ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

நடுகற்கள் எனும் நினைவுச் சின்னங்கள்! (பகுதி – 12)

முனைவர். ந. அரவிந்த்

Jun 26, 2021

நடுகற்கள் நாட்டின் நினைவுச் சின்னங்கள். முற்கால வரலாற்றினை உலகிற்கு சொல்லும் புத்தகங்கள். சங்க கால தமிழர்கள் இறந்த முன்னோர்களுக்காக நடுகற்கள் நட்டு வைத்தனர். மக்கள், தங்கள் மூதாதையர்களில் சிறந்து விளங்கியவர்கள் மற்றும் சிற்றரசர்களின் நினைவாக பெரிய கல்லினை ஊரின் பொது இடத்திலோ, நடுவிலோ நட்டு வைத்தனர். போர்க்களத்தில் வீரச்சாவு எய்திய வீரர்களுக்காகவும் நடுகற்கள் நடப்பட்டது. எனவே, நடுகற்களுக்கு ‘வீர கற்கள்’ என்றும் பெயர் உண்டு. தமிழகத்தில் முற்காலம் முதல் இன்றுவரை திருவிழாக்களில் சேவல் சண்டையிடுதல் நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ஒன்று. சேவல் சண்டையில் வெற்றி பெற்ற சேவலின் உருவம் பொறிக்கப்பட்ட நடுகல் கூட ஒருசில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. நடுகற்களில் அரசன் அல்லது போர் வீரனின் உருவம் பொறிக்கப்படுவதும் வழக்கமான ஒன்றாக இருந்துள்ளது.

நினைவுச் சின்னங்களாகிய நடுகற்களை சில இடங்களில் மக்கள் வணங்க ஆரம்பித்தனர். இவ்வகை நடுகற்கள் பிற்காலத்தில் குல தெய்வங்களாகவும் மாற்றப்பட்டது. தமிழகத்தில் செங்கம், தருமபுரி, தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெருமளவில் நடுகற்கள் காணப்படுகின்றன. இப்பகுதிகளில் ஆட்சி செய்த அரசன் அதியமான் காலத்தில் நடுகற்கள் நடப்பட்டதாக வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன.

அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் மற்றும் சிலப்பதிகாரம் போன்ற சங்ககால இலக்கியங்களில் நடுகற்கள் பற்றிய பாடல்கள் அடங்கியுள்ளன. நடுகற்களுக்கு தமிழர்கள் செய்த மரியாதையைப்பற்றி புறநானூறு பாடல்கள் எடுத்துரைக்கின்றன.

இல் அடு கள்ளின் சில் குடிச் சீறூர்ப்
புடை நடுகல்லின் நாள் பலி யூட்டி
நன்னீர் ஆட்டி நெய்ந் நறைக் கொளீஇய
மங்குல் மாப் புகை மறுகுடன் கமழும் (புறநானூறு 329, 1-4)

இதன் விளக்கம், ‘சிறிய ஊரில், நடுகல்லிற்கு தினமும் உணவு படைத்து, நல்ல நீரால் அதைக் கழுவி, நறுமண எண்ணையைக் கொண்டு விளக்கு ஏற்றுவார்கள். அது மட்டுமின்றி, நடுகல்லிற்கு போடப்படும் சாம்பிராணி தூபமானது, கருமையான பெரும் புகை நறுமணத்தோடு தெரு முழுவதும் கமழும்’ என்பதாகும்.

மற்றொரு புறநானூறு பாடலில், கோப்பெருஞ்சோழன் இறந்தப் பின் அவனுக்காக நடுகல் நடப்பட்டு இரங்கற்பா பாடியதை எடுத்துக் கூறுகிறது. மன்னனின் நண்பரான புலவர் பொத்தியார் மன்னரின் மறைவை இவ்வாறாக வருந்திப் பாடுகின்றார்.

நினையாக் கூற்றம் இன் உயிர் உய்த்தன்று
பைதல் ஒக்கல் தழீஇ அதனை
வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்
நனந்தலை உலகம் அரந்தை தூங்கக்
கெடுவில் நல்லிசை சூடி
நடுகல் ஆயினன் புரவலன் எனவே (புறநானூறு 221, 8-13)

இதன் அர்த்தம், ‘ஆராய்ந்துப் பார்க்க முடியாத காரியங்களை செய்யும் இறைவன், மன்னனின் இனிய உயிரை எடுத்துக் கொண்டு விட்டான். மக்களே, மிகவும் வருத்தத்துடன், உங்கள் குடும்பத்துடன் வாருங்கள், உண்மையைப் பேசும் புலவர்களே, இந்த துக்க நிகழ்வுக்காக நாம் இறைவனிடம் புலம்புவோம். நம்முடைய மன்னன் இறந்ததால் இந்த பெரிய உலகம் வருந்துகின்றது. குறையில்லா நல்ல புகழையுடைய நம் மன்னன் இன்று நடுகல்லாகி விட்டான்’ என்பதாகும்.

siragu nadukarkal1

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே போரில் உயிரிழந்த குறுநில மன்னனின் நடுகல்

திருக்குறளிலும் நடுகற்களை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. வள்ளுவர் பெருமான் குறள் எண் 771 யில், போரில் மரணமடைந்தவர்களுக்காக நடுகற்கள் எழுப்பப்பட்டதை விவரித்துள்ளார்.

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர் – குறள் 771

இதன் விளக்கம் யாதெனில், ஒரு பெண் தன் கணவனாகிய அரசனின் புகழை, ‘பகைவர்கேள! என் தலைவரின் முன் போரிட எதிர்த்து நிற்காதீர்கள். உங்களைப் போலவே இதற்கு முன்பு பலர் நின்றனர். அவர்கள் அனைவரும் மறைந்து இப்போது நடுகல்லில் சிலையாக நிற்கின்றனர்’ என்று பறை சாற்றுகிறாள்.

நடுகற்கள் நடும் வழக்கம் தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே பரந்து காணப்படுகிறது.

வளைகுடா நாட்டின் கதை இது. இப்ராகிம் என்ற ஆபிரகாமின் பேரன் யாக்கோபு தன் சகோதரனை ஏமாற்றிவிட்டு பயந்து ஊரைவிட்டு ஓடுகிறான். இரவில் தூங்க இடமின்றி தலைக்கு கல்லை வைத்து தூங்குகிறான். தூங்கும் முன் சகோதரனை ஏமாற்றியதற்கு வருந்தியிருக்கலாம். அந்த இரவில் இறைவன் அவனுடன் பேசுகிறார். அதிகாலையிலே யாக்கோபு எழுந்து, தன் தலையின்கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் வார்த்து, அந்தக் கல்லானது இறைவனின் வீடு என்று கூறினான் என்பதுதான் அக்கதை.

தொடரும்…


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நடுகற்கள் எனும் நினைவுச் சின்னங்கள்! (பகுதி – 12)”

அதிகம் படித்தது