மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நக்கண்ணையார் பாடல்களின் அடிநாதம்

முனைவர் மு.பழனியப்பன்

Oct 23, 2020

siragu pen pulavar1
சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்களில் குறிக்கத்தக்கவர் நக்கண்ணையார் ஆவார். இவர் பெருங்கோழியூர் நாயகனின் மகள் என்ற குறிப்பும் பெறப்படுகின்றது. பெருங்கோழியூர் என்பது தற்காலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில்  உள்ள பெருங்களுர் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். இவரின் தந்தையின் குலப்பெயரின்படி இவர் மரக்கலம் செலுத்தும் குலம் சார்ந்தவர் என்பதும் அறியக் கிடைக்கின்றது.

இவர் இருந்த ஊருக்கு தித்தன் என்பவனின் மகனான போரவைக் கோப்பெரு நற்கிள்ளி வந்துசேருகிறான். உறையூரில் இருக்கும் தன் தந்தையிடம் கொண்ட முரண்பாட்டால் பல ஊர்கள் தாண்டி பெருங்கோழியூருக்கு இவன் வந்து சேர்கிறான். வந்த அவனை ஊர் முன்னவர்கள் பாதுகாக்கின்றனர்.

அப்போது அவ்வூருக்கு ஒரு மல்லன் வருகிறான். அவன் ஆமூர் என்ற ஊரைச் சார்ந்தவன். அம்மல்லன் மற்போர் சண்டையில் வல்லவன். அவன் இவ்வூருக்கு வருகை தந்து தன்னுடன் சண்டையிட யாராவது வர இயலுமாக என்று கேட்க அவ்வூர் இளைஞர்களில் யாரும் முன்வராத நிலையில் போரவை கோப்பெரு நற்கிள்ளி முன்வருகிறான். இருவருக்கும் சண்டை நடைபெறுகிறது. சண்டையில் யார் வெற்றி பெற்றார் என்பதை கடைசி வரை ஊரார்கள் சொல்ல முன்வரவில்லை. இருவரும் சரிசமமாக போர் செய்தனர். ஆனால் நக்கண்ணையார் தன் பாடலில் நற்கிள்ளி வென்றான் என முடிவை அறிவிக்கிறார். அப்பாடலில் போரவை நற்பெருங்கிள்ளியைத் தன் தலைவன் என்று உரைக்கிறார்.

தன்னை உளப்படுத்திய இக்குறிப்பு காரணமாக இவரின் இக்காட்சி தொடர்பான பாடல்கள் புறநானூற்றில் இடம்பெறச்செய்யப் பெறவைக்கப்பெற்றுள்ளன. ஒரு பெண் தான் காதலிப்பவன் யார் என வெளிப்பட தெரிவிக்கக் கூடாது, ஓர் ஆடவன் தான் காதலிப்பவள் பெயரை வெளிப்படுத்தக் கூடாது என்ற நிலையில் இப்பாடல் சுட்டி ஒருவர் பெயர் கொள்ள வைத்து முறையால் அகப்பாடலில் இருந்து விலக்கப்பெற்று, அதே நேரத்தில் இப்பாடலின் வரலாற்றுக்குறிப்பு, கவிச்சிறப்பு கருதி விடவும் முடியாமல் புறநானூற்றில் இடம்பெறச் செய்யப்பெற்றுள்ளது.

அப்பாடல் பின்வருமாறு

என்னைக்கு ஊர் இஃது அன்மையானும்
என்னைக்கு நாடு இஃது அன்மையானும்
ஆடு ஆடு என்ப ஒரு சாரோரே
ஆடு அன்று என்ப ஒரு சாரோரே
நல்ல பல்லோர் இருநன்மொழியே
அம்சிலம்பு ஒலிப்ப ஓடி எம்இல்
முழாஅரைப்போந்தை பொருந்திநின்று
யான்கண்டனன் அவன் ஆடுஆகுதலே|| (புறநானூறு. 85)

என்ற பாடல் அதுவாகும். இப்பாடலில் ஊரார் தன் ஊர் சார்ந்தவன் கிள்ளி அல்ல என்பதால் அவன் பக்கம் சாராமல் நிற்கின்றனர் என்பது தெரியவருகிறது. ஆனால் உண்மையில் வென்றவனாக கிள்ளியை நக்கணையார் காணுகிறார்.

மேலும் கிள்ளி பற்றிய பற்பல குறிப்புகளை அவர் தம் புறநானூற்றுப் பாடல்களில் பதிவு செய்துள்ளார். கிள்ளி புல்லரசி உணவையே தற்போது உண்டுவந்தாலும், அவன் போரில் வெற்றி பெறும் அளவிற்குத் திறம் பெற்றுள்ளான். அவன் ஊரின் வெளியே ஓரிடத்தில் பாதுகாப்பாக தங்கியுள்ளான். அவனை எண்ணி என் மனம் வாடுகிறது. என் உடல் பசலை பூக்கின்றது.

