மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நியாயத்திற்குத் துணையாகும் நெருப்பு

முனைவர் மு.பழனியப்பன்

Mar 19, 2016

niyaayam fiதமிழ்க் காப்பியங்கள் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பெற்றாலும், அவற்றிற்குள் ஒரு பொதுத்தன்மை காணப்பெறுகின்றது. காப்பியப் படைப்பாளர்கள் தம் காப்பியங்களைத் ஒரு பொது மரபிற்குள் கொண்டு வந்துவிடுகின்றனர். ஒற்றை மனிதராக நியாயத்திற்காகப் போராடும்போது அவர்களுக்கு யாரும் துணையில்லாதபோது நெருப்பு துணைசெய்வது என்பது தமிழகக் காப்பியங்களில் காணப்பெறும் பொதுமரபாக உள்ளது. சிலப்பதிகாரத்தில் கண்ணகி மதுரையைத் தீக்கொளுவச் செய்கின்றாள். கம்பராமாயணத்தில் கம்பர் அனுமன் வாயிலாக இலங்கையில் தீப்பரவச்செய்கின்றார். இரண்டு காப்பியங்களில் தனிமனிதர்கள் நியாயத்திற்காகப் போராடுகிறார்கள். இவர்களின் போராட்டம் வெற்றி பெற நெருப்பு உதவுகின்றது.

சிலப்பதிகாரத்தில் கண்ணகி நெருப்பினை உருவாக்குகிறாள். இராமாயணத்தில் அனுமன் தன் வாலில் வைத்த நெருப்பை இலங்கை முழுவதும் பரப்புகிறான். இரண்டு நெருப்புகளுமே உருவாக்கப்பட்டவைதான். ஒரு வேறுபாடு உண்டு. கண்ணகி தானே உருவாக்கிய நெருப்பு மதுரையை அழிக்கிறது. அனுமனை அழிக்க வைத்த நெருப்பு வைத்தவர்களையே சுடுகின்றது. இவ்விரு காப்பியங்களில் காணப்படும் தீப்பரவல் பற்றிய செய்திகளை ஒப்பிட்டு காப்பிய ஆசிரியர்களின் பொது முடிவுகளை அறிந்து கொள்ள இக்கட்டுரை முனைகின்றது.

கண்ணகி உருவாக்கிய நெருப்பு:

niyaayam1வானக்கடவுளரும் மாதவரும் கேட்டீமின்
யானமர் காதலன் தன்னைத் தவறு இழைத்த
கோநகர் சீறினேன் குற்றமிலேன் யானென்று
இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அமைத்து
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து (சிலப்பதிகாரம், வஞ்சினமாலை,41-45)
என்று கண்ணகி கோநகர் சீற நெருப்பினை உருவாக்கும் முன்முயற்சிகள் சிலப்பதிகாரத்தில் எடுத்துரைக்கப்பெறுகின்றன. தனக்கு நேர்ந்த அவலம் கருதி கண்ணகி, அரசனின் நகர் மீது சீறுகின்றாள். மதுரையை மும்முறை வலம் வந்து தன் இடமுலையைத் திருகி எறிந்தாள். இதன் காரணமாக அங்கு அக்கினி தேவன் வந்து தோன்றுகிறான்.

விட்டாளெறிந்தாள், விளங்கிழையாள் வட்டித்த
நீல நிறத்துத் திரி செக்கர் வார்சடைப்
பால்புரை வேள் எயிற்றுப் பார்ப்பனக் கோலத்து
மாலை எரி அங்கி வானவன் தான் தோன்றி
மாபத்தினி நின்னை மாணப்பிழைத்தநாள்
பாயெரி இந்தப் பதியூட்டப் பண்டே யோர்
ஏவலுடையேனால் யார் பிழைப்பர் எங்கென்ன|| (சிலப்பதிகாரம், வஞ்சினமாலை, 46-50)
என்று அக்கினி தேவன் கண்ணகியுடன் உரையாடல் நிகழ்த்துகிறான். ஒரு பத்தினிக்கு தீமை விளைகின்றபோது மதுரை தீயால் அழியும் என்று ஒரு நிலை முன்னர் காலத்திலேயே ஏற்பட்டிருந்ததால் அதனை இப்போது நிறைவேற்றிவிட அக்கினி தேவன் தயாராக நிற்கின்றான். நெருப்பில் யாரை எரிக்க வேண்டும் என்று அக்கினி தேவன் கேட்கின்றான். கண்ணகி சிலரைத் தவிர்த்து மாநகரை அழிக்கச் சொல்கிறாள். இவ்வாறு பிழைக்கு உடனடியாக ஓர் அழிவு உண்டு என்பது இந்நிகழ்வின் வாயிலாக படைப்பாளரால் உணர்த்தப்பெறுகிறது.

