிப்பிடத்தக்கது. பழங்காலத்தில் இவ்வூர் ஒரு வணிகத்தலமாக இருந்திருக்கக் கூடும்.

பாசியாற்றின் கரையில் அமைந்துள்ள பாசிப்பட்டினம் கி.பி.875 முதல் கி.பி.1090 வரையிலான காலத்தில் ஒரு துறைமுகமாக இருந்துள்ளது. இதன் அருகில் உள்ள ஊர் வட்டானம். வட்டானம் என்பது வட்டவடிவமான மரக்கலத்தைக் குறிக்கிறது. இங்கு வட்டவடிவமான பரிசல் கட்டும் தொழில் நடந்திருக்கலாம்.

தளிர்மருங்கூர் ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பின் வீரகேரளபுரமான நானாதேசிப்பட்டினம்  எனப் பெயர் பெற்றிருந்தது. இங்குவடக்கூர், தெற்கூர் என இரு இடங்களில் உள்ள சிவன் கோயில்களில் கி.பி. 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் உள்ளன. இதில் இவ்வூர் தளிர் மருங்கூர், குலமாணிக்கபுரம் என குறிப்பிடப்படுகிறது. குலமாணிக்கபுரம், நானாதேசிப்பட்டினம் என இவ்வூர் பெயர் பெற்றிந்ததன் மூலம் சிறந்த வணிக நகரமாக இருந்ததை அறியமுடிகிறது. சங்ககால பானை ஓடுகள் இங்குகிடைப்பதால் சங்ககாலம் முதல் இவ்வூர் புகழ் பெற்று இருந்துள்ளது என்பது உறுதியாகிறது. இங்குள்ள வடக்கம்மன் கோயில் கல்வெட்டில் கைக்கோளர் ஒருவர் செய்த கொடை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. கைக்கோளர் என்பவர்கள் நெசவுத்தொழில் மற்றும் துணி வாணிகம் செய்யும் பிரிவினர்.

தேவிபட்டினம் சோழர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட கடற்கரைப் பட்டினம் என கருதப்படுகிறது. இங்கு நகரத்தார்கள், நானாதேசிகள் ஆகிய வணிகக்குழுக்கள் தங்கி இருந்ததை இவ்வூர் சிவன் கோயில் கல்வெட்டுகளால் அறியலாம். இங்கு அரபுநத்தம் என்ற ஒரு பகுதி உள்ளது. இவ்வூரில் அரேபிய வணிகர்கள் தங்கி இருந்ததை இது உறுதிப்படுத்துகிறது. கீழக்கரையில் பதினெண் விசயத்தார் எனும் வணிகக்குழுவினர் முத்து வணிகத்தில் ஈடுபட்டதை கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது.

தனுஷ்கோடி இரட்டைத்தாழை முனியசாமி கோயிலில் கிடைக்கப்பெற்ற 8ஆம் நூற்றாண்டு  வட்டெழுத்துக் கல்வெட்டில் வளஞ்சியர், திசையாயிரத்து ஐந்நூற்றுவர் ஆகிய வணிகக்குழுக்கள் செய்த தானம் குறிப்பிடப்பட்டுள்ளது. கமுதி ஐயனார் கோயில் வட்டெழுத்துக் கல்வெட்டில் ஐந்நூற்றுவர் எனும் வணிகக்குழுவின் மெய்க்கீர்த்தி இடம்பெற்றுள்ளது.

