ஏப்ரல் 10, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

நாமும் பார்ப்போம்

தேமொழி

Jan 4, 2020

siragu naamum paarppom1

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் அடக்குமுறைக்குக் கண்டனம் தெரிவிக்கும் நோக்கத்தில் கான்பூர் ஐ.ஐ.டி வளாகத்தில் ஃபைஸின் “ஹம் தேக்கேங்கே” பாடலைப் பாடினர்.  இப்பாடல் இந்து மத உணர்வுகளை அவமதிப்பதாகச் சர்ச்சை கிளப்பப்பட்டுள்ளது. இப்பாடலை எழுதிய ஃபைஸ் இந்திய மாணவர்களும் அரசுக்கு  எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் இப்பாடலைப் பாட விரும்புவார்கள், அப்படியும் ஒரு நிலை வரலாம் என நினைத்திருக்க மாட்டார். இந்து சமயம் குறித்தே அப்பாடலை எழுதுகையில் எண்ணியிருக்கவும் மாட்டார் என்பதையும் பாடலைப் படித்த பின்னர் உறுதியாகக் கூறலாம். அவர் அன்று எழுதிய சூழ்நிலையே வேறு, இந்தியாவில் இன்றைய சூழ்நிலையும் வேறு.

1980களில் பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஜியா உல் ஹக் நடத்திய கொடுங்கோலாட்சியை எதிர்த்துப் போராடி புரட்சிப் பாடல்கள் எழுதியவர் உருது மொழிக் கவிஞரான ‘ஃபைஸ் முஹமது ஃபைஸ்’  (Faiz Ahmed Faiz). இடதுசாரி கொள்கைப் பாதையில் பயணித்த இவர் தவறான வழியில் சென்ற அரசை எதிர்த்துப் புரட்சிப்பாடல்கள் எழுதிப் புகழ் பெற்றதுடன் அதனால் சிறையும் பட்டார், கலகக்காரர் என்று அடையாளமும் காணப்பட்டார். இலக்கியத்துக்கான நோபல் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர் என்ற சிறப்பும் இவருக்குண்டு. கவிஞர் ஃபைஸ் முஹமது ஃபைஸ் அவர்களின் கவிதைகளின் ஆதரவாளர் மறைந்த புகழ்பெற்ற பாகிஸ்தானியப் பாடகர், கஜல் அரசி எனப் பாராட்டப்படும் ‘இக்பால் பானோ’ (Iqbal Bano 1935 – 2009, இவர் இக்பால் பானு எனவும் அறியப்படுவார்). இவர் டெல்லியில் பிறந்து வளர்ந்து பாகிஸ்தானியரைக் கரம் பிடித்து அந்நாட்டில் குடியேறியவர்.

ஃபைஸ் அவர்களின் பாடல்களை மேடைகளில் பாடி பரப்புவதில் ஈடுபட்டார்  இக்பால் பானோ. ஃபைஸின்  “ஹம் தேக்கேங்கே” என்ற  நஜ்ம் (பாடல்) மிகுந்த புகழ் பெற்ற ஒன்று. இப்பாடலை இக்பால் பானோ மேடையில் பாடிய பொழுது அரசுக்கு எதிர்ப்பைக் காட்டும் வகையில் கருப்பு நிற சேலை அணிந்து பாடினார். பாடல் கேட்ட இரசிகர்கள் உணர்ச்சி மிகுதியால் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ (புரட்சி ஓங்குக) என முழங்க அரங்கத்தில் ஆரவாரம் அதிகமாகியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆட்சிப் பொறுப்பாளர்கள் மின்சாரத்தை நிறுத்தி, மேடையை இருளில் மூழ்கடித்து ஒலிபெருக்கியையும் துண்டித்தார்கள் என்பது வரலாறு.

siragu naamum paarppom2

புரட்சியின் குரலாக ஒலித்த “ஹம் தேக்கேங்கே” பாடலின் தமிழாக்கம் இக்கட்டுரையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இக்பால் பானோ பாடுகையில் அரங்கமே அதிர்ந்த பாடல் பத்து நிமிடங்களுக்கு மேல் ஒலிக்கும் ஓர் இசைவடிவம் (https://youtu.be/dxtgsq5oVy4). பாகிஸ்தானிய கோக் ஸ்டுடியோ தொலைக்காட்சி (Coke Studio -Pakistani television programme) நிகழ்ச்சி இக்காலத்திற்கு ஏற்ப சுருக்கிய வடிவம் ஒன்றையும் (https://youtu.be/unOqa2tnzSM) வெளியிட்டுள்ளது. பாடலைக்  கேட்போரே முடிவு செய்யலாம் இது புரட்சிப் பாடலா அல்லது இந்து மத உணர்வுகளை அவமதிக்கும் பாடலா என்று.

