மே 21, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

நலம்நாடியும் பொருள்நாடியும்

வேம்பையன் தொல்காப்பியன்

Nov 1, 2012

அன்றாட செய்திகளை அலசுவதோடு அலசும் சிந்தனைக் கருவிகளையும் (thinking tools) அவ்வப்போது தீட்டிக் கொள்ள வேண்டும். அதைச் சுவையாகச் செய்ய ஒரு சிறு முயற்சி!

அகில்: வாங்க உகில், இந்த நலம்நாடி எழுதியிருக்கிறத படிச்சீங்களா?

உகில்: ஏங்க அகில், நான் நிம்மதியா இருக்கிறது பிடிக்கலையா? தமிழ்நாடி, நலம்நாடி, புகழ்நாடி, குணம்நாடி, குற்றம்நாடி, குளம்நாடி, குட்டைநாடி… இதெல்லாம் நமக்கு வேண்டாங்க. பொருள்நாடி ஒன்னு போதுங்க; மற்ற எல்லா நாடிகளும் நம்மள நாடி வரும். திருவள்ளுவர் ‘பொருளில்லார்க்கு இவ்வுலகு இல்லை’ என்று சொல்லியிருக்காரே.

அகில்: அவரு எந்தப் பொருளச் சொன்னாரு. வாழ்க்கைக்குப் புறப் பொருள்கள் வேணுமின்னு திருக்குறள் படிச்சுதான் தெரிஞ்சுக்கனுமா? அது தான் படிப்பறிவில்லாதவங்களுக்கும் தெரியுமே. ஏன் விலங்குகள் கூட உணவு, இடத்துக்குப் போட்டி போடுதே.

உகில்: அப்படின்னா அவரு எந்தப் பொருளச் சொன்னாரு.

அகில்: வாழ்வதற்கு ஒரு அர்த்தம் – பொருள் இருக்கனுமின்னது தான் சொன்னாரு.

உகில்: திருவள்ளுவர் அத நினைச்சுதான் சொன்னாரோ என்னவோ; நீங்க பொருளுக்குப் புதுப் பொருள் கொடுக்கிறீங்க.

அகில்: பொருள் அதாவது அர்த்தம் என்பது எழுதுரவரும் படிப்பவரும் சேர்ந்து உருவாக்குவது. புறப்பொருள் கூட முதல் (இடுபொருள்), உழைப்பு இரண்டும் சேர்ந்து உருவாகுவது தானே. அதனால் நூல்கள் படிப்பவரைப் பொறுத்துப் பொருள் கொடுக்கும்.

உகில்: அப்படின்னா பேச்சு கேட்பவரைப் பொறுத்துப் பொருள் கொடுக்குமா?

அகில்: ஆமா, சந்தேகம் என்ன?

உகில்: சரி, அப்படியே வச்சுக்குவோம். அந்தத் திருக்குறள் படி பொருள் செல்வத்தைத் தேடிச் சேர்த்து அனுபவிப்பது தான் என் வாழ்விற்கான அர்த்தமின்னு சொல்றேன்.

அகில்: நீங்க சொல்லறது சரி தான். அதுல முக்கியமானது என்னவென்றால் ‘அனுபவிப்பது’ ஆகும்.

உகில்: அனுபவிக்காம சேர்த்து என்ன பயன்?

அகில்: எப்படி அனுபவிக்கறது?

உகில்: சரி தான், அதுக்கும் ஒரு இலக்கணமா? இப்படியே போனா… மூச்சு எப்படி விடறது, சாப்பாடு எப்படி சாப்பிடறது, தூக்கம் எப்படி தூங்குறதுன்னு… கடைசியில சாவறது எப்படின்னு அதுக்கும் விளக்கம் சொல்வாங்க. இதெல்லாம் தெரிஞ்சுகிட்டா காக்கா, குருவி, கரடி, கழுதை, சிங்கம், புலி, யானை, பூனை, எலி, கிலி… எல்லாம் வாழுது? மனிதனும் ஒரு விலங்குதானே?