இராஜசிங்க மங்கலம் அருகே அறுநூற்று மங்கலம், திருவாடானை அருகில் அறுநூற்று வயல் ஆகியவை வணிகர்களின் பாதுகாப்பு வீரர்களான அறுநூற்றுவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

திருவாடானை அருகில் உள்ளபாரூரில் பதினெண்பூமி எனும் வணிகர் மற்றும் அவர்களின் பாதுகாப்பு வீரர் கொண்ட குழுவினரின் குடியிருப்பு உருவானபின் அவ்வூர் பதினெண்பூமிநல்லூர் என பெயர் மாற்றப்பட்டுள்ள தகவல் அறுநூற்றுமங்கலம் கல்வெட்டில் உள்ளது. சாயல்குடி அருகில் இடைவழி எனும் எறிவீரபட்டினம் இருந்ததாக திருமாலுகந்தான் கோட்டை கல்வெட்டு கூறுகிறது. எறிவீரபட்டினம் என்பது வணிகர்களின் பாதுகாப்புவீரர் குடியிருப்பு ஆகும்.

ரோமானிய பானை ஓடுகள் அழகன்குளம், தேரிருவேலி, கீழச்சீத்தை, பேரையூர் ஆகிய இடங்களிலும்,  சீனப்பானை ஓடுகள் பி.முத்துச்செல்லாபுரம், பிரபுக்களூர், வீரவனூர், தொண்டி, பெரியபட்டினம், அழகன்குளம், கீழச்சீத்தை, களத்தாவூர், மேலமடை ஆகிய இடங்களிலும் கிடைத்துள்ளன. இதன் மூலம் இப்பகுதிகளுக்கு ரோமானியர் மற்றும் சீனர் ஆகிய வெளிநாட்டு  வணிகர்கள் வந்து சென்றதை அறியமுடிகிறது.

வரலாற்றுத் தடயங்கள்

சங்ககாலம் முதல் இம்மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் சமண, புத்தமதங்கள் பரவி இருந்துள்ளன. மேலூர் அருகிலுள்ள கீழவளவின் மலைக்குன்றில் கி.மு.மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு தமிழ் பிராமி கல்வெட்டு உள்ளது. இதில்,
“உப(ச)அன் தொண்டி(ல)வோன் கொடு பளிஇ”
என உள்ளது. இதன் பொருள் தொண்டியில் இருந்து வந்த இலவோன் என்பவர் இப்படுக்கைகளை அமைத்துக் கொடுத்துள்ளார். உபசன் என்போர் சமண சமய நூல்களை அம்மத இல்லத்தார் வீடுகளில் போதிப்பவர் என அறியமுடிகிறது. இலவோன் என்பவர் கீழைக் கடற்கரைத் துறைமுகமான இராமநாதபுரம் மாவட்ட தொண்டியைச் சேர்ந்த சமய ஆசிரியர் ஆவார்.(மதுரையில் சமணம் – சொ.சாந்தலிங்கம் பக்கம் 33, 34)
இராமேஸ்வரம் அரியான்குண்டு பகுதியில் பெரும் பௌத்தபள்ளி இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. தொண்டி அருகில் செம்பிலான்குடியில் இருந்த ஆறு அடி உயர புத்தர் சிற்பம் சில ஆண்டுகளுக்கு முன் காணாமல் போயுள்ளது. பார்த்திபனூர் பகுதியில் வயலில் இரு புத்தர் சிற்பங்கள் உள்ளன. இவை பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அமர்ந்த நிலையிலான 5 அடி உயர புத்தர் சிற்பம் ஆனந்தூர் அருகில் சம்மந்தவயலில் கிடைத்துள்ளது.

