சனவரி 16, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

நாம் பெண்ணியச் சிந்தனையாளர்கள்

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Jul 15, 2017

Siragu penniyam1

சிமம்ந்த நகோசி அதிச்சி (Chimamanda Ngozi Adichie) என்பவர் ஒரு நைஜீரிய நாவல் ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பெண்ணியச் சிந்தனையாளர். மிகச் சிறந்த அவருடைய படைப்புகளான பர்பல் ஹிபிஸுக்ஸ் (Purple Hibiscus), அமெரிக்கான்ஹா (americanah) போன்ற படைப்புகள் அனைவரின் கவனத்தையும் பெற்றது.

2012 ஆம் ஆண்டு அவர் உரையாற்றிய “நாம் பெண்ணியச் சிந்தனையாளர்கள்(We Are All Feminists)” என்ற உரை இன்றும் மிகச் சிறந்த உரையாகப் போற்றப்படுகின்றது.

அந்த உரையின் சில பகுதிகள் உங்கள் பார்வைக்கு…

Siragu penniyam2

“2003 இல் வெளிவந்த பர்பல் ஹிபிஸுக்ஸ் (Purple Hibiscus) எனும் நாவலில் ஒரு கணவன் தன் மனைவியை குடும்ப வன்முறை காரணமாக அடிப்பதைப் பற்றி பேசியிருப்பேன், அந்த நாவலை நைஜீரிய மக்களிடையே கொண்டு செல்வதற்கான கூட்டத்தில் ஒரு ஊடகத்துறை நண்பர் என்னிடம் இவ்வாறு கூறினார். “நான் என்னை பெண்ணியவாதி என அழைத்துக் கொள்ளக்கூடாது, ஏனெனில் பெண்ணியவாதிகளுக்கு ஆண் இணையர்கள் கிடைப்பது அரிது, அப்படியே பெற்றாலும் மகிழ்ச்சியான வாழ்வைப் பெற மாட்டார்கள் என்றார். அதனால் நான் என்னை “மகிழ்ச்சியான பெண்ணுரிமைப் போராளி என அழைத்துக் கொள்ள விரும்பினேன்.”

அதே போன்று ஒரு நைஜீரியப் பெண் கல்வியாளர் என்னிடம் ஒருமுறை பெண்ணியவாதிகளை நைஜீரிய பண்பாடு ஏற்றுக் கொள்வதில்லை, ஆப்பிரிக்க பண்பாடும் ஏற்றுக் கொள்வதில்லை எனக்கூற, “நான் என்னை மகிழ்ச்சியான ஆப்பிரிக்க பெண்ணுரிமைப் போராளி” என அழைத்துக் கொள்ள விரும்பினேன்.

என் தோழி ஒருவர், “நீ உன்னை பெண்ணியவாதி என அழைத்துக் கொண்டால், ஆண்களை வெறுப்பவள் எனப் பொருள் வரும் எனக் கூற, “நான் என்னை மகிழ்ச்சியான ஆப்பிரிக்க, ஆண்களை வெறுக்காத பெண்ணுரிமைப் போராளி”, என அழைத்துக் கொள்ள விரும்பினேன்.

இப்படித்தான் இங்கே ‘பெண்ணியவாதி’ எனும் சொல் எதிர்மறை சிந்தனையோடு நோக்கப்படுகின்றது.

Siragu Akilaavin poem6

“என் ஒன்பதாம் வயதில் நான் தொடக்கப்பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது, என் ஆசிரியர் வரும் தேர்வில் யார் அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனரோ அவர்கள் தான் வகுப்பு தலைவர் எனக் கூறினார். எனக்கு அந்த அறிவிப்பு மிகுந்த உத்வேகத்தைக் கொடுத்தது. ஏனெனில் வகுப்புத் தலைவராக இருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தரக் கூடியது. கையில் ஒரு பிரம்பும், வகுப்பறையில் பேசுகின்றவர்களின் பெயர்களை கரும்பலகையில் எழுதும் ஒரு அதிகாரமிக்க பொறுப்பு என்பதை எண்ணி பூரிப்படைந்தேன். அந்தத் தேர்வில் நன்றாகப் படித்து முதல் மதிப்பெண் பெற்றேன். ஆனால் என் ஆசிரியர் என்னை வகுப்புத் தலைவராக நியமிக்கவில்லை. எனக்கு அடுத்து இரண்டாம் மதிப்பெண்கள் எடுத்த மாணவனை நியமித்தார். ஏனென்றால் மாணவிகள் வகுப்புத் தலைவராக இருக்க முடியாது என்றார். இரண்டாம் மதிப்பெண் பெற்றாலும், மாணவன் தான் வகுப்புத் தலைவராக முடியும் என்ற முறை மிக வியப்பளித்தது.

ஆண் -பெண் இருவரும் உடற்கூறுகளில், சுரக்கும் ஊக்கிகள் (hormones) மூலம் சில மாற்றங்கள் பெற்று வெவ்வேறானவர்களாக இருக்கின்றனர். உலக மக்கள் தொகையில் 52% பெண்கள் தான், என்றாலும் தலைமைப் பதவிகளில் பெண்களைப் பார்ப்பது அரிது. மறைந்த நோபல் பரிசு பெற்ற கென்யா நாட்டைச் சேர்ந்த வாங்கரி மாத்தை (Wangari Mathai) இப்படிக் கூறுவார் “The Higher you go, fewer women there are”.