அகில்: ஆமா, ஆமா மனிதனும் ஒரு விலங்குதான். மத்த விலங்குங்கள் அதை நினைக்கறதும் இல்லை, மறக்கறதும் இல்லை. ஆனா மனுசன் தான் அதை உணர்றான்; மறக்கிறான்; அதை விட மறைக்கிறான்.

உகில்: அது எப்படிங்க நினக்காமலும் மறக்காமலும் இருக்கிறது. ஒரிஜினல் உளறலா இருக்கே.

அகில்: உளறதுல்ல டூப்ளிகேட் வேற இருக்குதா?

அகில்: அது சொல்றவரப் பொறுத்து இல்ல. கேட்கிறவருக்கு இதுக்கு முன்னாடி கேட்காத புதுசா இருந்தா ஒரிஜினல், இல்லாட்டி அது டூப்ளிகேட்; அதாவது பழசு. அது போகட்டும், உங்க ஒரிஜினல் உளறல விளக்குங்க.

அகில்: நினைக்காமலும் மறக்காமலும் இருக்கிறத்துன்னா தெரிந்து கொள்ளாமல் அறியாமையில் இருப்பதுன்னு அர்த்தம்.

உகில்: சுத்தி வளைச்சு முட்டாள்தனமின்னு சொல்றீங்க.

அகில்: அறியாமை வேற. முட்டாள்தனம் வேற.

உகில்: ஐய்யய்யோ, அடுத்த உளறலா? அது எப்படி வேற வேற?

அகில்: அறிந்து கொள்ள‌ வாய்ப்பே இல்லாமல் இருப்பது அறியாமை (ignorance). அறிந்து கொள்ள வாய்ப்பு இருந்தும் முயற்சியின்மையால் தெரிந்து கொள்ளாமல் இருப்பது முட்டாள்தனம் (stupidity, foolishness). அதனால தான் Ignorance is bliss-ன்னு சொன்னாங்க; Stupidity is bliss-ன்னு சொல்லலே. திருவள்ளுவரும் ‘அறிதோறும் அறியாமை கண்டற்றால்’ என்று தான் சொன்னாரு, ‘அறிதோறும் முட்டாள்தனம் கண்டற்றால்’ என்று சொல்லலே.

உகில்: சரி, விட மாட்டீங்க போல; சேர்த்தத எப்படி அனுபவிக்கிறதுன்னு சொல்லிட்டு ஆள விடுங்க.

அகில்: சேர்த்ததன் பயனே பகிர்ந்து மகிழ்வது தான். ‘சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகின் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன்’ன்னு திருவள்ளுவர் சொல்லியிருக்காரே.

உகில்: திருவள்ளுவர் கிடக்கிறாரு. எனக்கென்னவோ இந்தத் திருவள்ளுவர், தான் சொன்னதெல்லாம் பின்பற்றி இருப்பாரான்னு சந்தேகமா இருக்கு.

அகில்: ஏன் அப்படி சந்தேகப் படுறீங்க?

உகில்: இன்னைக்கு எழுதுறவங்க, பேசுறவங்க அதன் படி நடப்பதில்லையே. திருவள்ளுவர் நம்ம இனம்ன்னா, நம்ம போலித்தனம் அவருக்கும் இருந்திருக்கும் என்று ஒரு அனுமானம் தான்.

அகில்: நீங்க சொல்றது உண்மையா இருக்கலாம். ஆனா, திருவள்ளுவரு தான் சொன்னதையெல்லாம் ஒரேடியாகப் பின்பற்றி உதை பட்டு இருப்பார்ன்னு அனுமானிக்கிறேன்.

உகில்: உங்க அனுமானத்துக்கு என்ன அடிப்படை?

