செப்டம்பர் 19, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

தோகை குட்டி போடும் – சிறுவர் சிறுகதை

மா.பிரபாகரன்

Aug 15, 2015

beautiful girl writing in a village schoolதிவ்யாவும் முத்துலட்சுமியும் ஒரே பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவிகள், நல்லதோழியரும் கூட. தாங்கள் பள்ளிக்குக் கொண்டுவரும் பொருட்கள் பென்சிலோ, பேனாவோ, தின்பண்டமோ, அது எதுவாக இருந்தாலும், அதை அவர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வார்கள். அப்படித்தான் ஒருநாள் முத்துலட்சுமி பள்ளிக்கு மயில்தோகைகள் இரண்டினைக் கொண்டு வந்தாள். அதில் ஒன்றை திவ்யாவிற்குத் தந்தாள். திவ்யா மயிலை நேரில் பார்த்ததில்லை; அடுக்கடுக்காய் அமைந்த அடர்பச்சை வண்ண இழைகளின் நடுவே கருநீலநிறத்தில் கண்கள் போன்ற அமைப்புடன் தோகை மிகவும் அழகாக இருந்தது. திவ்யா தோகையால் தன்னை வருடிப்பார்த்தாள். அதன் தொடுகை இதமாய் இருந்தது.

“நீ இதை இரவு படுக்கப்போகும்போது உன் புத்தகத்தில் வைத்துவிட்டுப் படு! மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் இது குட்டி போட்டிருக்கும்!”- என்றாள் முத்துலட்சுமி. “அப்படியா?”-வியப்புடன் கேட்டுக்கொண்ட திவ்யா அதை தன் பையில் வைத்தாள்.

வீட்டிற்குப் போனதும், முதல் வேலையாக திவ்யா அந்தத் தோகையைக் அம்மாவிடம் காண்பித்தாள். “மிகவும் அழகாக இருக்கிறது! பாதுகாப்பாக வைத்துக்கொள்”- என்றார் அம்மா. அன்று இரவு படுக்கைக்குப் போகும் முன்னால் திவ்யா தோகையை தனது பாடப்புத்தகத்தில் வைத்து விட்டுப்படுத்தாள். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது தோகை குட்டி போடவில்லை. அடுத்தநாள், அதற்கடுத்தநாள், தோகை குட்டி போடவில்லை. எதற்கும் இருக்கட்டும் என தோகையைப் பாடப்புத்தகங்கள் மாற்றி வைத்துப்பார்த்தாள். அப்படியும் குட்டி போடவில்லை.

“முத்துலட்சுமிக்குக் குட்டிபோடும் மயில்தோகை, ஏன் எனக்கு மட்டும் போடமாட்டேன் என்கிறது?”- இந்த சந்தேகம் மனத்தில் எழ அம்மாவிடம் கேட்டாள்.

“தோகைக்கிட்ட சும்மா குட்டி போடு என்று சொன்னால் குட்டி போட்டு விடுமா? ஒரு பொருள் பரிசாக வேண்டும் என்றால், அதைப் பெறுவதற்கான முயற்சி வேண்டாமா? நீ எதுக்கும் உன் பாடங்களை நன்றாக படித்துவிட்டு வைத்துப் பார்! தோகை குட்டி போடுகிறதா என்று பார்க்கலாம்!”- என்றார் அம்மா. திவ்யாவும் ‘சரி’ என்று தலை ஆட்டினாள்.

திவ்யா நன்றாகப் படிப்பவள் தான். ஆனால் படிக்க உட்கார அவள் ரொம்பவே சோம்பல்படுவாள். வீட்டுப்பாடங்களைக்கூட பள்ளிக்கூடம் கிளம்பும் வேளையில் தான் அவதி அவதியாகச் செய்துவிட்டுப் போவாள். சமயங்களில் வீட்டுப்பாடங்களை முடிக்காமல் போய் ஆசிரியையிடம் திட்டுவாங்குவதுமுண்டு. ஆனால் அன்றைக்கு வழக்கத்திற்கு மாறாக பள்ளி விட்டு வந்தவுடன் படிக்க உட்கார்ந்தாள். கையோடு வீட்டுப்பாடங்களையும் செய்துமுடித்தாள். அப்படியே மறக்காமல் தோகையையும் பாடப்புத்தகத்தில் வைத்துவிட்டுப் படுத்தாள். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, என்ன ஆச்சரியம்…? தோகை குட்டி போட்டிருந்தது. திவ்யா மிகுந்த மகிழ்ச்சி கொண்டாள். “அம்மா! தோகை குட்டி போட்டிருக்குமா!”- என்றபடி அம்மாவிடம் ஓடினாள். “அப்படியா?”- என்று அம்மாவும் ஆச்சரியத்தில் கண்கள் அகல விரியக் கேட்டுக் கொண்டார். திவ்யா இந்த மகிழ்ச்சி தொடரவேண்டும் என்று ஆசைப்பட்டாள். ‘ஒரு பரிசு வேண்டும் என்றால் அதைப் பெறுவதற்கான முயற்சி வேண்டும்’- என்று அம்மா சொன்ன வார்த்தைகள் அவள் மனத்தில் வந்து நின்றது. ஒவ்வொரு நாளும் பள்ளியில் நடத்தப் பெற்ற பாடங்களை வீட்டிற்குவந்து அன்றே படித்தாள். வீட்டுபாடங்களையும் சமர்த்தாக செய்து முடித்தாள். தோகையும் தவறாமல் குட்டிபோட்டது.

