செப்டம்பர் 18, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

நாசாவின் பெண்கம்ப்யூட்டர் காத்தரைன் ஜான்சன்

தேமொழி

Mar 30, 2019

Siragu katherine2

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான உலகப் புகழ்பெற்ற நாசா நிறுவனம் சமீபத்தில் தனது நிறுவனத்தின் பகுதி ஒன்றுக்கு புதிய பெயரைச் சூட்டியது. நூறுவயதான ‘காத்தரைன் ஜான்சன்’ என்ற கறுப்பின விஞ்ஞானியை கௌரவிக்கும் பொருட்டு இந்த மாற்றம் முன்னெடுக்கப்பட்டது.

காத்தரைன் கணிதத்தில் வல்லவர். அமெரிக்கா முதன்முதல் விண்வெளி ஆய்வுக்கு அனுப்பிய ராக்கெட்டின் பாதையைக் கணக்கிடுவதில் பெரும்பங்காற்றியவர். அதன் பிறகு பல அப்பல்லோ ராக்கெட் பயணங்களிலும் இவரின் கணித உதவி அமெரிக்க விண்வெளி வீரர்களுக்கு உதவியது. அவர்கள் வெற்றியுடன் புவிக்குத் திரும்ப பயணப்பாதையை வகுத்தவர் காத்தரைன். சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் நிலவில் காலடி வைக்க வகுத்த பயணத்தின் பாதையை கணக்கிடுவதிலும் இவர் உதவி செய்துள்ளார். முப்பத்தைந்து ஆண்டுகள் இவர் நாசாவின் கணிதத்துறை விஞ்ஞானியாகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவரது பணியைப் பாராட்டி, 2015 ஆம் ஆண்டில் அமெரிக்கக் குடிமக்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதான ‘மெடல் ஆஃப் ஃப்ரீடம்” என்ற விருதை அதிபர் ஒபாமா அளித்து இவரை சிறப்பித்தார்.

‘ஹிடன் ஃபிகர்ஸ்’ என்ற பெயரில் இவரது வாழ்க்கை வரலாறு ஒரு நூலாகவும், திரைப்படமாகவும் 2016ம் ஆண்டு வெளிவந்தது. இவர் நாசாவில் பணிபுரியத் துவங்கிய காலம் 1950களில். அக்காலத்தில் அமெரிக்காவில் நிறவெறியும் இனவெறியும் கறுப்பர்களை ஒடுக்கி இருந்தது. அறிவியல் கல்வி, உயர்கல்வி, அவர்களின் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற பணிகளும் பெண்களுக்குக் கிடைக்காது. தவறி வேலையே கிடைத்தாலும் அவர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியமும் வழங்கப்பட்டதில்லை. அறிவியல் துறையில் உள்ள பணிகளில் பெண்கள் வரவேற்கப்பட்டதுமில்லை. இந்த சூழ்நிலையில் நிறபேதம், பாலின பேதம் என இருவகையிலும் பாதிக்கப்பட்டிருந்தனர் அமெரிக்காவின் கறுப்பினப் பெண்கள்.

ஆகஸ்ட் 26, 1918 அன்று பிறந்த காத்தரைனுக்கு வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய கல்வியே அவருக்கு உதவும் என்று தொடர்ந்து வலியுறுத்தி அவரை வழிநடத்தியவர் அவரது தந்தை. சிறுவயதிலேயே எதையும் எண்ணிக்கொண்டே இருப்பாராம் காத்தரைன். பள்ளியில் கணக்கு வகுப்பில் முதலில் முடித்துவிட்டு மற்ற மாணவர்களுக்கும் சென்று உதவுவாராம். இவரது அறிவாற்றலால் இவரது மூத்த சகோதரர்களைவிட உயர் வகுப்புகளில் அனுமதிக்கப்பட்டு 15 வயதிலேயே கல்லூரியிலும் சேர்ந்துவிட்டார். அங்கும் கணிதமே பாடம். கணிதத்தில் விடை என்றால் அது சரி அல்லது தவறு என இரண்டில் ஏதோ ஒன்றுதான் இருக்கும் அதுவே என்னை மிகவும் கவர்ந்தது என்கிறார்.

Siragu katherine1

கணிதத்தில் பட்டம் பெற்ற பின்னர் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிவது அவரது நோக்கம். அக்காலத்தில் பெண்கள் ஒன்று பள்ளி ஆசிரியராகப் பணிபுரியலாம் அல்லது மருத்துவமனையில் ஒரு நர்சாகப் பணிபுரியலாம். இவையிரண்டு பணிகளே பெண்களுக்குரிய பணிகள் என்று மக்கள் கருதியிருந்த காலம். அதிலும் பெண்களுக்கு திருமணமானால் அவர்கள் பணியிலிருந்தும் விலகிவிடவேண்டும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

காத்தரைனின் கணிதத் திறமையை அடையாளம் கண்ட கல்லூரிப் பேராசிரியர் அவரை ஆய்வுகள் செய்யும் கணித விஞ்ஞானியாகப் பணிபுரியுமாறு ஊக்கப்படுத்தி கல்லூரியில் இருக்கும் அனைத்து கணிதப் பாடங்களையும் படிக்க வைத்தார். சில வகுப்புகளில் இவர் ஒருவர் மட்டுமே மாணவராகவும் இருந்தார். பேராசிரியர் இவருக்காகச் சிறப்புப்பாடங்களையும் வடிவமைத்துக் கொடுத்து வகுப்பெடுத்தார். தனது ஆசிரியர் தனது திறமை மீது வைத்த நம்பிக்கையே இவருக்கு மேலும் ஊக்கமூட்டியது. கணித ஆய்வாளராகப் பணிபுரிவது என்றால் அது என்ன பணி என்று கூட புரியாத நிலையில் பேராசிரியரிடம், அது என்ன வேலை? எனக்கு அது போன்ற பனியெல்லாம் கிடைக்குமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவரோ உயர் கணிதப் பாடங்களைப் படித்து பட்டம் வாங்கு, வேலை உன்னைத் தேடிவரும் என்று ஊக்கமளித்துள்ளார்.