காஞ்சிபுரத்தைப் போன்று சுந்தரபாண்டியன் பட்டினத்திலும்,  புத்தம், சமணம், சைவம், வைணவ ஆகிய நான்கு மதங்களின் கோயில்கள் இருந்துள்ளன. ஆனால் தற்போது ஏகாம்பரேஸ்வரர் என்ற சிவன் கோயில் மட்டுமே அங்கு உள்ளது. இக்கோயில் கல்வெட்டுகள் மூலம்  இங்கு தசரதராம ஈஸ்வரமுடைய நாயனார் என்ற சிவன் கோயிலும்,  தசரதராம விண்ணகராழ்வார் கோயில் என்ற திருமால் கோயிலும் இருந்துள்ளதை அறியமுடிகிறது. திருமால் கோயில் முற்றிலும் அழிந்துள்ளது. அதன் எஞ்சிய சில சிலைகள் சிவன் கோயில் பகுதியில் உடைந்த நிலையில் காணப்படுகின்றன. 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தநின்ற நிலையிலான புத்தர் சிலை சிவன் கோயிலில் உள்ளது. இக்கோயில் விமானத்தின் நாசிக்கூடுகளிலும் புத்தரின் உருவங்கள் உள்ளன. இதன் மூலம் இக்கோயில் புத்தர் கோயிலாக இருந்து சிவன் கோயிலாக மாற்றப்பட்டிருப்பதை அறிய முடிகிறது.
மேலும் இவ்வூரின் தெற்கே இடையர்மடம் பகுதியில் பழுதடைந்த நிலையில் இருக்கும் கோபாலமடம், இராமர் பாதம் கோயில் ஆகியவை முன்பு சமணப்பள்ளியாக இருந்து மடமாக மாற்றப்பட்டது என சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. (கட்டுரை ஆசிரியர் களஆய்வின்போது கண்டுபிடித்தது)

திருவாடானை அருகில் மணிகண்டி என்ற ஊரில் கிடைத்த 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை சென்னை அரசு அருங்காட்சியகத்தில் உள்ளது. தொண்டி அருகேயுள்ள பனஞ்சாயல் பள்ளித்தம்மத்துக்கு (புத்தபள்ளி) வழங்கிய நிலக்கொடை சுந்தரபாண்டியபட்டினம் ஏகாம்பரநாதசாமிக்கு (சிவன்கோயில்) கி.பி. 17ஆம் நூற்றாண்டில் மாற்றி வழங்கப்பட்டுள்ளது.

கி.பி.11 – 12 ஆம் நூற்றாண்டுகளில் சோழர்கள் பாண்டிய நாட்டுப் பகுதிகளை நேரடியாக ஆட்சி செய்தபோது  தொண்டிபகுதி முழுதும் வணிக மையங்களாக இருந்துள்ளன. இலங்கையிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் கி.பி.15ஆம் நூற்றாண்டுவரை புத்தசமயம் சார்ந்த வணிகர்கள் வாணிகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர். இப்பகுதியிலும் அதுபோன்ற நிலைதான் நிலவி இருந்திருக்கவேண்டும். இலங்கையுடனான வணிகத் தொடர்பு மூலம் மீண்டும் பரவிய புத்தமதம் கி.பி.15 – 16ஆம் நூற்றாண்டு வரை மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்துள்ளது. பல ஊர்களின் பெயர்கள் புத்தமதத் தொடர்புடையதாக உள்ளன.

பெரியபட்டினம், மேலக்கிடாரம், கீழச்சீத்தை, கீழச்சாக்குளம், பசும்பொன், திருப்புல்லாணி, கமுதி, மேலஅரும்பூர், மஞ்சூர், புல்லூர், புல்லுகுடி ஆகிய இடங்களில் சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் கிடைத்துள்ளன.

கி.பி.8ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தொண்டி, தேவிபட்டினம், கீழக்கரை போன்ற ஊர்களில் முஸ்லிம் குடியிருப்புகள் இருந்துள்ளன. கி.பி.10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளில் முஸ்லிம்கள் சோனகர் எனவும் அவர்கள் தொழும் இடமான பள்ளிவாசல் சோனகப்பள்ளி எனவும் வழங்கப்படுகிறது. தொண்டி போன்ற சில ஊர்களில் சோனகத்தெரு என வழங்கப்படுவது அவர்தம் பழமையை உணர்த்தும்.

