ஏப்ரல் 10, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

நன்முறை

முனைவர் மு.பழனியப்பன்

Jan 19, 2019

Religious Leader Mahatma Gandhi 1869 - 1948
வன்முறையற்ற வாழ்க்கை முறையே நன்முறையான வாழ்க்கைமுறை. காந்தியடிகள் ஒரு முறை கவிமுனிவர் இரவிந்திர நாத் தாகூரின் சாந்தி நிகேதன் கல்வி நிறுவனத்திற்குச் சென்றார். அங்கு மாணவர்களுடன், ஆசிரியர்களுடன் சில நாட்கள் தங்கிக் கலந்து பழக வேண்டிய வாய்ப்பு வந்தது. அப்போது அவர் மாணவர்களுக்கான உணவு மற்றவர்களால் சமைக்கப்பட்டு வருவதை அறிந்தார். நமக்கான நமது உணவை நாமே சமைத்து உண்டால் நலமாக இருக்குமே என்று அவர்களிடம் கூறினார் காந்தியடிகள். நமக்கான உணவை நாமே சமைத்து உண்பதில் பல நன்மைகள் இருக்கின்றன. ஒன்று நாமும் சமைக்கக் கற்றுக்கொள்கிறோம். நம் இயல்புக்குத் தேவையான, மாணவர்களுக்கு உடல் நலம் பாதிப்பற்ற வகையில் சமைத்துக்கொள்ள இயலும். இவை போன்ற பல நன்மைகள் நாமே சமைத்து உண்பதில் கிடைக்கின்றன.

இதனை மகாத்மா சொன்னதும் அந்த மாணவர்கள் ஏற்றுக் கொண்டனர். அவர்கள் தமக்கான உணவைத் தாமே சமைத்து உண்ணத் தொடங்கினார்கள். அவர்களின் குணங்களில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது. உணவிற்கும் எண்ணத்திற்கும் வாழ்க்கைக்கும் தொடர்பு இருக்கிறது என்பது அறியப்பட வேண்டிய உண்மையாகும்.

வன்முறையற்ற வாழ்க்கை வாழ வன்முறையற்ற வகையில் தயாரிக்கப்படும் உணவைத் தயாரித்து உண்ண வேண்டும். காந்தியடிகள் அக்கால ஆங்கில அரசிற்கு, அதன் கடுமையான போக்கிற்கு எதிராக பல கட்டுரைகளை எழுதினார். இதன் காரணமாக இவரை எந்நேரமும் சிறையில் அடைக்கலாம் என்ற நிலை உருவானது. தன்னைச் சிறையில் அடைத்தால் என்ன நடைபெறவேண்டும் என்பதையும் காந்தியடிகள் சிந்தித்து அதனை ஒரு கட்டுரையாக எழுதினார்.

‘‘நாம் சுதந்திரத்துக்குத் தகுதியானவர்கள்தான் என்பதை நிரூபிப்பதற்கு மறுபடியும் ஒரு சந்தர்ப்பம் வரப்போகிறது. என்னைக் கைது செய்ததும் தேசமெங்கும் அதிகார வர்க்கம் எதிர்ப்பார்ப்பதுபோல் கலகமும் குழப்பமும் உண்டானால் அதிகார வர்க்கத்துக்கு அது வெற்றியாகும் ‘‘அகிம்சைப் புரட்சியென்பது ஒரு நாளும் நடவாத காரியம்” என்று சொல்லும் மிதவாத நண்பர்களின் கட்சிக்கும் அது ஜயமாகும். அரசும் அதனை ஆதரிப்பவர்களும் கொண்டிருக்கும் பயம் வீண் பயம் என்பதை மக்கள் நிரூபிக்க வேண்டும்.  என்னைக் கைது செய்தால் அதற்காக ஹர்த்தால்களோ, ஊர்வலங்களோ, கோசங்களுடன் கூடிய ஆர்ப்பாட்டங்களோ எங்கும் நடக்கக்கூடாது. என்னைக் கைது செய்ததும் தேசமெங்கும் பூரண அமைதி குடி கொண்டிருக்குமானால் அதை என்னுடைய தேசத்தார் எனக்குச் செய்த மகத்தான மரியாதையாகக் கருதுவேன்”  இதுவே நன்முறை விரும்பும் ஒரு தலைவனின் வேண்டுகோளாக இருக்க வேண்டும். இருக்க முடியும். வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுச் சேதம் விளைவிப்பது எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாத செயல்பாடுகள்.

