தொழில் முனைவோர்களை உருவாக்குவோம்
சித்திர சேனன்Aug 1, 2015
கேள்வி: எல்லோரும் வேலையைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்? யார் வேலையை வழங்கப்போகிறார்கள்?
பதில்: இன்றைய காலகட்டத்தில் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் 99 விழுக்காடு மாணவர்கள் வேலையைத்தேடி Campus Interview என்ற ஒரு பெருவிழா ஆண்டுதோறும் நடந்துகொண்டிருக்கிறது. அதில் ஒரு சில நபர்களுக்கு நல்ல வேலைகள் அமையலாம், சிலநபர்களுக்கு அமையாமல் போகலாம், சில நபர்களுக்கு வருத்தமும் ஏற்படலாம். இப்படி ஒரு காலகட்டத்தில் ஏன் நீங்கள் வேலையைத் தேடுகிறீர்கள்?, நீங்கள் ஏன் பத்து நபர்களுக்கு வேலையைத் தரக்கூடாது?, அதற்கான வசதி வாய்ப்புகள் நம் நாட்டில் இருக்கிறதா?, அதற்கு சமுதாயம் என்ன செய்கிறது?, கல்விச் சாலைகள் என்ன செய்கிறது?, மத்திய மாநில அரசுகள் என்ன செய்துகொண்டிருக்கிறது? இதையெல்லாம் ஒரு இளைஞனுக்கு வழிகாட்டுதலாக இருந்தால், நிச்சயமாக அந்த இளைஞனை புதிய பாதையில், வேலை வழங்குபவராக மாற்றக்கூடிய தருணமாக அமையும். எல்லோரும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத்தான் வேலை செய்யவேண்டும் என்ற ஒரு மோகத்தில் இருந்து விலகி இந்தியாவிலிருந்தே நானும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தை உருவாக்கலாம். அதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உலகமயமாக்கப்பட்ட இந்த சந்தையில் இன்றைக்கு இருக்கிறது. இதற்கு பெற்றோர்கள் என்ன செய்யவேண்டும்?, கல்விச் சாலைகள் என்ன செய்ய வேண்டும்?, மத்திய மாநில அரசுகளை எப்படி அணுக வேண்டும்? இம்மாதிரியான வழிகாட்டுதல் இருந்தால் நிச்சயமாக ஒரு இளைஞன் வேலை தேடுபவர்களை விட, வேலை வழங்குபவராக மாறக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. இந்த வழிகாட்டுதலை செய்வதுதான் இந்தத் தொழில் முனைவோர் மன்றம்.
குறிப்பாக இளைஞர்களுக்கு நேரடியாக வழிகாட்டுதலை செய்வது மட்டுமல்லாமல், அந்த இளைஞனை வேலை வழங்குவதற்கான பக்குவத்தை கொடுக்கிறது. அதனை எப்படிக் கொண்டு வருவது என்று பார்த்தீர்கள் என்றால் கல்லூரியில் வேலைக்கான மேலாளர் (placement officer) இருக்கிறார். எல்லா கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் வேலைவாய்ப்புத் தேடலுக்கான முன்னுரிமை அதிகமாகக் கொடுக்கப்படுவது இருக்கிறது, ஆனால் வேலை வழங்குபவர்களுக்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்றால், அது குறைவாக இருக்கிறது. ஆனால் மத்திய மாநில அரசுகள் பல திட்டங்களை அமைத்திருப்பதால் அந்தக் கல்லூரிகளும், பல்கலைக்கழகமும் Entrepreneur Development Cell என்ற ஒரு துறையை அமைத்தார்களானால் அந்த இளைஞனை வேலை வழங்குபவராக மாற்றக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன.
கேள்வி: தொழில் நுட்பம், கலை, மொழி, மருத்துவம் போன்ற துறைகளை கல்லூரிகளும் பல்கலைக்கழகமும் வழங்குகிறார்கள். ஆனால் தொழில் முனைதலை யார் வழங்குகிறார்கள்?