தொண்டி கடற்கரைப் பகுதிகளில் கி.பி.15 – 16ஆம் நூற்றாண்டு வரை சமண புத்தமதத்தைப் பின்பற்றுவோர் பெருமளவில் இருந்துள்ளனர். கி.பி.16ஆம் நூற்றாண்டுக்குப் பின் புத்தமதத்தைப் பின்பற்றிய மரக்கால நாயகர்களும், மாவோத்துகள் எனப்படும் மாந்தையர்களும் (கப்பல் கட்டும் தச்சர்கள்) இஸ்லாமியர்களாக மாறியிருக்க வேண்டும். மாந்தையர் மரபினராய் இருந்து இஸ்லாமியரானவர்கள் ஓடாவி முஸ்லிம் என அழைக்கப்படுகின்றனர். இப்போதும் தொண்டி மற்றும் சுந்தரபாண்டியன்பட்டினம் ஆகிய ஊர்களில் ஓடாவி தெரு என்று ஒரு தெரு உள்ளதை  இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம். ஓடாவி என்பது ஓட ஆழ்வி என்பதன் திரிபாக இருக்கலாம். ஓடாவி என்பது மரக்கலம் செய்யும் தச்சர்களைக் குறிக்கும் சொல் ஆகும்.

திருப்புல்லாணி கோயில் முதல் கோபுர நுழைவு வாயிலின் அருகில் உள்ள சுவரில் காணப்படும் கி.பி.1247 ஆம் ஆண்டைச் சேர்ந்த, இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டு, கீழ்ச்செம்பி நாட்டு பவித்திரமாணிக்கப்பட்டினத்திலுள்ள (பெரியபட்டினம்) பிழார் பள்ளி என்ற முஸ்லிம் பள்ளிவாசலுக்குஆம்பத்தூர், மருதூர் ஆகிய ஊர்களில் உள்ள நிலங்கள் தானமாக வழங்கப்பட்டதைத் தெரிவிக்கிறது. ஒரு வைணவக் கோயிலில் முஸ்லிம் பள்ளிவாசலுக்கு கொடை வழங்கிய கல்வெட்டு இருப்பது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. (A.R.E.No.116/1903)
வட்டானத்தில் உள்ள இஸ்லாமியர் கல்லறைக் கல்வெட்டுகள் கி.பி.1497முதல் காணப்படுவதால் இங்கு 15ஆம் நூற்றாண்டுகளிலேயே முஸ்லிம்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை அறியலாம்.

நரிப்பையூர் கடற்கரை அருகே முஸ்லிம் கபர்ஸ்தான் உள்ளே சுமார் 500ஆண்டுகால பழமையான முஸ்லிம் பள்ளிவாசல் உள்ளது. மண்டபம் போன்ற அமைப்பில் காணப்படும் இப்பள்ளிவாசலில் தொழும் மாடம், அர்த்தமண்டபம், முன்மண்டபம் ஆகியவை உள்ளன. இதன்மேல் மினார் எதுவும் கட்டப்படவில்லை. எனவே இதை மொட்டைப் பள்ளிவாசல் என உள்ளூர் மக்கள் அழைக்கிறார்கள். கடற்கரைப் பகுதிகளில் வாலிநோக்கம், கீழக்கரை உள்ளிட்ட பல இடங்களில் முழுவதும் கல்லால் கட்டப்பட்ட கல்லுப்பள்ளிகள் உள்ளன.

போர்ச்சுகீசியர்கள் கடற்கரைப் பகுதியில் வணிகம் செய்ததோடு கத்தோலிக்க கிறித்துவத்தையும் பரப்பினர். உப்பூர் அருகே கொக்குவாடியில் போர்ச்சுகீசியர்கள் கட்டிய ரோமன் கத்தோலிக்க தேவாலயம்தான் இம்மாவட்டத்தில் மிகப்பழமையான தேவாலயம் ஆகும். இராமநாதபுரம் அரண்மனை வடக்குத் தெருவில் உள்ள முதல் பிராட்டஸ்டன்ட் தேவாலயம்  ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிப் படையின் தளபதி மனுவேல் மார்டின்ஸ் என்ற ஆங்கிலேயரால் கி.பி.1804 இல் கட்டப்பட்டுள்ளது.