அகில்: இரண்டு எதிர்க் கோணங்களிலும் பலவற்றைச் சொல்லியுள்ளார். ‘அறிவுடையார் எல்லாம் உடையார்’ன்னு சொல்றார். பிறகு ‘அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர் மக்கட் பண்பு இல்லாதவர்’ன்னு சொல்றார். அறிவு இருந்தா பண்பு இருக்கும்ன்னு எதிர்பார்த்து அடிபட்டு பிறகு சொன்னா மாதிரியிருக்கு. ‘இன்னா செய்தார்க்கும் இனியவை’ செய்யன்னும் சொல்றார். பிறகு ‘நன்றாற்றலுள்ளும் அவரவர் பண்பறிந்து செய்’ன்னு சொல்றார். சில பேர் சொன்னா புரிஞ்சுகிட்டு செய்வான்னு சொல்லிட்டு ஆனா, சில பேரைக் கரும்பு போல் பிழிந்தால் தான் வேலை நடக்கும்ன்னு சொல்றார். ‘ஈகை’யைப் பற்றி சொல்றார். பிறகு ‘அளவறிந்து கொடு’ன்னு சொல்றார். நட்பின் சிறப்பைப் பற்றி நிறைய சொல்றார். ஆனா, உட்பகையைப் பற்றி எச்சரிக்கை செய்கிறார். தலைவனின் வலிமையை, சிறப்பை, முக்கியத்துவத்தைச் சொல்றார். ஆனா, இடித்து சொல்லாவிடில் தலைவன் தானாவே கெட்டுப் போவான் என்று அபாய அறிவிப்பு கொடுக்கிறார். ‘சொல்வன்மை’ பற்றியும் சொல்லியுள்ளார். ‘யாகாவாராயினும் நா காக்க’ என்றும் ‘பயனில சொல்லாமை’ என்றும் வலியுறுத்தியுள்ளார். இப்படிப் பலவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் மனுச‌ன் நல்லா அடி பட்டு அனுபவித்து வருந்தி திருந்தி எழுதி இருப்பார்ன்னு தோனுது.

உகில்: நீங்க சொல்றது சரியாத்தான் படுது. ஆனா, தேடிச் சேர்த்த அறிவுச் செல்வம், அன்புச் செல்வம், பண்புச் செல்வம், அருட்செல்வம் போன்றவற்றை பிறரிடம் பகிர்ந்து கொண்டா குறையாது; பெருகும்; பொருட்செல்வம் அப்படி இல்லையே. அடுத்தவங்க கிட்ட‌ பகிர்ந்து கொண்டா குறைஞ்சுடுமே. பொருட்செல்வம் சேருவதற்கே அடுத்தவங்கிட்ட பகிர்ந்து கொள்ளாமல் இருந்தா தான் முடியும். அது மட்டுமில்ல. அடுத்தவங்கிட்டே இருந்து திருடினா தான் முடியும்!

அகில்: ஐய்யய்யோ, இவ்வளவு பச்சையா உண்மையப் பேசலமா?

உகில்: ஆக நம்ம வழிக்கு வாங்க. பொருட்செல்வம் வேற, மற்ற செல்வங்கள் வேற தான்.

அகில்: சரியாச் சொன்னீங்க. பொருட்செல்வத்த நம்ம கிட்ட இருந்து பறிச்சிட முடியும். ஆனா மற்ற செல்வங்கள சேர்த்த பிறகு தொலைக்க முடியாது; யாரும் திருடிட முடியாது.

உகில்: என்ன நீங்க, ஆமா போடற மாதிரி போட்டு கிட்டே, வேறு ராகம் பாடுறீங்க.

அகில்: அவரவர் முயற்சிக்குத் தக அந்தந்த செல்வங்கள் சேரும். ஆனால் அவற்றை எப்படிப் பகிர்ந்து கொள்வது என்பதில் தனித்தனி விருப்பங்கள் இருக்கலாம். என்றாலும் வெளிப்படுத்தாமல், பகிர்ந்து கொள்ளாமல், செலவளிக்காமல் அனுபவிக்க முடியாது. யோசித்துப் பார்த்தால் பொருட்செல்வமும் இதற்கு விதிவிலக்கல்லன்னு தெரியும்.

உகில்: இது என்ன பெரிய கண்டுபிடிப்பு? பணத்தைச் செலவளித்து தானே அனுபவிக்க முடியும்?