பதில்: பொதுவாக பார்த்தீர்கள் என்றால் ஒரு மாணவன் ஒரு குறிப்பிட்ட வேலைக்குப் போக வேண்டும் என்றால் அதற்கு சம்பந்தமான படிப்பு படிக்கலாம். நான் ஒரு சிறந்த மருத்துவராக ஆகவேண்டும் என்றால், அது இந்திய மருத்துவமாக இருக்கலாம் அல்லது ஆங்கில மருத்துவமாக இருக்கலாம் என்றால், அதற்கான படிப்பு இருக்கிறது. ஒரு வழக்கறிஞராகவேண்டும் என்றால் அதற்கான படிப்பும் இருக்கிறது. அல்லது மேலாண்மைத்துறையில் படிக்கவேண்டும் என்றால் MBA போன்ற படிப்புகள் இருக்கின்றன. ஆனால் நான் படிக்கவேண்டும், அதே சமயத்தில் வேலைக்கும் போகக்கூடாது, நான் சுயமாக ஒரு தொழில் செய்யவேண்டும் என்றால், அதற்கு ஏதேனும் படிப்பு இருக்கிறதா?, தொழில் முனைவோர் ஆவதற்கு ஏதேனும் படிப்பு இருக்கிறதா? என்று ஒரு இளைஞன் கேட்டால், இன்றைக்கு பொதுவாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இந்தக் குறையைப் போக்குவதற்கான வழிமுறைகள் உள்ளன. இதற்கான பங்கு யாருக்கு என்று கேட்டீர்கள் என்றால், இந்தப் பல்கலைக்கழகமும் கல்லூரியும் தங்கள் பாடத்திட்டத்திலேயே அவரவர் துறையில் தொழில்முனைதல் என்ற ஒரு பாடத்திட்டம் இருந்தது என்றால் அந்த இளைஞன் அந்தத் துறையிலேயே, தொழில்முனைவோராக ஆக வாய்ப்புகள் இருக்கிறது. இல்லையென்றால் என்ன ஆகும் என்றால், ஒரு B.E, B.Tech படித்து முடித்துவிட்டு, ஒரு பொறியியலில் படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்கவில்லை என்றால் அவன் ஒரு உணவு விடுதி ஆரம்பித்துவிடுவான். ஆனால் அந்தத் துறையில் தொழில் முனைதலைப் பற்றி சொல்லிக்கொடுக்கக்கூடிய பாடத்திட்டங்களிலேயே இருந்தது என்றால் அவன் அந்தத்துறையிலே வல்லமை பெற்று தொழில்முனைவோராக ஆவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி இல்லாத பட்சத்தில் இந்த சமுதாயத்தில் எது பெரும்பான்மையாக நல்ல தொழில் என்று அவனே தேடல் ஆரம்பித்து அவன் படித்த படிப்பு அல்லாத ஒரு தொழில் செய்யக்கூடிய ஒரு காலகட்டம் உருவாகிறது. ஆதலால் இந்தப் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் தொழில் முனைதலையும் ஒரு பாடத்திட்டமாக உருவாக்கி அந்த மாணவனுக்கு அந்த நிலையிலேயே இதை ஊட்ட வேண்டும்.
கேள்வி: மத்திய மாநில அரசுகள் இளைஞர்களை தொழில் முனைவோர் ஆக்குவதற்கு ஏதேனும் திட்டங்கள் வைத்துள்ளனவா?
