மே 30, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

நல்லதேசம் (சிறுகதை)

மா.பிரபாகரன்

Dec 9, 2017

siragu-nalla-desam1
மரகததேசத்தின் மன்னர் விக்ரமன், சிறுவயதிலேயே பட்டத்திற்கு வந்தவர். சிறந்த அறிவாற்றல் கொண்டவர். ஆனால் அரசகாரியங்களில் போதிய அனுபவம் இல்லாதவர். வயதில் மூத்தவர் என்ற முறையில் மந்திரியார் நிறைமதியார்தான் பல சந்தர்ப்பங்களில் மன்னருக்கு வழிகாட்டிவந்தார். “ஒரு தேசம் எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும், ஒரு தேசத்தின் குடிமக்கள் ஒரு மன்னனிடம் எதை எதிர்பார்ப்பார்கள் என்பதை எல்லாம் நிறைமதியார் மன்னருக்கு உணர்த்த விரும்பினார். மன்னருக்கு நேரிடையாக அறிவுரை கூறுவது ஏற்புடையதல்ல. வேறு எப்படிச் சொல்வது என்ற யோசனையில் இருந்த சமயம். ஒரு நாள் புலவர் மகேசன் நிறைமதியாரைக் காணவந்தார். புலவர் மகேசன் ஒரு வானம்பாடி. தேசம் தேசமாகச் சுற்றுபவர். பற்றுக்கள் இல்லாதவர். அனைத்து தேச மக்களும் வளமுடன் வாழவேண்டும் என்ற விருப்பம் கொண்டவர். அவரிடம் மந்திரியார் தனது எண்ணத்தைச் சொன்னார். நீண்ட தனது வெண்தாடியை வருடியபடி யோசித்த புலவர் “நான் இதற்கு ஒரு வழி செய்கிறேன்!” –என்றபடி மந்திரியாரின் காதில் ஏதோ கிசுகிசுத்தார். மந்திரியாரும் அதை ஆமோதித்து ஏற்றுக் கொண்டார்.

மன்னர் விக்ரமன் ஒருநாள் அவையில் அமர்ந்து அளவளாவிக் கொண்டிருந்தார். அப்போது புலவர் மகேசன் அங்கு வந்தார். புலவர்கள் என்றால் வறுமையில் வாடுபவர்கள், எதையாவது இரந்து பெற கவிபாடுபவர்கள் என்ற எண்ணம் கொண்டவர் மன்னர். அவர் புலவர் மகேசனை ஏளனம் செய்யும் விதமாக, என்ன புலவரே, உமது வீட்டுப் அடுக்களையில் பூனை படுத்துறங்குகிறதோ? எம்மைக் கவிபாடி பரிசில் பெறவந்தீரோ?” – என்று கேட்டார்.

“யாம் உம்மைக் கவிபாட வரவில்லை! உம்மிடம் ஒரு கேள்வி கேட்க வந்தோம்!” – என்றார் புலவர் மகேசன்.

“மன்னனிடம் கேள்வியா?” – ஆச்சரியத்துடன் நிமிர்ந்தார் விக்ரமன்.

“ஒரு தேசம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?” – கேட்டார் புலவர். புலவரிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை மன்னர் எதிர்பார்க்கவில்லை. அவர் தடுமாறினார். “ஒரு தேசம்… எனது தேசம் போல் இருத்தல் வேண்டும்!” – என்று நா குளறியபடி பதில் சொன்னார்.

“எனக்குத் தெளிவான பதில் வேண்டும்!” – என்றார் புலவர். மன்னர் மந்திரியாரைப் பார்த்தார். மந்திரியார் தனக்குத் தெரியாது என்பது போல் வேண்டுமென்றே உதட்டைப் பிதுக்கினார்.