சிவன் கோயிலுக்கு வழங்கும் நிலங்களின் நான்கு எல்லைகளிலும் திரிசூலம் பொறிக்கப்பட்ட சூலக்கற்களும், திருமால் கோயிலுக்கு வழங்கும் நிலங்களின் எல்லைகளில் திருவாழிக்கற்களும் நடுவது வழக்கம். மருங்கூர், மேலப்பெருங்கரையில் பாண்டியர் கால சூலக்கற்களும், மாஞ்சூர், மேலஅரும்பூர், செய்யாமங்கலத்தில் சோழர்கால சூலக்கற்களும், மேலஅரும்பூர், மேலமடையில் சேதுபதிகள் கால சூலக்கற்கள் கல்வெட்டுகளுடனும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருவாழிக்கற்கள் கடம்போடை, திருப்புல்லாணி, மேலாய்குடி, மேலக்கன்னிசேரி ஆகிய ஊர்களில் உள்ளன.

பெரியபட்டினத்தில் சங்ககால சேரர், பாண்டியர் காசுகளும், இராஜராஜசோழன் கால ஈழக்காசுகளும், பாமினி சுல்தான்கள், மதுரை சுல்தான்கள் காசுகளும் கிடைத்துள்ளன. தொண்டியில் ஈழக்காசு கிடைத்துள்ளது. திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பஞ்சந்தாங்கி, தாதனேந்தலில் ஈழக்காசுகளையும், பால்கரையில் டச்சுக்காரர்களின் துட்டுகளையும், திருப்புல்லாணியில் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் வெளியிட்ட கச்சி வழங்கும் பெருமாள் காசையும் கண்டெடுத்துள்ளனர். அழகன்குளம் அகழாய்வில் ரோமானியர் காலக் காசுகளும், சங்ககால பாண்டியர் காசும் கிடைத்துள்ளன.

திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர், திருவள்ளுவர் உருவம் தாங்கிய தங்க நாணயங்களை வெளியிட்டவர் என்ற சிறப்புக்குரிய பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ்என்பவர் தமிழ் மீது கொண்ட தீராக்காதலால் தன் பெயரை எல்லீசன் என தமிழ்ப் படுத்திக் கொண்டார். இவர் தமிழ் ஆய்வுக்கு இராமநாதபுரத்தில் தங்கி இருந்தபோது திடீரென மரணமடைந்தார். இவருடைய கல்லறைக் கல்வெட்டுகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ளன. அவை தற்போது இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.

திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரியில் ஒரே கோயிலில் ஐந்து கழுமரங்கள் மக்கள் வழிபாட்டில் உள்ளன. கழுவேற்றப்பட்டதன்அடையாளமாக உள்ள இத்தகைய கழுமர வழிபாடுகள் மாவட்டம் முழுவதும் பரவலாக காணப்படுவது ஏதோவொரு வரலாற்றுச் செய்தியை நினைவுபடுத்துவதாக உள்ளது.

கடற்கரைப் பகுதிகளில் உள்ள  மணற்பாறைகளில் வாலிநோக்கம் கடற்கரைப் பகுதிகளில் உள்ள மணற்பாறைகள் நல்ல தரமானவை என்பதால் அப்பகுதி கடலில் இருந்த பாறைகளை வெட்டி எடுத்து வந்து திருப்புல்லாணி, உத்திரகோசமங்கை, மாரியூர், சாயல்குடி உள்ளிட்ட கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. திருப்புல்லாணியில் உள்ள பட்டாபிஷேக ராமர் சன்னதி கொடிமரம் அருகில் உள்ள இராமலட்சுமணர் சிற்பங்கள் அத்தகைய கல்லில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

மதுரை சுல்தான்களை வீழ்த்தி விஜயநகர மன்னர் வீரகம்பண உடையார் மதுரையை கைப்பற்றிய பின்பு திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலுக்கு கொடை வழங்கியுள்ளார்.  அவருடைய முதல் கல்வெட்டு திருப்புல்லாணி கோயிலில் உள்ளது. இதன்மூலம் அவர் மதுரையைக் கைப்பற்றியது கி.பி.1371க்கு முன்பு என அறியமுடிகிறது.

திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை ஆகிய கோயில் கோபுரங்களில் சேதுபதி மன்னர்கள் கால தேக்கு மரச்சிற்பங்கள் உள்ளன.தென்னிந்தியாவிலேயே முழுவதும் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரே அரண்மனையாக இராமநாதபுரம் இராமலிங்கவிலாசம் திகழ்கிறது. அரண்மனை, கிழவன் சேதுபதி காலத்தில் கட்டப்பட்டிருந்தாலும் ஓவியங்கள் முத்துவிஜய ரகுநாத சேதுபதி காலத்தில் தான் வரையப்பட்டுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது. உத்தரகோசமங்கை, திருவாடானை ஆகிய கோயில்களிலும் சேதுபதிகள் கால ஓவியங்கள் உள்ளன.

நிரை கவர்தல், மீட்டல், ஊரை எதிரிகளிடமிருந்து காத்தல், புலி, பன்றி, யானையுடன் சண்டையிடுதல், அரசனின் வெற்றிக்காக போரிடுதல் ஆகிய காரணங்களால்  இறந்துபோன கணவனுடன் உடன்கட்டை ஏறிய மனைவிக்கு அமைக்கப்பட்ட நடுகல்லின் மேல் எழுப்பப்படும் சதிக்கோயில் மாலைக்கோயில் எனப்படுகிறது. இத்தகைய மாலைக்கோயில்கள் இம்மாவட்டத்தில் நரிப்பையூர், கொக்கரசன்கோட்டை, குண்டுகுளம், ஆரைகுடி உள்ளிட்ட சில இடங்களில் இக்கோயில்கள் இன்றும் மக்கள் வழிபாட்டில் உள்ளன.

வீரர்கள், போரில் தன் அரசனுக்கு வெற்றிகிடைக்கவும்,  தன் தலைவன் உடல் நலம் பெறவும், ஊரின் நன்மைக்காகவும் காளி, கொற்றவை போன்ற தெய்வங்களை வேண்டிக்கொண்டு,  அக்கோயில் முன்பு வாளால் தங்கள் தலையை தாங்களே அரிந்து அத்தெய்வங்களுக்கு காணிக்கையாகக் கொடுப்பர். இதனை கல்வெட்டுகள் ‘தூங்குதலைகுடுத்தல்’ என்கின்றன. இந்த முரட்டு வழிபாடு தலைப்பலி, நவகண்டம் எனவும் அழைக்கப்படுகிறது. இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் சூரம்புலி அருகே  செம்பிலான்குடியில் தன் தலையை தானே அரிந்து காணிக்கையாகக் கொடுத்த வீரனின் நவகண்ட சிற்பம் மாவட்டத்தில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தின் பல ஊர் பெயர்கள் தாவரங்கள், விலங்குகள் பெயரில் அமைந்துள்ளன. இவை பிற்காலத்தில் புராண இதிகாசங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன.

