மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நாஞ்சில் நாடன் சிறுகதைகளில் நாட்டுப்புற மருத்துவம்

நா.தீபாசரவணன் உதவிப்பேராசிரியர் ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி,கோவை.

Oct 14, 2017

Siragu naanjil naadan2

கதை மனித சமுதாயத்திற்கு மிகப்பழமையான சொத்து. காவியங்களில் நீண்ட பாட்டுக்களில் கதை அமைத்து வந்தனர். நாவல்களும் சிறுகதைகளுமாகிய இக்கால இலக்கிய வடிவங்கள் இல்லையாயினும் கதைகள் பல இருந்தன.

பாடுபொருளின் பரிணாம வளர்ச்சி, தட்டச்சின் கண்டுபிடிப்பு, போன்றவை சிறுகதை என்னும் இலக்கிய வகைமையை தனித்துறையாக வளர்த்தியது. வீரமாமுனிவர், வா.வே.சு ஐயர், புதுமைப்பித்தன் போன்றோர் இத்துறை வளர்ச்சிக்கு மூலாதாரமாக விளங்கினர்.

சமூகத்தின் அவலங்களை அப்படியே பிரதிபலித்துக் காட்டி தான்கூற வந்த கருத்துக்களை அழகாகவும், ஆழமாகவும்பதியவைக்கும் திறன் சிறுகதைக்குண்டு.

இன்றைய இலக்கியங்கள் சோலையில் தினம் தினம் வளரும்பூக்களாய், வண்ணத்துப் பூச்சிகளாய், புற்றீசல்களாய் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. இக்கால இலக்கியங்களின் பாடுபொருள் மிக விரிவுடையதாக அமைய வேண்டும் என்ற அவசியமில்லை. நம் அன்றாட வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை, மற்றும் நினைவுகளை, நடக்கின்ற நிகழ்ச்சிகளை செயல்களை நடக்கவிருக்கும் எண்ணங்களைக் கனவுகளை என அனைத்தையும் தனது கற்பனையின் மூலம் பாடுபொருளாகக் கொண்டு இலக்கியங்களைப் படைக்கின்றனர் தற்காலப் படைப்பாளர்கள்.

நாஞ்சில் நாடனின் சிறுகதைகள்

Siragu naanjil naadan1

“சூடிய பூ சூடற்க” என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக 2010 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நாஞ்சில் நாடன் அவர்கள் கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு, நாவல் என பல துறைகளில் தனது ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார். அவரின் மிகுதியான ஆர்வம் சிறுகதை வாயிலாகவே வெளிப்படுகிறது என்பதை அவரின் கதைகள் மூலமே உணரலாம். நாஞ்சில் நாடனின் சிறுகதைகள் படிப்பதற்கு இனிமையானவையும், சொற்சுவைமிக்கவையும் ஆகும். தற்காலப்படைப்புகள் பல கலைகளைப் பாதுகாக்கின்றன. அவற்றுள் ஒன்று நாட்டுப்புற மருத்துவம்.

நாட்டுப்புற மருத்துவம்

நோயும், மருத்துவமும் மனித இனத்திலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாகும். நாட்டுப்புற மக்கள் கையாளும் மருத்துவ முறைகளை நாட்டுப்புற மருத்துவம் என்பர். கிராமப்புற மக்களின் பண்பாட்டோடும், பழக்கவழக்கத்தோடும் சமூக அமைப்போடும் பின்னிப்பிணைந்துள்ளது அவர்களது நாட்டுப்புற மருத்துவம். இன்று வளர்ந்து வரும் நவீன மருத்துவ முறைகளால் நோய்களும் வளர்ந்து கொண்டிருக்கின்றன. கிராமப்புற மக்களின் ஆயுளும், ஆரோக்கியமும் நகர்ப்புற மக்களுக்குக் கனவாகவே இருக்கிறது. மறந்து போன, மக்கிப்போன நாட்டுப்புற மருத்துவங்களை மீண்டும் தனது படைப்புகள் மூலம் உயிர் பெறவைத்திருக்கிறார் நாஞ்சில் நாடன். அவரின் பல்வேறு தொகுப்புகளில் இடம்பெறும் நாட்டுப்புற மருத்துவத்தைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நா வறட்சி தணிய

இன்று பல குளிர்பானங்கள் கண்டுபிடிக்கப்பட்டபோதும் அவைகள் நம் பணத்திற்கு மட்டுமல்ல நம் உடலுக்கும் தீங்குவிளைவிக்கக்கூடியவைகள். ஆனால் இஞ்சியும், எலுமிச்சம்பழமும் சேர்த்து சதைத்த கரும்புச்சாறு ஐஸ் போட்டு இரண்டு தம்ளர்கள் குடித்தால் தாகம் தணியும் என்பதை பிராந்து என்ற கதைத்தொகுப்பில் “வந்தான் வருவான் வாராநின்றான்”என்ற கதைமூலம் விளக்குகிறார். மேலும் அதே கதையில்,

‘விக்ஸ், அமிர்தாஞ்சன், கோல்டரின் பிளஸ், ஆக்ஷன் நானூற்று தொண்ணூற்று எட்டு எதுவும் எடுபடவில்லை. சுக்கும் மிளகும் தட்டிப்போட்ட கருப்பட்டிக் காப்பி இதமாக இருந்தது. என்பதன் மூலம் தொண்டைவலிக்கான மருத்துவத்தைக் குறிப்பிடுகிறார்.