பதில்: மாநில அரசுகள் நிலையில் பார்த்தீர்கள் என்றால் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் மாவட்ட தொழில் மையம் என்று ஒன்று இருக்கிறது. அதற்கு ஒரு பொது மேலாளரும் இருப்பார். ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் பயிற்சி மையமும், தொழில்முனைவோர் பயிற்சி மையமும் இருக்கிறது. அந்த மாவட்ட மையங்களுக்கு, தொழில் செய்யவேண்டும் என்று விரும்பி வருபவர்களை அவர்களுக்கான முப்பது நாள் பயிற்சியைக் கொடுத்து, அவர்களுக்கு போதுமான நிதி உதவி வழங்குவதற்கு மாநில அரசுத் திட்டங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு ஆண்டும் பலரும் இந்தப் பயிற்சியை முடித்துவிட்டு மாநில அரசு வழியாகவே நிதி உதவியும் பெற்று தொழில் முனைவோராக ஆகியிருக்கிறார்கள். இதுபோலவே மத்திய அரசும் பயிற்சி மையங்களை வைத்துள்ளன. அந்த பயிற்சி தொழில்முனைவோராவதற்கு, அது தையல் பயிற்சியாக இருக்கலாம் அல்லது மென்பொருள் தொடர்பான பயிற்சியாக இருக்கலாம் இதற்கு MSME என்று சொல்லக்கூடிய பயிற்சி மையங்கள் உள்ளன. இந்த பயிற்சி மையங்கள் மூலம் தனி ஒரு இளைஞன் இந்த பயிற்சியை முடித்துவிட்டு சுயமாக தொழில் செய்யக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் அவன் கடந்து வருவதற்கு அவனாகத் தேடுவதை விட இதை இந்த பல்கலைக்கழகமும் கல்லூரிகளும் இந்த entrepreneur development cell என்ற ஒன்றை உருவாக்கி அவனுக்கு இதையெல்லாம் மத்திய அரசும் மாநில அரசினுடைய திட்டங்கள் உள்ளன என்று யாராவது ஒருவர் அவ்வப்போது அதை ஒரு பாடத்திட்டமாகவோ அல்லது ஒரு சில நிகழ்வுகள் மூலமாகவோ செய்வார்களேயாயின் அவனுக்கு அப்பொழுதே தேடலுக்கான விடை கிடைக்கிறது. படித்து முடித்துவிட்டு தேடுவதை விட, அந்த செடி வளரும் காலத்திலேயே தண்ணீர் ஊற்றினோம் என்றால் அது செம்மையாக வளர்வது போல இருக்கும்.
கேள்வி: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக பயன்பெறலாம் என்று சொன்னீர்கள், அதேபோல கல்லூரி பல்கலைக்கழகங்களிலேயே மாணவர்களை தொழில்முனைவோராக்குவதற்கான திட்டம் இருக்கிறது என்பதைப்பற்றி கூறுங்கள்?
பதில்: AICTE என்று சொல்லக்கூடிய அகில இந்திய அளவில் இருக்கிற தொழில் பயிற்சி என்ன செய்கிறார்கள் என்றால் ஒவ்வொரு மாணவனை அதாவது கோழி அடைகாக்கும் என்று சொல்கிறோம் இல்லையா அதுமாதிரி காப்பு நிலையம் (incubation center). தொழில் முனைதல் விடயங்கள் எப்படி என்றால் வெறும் பாடத்திட்டம் சொல்லிக்கொடுப்பது ஒரு விதம், மற்றொன்று என்னவென்றால் அதை உருவகப்படுத்த வேண்டும், அதாவது அந்த உணர்வை ஏற்படுத்தவேண்டும். அதற்கு என்னசெய்கிறார்கள் என்றால் காப்பு நிலையம் (incubation center) என்பதை பல்கலைக்கழகங்களில் உருவாக்கியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு அந்த பல்கலைக்கழகத்தில் இருக்கிற ஒரு உணவு விடுதி அந்த மாணவர்களாலேயே நடத்தப்படுகிறது. சில கல்லூரிகளில் ஒரு சலவை செய்யும் கடை இருக்கிறது, அந்த சலவை செய்யும் கடையை நடத்துவது கூட அந்த மாணவர்களே நடத்துகிறார்கள். அப்பொழுது அந்தத் தொழில் பற்றிய அறிவும், நுட்பங்களும் தெரியவருகிறது. இதற்கான நுட்பங்களை சொல்லித்தருவதுதான் இந்தத் தொழில் முனைவோர் மன்றம். இது மாணவர்களுக்கு மட்டுமல்ல, இந்தக் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும், மத்திய மாநில அரசினுடைய முழுத்திட்டங்களுடைய பலனைத் தெரிந்து, அந்த பலனை மாணவர்களுக்கு எடுத்து செல்வதற்கான பாலமாக மாநில அரசு திட்டங்களையும் மாணவர்களுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் இந்த மும்முனையையும் இணைப்பதுதான் இந்த தொழில் முனைவோர் மன்றத்தின் சேவை.
