ஆகஸ்டு 17, 2019 இதழ்
தமிழ் வார இதழ்

நண்பனாய், சீடனாய், குருவாய்……

முனைவர் மு.பழனியப்பன்

Jun 30, 2018

siragu nanbanaai1
நாஞ்சில் நாடன் கட்டுரை வன்மை மிக்க கதைசொல்லி. அவரது படைப்புகளில் தமிழ் இலக்கியப் புகுத்தல்கள், குறிப்பாக சங்க இலக்கியங்கள், கம்பராமாயணம், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற மரபுசார் இலக்கியப் புகுத்தல்களுக்கும், புதுமைப்பித்தன், ஜெயமோகன், சுந்தரராமசாமி போன்ற எழுத்தாளர்களின் நவீன எழுத்துக்களின் மதிப்பீடு சார்ந்த, எடுத்துக்காட்டத்தக்க குறிப்புகள் சார்ந்த புகுத்தல்களும் இருக்கும். ஒன்றின் ஒன்று தொடர் சங்கிலியாய், செய்திகளை, உவமைகளை, நிகழ்வுகளை அடுக்குவதில் கைதேர்ந்த படைப்பாளி நாஞ்சில் நாடன் ஆவார். இவரது நாஞ்சில் தமிழில் பம்பாய் நாகரீக வாழ்வின் எச்சங்களைக் கண்டுகொள்ள இயலும். சவம் – இதுவே பல இடங்களில் நாஞ்சில் நாடனின் எழுத்தில் காணப்படும் உச்சப்புள்ளி.

இவரின் படைப்புகளில் தனியார் குழுமங்களில் எந்திரங்கள் விற்கும் விற்பனைப் பிரதிநிதியின் அல்லல்கள், குடும்பத்தைத் துறந்து உணவிற்கும், இருப்பிடத்திற்கும் படும் துயரங்கள் எடுத்துரைக்கப்பெறுகின்றன. சொந்த ஊரைவிட்டுத் தூர தேச மாநிலம் செல்லும் மகன் தாயின் இறப்பிற்குக் கூட வரமுடியாத சூழல், தன் கல்யாணத்திற்கும் யாரும் முனையாவிட்டாலும் மற்றவர்கள் நடத்தும் திருமணங்களுக்கு வருகைதரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு, சொந்த ஊர் வந்ததும் தன்னூர் சொத்துக்களைப் பாதுகாத்து நிறைவாழ்வு வாழ வேண்டும் என்ற ஏக்கம் போன்றன ஒரு விரக்தி மனப்பான்மையுடன் எடுத்துரைக்கப்பெறுகின்றன.

பம்பாய், மாதுங்க போன்ற பகுதிகளில் வாழும் தமிழர்களின் வாழ்விழிநிலையைப் படம் பிடித்துக்காட்டும் படைப்புகளை நாஞ்சில் நாடன் தவிர வேறு யாரும் இதுவரை பதிவு செய்யவில்லை என்ற அளவில் இவரின் படைப்புகள் கவனிக்கத்தக்கன.

நாவல்களில் திறனாய்வாளர் தேடும் கதைக்கரு, கதையின் சிக்கல் போன்றனவற்றைக் கண்டறிய இயலாது. முரண் பாத்திரம் எது அது முழுமையான பாத்திரமா என்றுகூட ஆய்ந்துவிடமுடியாது. அவ்வாறு ஆராயும் ஆய்வுகளில் நாஞ்சில் நாடனுக்கு நம்பிக்கையும் இல்லை என்பதை அவரின் எழுத்துக்கள் வழி உணரமுடிகின்றது.

இவரின் படைப்புகளில் கதை நாயகன் சாதனைகள் செய்து தலைமைப்பீடத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டியவன் அல்ல. தற்காலிக நிலைக்கு அவன் ஒரு சமுதாய உறுப்பினன், யாருடனும் தங்கலாம், ஏன் தங்கினோம் என்று கேட்பதற்கு ஆளில்லை. ஏன் வரவில்லை என்று கேட்பதற்கும் ஏன் வந்தாய் எனக் கேட்பதற்கும் ஆளில்லை.