“மன்னா அவசரமில்லை! போதிய அவகாசம் எடுத்துக் கொண்டு இதற்குப் பதில் கூறுங்கள்!” – என்ற புலவர் மன்னரை எதிர்பாராமல் அவையை விட்டு வெளியேறிச் சென்றுவிட்டார்.

“இது ஒரு அடிப்படையான கேள்வி. இதற்குப் பதில் தெரியாமலா நான் இத்தனை நாளாய் ஆட்சிசெய்து வருகிறேன்?” – மன்னருக்கு வெட்கம் வந்தது. அவர் அரியணையில் கூனி, குறுகி அமர்ந்திருந்தார். அப்போது மந்திரியார் மன்னரிடம் “மன்னா, தவறாக எண்ண வேண்டாம்! புலவர் ஒரு வானம்பாடி! எதையும் இரந்துபெற அவர் கவிபாடுவதில்லை! அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆயிரம் பொருள் படும்! அவரின் இந்தக் கேள்விக்குப் பின்னாலும் ஏதேனும் ஒருபொருள் தொக்கி நிற்கக் கூடும்! பேசாமல் நாம் இந்தக் கேள்வியை நாம் நமது குடிமக்களிடம் கேட்டுவிடுவோம்!” –என்றார். மன்னருக்கும் அப்படித்தான் தோன்றியது. “அப்படியே ஆகட்டும்!” –என்றார் அவர். புலவரின் கேள்வி நாடெங்கும் பறைசாற்றி அறிவிக்கப்பட்டது. சிறந்த பதில் தருவோருக்கு நூறு பொற்காசுகள் பரிசு என்றும் அறிவிக்கப்பட்டது.

சிலநாட்கள் சென்றன. ஒரு ஓய்வான தினத்தன்று வரப்பெற்ற பதில்களை எல்லாம் மந்திரியாருடன் அமர்ந்து மன்னர் ஆராய்ந்தார். ‘ஒரு நல்ல தேசத்தில் செல்வந்தர்கள் அதிகம் வசிக்க வேண்டும்’ என்றிருந்தார் ஒரு அன்பர். ‘கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்’ என்றிருந்தார் மற்றொருவர். ‘நல்லவிளைச்சல் வேண்டும், நோய் வறுமை இன்றி மக்கள் வாழவேண்டும், நீர்வளம் வேண்டும், இயற்கையாக அமைந்த அரண்கள் வேண்டும், கொடிய குற்றங்கள் இல்லாதிருத்தல் வேண்டும்’ என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்கள். ஒரு கேள்விக்கு இத்தனை கோணங்களில் பதில்களா என மன்னர் ஆச்சரியம் அடைந்தார். ஒரு மன்னனிடம் குடிமக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. அவர் மந்திரியாரிடம் “அனைத்துப் பதில்களும் நன்றாகத்தானே இருக்கிறது? பேசாமல் அனைவருக்கும் நூறு பொற்காசுகள் பரிசளித்து விடலாமா?”– எனக் கேட்டார்.

“இவைகளைக் காட்டிலும் வேறுஏதும் சிறந்த பதில்கள் வருகிறதா என ஓரிரு நாட்கள் பொறுத்துப் பார்ப்போம்!”– என்றார் மந்திரியார். மன்னரும் அதற்கு ஒத்துக் கொண்டார்.

ஒரு நாள் நாற்பது வயது மதிக்கத்தகுந்த நபர் ஒருவர் அவைக்கு வந்தார். அவர் தன்னை தருமி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அப்போது மன்னரும் அவையில் இருந்தார்.

“ஒரு நல்ல தேசத்திற்கு மடையாக மன்னன் இருத்தல் வேண்டும்”–என்றார் தருமி.

“என்னபதில் இது? கொஞ்சம் புரியும்படியாகச் சொல்லமுடியுமா?’– கேட்டார் மந்திரியார்.