கேள்வி: கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மாணவர்களை தொழில் முனைவோராக ஆக்குவதற்கு என்ன செய்யவேண்டும்?
பதில்: பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கும் பொழுதே அவனுக்கு திட்டம் (Project) செய்துவரவேண்டும். அதற்கான மதிப்பீடுகள்கூட தருகிறார்கள். அந்தத் துறை சார்ந்த திட்டத்தை (Project) அவர்கள் செய்கிறார்கள். ஒரு மென் பொருள் என்றால் அந்த மென்பொருள் தொடர்பான திட்டம் (Project) பண்ணுகிறார்கள். மின் தொடர்பான படிப்புகள் என்றால், அது தொடர்பான திட்டம் (Project) பண்ணுகிறார்கள். ஆனால் இதை மட்டும் செய்யாமல் அந்தக் கல்லூரி என்னசெய்யவேண்டும் என்று கேட்டீர்கள் என்றால், அந்தத் துறை சார்ந்த திட்டமாக (Project) இருக்க வேண்டும், அந்த திட்டத்தில் (Project) வெறுமனே கண்டுபிடிப்பாகவோ அல்லது ஒரு செயலியாகவோ இல்லாமல், அந்த திட்டத்தை (Project) சந்தைப்படுத்தக்கூடிய ஒரு கருவியாகவோ ஒரு பொருளாகவோ எப்படி உருவாக்குவது, அதை எப்படி ஒரு கண்டுபிடிப்பாக இல்லாமல் திட்டமாக (Project) இல்லாமல், அதை அவன் தொழிலுக்காக எடுத்து செய்யவேண்டும் என்றால் அதையும் அந்த திட்டத்தில் (Project) சேர்க்கவேண்டும். ஜாவாவில் ஒரு திட்டம் (project)? என்று இருக்கக்கூடாது. அது இல்லாமல் இந்த மாதிரியான ஒரு மென்பொருளை உருவாக்கினால் இது சந்தைக்கு தேவைப்படுமா?, இதை சந்தைப்படுத்த முடியுமா? அதையும் அந்த திட்ட அறிக்கையில் (Projectreport) கொடுத்து அதற்கு ஒரு மதிப்பீடும் வைக்கிறோம். அப்பொழுது அதற்கான தேடல் ஏற்பட்டு அதற்கான அறிவையும் பெற்றுவிடுவான்.
கேள்வி: ஒரு இளைஞன் ஒரு தொழில் முனைவோராக உருவாக வேண்டும் என்றால் அவன் எதிர்கொள்ளும் முதல் சவால் எது?
பதில்: ஒரு காலகட்டத்தில் ஒரு குடும்பத்தில் இரண்டு, மூன்று குழந்தைகள் இருப்பார்கள். ஒருவர் வேலைக்குப் போவார், இன்னொருவர் தொழில் செய்ய விருப்பப்படுவார். அப்பொழுது அந்தக் குடும்பம் அவனுக்குத் தேவையான நிதி உதவியும், அதற்கான மதி நுட்பங்களையும், அதற்கான வழிகாட்டுதலையும் செய்துகொண்டிருந்தது. அல்லது ஒரு சமுதாய அமைப்பு இருக்கும், அந்த சமுதாய அமைப்பு அதை செய்துகொண்டிருந்தது. ஆனால் இன்று அந்த இளைஞன் எதிர்கொள்ளும் சவால் எதுவென்றால், அது அவனது குடும்பமாகத்தான் உள்ளது. ஏனென்றால் அந்தக் குடும்பத்தில் நான் வேலைக்குப் போகவில்லை, நான் தொழில் செய்யத்தான் போகிறேன் என்று சொல்லும் பொழுதே முதல் தடை அந்தக் குடும்பமோ, பெற்றோரோகத்தான் இருக்கும். அல்லது கணவன் தொழில் செய்யப்போகிறார் என்றால் மனைவி வேண்டாம் என்று சொல்லலாம். அல்லது மனைவி ஏதாவது ஒரு தொழில் செய்யப்போகிறார் என்று சொன்னால் கணவன் வேண்டாம் என்று சொல்லலாம். ஏனென்றால் தொழில் முனைவோருக்குபோராடும் பண்பு இருக்கவேண்டும். போராடுதல் என்ற பண்பு இருந்தால்தான் தொழில்முனைவோராக முடியும். இவரால் போராட முடியுமா? என்ற தன்னம்பிக்கை குறைவாக இருப்பதால்தான் இந்த சவாலை எதிர்கொள்வதில் சில நபர்களுக்கு சிக்கல் வருகிறது. ஆனால், முதல் சவால் அந்த குடும்பமும் சமுதாயமும் தான்.