இருப்பினும் கதைத்தலைவன் ஓர் ஊர் சுற்றி. அவனுக்கு நட்பு என்ற ஒன்றே வாழ்வாதாரம். அவர்களே அவனின் சுக துக்கங்களில் கலந்து கொண்டு அவனை மீட்டு எடுப்பார்கள். இதனால் நண்பனில்லா கதைத்தலைவனைச் சிறுகதையில் கூட நாஞ்சில் நாடன் படைத்துக்கொள்ளவில்லை.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் சொல்லமறந்த கதை திரைப்படமாக வந்த தலைகீழ் விகிதங்களில் சிவதாணுவிற்குக் கந்தசாமி ஒரு நல்ல துணை. கந்தசாமி படிப்பு வாசனை இல்லாதவன் என்றாலும் சிவதாணு என்ன சொன்னாலும் கேட்பவன். அவனுக்காக யாரையும் தாக்கிவிடக் கூடத் துணிபவன். அவனுடன் உரையாடுவது என்பதே சிவதாணுவிற்குப் பல நேரங்களில் கடினச் சூழலில் வடிகாலாக விளங்கியிருக்கிறது.

மிதவை நாவலில் வேலை கிடைக்காத சண்முகம் பம்பாயில் தன் ஊர் பெரியவர் ஒருவரின் துணையால் ஒரு வேலையைப் பெற்று நிலைக்கப் பார்க்கிறான். இரண்டாண்டுகள் கழித்து ஊர் திரும்புவது வரை இந்த மிதவை நாவல் கதை சொல்கிறது. இதில் சண்முகத்திற்குத் துணையானவன் செண்பகம். சண்முகத்திற்கான உணவு, ஏவல் செய்பவன்.
சதுரங்கக் குதிரை நாவலில் இடம்பெறும் நாராயணனுக்குக் குத்தாலம்தான் இனிய துணை. பம்பாயில் பல துணைகள் இருந்தாலும் இவனே சிறந்த துணை.

இந்த இணைதான் பின்னாளில் நாஞ்சில் நாடன் படைப்புகளில் கும்பமுனி, தவசுப்பிள்ளை இணையாக உருவெடுக்கிறது.

திருமணமாகாத அல்லது விரும்பாத கும்பமுனி தன்னை எழுத்தாளனாகப் பாவித்துக் கொள்பவர். அவரின் எழுத்துக்களுக்கு தீபாவளி, பொங்கல் மலர்களின்போது அதிக அளவில் தேவை ஏற்படும். சில நேரங்களில் கும்பமுனி தேர்வுக்குழுவில் ஒருவராகச் செயல்படவேண்டிய கட்டாயம் நேரும். அப்போதெல்லாம் அவரைக் காண வரும் விருது பெற இருப்பவர்கள் பழங்கள், இனிப்புகள், வெள்ளித்தட்டு என்று கொண்டுவருவதை வாங்கி வைப்பதில் தவசுப்பிள்ளைக்கு உள்ள தேவை அவசரம் கும்பமுனிக்கு இருப்பதில்லை.

கட்டச் சாயா மட்டுமே அவரின் தேவை. அதனைச் சரியாகக் கலந்து தருவது அதே நேரத்தில் கும்பமுனியைச் சீண்டுவது இதுவே தவசுப்பிள்ளையின் வேலை. கும்பமுனியின் வாழ்வில் ஒரு முறை அவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிவிட வேண்டிய வாழ்க்கை வந்தது. அப்போதுதான் தவசுப்பிள்ளையின் மதிப்பினை உலகம் அறிந்து கொண்டது.