கோட்டைகள்

இராமநாதபுரம் மாவட்டத்தில் போகலூர், இராமநாதபுரம், கமுதி, செங்கமடை, பாம்பன், ஓரியூர், திருப்புல்லாணி, அத்தியூத்து, சீனியப்பா தர்கா, ரெகுநாதபுரம்ஆகிய இடங்களில் கோட்டை மற்றும் அரண்மனைகள்  உள்ளன. ஏற்கனவே பாண்டியர்களால் கட்டப்பட்ட மண்கோட்டைகளை, கற்கோட்டைகளாக மாற்றியும், புதிய கோட்டைகளையும் சேதுபதி மன்னர்கள் அமைத்துள்ளார்கள். இத்தகைய கோட்டைகளுக்குள் நாட்டுவீழி, ஆதண்டை, சங்கஞ்செடி ஆகிய மூலிகைத்தாவரங்கள் காணப்படுகின்றன. குதிரை லாயம் உள்ளது. வீரர்கள் தங்கும் வசதி சில கோட்டைகளில் உள்ளது. செங்கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ளன. கமுதி,செங்கமடை,பாம்பன் ஆகிய கோட்டைகள் பிரஞ்சுப் பொறியாளர்களைக் கொண்டு கட்டப்பட்டது. இக்கோட்டைகளை முத்துவிஜய ரகுநாத சேதுபதி கட்டியுள்ளார். இவற்றில் செங்கமடை கோட்டை அறுங்கோண வடிவிலும், கமுதிக்கோட்டை வட்ட வடிவிலும் கட்டப்பட்டுள்ளன.

பாரம்பரியத் தாவரங்கள்

இம்மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்களே எங்கும் நிறைந்து காணப்படும் நிலையில் மிக அரியவகையான தாவரங்களும் இங்கு வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. சங்க இலக்கியங்களில் பாலைத்திணைக்குரிய மரமாக குறிப்பிடப்படும் உகாய், ஆங்கிலத்தில் மிஸ்வாக் எனப்படுகிறது. இது மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகளிலும், கிராமக் கோயில்களிலும் பரவலாக வளர்ந்து வருகிறது. இதன் தாவரவியல் பெயர் சல்வடோரா பெர்சிக்கா (SalvadoraPersica) ஆகும்.

சில கிராமக்கோயில்களில் மருத்துவச் சிறப்புமிக்க சோழர்களின் குடிப்பூ மரமான ஆத்தி மரம் (Bauhiniaracemosa) வளர்க்கப்பட்டு வருகிறது. நெய்தல் திணைக்குரிய மலர்களான அடும்பு (Ipomoea pes-caprae)மற்றும் தாழம்பூ (Pandanustectorius)கடற்கரை, ஆற்றங்கரைப் பகுதிகளில் வளர்ந்து வருகின்றன.

சிந்துசமவெளிப் பகுதிகளில் ஆதண்டை வகைத் தாவரங்கள் இருந்ததற்கான தடயங்கள் அகழாய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. (Source : Indian Archaeology 1997-98 A Review- Page No 238- ASI) ஆதண்டை வகைகளில் குழல் ஆதண்டை(Capparis decidua), துரட்டி ஆதண்டை (CapparisDivaricata), ஆதண்டை (Capparisspinosa),    கொக்கிமுள் ஆதண்டை (Capparissepiaria) ஆகிய நான்கு வகைகள் இம்மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளன. இவை மிகப் பழங்காலம் முதல் மக்களால் பயன்படுத்தப்பட்ட மூலிகைத் தாவரங்கள் ஆகும்.

சங்கஞ்செடி (Azimatetracantha Lam), மணிப்பூவந்தி (SapindusEmarginatus), நாட்டு வீழி (Cadabaindica), நஞ்சுண்டா(Balanitesaegyptiaca) ஆகிய தாவரங்கள் ஆங்காங்கே மாவட்டம் முழுவதும் காணப்படுகின்றன.

இதுதவிர ஆப்பிரிக்கா,மடகாஸ்கர், ஆஸ்திரேலியா, அரேபியா ஆகிய இடங்களைப் பூர்வீகமாகக் கொண்ட பொந்தன்புளி (Adansoniadigitata)எனும் மிகப் பிரமாண்டமான1500 ஆண்டுகளுக்கும் மேல் உயிர் வாழக்கூடிய ஒருவகை மரங்கள் வெளிநாட்டு வணிகர்கள் மூலம் கடற்கரைப்பகுதிகளில் வளர்ந்துள்ளன.இராமநாதபுரம் பெரியார் நகரில் உள்ள மரத்தில் பொந்துகள் உள்ளதால் அதன் வயது 1000 ஆண்டுகளாக இருக்கலாம்.