கேள்வி: ஒரு இளைஞன் தொழில்முனைவோராவதற்கு ஒரு வழிகாட்டி தேவையா?
பதில்: ஒரு நாடார் சமுதாயம், ஒரு மார்வாடி சமுதாயம் என்று ஒவ்வொரு சமுதாய மக்களும், தன் சமுதாயத்திலிருந்து ஒருவர் தொழில்முனைவோராக வரவேண்டும் என்பதற்காக துடிக்கும் இளைஞர்களுக்கு உரம் ஊட்டுவதுபோல் அவனை தொழில் முனைவோர் ஆக்குவதற்கான எல்லா வசதிகளும் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று கூட்டுக்குடும்பமும் இல்லை, சமுதாய அமைப்புகளும் குறைந்துகொண்டு வருகின்றன, அரசியலமைப்பாக மாறிவிட்டது. அதனால் ஒரு இளைஞர் தொழில் முனைவோராக வேண்டும் என்றால் அவனுக்கு வழிகாட்டுதல் யார் என்பது ஒரு கேள்வியாகிவிடுகிறது, அந்த வழிகாட்டுதல் எப்படி இருக்கவேண்டும் என்ற நிலையும் தேவைப்படுகிறது. ஆலோசகர் என்ற பெயரில் சந்தையில் இருக்கிறார்கள், ஆனால் அந்த ஆலோசகர் முழுமையாக ஆலோசனை வழங்குவாரா?,அவனை வழிகாட்டுதல் செய்வாரா? என்பதும் ஒரு கேள்விக்குறியாக இருக்கிறதால், வழிகாட்டி என்பவர் எல்லா நிலைகளிலும் அந்த இளைஞனை பக்குவப்படுத்த வேண்டும். எந்த அளவிற்கு அந்த வழிகாட்டி இருக்கவேண்டும் என்றால், பெருங்கடலில் ஒரு கப்பல் எந்த திசையில் செல்லவேண்டும் என்று தத்தளிக்கும் காலகட்டத்தில் ஒரு களங்கரைவிளக்கம் எப்படி வழிகாட்டுகிறதோ, அதே மாதிரி இன்றைய இளைஞனுக்கு ஒரு வழிகாட்டி தேவைப்படுகிறது. அதைத்தான் இந்தத் தொழில்முனைவோர் மன்றம் செய்துவருகின்றது. ஒரு இளைஞன் தொழில் முனைவோராவதற்கும், பக்குவப்படுவதற்கும் வள்ளுவன் காட்டிய வழிதான் எனலாம்.
பொருள் கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.
என்று வினைசெயல் என்ற அதிகாரத்தில் மிகத் தெளிவாகவே வள்ளுவன் வழிகாட்டுதலைக் கொடுத்திருக்கிறார்.
கேள்வி: தற்காலச்சூழலில் ஒருவர் என்ன தொழில் செய்வது?,குலத்தொழிலா? குடும்பத்தொழிலா?, சுயதொழிலா?.