‘தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்’ என்ற கதையில் தொண்டைப் பொறுமல் சரியாக, தொண்டையை மென்மையாக வைக்க

“இரண்டு நாட்களாக இரவில், காய்ச்சிய பசும்பாலில் நல்லமிளகு, குந்திரிக்கம், இவற்றைப்பொடி செய்து சாப்பிடுகிறார்’ என்கிறார்.

இதயம் காக்க

நவீன இயந்திர உலகில் இயந்திரங்களின் பின்னால் சுற்றித்திரியும் மனிதன், சுற்றுவதற்கிடையில் நமது உடம்பாகிய இயந்திரத்தை மறந்து விடுகிறான். எனவேதான் நாஞ்சில் நாடன் தனது படைப்புகள் வாயிலாக நெஞ்சு கரிப்பு, நெஞ்சுவலி போன்றவைகளுக்கு மருத்துவரிடம் செல்லத் தேவையில்லை உணவேமருந்து மருந்தே உணவு என்பதை மறைமுகமாக விளக்குகிறார்.

‘கான்சாகிப்’ என்ற கதைத்தொகுப்பில் ‘கண்ணுப்பிள்ளைக்கு ஒரே நெஞ்சுக்கரிப்பு. ஒரு டம்ளர் ஓமத்திராவகம் இருந்தால் போதும் அல்லது முனைக்க எரிவு, உப்பு போட்டு வழுதுணங்காய் மொளவச்சம் வைத்து கொதிக்கக் கொதிக்கச் சாப்பிட வேண்டும்’ என்று குறிப்பிடும் வரிகளால் உணரலாம்.

மேலும் ‘வாத்துக்காரன்’ என்ற கதையில் நெஞ்சுவலிக்கு தவிடு வறுத்து ஒத்தடம் கொடுக்கிறார். என்றும் கோழிக்குஞ்சு இடித்துப்பிழிந்து சூப்வைத்துக் குடிக்கிறார் என்றும், வெந்தயக்காடி வைத்து முன்னிரவில் ஆற்றி ஆற்றிக் குடிக்கிறார் என்றும் தெரிந்து சங்கடப்பட்டான் அன்பையன்’ என்ற வரிகள் மூலம் நெஞ்சுவலிக்கான மருத்துவத்தைக் குறிப்பிடுகிறார் நாஞ்சில் நாடன்.

மண்ணோடு மறைந்து கொண்டிருப்பவை நாட்டுப்புறக் கலைகள் மட்டுமல்ல நாட்டுப்புற மருத்துவமும்தான். தெரியாமல் இருக்கும் மருத்துவ வகைகளுள் ஒன்று தாராமுட்டை என்பதை தனது வாத்துக்காரன் என்ற கதையில்,

“சில நோய்களுக்குத் தாராமுட்டை நாட்டு வைத்தியம் குறிப்பாக மூலநோய், பின்னர் க்ராணி நோய், சொல்லி வைத்து வீட்டுக்கு வந்து கேட்டு வாங்கிப்போவார்கள். வெள்ளைலகான் கோழிமுட்டை ஒன்றரை ரூபாயெனில் நாட்டுக் கோழிமுட்டை இரண்டு ரூபாயெனில், தாராமுட்டை இரண்டரை ரூபாய்” ஏன்ற வரிகளால் உணர்த்துகிறார்.

இலக்கியங்கள் சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்குவது போலவே மக்கள் மனதில் ஒரு கருத்தை ஆழமாகப் பதியவைத்து பாதிப்பை ஏற்படுத்தும் சக்தியும் இலக்கியங்களுக்குண்டு. அவ்வகையில் வாழும் இலக்கியமான சிறுகதை மூலம் அழிந்து போகக்கூடிய நமது ஆரோக்கியமான பல பொக்கிசங்கள் பாதுகாக்கப்பட்டு மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு வளர்க்கப்படுகிறது என்பதை இக்கட்டுரை மூலம் உணரமுடிகிறது.

இக்கருத்துக்களால் தமிழ் தொன்மை பேசுவதில் மட்டுமல்ல பிற துறைகளோடும் தன்னை இணைத்துக் கொண்டு சீரிளமை மாறாமல் நிலைத்து நிற்கக் கூடிய தனித்தன்மை வாய்ந்த மொழியாகும் என்பது உறுதியாகிறது.


நா.தீபாசரவணன் உதவிப்பேராசிரியர் ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி,கோவை.

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நாஞ்சில் நாடன் சிறுகதைகளில் நாட்டுப்புற மருத்துவம்”

அதிகம் படித்தது