முடிவுரை

இம்மாவட்டம் முழுவதும் காட்டுப்பகுதிகளில் பரவலாக மான்களும், முயல்களும்  காணப்படுகின்றன. மானும்,முயலும் முல்லைத் திணைக்குரிய விலங்குகள் ஆகும். திவாகர நிகண்டு முல்லைநில மக்களாக இடையர், பொதுவர், அண்டர், ஆயர் போன்றோரைக் குறிப்பிடுகிறது. இதில் இடையர்கள் தற்போதும் பரவலாக இம்மாவட்டம் முழுவதும் உள்ளனர். மற்றொரு முல்லை நிலத்தவரான பொதுவர் பெயரில் பரமக்குடியில் பொதுவக்குடி, தென்பொதுவக்குடி, கடலாடியில் கண்ணன் பொதுவன் ஆகிய ஊர்கள் உள்ளன. அண்டர் பெயரில் பரமக்குடி பகுதியில் அண்டக்குடியும், கமுதி அருகில் அண்டநாயகபுரமும் உள்ளன.

மேலும் முதுகுளத்தூர், உத்திரகோசமங்கை, இராஜசிங்கமங்கலம் ஆகிய பகுதிகளில் பூமியின் ஆழத்தில் பழுப்பு நிலக்கரி இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன மிகப் பெரிய காடுகளே நிலக்கரி உருவாகக் காரணமாக உள்ளன. எனவே இங்கு பெரியஅளவில் காடுகள் இருந்ததை ஊகிக்கமுடிகிறது.

மனித நாகரிக வளர்ச்சியின் காரணமாக முல்லைநிலக் காடுகள் அழிக்கப்பட்டு மருதநில ஊர்களை முற்காலப் பாண்டியர்கள் உருவாக்கியுள்ளனர். முல்லை நிலம் இயல்பில் திரிந்ததால் உருவான பாலை நிலம் கமுதி, முதுகுளத்தூர் பகுதிகளில் காணப்படுகின்றன. வைகை மற்றும் குண்டாற்றுப் பகுதிகளில் சிறந்த நாகரிகங்கள் இருந்துள்ளன.

இவ்வாறாக மனித நாகரிக வளர்ச்சியின் அனைத்துப் படிநிலைகளையும், பல்வேறு தொல்லியல் தடயங்களையும்கொண்டதாக இம்மாவட்டம் திகழ்கிறது. அழகன்குளம், தேரிருவேலி  அகழாய்வுகளில் கிடைத்த பானை ஓடுகளில் தமிழி எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன. தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றிருந்தனர்என்பதற்கு ஆதாரமாக இதைக் கொள்ளலாம்.

வரலாறு, பண்பாடு ஆகியவை அதைத் தெரிந்தவர்களால் தான் அடுத்த தலைமுறைக்கு பரப்பப்படுகிறது. பண்பாட்டைக் காப்பதில் பெண்களே சிறந்து விளங்குகிறார்கள். வெறும் இலக்கிய சான்றுகள் நம் தமிழின் தொன்மையைச் சொல்லிடாது. அதனுடன் தொல்லியல் தடயங்களும் இருந்தால் தான் அதன் பழமை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

தமிழை வெறுமனே படிப்பவர்களாக இல்லாமல் அதன் மரபை, தொன்மையை பின்பற்றுபவர்களாகவும், காப்பவர்களாகவும், பிறர்க்கு கற்றுத் தருபவர்களாகவும் இருந்தால் தான் தமிழும் நம் பண்பாடும் வாழும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

பழமையைத் தெரிந்து கொண்டு பண்பாடு காப்போம். வாழிய  செந்தமிழ்! வாழிய நற்றமிழர்!!


வே.இராஜகுரு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொல்லியல்”

அதிகம் படித்தது