ஊர்த் திருவிழாவிற்கு உப்பு விற்க வந்த உமணர்கள்  விழா முடிந்தபின் பொலிவற்று, சோம்பித்திரிவர். ஆனால் உழவர்கள் மகிழ்வுடன் தம் தொழில் காணப் புறப்படுவர். உமணர் போன்று நானும் மள்ளர் போன்று கிள்ளியும் உள்ளோம். போர் என்றால் மகிழ்வுடன் கிள்ளி வெளிவருவான்.  என் வருத்தத்தை அவன் அறிவானா? என்ற ஏக்கத்துடன் ஒரு பாடலை அவர் பதிவு செய்துள்ளார்.

என்னை புற்கை உண்டும் பாருந்தோளன்னே
யாமே புறஞ்சிறை இருந்தும் பொன்அன்னம்மே
போர் எதிர்ந்து என்னை போர்க்களம் புகினே
கல்லென் பேர் ஊர் விழவுடை ஆங்கண்
ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு
உமணர் வெரூஉம் துறையன் னன்னே (புறநானூறு, பாடல். 84)

இப்பாடலின் வழியாக நக்கண்ணையார் ஒருதலைக்காதலாக கைக்கிளையாகக் கிள்ளியைக் காதலித்துள்ளார் என்பது தெரியவருகிறது.

இதற்குத் திணை வகுத்த பழைய புறநாநூற்று திணைப்பகுப்பாளர்கள் இதற்குக் கைக்கிளைத் திணை என்று குறித்துள்ளனர். எனவே கைக்கிளை அன்புடைக் காமம் இல்லை என்பதால் அதனைச் சங்க அக இலக்கியங்களில் சேர்க்கும் மதிப்பை பெறவில்லை என்பது இதன்வழி தெரியவருகிறது. இருப்பினும் புறநானூற்றில் இப்பாடல்கள் சேர்க்கப்பெற்றிருப்பது என்பது புறத்திற்கு மாறான துறைகள் என்றாலும் புறப்பகுப்பு நெகிழ்வுடையது என்பதைக் காட்டுவதாக உள்ளது.

மற்றொரு பாடலில் நக்கண்ணையாரின் காதல் இன்பம் இன்னும் பெருகுகிறது. தலைவனை எண்ணி இத்தலைவி வருந்துகிறாள். இதன் காரணமாக அவள் உடல் மெலிகிறாள். இம்மெலிவால் வளையல்கள் அவளறியாமல் கழன்று விழுகின்றன. இதனால் அதனை மறைக்க அவள் யாது செய்யலாம் என எண்ணுகிறாள். அப்போது கிள்ளியைத் தழுவினால் இவ்வருத்தம் போகும் என்று அவள் மனம் சொல்லுகிறது. ஆனால் ஊர் தூற்றும் என்பதையும் அவள் மனம் அறிவுறுத்துகிறது. இவ்விரு நிலைபோல ஊரும் அவனின் வெற்றியை ஏற்கவும் இல்லை. மறுக்கவும் இல்லை என்று மற்போர் நிகழ்வை இப்பாடல் உறுதி செய்கின்றது.

இவ்வாறு மூன்று பாடல்கள் இவர் படைத்தனவாகப் புறநானூற்றுத் தொகுப்பில் கிடைக்கின்றன. இப்பாடல்கள் அகப்பாடல்கள், அகச்சாயல் மிக்க பாடல்கள் என்றபோதும், இதில் தலைவன் தலைவி பெயர்கள் அறியப்பட்டுள்ளதாலும், கைக்கிளை நிலையில் அமைந்ததாலும் புறப்பாடல்களுக்குத் தள்ளப்பெற்றுள்ளன.

பெண்கள் தங்கள் பாடல்களில் பிறர் காட்சிகளை, பிறர் செயல்பாடுகளைப் பாடுவதைவிட தம் வாழ்க்கையைப் பாடுகின்றனர் என்பது இப்பாடல்கள் வழி அறியவருகின்றது. மேலும் இவர்களின் தன் வெளிப்பாடு அக்காலத்தில் ஆண்புலவர்கள் மையத்தில் ஏற்கப்படுவதாக இல்லை என்பதை இப்பாடல்கள் புறப்பாடல்களாக ஆக்கப்பெற்றிருப்பதன் வாயிலாக அறியமுடிகின்றது.

இருப்பினும் இவர் அகப்பாடல்கள் பாடுவதிலும் வல்லவராக இருந்துள்ளார் என்பதை அகத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பாடல்கள் காட்டுகின்றன.

அகநானூற்றில் 252 ஆம் எண்ணுடைய பாடலும், நற்றிணையில் 19, 87 ஆம் எண்களுள்ள பாடல்களும் இவரால் பாடப்பெற்றுள்ளன. இவற்றில் இவரின் அகப்பாடல் புனைதிறம் வெளிப்படுகின்றது.
நற்றிணைப்பாடல்கள் இரண்டின் கருத்துகளும் பின்வருமாறு.