என்னதான் சிறுவர்கள் என்றாலும் தர்க்க ரீதியான கேள்விகளும் அவர்கள் மனத்தில் எழும்தானே?. திவ்யாவின் மனத்திலும் அப்படி ஒரு கேள்வி எழுந்தது. மயில் தோகை அழகுதான். அது காண்பவரின் மனத்தைக் கவரும் விதத்தில் இருக்கிறது என்பதும் உண்மைதான். இருந்தாலும் அது உயிரற்ற பொருளல்லவா?, அது எப்படி குட்டி போடும்?. இந்தக் கேள்வி மனதைக் குடைய அம்மாவிடம் கேட்டாள். “எப்படி என்று எனக்குத் தெரியலையே!”-என்று அம்மா உதட்டைப் பிதுக்கினார்; பள்ளியில் முத்துலட்சுமியிடம் கேட்டுப்பார்த்தாள், அவளுக்கும் தெரியவில்லை. “தெரியலப்பா! நான் நன்றாக படிக்கும் போதெல்லாம் தோகை குட்டி போடுகிறது!”- என்றாள் அவள்.

திவ்யாவின் இந்தக் கேள்விக்கும் ஒரு நாள் விடை கிடைத்தது. அவளின் வீட்டில் அரங்குவீடு ஒன்று உண்டு. அந்த அரங்கு வீட்டில் பெரிய மரப்பெட்டி ஒன்று உண்டு, அதில் கொலுசாமான்கள், ஊஞ்சல், சங்கிலி, மருந்து அரைக்கும் கல்வம் என நிறைய பழைய சாமான்களை அம்மா பத்திரப்படுத்தியிருந்தார். அவைகளை அவ்வப்போது எடுத்து சுத்தம் செய்வார். ஒருநாள் அம்மா அரங்கு வீட்டில் வேலைசெய்தார். அப்போது திவ்யாவும் உடனிருந்தாள். திவ்யா அரங்கு வீட்டை நோட்டமிட்டாள். அங்கிருந்த அலமாரியின் பக்கவாட்டில் ஒருகை நுழையும் அளவிற்கான மாடக்குழி ஒன்று இருந்தது. இதுநாள்வரை அந்த இடத்தில் மாடக்குழி இருந்ததை திவ்யா பார்த்ததில்லை. அதைப் பார்க்கும் அளவிற்கு அவள் வளர்ந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை. உள்ளே என்ன இருக்கும்? என்ற ஆர்வம் மேலிட கைவிட்டுத் துழாவிப் பார்த்தாள். ஏதோ மென்மையாகத் தட்டுப்பட்டது. எடுத்துப் பார்த்தாள், நிறைய மயில்தோகைகள்.

அரங்குவீட்டில் எப்படி மயில் தோகைகள்? திவ்யாவிற்கு தோகை தருவதற்குப் பள்ளியில் ஒருமுத்துலட்சுமி இருக்கிறாள் என்றால், அம்மாவிற்கு தோகை தர ஒரு தோழி இருக்கமாட்டாளா என்ன? தோகையில் இருந்து ஒரு பிசுக்கு வாசனை வந்தது. இவள் காலையில் புத்தகத்தைத் திறந்தவுடன் குட்டித் தோகையிலிருந்து வருமே…! அதே வாசனை; திவ்யாவிற்குத் தோகை எப்படி குட்டி போடுகிறது என்பது புரிந்து விட்டது. இது அவளைப் படிக்க வைக்க அம்மா செய்த குறும்பு என்பதும் அவளுக்குப் புரிந்தது. அவள் அம்மாவைப் பார்த்தாள். அம்மா இவளை கவனிக்கவில்லை. வேலையில் மும்முரமாக இருந்தார். திவ்யா தோகைகளை மீண்டும் மாடக்குழிக்குள் வைத்தாள். தோகை குட்டிபோடும் இரகசியம் தனக்குத் தெரிந்த மாதிரி அவள் காட்டிக் கொள்ளவில்லை. அம்மாவும் இதுபற்றி ஒன்றும் சொல்லவில்லை. தன்னைப் படிக்க வைக்க இதை ஒரு வாய்ப்பாக அம்மா பயன்படுத்திக் கொண்டார் என்பது அவளுக்குப் புரிந்தது. அதனால் என்ன? இப்போதுதான் திவ்யா, அம்மா சொல்லாமலே தானாகப் படிக்க உட்கார்ந்து விடுகிறாளே? நன்மை பயக்கும் சில சின்னஞ்சிறு பொய்கள் அழகான பொய்கள் அல்லவா? பின்னாளில் திவ்யாவின் குழந்தை பிராயத்து நினைவுகளில் இந்தத் தோகை விளையாட்டும் ஒரு சுகமான நினைவாக இருக்கக் கூடும்தானே?


மா.பிரபாகரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தோகை குட்டி போடும் – சிறுவர் சிறுகதை”

அதிகம் படித்தது