பதில்: தமிழருடைய பண்பாட்டு நெறியில் பார்த்தீர்கள் என்றால் குலவாரியாக இருந்ததுதான் பின்னாளில் சாதி, அரசியல் என்றெல்லாம் கொண்டுவந்தார்கள். ஆனால் குலத்தொழில் என்பது இன்றைக்கும் இருந்துகொண்டு வருகிறது, இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் அந்தக் குலத்தொழிலை ஒட்டி அந்த இளைஞனின் சிந்தனை இருக்குமா என்று கேட்டீர்கள் என்றால், எல்லோருக்கும் அது இருக்காது. “நான் ஏன் செய்யவேண்டும், நான் படித்த படிப்பு என் குலத்தொழிலை விட்டு வேறு இருக்கிறது” என்பவர்கள் இருக்கிறார்கள். சிலர் படித்திருப்பார்கள், ஒரு எடுத்துக்காட்டை நேரடியாக சொல்லவேண்டும் என்றால், அவர் கணிணித் துறையில் வல்லமை பெற்றிருப்பார் அந்த இளைஞன், அவருடைய குலத்தொழில் வேறு ஏதாவது ஒன்று இருக்கும். விவசாயம் என்றே வைத்துக்கொண்டால் நான் கணிணித்துறை படித்திருக்கிறேன், நான் ஏன் விவசாயத்திற்குப் போகவேண்டும் என்று நினைக்கலாம்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் எந்தத் துறை படித்திருந்தாலும் தன் குலத்தொழிலுக்கு மாற்று சிந்தனையினால் அந்தக் குலத்தொழிலையே மேம்படுத்தலாம் தன்னுடைய படிப்பு வழியாக. அந்த இளைஞனுக்கு ஆர்வம் இருந்தால் அந்தக் குலத்தொழில், தான் படித்த படிப்பு இவையிரண்டையும் இணைத்து அந்தத் தொழிலை மேம்படுத்தலாம். இன்று எப்படி கணிணித்துறையில் வல்லமை பெற்றவர்கள் Travels என்று சொல்லக்கூடிய வாகன வசதியை இணையதளம் வழியாகவும், Android appவழியாகவும் அதே அந்த வாகனத்தொழிலை மேம்படுத்தியிருக்கிறார்கள். வாகனத்தொழிலில்தான் அப்பா இருந்தார், ஆனால் நான் கணிணித்தொழிலைப் படித்திருக்கிறேன் என்றால், அந்தக் கணிணித்தொழிலை தன்னுடைய தந்தையாருடைய வாகனத்தொழிலுக்கு பயன்படுத்துகிறார். ஆக குலத்தொழிலாக இருந்தாலும், குடும்பத் தொழிலாக இருந்தாலும், தான் பெற்ற கல்வியை தன் குடும்பத்திற்கும், தன் குலத்துக்கும் கொண்டுவரலாம்.
இல்லை நான் இதில் மாறுபடுகிறேன் என்றால் கூட தவறில்லை. நான் மாறுபடுகிறேன், என்னால் என் குடும்பத்திற்கோ, குலத்திற்கோ நான் பெற்ற கல்வி ஒத்துப்போகுமா என்று தெரியவில்லை, அதில் மன ஒற்றுமை இருக்கலாம், மன வேற்றுமை இருக்கலாம் அல்லது இந்தத் தொழில்நுட்பம் அதோடு ஒத்துப்போகுமா என்ற ஒரு சந்தேகம் இருக்கலாம் என்று எண்ணினால் அப்படி இருக்கிற காலகட்டத்தில் தவறே இல்லை அவர்களுடைய சுயதொழிலையே செய்யலாம். இதில் ஒரு சின்ன மனநிலையும், அங்கு சுற்றி இருக்கிற குடும்பமும் அவனுக்குக் கொடுக்கும் உற்சாகத்தைத்தான் முடிவெடுக்கப் போகிறது. முடிவு அந்தக் குலமும் அந்தக் குடும்பமும் இந்தத் தொழில் வேண்டாம் நீ புதிய தொழிலே செய்துகொள் என்று சொல்லும் அந்த உற்சாகம்தான் முக்கியம். அந்த உற்சாகம் கிடைத்தது என்றால் குலத்தொழில் குடும்பத்தொழில் செய்யலாம் தவறே இல்லை. அவன் படித்த சுயதொழிலை செய்தால்கூட அதையும் அந்தக் குடும்பம் உற்சாகப்படுத்த வேண்டும், இல்லை என்று கட்டாயப்படுத்தக்கூடாது.