“காட்டாற்று வெள்ளம் இருக்கிறது! அதை அப்படியே விட்டுவிட்டால் எதற்கும் பயன்படாமல் ஓடி வீணாகிவிடும்! அதுவே மடைகொண்டுதடுத்திட்டால் அந்த நீரைக் குடிநீராகவோ பாசனத்திற்கோ நமது தேவைக்கு ஏற்றபடி பயன்படுத்திக் கொள்ளலாம்! ஒரு நாட்டின் வளங்களும் இது போலத்தான்! ஒரு தேசத்தில் செல்வந்தர்கள் பலர் இருக்கலாம்! அவர்கள் வணிகம் செய்ய தொழில் செய்ய உகந்த சூழல் வேண்டும்! அறிஞர்கள் இருக்கலாம்! அவர்கள் கற்றகல்வியை பிறருக்கு அளிக்க நல்ல பாடசாலைகள் வேண்டும்! நல்ல விளைச்சல் இருக்கலாம்! அதை அனைவருக்கும் பகிர்ந்தளிக்க சிறந்த விநியோகம் வேண்டும்! இயற்கையாக அமைத்த அரண்கள் இருக்கலாம்! அதை தனது பாதுகாப்பிற்குப் பயன்படுத்திக் கொள்ள உறுதிமிக்க தீரம் வேண்டும்! அதற்குத் தலைமைப் பண்புகள் கொண்ட நல்லஅரசன் வேண்டும்! இல்லாவிட்டால் மடைமாற்றம் செய்யப்படாத காட்டாற்று வெள்ளம் ஓடி வீணாவது போன்று அனைத்து வளங்களும் வீணாகிவிடும்!” –என்றார் தருமி.

மன்னர் விக்ரமனின் புருவங்கள் வியப்பால் உயர்ந்தன. கேள்விக்கு இது நல்ல பதிலாகத் தோன்றியது. ஒரு அரசன் எப்படிப்பட்டவனாக இருக்கவேண்டும் என்பதைத் தனக்கு உணர்த்தும் பதிலாகவும் தோன்றியது. மன்னர் தருமியை உற்றுப் பார்த்தார். இப்படி ஒரு தீர்க்கமான பதிலை தருமியால் தரமுடியும் என்று அவருக்குத் தோன்றவில்லை. தருமியின் தோற்றம் அவ்வாறு இல்லை. மன்னருக்கு தன்னிடம் கேள்விக்கணை எய்தபுலவர் மகேசனின் முகம் ஞாபகத்திற்கு வந்தது. “இந்தப் பதிலைக் கூறச்சொல்லி உம்மை இங்கே அனுப்பியது யார்?” –என்று தருமியிடம் கேட்டார். தருமி நடுநடுங்கிப் போனார். அப்போது “கேள்வியும் நானே பதிலும் நானே! பரிசினை தருமிக்கு அளித்து விடுங்கள்!”–என்றபடி புலவர் மகேசன் அவைக்குள் நுழைந்தார். ஏதோ பாடினோம் பரிசில் பெற்றோம் என்றில்லாமல் ஒரு தேசம் நன்றாக இருக்கவேண்டும் என்பதில் புலவருக்குத்தான் எத்தனை அக்கறை! புலவரைக் கண்டதும் மன்னர் அரியணையை விட்டு எழுந்துநின்று அவரை வரவேற்றார். மந்திரி நிறைமதியார்தான் இந்த நாடகத்தின் சூத்ரதாரி என்பது மன்னருக்குப் புரியாமலில்லை. “தங்களைப் போன்ற சான்றோர்கள் என்னை வழிநடத்தக் காத்திருக்கும்போது நான் எதற்காக கவலை கொள்ளவேண்டும்! நான் எனது குடிமக்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வேன்!”–என்றபடி மந்திரியார் புலவர் இருவரையும் ஒருசேர ஆரத்தழுவிக் கொண்டார் மன்னர். அவரின் கண்கள் பனித்திருந்தன.


மா.பிரபாகரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நல்லதேசம் (சிறுகதை)”

அதிகம் படித்தது