_____________________

நாமும் பார்ப்போம்

(ஃபைஸ் முஹமது ஃபைஸ் எழுதிய “ஹம் தேக்கேங்கே” பாடலின் மொழியாக்கம் தேமொழி)

நாமும் பார்ப்போம்… நாமும் பார்ப்போம்

நிச்சயம் அந்நாளை நாமும் பார்ப்போம்

வரப்போகும் அந்த நாளை நாமும் பார்ப்போம்

வரலாற்றில் நிலைத்திடும் அந்நாளை நாமும் பார்ப்போம்

நிச்சயம் அந்நாளை நாமும் பார்ப்போம்

மலைபோல் வரும் கொடுமையும் துன்பமும்

காற்றில் பஞ்சாய்ப் பறந்திடும் நேரம்

நம் காலடியில் கிடக்கும் பூமியின்

நெஞ்சமும் அதிர்ந்திடும் துடித்திடும் நேரம்

கொடுங்கோலாட்சி செய்வோர் தலையில்

இடியும் மின்னலும் இறங்கிடும் நாளை

நாமும் பார்ப்போம்

நிச்சயம் அந்நாளை நாமும் பார்ப்போம்

இறைவனின் சபையிலிருந்து

பாவிகள் அனைவரும் நீக்கப்படும் நேரம்

துரத்தப்பட்ட தூய உள்ளத்தோரான நாம்

அழைக்கப்பட்டு அரசாளும் நேரம்

தலைமைகள் யாவும் மாறும் நேரம்

ஆட்சியினர் அனைவரும் மாறிடும் நாளை

நாமும் பார்ப்போம்

நிச்சயம் அந்நாளை நாமும் பார்ப்போம்

அல்லாவின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்

காணமுடியாதவராய் எங்கும் நிறைந்தவராய்

காட்சியாய் சாட்சியாய் நின்றவரிடமிருந்து

நானே உண்மையானவர் என்ற குரல் ஓங்கி ஒலிக்கும்

அந்த உண்மையின் உருவங்களாக நானும் நீங்களுமாய்

நம்மால் இறைவனின் ஆட்சி நடைபெறும்

அந்த உண்மையின் உருவங்களாக நானும் நீங்களுமாய்

நாமும் பார்ப்போம்… நாமும் பார்ப்போம்

நிச்சயம் அந்நாளை நாமும் பார்ப்போம்

நாமும் பார்ப்போம்… நாமும் பார்ப்போம்

____________________________________

Hum dekhenge by Faiz Ahmed Faiz

Hum dekhenge… Hum dekhenge

Laazim hai ki hum bhi dekhenge hum dekhenge

Woh din ke  jiskaa ka waada hai hum dekhenge

Jo loh-e-azl mein likha hai hum dekhenge

Laazim hai ki hum bhi dekhenge hum dekhenge

Jab zulm-o-sitam ke koh-e-garaan

Rooi ki tarah udd jaayenge

Hum meh-koomon ke paaon tale

ye dharti dhad dhad dhadkegi,

Aur ahl-e-hukam ke sar oopar

jab bijli kad kad kadkegi

Hum dekhenge

Laazim hai ki hum bhi dekhenge hum dekhenge

Jab arz-e-khudaa ke kaabe se

Sab but uthwaaey jaayenge

Hum ahl-e-safaa mardood-e-haram

Masnad pe bithaaey jaayenge

Sab taaj uchaaley jaayenge

Sab takht giraaey jayyenge

Hum dekhenge

Laazim hai ki hum bhi dekhenge hum dekhenge

Bas naam rahega Allah kaa

Jo ghaayab bhi hai, haazir bhi,

Jo manzar bhi hai, naazir bhi.

Utthegaa ‘An-al-haq’ ka naara

Jo main bhi hoon, aur tum bhi ho,

Aur raaj karegi Khalq-e-Khuda

Jo main bhi hoon, aur tum bhi ho,

Hum dekhenge… Hum dekhenge

Laazim hai ki hum bhi dekhenge hum dekhenge

Hum dekhenge… Hum dekhenge


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நாமும் பார்ப்போம்”

அதிகம் படித்தது