கேள்வி: நான் ஒரு தொழில் முனைவோராக ஆகப்போகிறேன் என்று முடிவெடுத்த ஒரு இளைஞன் மனரீதியாக எவ்வாறு தயாராக வேண்டும். எதையெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும், யாரை நாட வேண்டும்?
பதில்: ஒருவர் மருத்துவப் படிப்பை படித்து முடித்துவிட்டார் என்றால், ஒன்று உடனடியாக நான் அரசு சார்ந்த மருத்துவமனைக்கு வேலைக்குச் செல்கிறேன் அல்லது கிராமப்புறத்தில் சென்று சேவை செய்யப்போகிறேன் அல்லது சுயமாக ஒரு மருத்துவமனையை உருவாக்கப்போகிறேன் என்பது தெளிவாக இருக்கும். ஆனால் பல படிப்புகள் இன்றைக்கு வந்திருந்ததால் அந்தப் படிப்பு சார்ந்த தொழிலைத் தொடங்கவேண்டும் எனும் பொழுது, அதற்கான பக்குவநிலை வரவேண்டும். இதற்கான நிதி எங்கு திரட்டுவது, இதற்கான சந்தையை எங்கே தேடுவது, வணிக யோசனை(Business Idea) என்ன செய்யவேண்டும் என்பதே தெளிவில்லாத இளைஞர்கள் நிறைய நபர்கள் இருக்கிறார்கள், இப்படியாக ஒரு சிறிய குழப்ப நிலையிலேயே இருப்பார்கள். அந்தப் பக்குவத்தைக் கொண்டுவருவதற்கு அவர்கள் என்ன செய்யவேண்டும் என்றால், அதற்கு வெளியே பயிற்சிகள் இருக்கிறது, இல்லை என்று சொல்ல முடியாது. மத்திய மாநில அரசு திட்டங்களும் இருக்கிறது, இல்லை என்று சொல்லமுடியாது. இதற்கு உரம் ஊட்டுவதும், இதை வளர்ப்பதற்கும், அந்த இளைஞரைப் பக்குவப்படுத்துவதற்கும் முழுமுதற் காரணமாக இருப்பது அந்தக் கல்லூரிகளும் பல்கலைக்கழகமும்தான். ஏனென்றால் அதுதான் அவன் வளருகிற இடம், அதுதான் அவன் பக்குவப்படுகிற இடம். அவனை அங்கேயே வளர்த்துவிட்டார்கள் என்றால் அவனுடைய தொழில் தோல்வியில் முடியாது. வெளியே வந்து கற்றுக்கொள்ளலாம், அதில் சிலவற்றை அடிபட்டுக் கற்றுக்கொள்ள வேண்டும்.
கேள்வி: தொழில் முனைவோர் மன்றம் பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் ஆற்றி வரும் சேவை என்ன?