‘‘கும்பமுனிக்கு உதவியாளர், மெய்க்காப்பாளர், தோட்டக்காரர், தவசிப்பிள்ளை, துணி துவைப்பவர், முதுகு தேய்ப்பவர், சந்தைக்குப் போகிறவர் என்ற பலவற்றுக்கும் சொந்தமும் ரத்த பந்தமும் ஆன கண்ணுப்பிள்ளை மாத்திரம்தான் என்பதால் சுருக்கமாகச் சொன்னால் கும்பமுனிக்கு வாக்களிக்கும் உரிமை இருந்தது. கண்ணுப்பிள்ளைக்கு இல்லை. என்றாலும் தான் அவைக்கு வரமுடியாமல் போகும் தருணங்களில் தனக்குப் பகரமாக கண்ணுப்பிள்ளை தனது நாற்காலியில் அமர அனுமதிக்க வேண்டும் என்று தனிநபர் தீர்மானம் ஒன்று கொண்டுவந்தார். வெளிநாட்டுப் பயணங்களின்போது தனது சொந்த மனைவி பாஸ்போர்ட்டிலும் விசாவிலும் மாற்றான் மனையாட்டியைக் கூட்டிக் கொண்டு திரிந்த முன்மாதிரிகளையும் தனது தீர்மானத்தில் எடுத்து ஆண்டிருந்தார் கும்பமுனி” (கான்சாகிபு கதைகள், ப. 86) என்ற பகுதி கண்ணுப்பிள்ளை என்றழைக்கப்பெற்ற தவசிப் பிள்ளையின் சொந்த, பந்த, அரசியில் சார்ந்த, சாராத நிலையில் கும்பமுனியுடன் கொண்டிருந்த நட்புறவைக் காட்டுவதாக உள்ளது.

மனைவி இல்லாத நிலையில் தனிக்கட்டையாகத் திரியும் கும்பமுனிக்கு உற்ற துணை நட்பேயாகும். சமயத்தில் கும்பமுனியை விமர்சனத்திற்கு உள்ளாக்கும் முக்கிய பாத்திரமும் இதுவே. இப்பாத்திரம் நண்பனாக நுழைந்து, சமையல்காரனாய்ப் பரிணமித்து, அந்தரங்கச் செயலாளனாகி, சீடனாகி, குருவாகி நிறைகிறது. சீடனாக வந்த குரு என்றே ஒரு சிறுகதைக்குப் பெயர் தரும் அளவிற்கு நட்பின் அடையாளத்தைத் தன்னுடன் தொடர்ந்து இருத்திக்கொண்டு இருக்கிறார் நாஞ்சில் நாடன்.

இவர்கள் உரையாடும் பாங்கிற்குப் பின்வரும் பகுதி சான்று.

‘‘என்ன பட்டா, திறந்தவெளிச் சிறைச்சாலை, திறந்தவெளிப் பல்கலைக்கழகம் கேட்டிருக்கேன். நம்ம ஊருலே திறந்தவெளி கக்கூஸ் உண்டும். இது என்னது திறந்தவெளிக் கடிதம்? திறந்த கடிதம் எண்ணுல்லா இருக்கணும்?
நீ அதை அங்கிண வச்சிட்டு அந்தால போ. ஏன்னா? சீமைத்தனத்தை எங்கிட்ட காணிக்காதே!…. ஒரு இலக்கியவாதிக்கு புத்தி சொல்ல வரப்பிடாது பார்த்துக்கோ.. காலம்பற சொர்ணாவிக்கிட்டு நிக்காமப் போயி அரிசி உப்புமா கிண்டு இன்னைக்கு…………..

‘‘அது சரி. கிண்டிரலாம். அதுக்கென்னா? தொள்ளாயிரம் பணமா? நீரு கேட்டதுக்குப் பதில் சொல்லும்….”
உனக்கு வியாக்யானம் செய்துகிட்டு இருக்க எனக்கு நேரமில்ல… பார்த்துக்கோ இங்கிண இருந்து போ மொதல்ல……..
சவம் காலம்பற நாயையில்லா அவுத்து விடுகு என்று மனதில் நினைத்துக்கொண்டுத் தவசிப்பிள்ளை தம்பளரை வாங்கிக் கொண்டு போனான். ” (சூடிய பூ சூடற்க. ப. 112) என்ற பகுதி இதற்குச் சான்று.

நாஞ்சில் நாடன் நல்ல தமிழ் இலக்கியங்களைப் படித்தவர். படைத்தவர். சாகித்திய அகாதமி விருதாளர். தன் எழுத்துக்களில் நிதர்சன உலகைப் படைத்தளிப்பவர். அவரின் எழுத்தில் நக்கலும் நையாண்டியும், அங்கதமும் பொதிந்து கிடக்கும். இவ்வகையில் இருபதாம் நூற்றாண்டில் தனித்த இலக்கியவாதியாகத் திகழ்பவர் நாஞ்சில் நாடன் என்பதில் ஐயமில்லை.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நண்பனாய், சீடனாய், குருவாய்……”

அதிகம் படித்தது