அகில்: எப்படி, எதில், எவ்வளவு செலவளிக்கிறோம் என்பது நம் அடிமைத் தனம் என்ன, எது என்பதைக் காட்டி விடும்.

உகில்: எல்லாச் செலவுகளும் அடிமைத் தனங்களே என்று எப்படிச் சொல்லலாம்? அவசியமானவை, ஆரோக்கியமானவை, கேளிக்கையானவை, ஊதாரித்தனமானவை, ஆடம்பரமானவை, ஆபத்தானவை, அயோக்கியத்தனமானவை… என்று இல்லையா?

அகில்: இருக்கு. அப்படி இருக்கிறதால் தான் பணம் பலரிடமிருந்து சிலரிடம் அதிகமாப் போய்ச் சேருது. சிலரிடம் அறிவு பெருகனும்ன்னா பலரிடம் முட்டாள் தனம் பெருக வேண்டியதில்லை (ஆனால் அறியாமை பெருகனும்). பொருட்செல்வம் அப்படி இல்லை. ஒரு இடத்துல குறையாம இன்னோர் இடத்துல அதிகரிக்க முடியாது. இயற்கை வளங்கள் குறையாம மனிதரிடம் பொருட்செல்வம் பெருக முடியுமா?

உகில்: எனக்கு நாம இப்ப என்ன கேள்விக்கு விடை தேடிக் கிட்டு இருக்கோம்ன்னு மறந்து போச்சு. இருந்தாலும் ஒன்னு கேட்குறேன். பொருட்செல்வத்தைச் செலவளிக்காமல் அறிவு, பண்பு, அருள், அன்புச் செல்வங்களைப் பெற முடியுமா? ஆ, இப்ப நினைவுக்கு வந்திடுச்சு. அதனால பொருளை நாடுவது தான் முதல்ல முக்கியம்.

அகில்: சரியாச் சொன்னீங்க. பொருளை நாடுவது தான் முதல்ல முக்கியம். அப்படின்னா இரண்டாவது, மூன்றாவது…. முக்கியங்கள் இருக்கு.

உகில்: நீங்க நான் சொல்றத ஒத்துக்கிறீங்களா மறுக்கிறீங்களா? குழப்பமா இருக்கே!

அகில்: பொருட்செல்வத்தைத் தேடிச் சேர்ப்பது என்பது நம்ம உடல் வளர்ச்சி போன்றது. ஒரு கட்டத்துக்கு (காலத்துக்கு) மேல வளர்ந்தா அது வளர்ச்சி இல்ல; நோய். புற்று நோய் (கேன்சர்) என்பதே கட்டுப்பாடற்ற செல் வளர்ச்சி தான். உடல் / பொருள் வளர்ச்சி ஒரு வயதில் சமநிலையை அடையனும். பிறகு வளர்ச்சி என்பது உள முதிர்ச்சியாகவே இருக்கனும்.

உகில்: இதுவும் தெரிஞ்சது தானே.

அகில்: தெரிஞ்சது தான். ஆனா அன்றாட வாழ்க்கை அலைவுகள் குழப்பி விடும். அவ்வப்போது தெளிய வைச்சுக்கனும்.

உகில்: சரி, இந்த நலம்நாடி ஏதோ எழுதியிருக்கிறதா சொன்னீங்களே, அது என்ன?

அகில்: இவ்வளவு நேரம் கேட்டீங்களே, அது தான் அவருடைய ஒரிஜினல் உளறல்!

உகில்: உளறலோ, குளறலோ நல்லா கிளறி விட்டாரு.

உளறல் அளவும் குளறல் அளவும்

கிளறல் அளவால் கொடு. (திரிக்குறள்: அதிகாரம்: உளறல் வன்மை)

குறளியவர்: சரியார் (நலம்நாடியின் மறுபக்கம்)

Writing at work did you know that, if homework-writer.com/ you use all capital letters to convey a message, the capital letters come across like shouting

வேம்பையன் தொல்காப்பியன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நலம்நாடியும் பொருள்நாடியும்”

அதிகம் படித்தது