பதில்: சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர் எங்கு உருவாகிறார்கள் என்றால் இந்த மாதிரியான கல்லூரிகளில் படித்து வரும்பொழுது சுயமாக தொழில் செய்வதற்கோ அல்லது குடும்பத் தொழில் செய்வதற்கோ உருவாகிறார்கள். அப்படி உருவாகும் கட்டத்தில் இன்றைக்கு எந்த இடத்தில் இடைவெளி அதிகமாக ஏற்பட்டுவிட்டது என்றால், முதிர்ந்த தொழில்முனைவோர்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரி, மத்திய மாநில அரசினுடைய திட்டங்கள் அதனுடைய நிதி ஆதாரங்கள், தொழில் முனைவோராக ஆகத்துடிக்கும் இளைஞர்கள் இவற்றையெல்லாம் இணைக்கும் பாலமாகத்தான் இந்தத் தொழில் முனைவோர் மன்றம் இருக்கிறது. உதாரணத்திற்கு முதிர்ந்த தொழில் முனைவோர்கள், அவ்வப்போது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அந்தப் பல்கலைக்கழகத்திற்கு சென்று இளைஞர்களுக்கு, தான் பெற்ற அனுபவங்களை, தான் இளைஞனாக இருந்து எப்படி இன்று முதிர்ந்த தொழில் முனைவோரானார் என்ற அனுபவங்களை ஒரு நிகழ்வு மூலமாக, குறும்படங்கள் மூலமாக சில பாடங்களை கற்றுத்தர வேண்டும். இது பாடத்திட்டத்தில் இல்லாத ஒன்று, அதை செய்கிற வேலையைத்தான் இந்தத் தொழில் முனைவோர் மன்றம் செய்கிறது. அந்தந்தத் துறையில் வெற்றி பெற்று தாம் கடந்த பாதையை இந்த முதிர்ந்த தொழில் முனைவோர் சொல்வதுதான், இன்றைக்கு இளைஞர்களை பக்குவ நிலைக்குக் கொண்டு வரமுடியும். இதை யார் செய்வது என்ற ஒரு கேள்விக்குறி எழும்புகிற பொழுதுதான், இந்த இடைவெளியை நிரப்பி பாலம் அமைத்து, மத்திய மாநில அரசு, கல்விச்சாலைகள், முதிர்ந்த தொழில் முனைவோர்கள், தொழில் முனைவோராகத் துடித்துக்கொண்டிருக்கும் இளைஞர்கள் இந்த நான்கு முனையையும் இணைப்பதுதான் இந்தத் தொழில் முனைவோர் மன்றத்தினுடைய பணி.
கேள்வி: இன்று கல்லூரிகளில் படிக்கக்கூடிய இளைஞர்களுக்கு தாங்கள் கூற விரும்பும் கருத்து யாது?
பதில்: இந்தியாவை ஒரு வல்லரசாக ஆக்கவேண்டும் என்று எல்லோரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். வல்லரசாகவேண்டும் வல்லரசாகவேண்டும் என்றால் மனிதவளம் மிகுந்த நம் நாட்டில், என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் என்று சொல்வது மாதிரி எல்லா வளங்களும் இங்கே இருக்கிறது, அந்த வளங்களை அப்படியாக வெளியே சந்தைப்படுத்துவதில்தான், நம் வளங்களை நாம் இழந்து விடுகிறோம். குறைந்த விலையில் அந்தப் பொருட்களை தாரை வார்த்துக் கொடுத்துவிடுகிறோம். அவரவர் மாவட்டங்களில் ஒரு வளம் இருக்கிறது, உலகத்திலேயே இல்லாத புகழ் நம் நாட்டிற்கு இருக்கிறது. என்னவென்று கேட்டீர்கள் என்றால் ஒவ்வொரு ஊருக்கோ ஒவ்வொரு மாவட்டத்திற்கோ தொழில் சார்ந்த இணைப்புதான் இருக்கும். எடுத்துக்காட்டாக காஞ்சிபுரம் என்றால் பட்டு, கும்பகோணம் என்றால் வெற்றிலை, பித்தளை, திருப்பூர் என்றால் பருத்தி, கோயம்புத்தூர் என்றால் பொறியியல் துறை சார்ந்த தொழில் (Engineering Industries), சென்னை என்றால் ஆட்டோ மொபைல் தொழில் (Auto mobile Industries) இப்படி தொழில் சார்ந்த நகரமாக இருக்கிற இந்த காலகட்டத்தில் மாறிவருகிறது. ஆனால் பன்னாட்டு நிறுவனங்களை நாம் வளர்த்துக்கொண்டிருக்கிறோம், நம் நாட்டை மறந்துவிடுகிறோம். அந்த இளைஞன் பன்னாட்டு நிறுவனங்களுக்கு உழைத்தது போதும், குறைந்தது பத்து சதவிகித இளைஞன் நம் நாட்டை வளமாக்குவதற்கு வரவேண்டும் என்பதுதான் இந்தத் தொழில் முனைவோர் மன்றத்தினுடைய ஆசை.
பா.சீனிவாசு அவர்களைத் தொடர்பு கொள்ள: மின்னஞ்சல் முகவரி: shri@pppindia.com
சித்திர சேனன்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொழில் முனைவோர்களை உருவாக்குவோம்”