சனவரி 16, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

தொழில்நுட்ப, பொருளாதார ஆய்வுகளும், சோதனைகளும் முதலீடுகளுக்கு இன்றியமையாதது.

வெங்கட்ரமணி

Aug 29, 2015

aaivugal1நாதன் சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு அருகே, வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை, வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு கட்டிடத்தில் நடத்தி வந்தார். வணிகம் அதிகரித்ததால் புறநகர் பகுதியில் சொந்த இடத்தில் நிறுவனத்தை மாற்ற எண்ணினார். மிகவும் முயற்சி செய்து சென்னைக்கு வடக்கே புறநகர்ப் பகுதியில் பத்தாயிரம் சதுரடி நிலத்தை வாங்க முடிவு செய்தார். வளரும் தனது வணிகத்துக்காகவும், இட நெருக்கடி காரணமாகவும் இந்த முடிவை தான் எடுப்பது சரியானது என்று அவர் தீர்க்கமாக நம்பினார். பத்தாண்டுகளாக வாடகை இடத்தில் நிறுவனம் நடந்து வந்ததும் அந்த முடிவை வலுப்படுத்தியது.

ஆறே மாதங்களில் தமது நிறுவனத்துக்கான கொட்டகை ஒன்றை நன்கு செலவு செய்து நிறுவி, வேலையைத் துவங்கினார், நிலம், கட்டிடம், இயந்திரங்கள் மற்றும் பிற தேவைகள் என செலவு மொத்தம் எட்டு கோடியைத் தொட்டது. அந்த எட்டு கோடி ரூபாயில் மூன்றில் இருமடங்கை வங்கிக் கடனாகவும், மீதியை தமது சொத்தை விற்றும் நாதன் திரட்டினார்.

மிகவும் உற்சாகமாகத் தொடங்கிய நாதனுக்கு ஆறே மாதங்களில் கேடு வந்து சேர்ந்தது. வருமானம் பல காரணங்களால் குறையத் துவங்கியது. சந்தைக் காரணங்களால், முப்பது சதவிகிதம் புதிய வேலைகள் வருவது தடைபட்டது. வாடிக்கையாளர்கள் விலையைக் குறைக்கச் சொல்லி வற்புறுத்த ஆரம்பித்தனர். இல்லையேல் அவர்களை போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு இழக்க நேரிடும் நிலை ஏற்பட்டது. இரண்டாவது ஆண்டிலேயே நட்டம் காட்டத் தொடங்கின கணக்குகள், வங்கிக்கு பணத்தை செலுத்த இயலவில்லை, பணவரவு மிகவும் மெலித்து போனது. நாதனுக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டது.

நாதனின் நலம் விரும்பும் நண்பர் ஒருவர், இதனைத் தீர்க்க வழிகளை யோசிக்க அறிவுறுத்தினார். அதன்படி பெயர் பெற்ற பொறியியல் நிறுவன ஆலோசகர் ஒருவரை பணிக்கு அமர்த்தி, நிலைமையை சீர்படுத்த வழி வகைகள் பரிந்துரைக்குமாறு நாதன் வேண்டினார். ஆலோசகருக்கு, நிதி, வர்த்தகத் துறையிலும் நல்ல அனுபவம் இருந்தது. அவர் தமது வேலையைத் துவங்கி சில வாரங்களில் கீழ்க்காணும் பட்டியலை முன்வைத்தார்.

1.    நாதன் தமது சந்தை நிலையை சரியாகக் கணிக்காமல் அதிக செலவில் புதிய இடத்துக்கு நிறுவனத்தை நகர்த்திவிட்டார்.
2.    தமது வணிக அதிகரிப்பை சமாளிக்க அவர் அருகிலேயே மற்றொரு வாடகை இடத்தைத் தேர்வு செய்திருக்க வேண்டும்.
3.    வங்கியில் கடன் பெறும் போது பேரம் பேசி குறைவான வட்டிக்கு முடித்து இருக்க வேண்டும், ஏனெனில் போட்டி வங்கிகள் அவ்வாறு தரத் தயாராக இருந்தன.
4.   புதிய இயந்திரங்களை வாங்கியதற்கு பதிலாக பழையனவற்றை வாங்கி புதுப்பித்து இருந்தால், குறைந்த செலவில் வேலை நடந்து இருக்கும்.
5.   கட்டிடம், இயந்திரம் மற்றும் தினசரி நடவடிக்கைகளை மேலும் முறையாக திட்டமிட்டு இருந்தால் செலவுகள் குறைந்து இருக்கும்.
6.   தேவையற்ற அலங்கார செலவுகளை தவிர்த்து, காற்றோட்டம், இயற்கை ஒளி போன்றவற்றை கட்டுமானத்தில் ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
7.  நன்னீர் தரக்கூடிய நிலத்தைப் பார்த்து வாங்கி இருந்தால், நீரை விலை கொடுத்து வாங்கி செலவை அதிகரிக்கும் நிலை தவிர்க்கப்பட்டு இருக்கும்.

நாதன், ஆலோசகர் சொன்ன பரிந்துரைகளை செயல்படுத்தி நிலைமையில் இருந்து மீண்டு வர ஒன்றரை ஆண்டு ஆகியது. அதற்குள் அவருக்கு ஏராளமான பணச்செலவும், கடும் மன உளைச்சலும் ஏற்பட்டது.

இதே போன்று எனது நண்பர் தவறாக முடிவு எடுத்து சிக்கலை ஏற்படுத்திக் கொண்டார், வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மை, குறைந்த லாப விகிதம், தேவையற்ற முதலீடுகள், பணவரவை ஒழுங்கு படுத்தாமல் இருத்தல், அதிக வட்டிக்கடன் என்று கணிப்புகளை தவறாகச் செய்து பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டார். முறையான ஆய்வு, சோதனைகளை மேற்கொள்வது தொழில், வணிகம் செய்வோருக்கு இன்றியமையாததாகும்.

மக்களிடையே, அடிப்படையான கேள்விகளைக் கேட்டு முடிவுகள் எடுத்தல் என்பதே அரிதாக இருக்கிறது. முதலீடு செய்யுமுன் அது தேவையா என்ற ஆராய்ச்சி செய்யப்படுவது இல்லை. தவறான முடிவுகளால், பண இழப்பு, நிறுவன இழப்பு, மன உளைச்சல், நோய் என்று நேரிட்டு விடுகிறது.

முறையாக காரியத்தை ஆற்றுதல், வியூகங்களை அமைத்தல், ஆலோசனைகள் கேட்டல் போன்றவற்றுடன் செய்யும் வேலைகள், பல பிரச்சினைகளைத் தடுத்து, குறைந்த செலவில் நன்மை பயக்கும்.

இது ஒரு வீடு வாங்குவதற்குக் கூட பொருந்தும், பெரிய முதலீட்டை செய்யும் பொழுது பொறுமையுடன் அனைத்து கடும் கேள்விகளையும் கேட்டு நன்கு தெளிவு பெற்ற பிறகே முடிவு எடுக்க வேண்டும். அதுவே நிம்மதியையும் மன அமைதியையும் நமக்கு அளிக்கும்.


வெங்கட்ரமணி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொழில்நுட்ப, பொருளாதார ஆய்வுகளும், சோதனைகளும் முதலீடுகளுக்கு இன்றியமையாதது.”

அதிகம் படித்தது