“நாம் நம் பெண் பிள்ளைகளுக்கு, ஆணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?, அவர்கள் பெண்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்? என்ற கவலையை விதைக்கின்றோம். ஆனால் ஒரு ஆண் எப்படி பெண்ணை நடத்த வேண்டும் என்றோ, ஒரு பெண்ணுக்குப் பிடித்த முறையில் ஒரு ஆண் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றோ கற்றுத் தருவதில்லை.

நான் எழுத்துப்பட்டறையில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது, ஒரு இளம் பெண் இப்படிக் கூறினார், “பெண்ணியக் கருத்துக்களை உள்வாங்குவது கூடாது என என் தோழர்கள் கூறியுள்ளனர். ஏனெனில் அது ஒரு பெண்னின் திருமண வாழ்வை பாதிக்கும்”, எனக் கூறினார்கள் என்றாள். இந்த மிரட்டல் தான் உலகம் முழுவதும் பெண் ஒரு ஆணை எதிர்த்துப் பேசினால், பெண்ணியக் கருத்துக்கள் பேசினால் கூறப்படுகிறது.

திருமணம் என்பதே இங்கே பெண்ணை உரிமைக்கோரும் ஒரு அமைப்பாகத் தான் இந்தச் சமூகத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஒருவருக்கு ஒருவர் துணை-இணை என்ற நிலையாகச் சொல்லித்தரப்படுவதில்லை. நாம் பெண்களை ஒருவருக்கு ஒருவர் போட்டியாளராக வளர்த்தெடுக்கின்றோம். அந்தப் போட்டி எதற்கு பயன்படுகிறது என்றால் “ஒரு ஆண் மகனின் கவனத்தை பெற, மட்டுமே.”

நாம் பெண் குழந்தைகளை கண்காணித்துக் கொண்டே இருக்கின்றோம். ஒரு பெண்ணின் கன்னித்தன்மைக்காக அவளைப் போற்றுகின்ற இச்சமுதாயம் ஒரு ஆணின் கன்னித்தன்மைக்காக அவனைப் போற்றுவதில்லை. “நாம் பெண் குழந்தைகளுக்கு” அவமானப்படுதலை கற்றுத் தருகின்றோம். கால்களை அகட்டாதே, உன் உடலை முழுவதுமாக போர்த்திக்கொள் என்கிறோம். பெண்ணாக பிறந்ததே குற்றம் என்ற குற்ற உணர்வை பெண்களிடத்தில் இச்சமூகம் கட்டியமைக்கின்றது. அவர்களுக்கென்று எந்தப் பற்றும் இருக்கக்கூடாது என்று போதிக்கின்றோம். அவர்கள் தங்கள் எண்ணங்களை குரலெழுப்பாதவர்களாக, தாங்கள் நினைப்பதை உரத்துக்கூற முடியாத நிலையில், காலமெல்லாம் வாழ்கின்றனர்.

தன் உரையின் இறுதியில் நகோசி இப்படி முடிக்கின்றார்.

“பெண்ணியவாதி என்றால் என்ன? என்று இன்றைய பொருளகராதி குறிப்பிடுகின்றது என்றால், “சமூக, அரசியல், பொருளாதார சமத்துவத்தை பாலின பேதமில்லாமல் நம்புவோர்” என்கிறது.

என் கொள்ளு பாட்டி ஒரு பெண்ணியவாதி என அவரைப்பற்றி நான் கேள்விப்பட்ட வரையில் புரிந்து கொள்கின்றேன்.

“தனக்குப் பிடிக்காத திருமணத்தை எதிர்த்து, வீட்டினைத் துறந்து தான் விரும்பியவரை திருமணம் செய்து கொண்டார். தனக்கு நிலத்தில் உரிமையில்லை எனும்போது, தான் பெண் என்பதால் அந்தச் சொத்துரிமை மறுக்கப்படுகிறது எனும்போது கொதித்தெழுந்தார். அவருக்கு அன்று “பெண்ணியவாதி” என்றால் யார் எனது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர் பெண்ணுரிமைப் போராளி என்பதை மறுக்க முடியாது. என் வரையில் ஒரு பெண்ணியவாதி என்பவர் “இன்றைய காலக்கட்டத்தில் கூட பாலினச் சமத்துவம் இல்லை, அதற்காக பாடுபட வேண்டும் எனக் கோருபவரே.”

என தன் உரையை நிறைவுச் செய்கின்றார்.

நிகோசியின் உரையில், 1920-களில் தமிழகத்தில் பெண்ணுரிமைச் சிந்தனைகளை விதைத்த தந்தை பெரியாரின் சிந்தனைகளைக் காண முடியும். இந்த நூற்றாண்டில் நிகோசி கூறியதை, தந்தை பெரியார் எனும் தொலைநோக்குச் சிந்தனையாளர் 20 ஆம் நூற்றாண்டில் கூறிவிட்டார் என்பது தமிழர்களாகிய நமக்கு பெருஞ்சிறப்பு. அந்த வகையில் நிகோசி அவர்களின் இந்த உரையை முழுவதுமாகப் படித்து பயன் பெறுங்கள்.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நாம் பெண்ணியச் சிந்தனையாளர்கள்”

அதிகம் படித்தது