படித்து முடித்து 7 ஆண்டுகள் வரை படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார் காத்தரைன். அப்பொழுது நாசாவில் கறுப்பின அறிவியல் ஆய்வாளர்களுக்கு என்ற இட ஒதுக்கீட்டில் பெண்களையும் வேலைக்கு எடுக்கப்போவதாக அறிவிப்பு வரவும் ஆவலுடன் விண்ணப்பித்தார். முதல் முறை வேலை கிடைக்கவில்லை. அடுத்த ஆண்டும் விண்ணப்பித்தால் வேலை தருவதாகக் கூறப்பட்டது. பொறுமையாகக் காத்திருந்து மறு ஆண்டும் விண்ணப்பித்து பதவியை ஏற்றுக் கொண்டார். அக்கால நாசாவில் இன்று போல கணினிகள் இல்லாத காலம். நாசா பொறியாளர்கள் வகுக்கும் திட்டங்களில் அவர்களுக்குக் கணக்கு போட்டு உதவுவது இவரது வேலையாக இருந்தது. அக்காலத்தில் இத்தகையப் பணியாளர்களைத்தான் ‘கம்ப்யூட்டர்’ என்று குறிப்பிட்டனர். ஆக, காத்தரைன் ஒரு ‘பெண் கம்ப்யூட்டராக’ நாசாவில் பணிபுரிந்தார். துல்லியமாகவும் நுணுக்கமாகவும் கணக்குப் போடுவதில் பெண்கள் திறமைசாலிகள் என்பதால் பெண்கள் இவ்வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டார்கள்.

பிற்காலத்தில் தொழில்நுட்பம் வளர்ந்து கணினிகள் பயனுக்கு வந்தபொழுதும் அவற்றின் விடைகள் மீது நம்பிக்கை வைக்கப்படாமல் மனித கம்ப்யூட்டர்களால் கணக்குகள் மீண்டும் ஒருமுறை சரிபார்க்கப்பட்டது. விண்வெளிப் பயணங்களின் கணிதங்களை காத்தரைன்தான் போட்டுவந்தார் என்பது வழக்கமாக இருந்தது. அப்பொழுது விண்வெளிப்பயணத்திற்குத் தயாரான விண்வெளிவீரர் ஜான் கிளென் கணினி போட்ட கணக்கை காத்தரைன் சரி என்று ஏற்றுக் கொண்டால் தான் பயணத்திற்குத் தயாராவதாகவும் கூறினார் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

அக்காலத்தில் கறுப்பின மக்களுக்கும் வெள்ளையின மக்களுக்கும் ஒவ்வொரு கட்டிடத்திலும் தனித்தனி குளியலறை, உணவு உண்ணுமிடம், கழிவறை போன்றவை வழக்கிலிருந்த காலம். காத்தரைன் பணிபுரிந்த நாசா கட்டிடத்தில் கறுப்பின பெண்களுக்காக ஒரு கழிவறை கூட இல்லை. மதிய உணவிற்குப் பிறகு மற்றொரு கட்டிடத்தில் இருக்கும் கறுப்பின பெண்களுக்கான கழிவறையைப் பயன்படுத்த அவர் அரை மைல் தூரம் தினமும் சென்று வர வேண்டும். அவ்வாறு சென்று வருவதால் தாமதமானதில் உயர் அதிகாரி அவரைக் கடிந்து கொள்கிறார். கறுப்பின பெண்ணான தனக்கு ஒரு கழிவறையைப் பயன்படுத்தக் கூட அதே கட்டிடத்தில் வழியில்லையே என காத்தரைன் குமுறலுடன் உயர் அதிகாரியிடம் முறையிடுகிறார். காரணம் அறிந்து அதிர்ந்து போன அதிகாரி உடனே அக்கட்டிடத்தில் இருக்கும் வெள்ளையின பெண்களுக்கான கழிவறையை காத்தரைனும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உத்தரவைப் பிறப்பிக்கிறார். ஆனால், இன்றோ அரை நூற்றாண்டிற்குப் பிறகு நாசாவின் ஒரு கட்டிடத்திற்கே காத்தரைன் ஜான்சனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பதைக் காணும்பொழுது அறிவியலில் பெண்கள் கண்ட முன்னேற்றம் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இது இவருக்கு மதிப்பளிக்கும் பொருட்டு பெயர் சூட்டப்படும் நாசாவின் இரண்டாவது ஆய்வகம் ஆகும்.


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நாசாவின் பெண்கம்ப்யூட்டர் காத்தரைன் ஜான்சன்”

அதிகம் படித்தது