87 ஆம் பாடல் தலைவி தலைவன் பிரிந்தபோது அவனைக் கனவில் கண்டு மகிழ்ந்து பாடியதாக அமைகின்றது.
மாமரத்தில் ஒரு வெளவால் தூங்குகின்றது. அதன் கனவில் சோழர் குடி பிறந்த அழிசி என்பவனுக்கு உரிமையான காட்டில் உள்ள நெல்லிக்கனியும் அதன் சுவையும் இடம்பெறுகின்றது. இதனைக் கண்ட வெளவால் மகிழ்வது போல நானும் தலைவனைக் கனவில் கண்டு மகிழ்கின்றேன் என்பது இப்பாடலின் பொருளாகும்.

இப்பாடலிலும் இவரின் நிறைவேறாத தலைவனின் நெருக்கம் பாடப்பெற்றுள்ளது. மேலும் இவர் காட்டிய உவமை மாற்றோர் காட்டும் உவமைகளை விட மாறானது. வெளவால் உவமை என்பது வேறுபட்ட வித்தியாசமான உவமை. பெண்கள் நுணுக்கமாகவும், தங்களுக்கு அருகில் இருப்பதையும் உவமையாக ஆக்கும் படைப்பு எளிமை வாய்ந்தவர்கள் என்பது இதன்வழி தெரியவருகிறது.

தலைவியை கூடி நீங்கிய தலைவனைப் பார்த்து விரைவில் மணம்செய்து கொள் என்று தோழி சொல்லியதாக நற்றிணையின் 19 ஆம் பாடல் அமைகின்றது. சுறாமீனின் முன்பகுதி கொம்பு போல இலைகளைக் கொண்டது தாழை. தாழையின் அரும்பு யானையின் தந்தம் போல வெளிப்புறப்படுவது. அப்படிப்பட்ட தாழை மலர்ந்து மணம் வீசி அப்பகுதியை திருவிழாக் காணும் ஊர் போல் மணமூட்டுகின்றது. இத்தகைய பெருமை வாய்ந்த ஊரின் தலைவனே நீ தலைவியை விட்டுத் தேர்ப்பாகன் செலுத்தப் பிரிகிறாய். ஆனால் இவள் நீ பிரிந்தபின் நீ வருவதாகச் சொன்ன நாள் வரை உயிருடன் இருக்கமாட்டாள். அவ்வளவு துன்பத்தில் இருக்கிறாள் என்பது இப்பாடலின் பொருளாகும்.

இங்கும் தலைவியின் துயரம் பெரிதுபட பேசப்படுகிறது. நக்கண்ணையார் பாடல்களில் தலைவனைப் பெறாத தலைவியின் துயரமே நிரம்பிக்கிடக்கிறது என்பதை இதன்வழி உணரமுடிகின்றது.

இப்பாடலில் தாழைப் புதருக்கு இவர் காட்டியுள்ள பொருத்தம் பெண்படைப்பின் அடையாளமாக விளங்குகின்றது.

அகநானூற்றில் இவர் பாடிய பாடல் இவரின் நுண்ணறிவைக் காட்டுவதாக உள்ளது. புலியானது தன் இரையை வலப்பக்கத்தில் வீழ்த்தி உண்ணும். இடப்பக்கத்தில் வீழ்த்துவது என்பது அதற்குப் பிடிக்காத ஒன்று. அப்படி வீழ்த்திய விலங்கின் தசையை அது உண்ணாது. ஏனென்றால் புலியின் இடதுகை பாய்ச்சலால் அடிபடும் விலங்கு வலது புறம் விழவேண்டும். புலியின் இடது கைக்கே இத்தனை பலம். அந்தப்புலியை ஒரு யாளி வென்றது. அது யானையின்மீது மேலும் பாய்ந்தது. இந்த வழியாக வரும் தலைவன் நிலையை எண்ணி தலைவி வருந்துகிறாள்.

தலைவியை அடைய புலி, யாளி, யானை போன்றன வழி இடையூறு செய்வதைப்போல, தலைவியை அடையப் பலர் தடையாக இருந்துள்ளனர். அவர்களின் வலிமை பெரியது. அதனைக் கடந்துத் தலைவன் தலைவியை  அல்லது தலைவி தலைவனை அடைய வேண்டும் என்ற சவாலின் வெளிப்பாடே இப்பாடல் என முடியலாம்.

இவ்வாறு தலைவன் தலைவி இணைவில் ஏற்படும் இன்னலைப் பாடுகிறார் நக்கண்ணையார். ஏனெனில் அது அவர் வாழ்வில் விளைந்த நிகழ்வு. அதையே முதன்மைப்படுத்தி அவர் பாடல்களாக ஆக்கியுள்ளார் என முடியலாம்.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நக்கண்ணையார் பாடல்களின் அடிநாதம்”

அதிகம் படித்தது