கத்தியின்றி ரத்தமின்றி, யுத்தமொன்று செய்துவென்றவர் காந்தியடிகள். மேலும் காந்தியடிகள் எக்காலத்திலும் சிறைவாழ்வினைச் செம்மையுடன் ஏற்றிருக்கிறார். ஒருமுறை அவரைக் கைது செய்வதற்கான முன்னேற்பாடு நடைபெற்றன. அதனை அறிந்த அண்ணல் காந்தியடிகள் தன்னைச் சிறைசெய்வது பற்றி கட்டுரை ஒன்றினை எழுதினார். அதில் அவரின் வன்முறையற்ற நிலைப்பாடு தெரியவருகிறது.

‘‘தற்சமயம் என்னை மக்களின் மத்தியிலிருந்து நீக்கிச் சிறைக்கு அனுப்புதவனால் பல நன்மைகள் விளையும் என்று கருதுகிறேன்.

முதலாவது என்னிடம் மாயமந்திர சக்திகள் இருப்பதாகச் சிலர் கொண்டிருக்கும் குருட்டு நம்பிக்கை போகும்.

இரண்டாவது, ஜனங்கள் என்னுடைய தூண்டுதலினாலேதான் சுயராஜ்யம் வேண்டுகிறார்கள் அவர்களுக்காகச் சுதந்திரப்பற்று இல்லை என்ற கூற்று பொய்யாகும்.

மூன்றாவது, என்னை அப்புறப்படுத்திய பிறகும் மக்கள் காங்கிரஸ் திட்டங்களை நிறைவேற்றினால் சுயராஜ்யம் ஆளுவதற்கு மக்களின் தகுதி நிரூபணபாகும்.

நான்காவது சுயநலக் காரணம் ஒன்றும் இருக்கிறது. ரொம்பவும் அலுப்படைந்திருக்கும் என்னுடைய துர்ப்பல சரீரத்துக்குக் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். இவ்வளவு நாள் நான் செய்த வேலையின் காரணமாக இந்த ஓய்வுக்கு நான் தகுதி பெற்றிருக்கிறேன் அல்லவா?’’

இதுதான் அண்ணல் காந்தியடிகளின் அணுகுமுறை. சிறைவாசம் சென்றாலும் ஊர்தோறும் சென்றாலும் அவரின் நிலை இப்படித் தான் இருந்திருக்கிறது.

சிறிது நேரத்தில் காவல் துறையினர் வருகை தந்தனர். அவர்கள் அண்ணல் காந்தியடிகளைச் சிறையில் அடைக்க ஆணையுடன் வந்தனர். அவர்களைப் புன்முறுவலுடன் வரவேற்றார் காந்தியடிகள்.

இச்செய்தி தெரிந்திருத்தும் சிறு பிள்ளைகளோடு விளையாடுவது. கடிதங்கள் எழுதுவது, ஆசிரமவாசிகள் அனைவரையும் உற்சாகப்படுத்திப்பேசுவது போன்ற நடைமுறைகளில் அண்ணல் காந்தியடிகள் செயல்பட்டார்.

ஒரு மனிதரின் வாழ்வில் எத்தனை துயரங்கள் வந்தாலும் அந்தத் துயரங்களை வன்முறையில்லா நிலையில் கையாள்வது என்ற ஆளுமை சக்தி மகாத்மா காந்தியடிகளிடம் நீங்காமல் நிலை பெற்றிருந்தது.

காந்தியடிகளின் நன்முறையைப் பாரததியார் பாராட்டுகிறார்.

‘‘பெருங்கொலை வழியாம் போர் வழி இகழ்ந்தாய்.
அதனிலும் திறன் உடைத்தாம்
அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள்
அறவழி என்று நீ அறிந்தாய்
நெருங்கிய பயன்சேர் ஒத்துழையாமை
நெறியினால் இந்தியாவிற்கு
வருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்து
வையகம் வாழ்க நல் லறத்தே!
என்ற மகாகவி பாரதியாரின் புகழ் பெருங்கொலை வழி மறுத்து அறவழி நின்ற அண்ணலின் நன்முறையைக் காட்டுவதாக உள்ளது. வன்முறையற்ற நன்முறை நாடுவோம். நாடும் செழிக்கும். நாமும் செழிப்போம்.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நன்முறை”

அதிகம் படித்தது