கம்பராமாயணத்தில் அனுமனுக்கு வைக்கப்பெற்ற நெருப்பு:

niyaayam2கம்பராமாயணத்தில் அனுமன் இலங்கைக்குச் சீதையைத் தேடி வருகிறான். அவனை அச்சுறுத்தும் வகையில் அவன் வாலில் தீ வைக்கப் பணிக்கின்றான் இராவணன்.
தொல்லை வாலை மூலம் அறச் சுட்டு நகரை சூழ்போக்கி
எல்லை கடக்க விடுமின்கள் என்றான் நின்றார் இரைந்து எழுந்தார்
(கம்பராமாயணம், பிணிவீட்டுப்படலம், பாடல்1159)
என்றபடி அனுமனின் வாலின் மூலப்பகுதி வரைச் சுட்டு எல்லை கடத்துவது என்பது இராவணன் இட்ட கட்டளை ஆகும். இந்நேரத்தில் கம்பராமாயணத்தில் சீதை தீக்கடவுளை வரவைத்துச் சில சொல்லுகிறாள்.
நீயே உலகுக்கு ஒரு சான்று, நிற்கே தெரியும் கற்பினால்
தூயேன் என்னில் தொழுகின்றேன் எரியே அவனைச் சுடல்| என்றாள்
(கம்பராமாயணம், பிணிவீட்டுப்படலம், பாடல். 1169)

இவ்வாறு தீக்கடவுளைச் சீதை வேண்டுகிறாள். சிலப்பதிகாரத்தில் தீக்கடவுள் கண்ணகியிடம் வேண்டிநிற்கின்றான். கண்ணகி அவ்வாறு நடந்து கொண்டதற்கு அவளுக்கு ஏற்பட்ட அவலத்தின் அளவு அதிகம். இங்கு அவலத்தின் அளவு குறைவுதான். வால்வரைதான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

உகக்கடை உலகம் யாவும் உணங்குற ஒரு தன் நாட்டம்
சிகைக் கொழுங் கனலை வீசும் செயல் முனம் பயில்வான் போல
மிகைத்து எழு தீயர் ஆயோர் விரிநகர் வீயப் போர்வால்
தகைத்தல் இல் நோன்மை சாலும் தனிவீரன் சேயில் உய்த்தான்
( கம்பராமாயணம், பிணிவீட்டுப்படலம், பாடல். 1180)
என்பது பாடல். தனிவீரனுக்கு தீ உதவுகின்றது. இலங்கையில் தீயின் அளவு இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்று இராவணன் ஒரு கட்டளை வைத்திருந்தான். அந்த அடங்கிய தீ அனுமன் இட்ட வாலின் தீயுடன் கூடி பெருந்தீயாக மாறி அழிவைச் செய்தது என்கிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.

இல்லில் தங்கு வயங்கு எரி யாவையும்
சொல்லில் தீர்ந்தன போல்வன தொல்லுருப்
புல்லி கொண்டன மாயை புணர்ப்பு அறக்
கல்வி தம் இயல்பு எய்தும் கருத்தர் போல
(கம்பராமாயணம், இலங்கை எரியூட்டுப் படலம், பாடல் 1188)
என்ற பாடலில் அடங்கிய தீ எழுந்த வகை தெரியவருகிறது. இலங்கையில் எழுந்த தீ ஒரு சில இடங்களை விடுத்து மற்ற இடங்களை மட்டும் அழித்தது. கண்ணகி எழுப்பிய தீயும் ஒரு சில இடங்களை, சிலரை விட்டு மற்றோரை அழித்தது.

அழியாமல் நின்ற நல்லோர்
கண்ணகி ஏற்றிய நெருப்பால் மதுரை நகரமழிந்தது. அனுமன் ஏற்றி நெருப்பால் இலங்கை நாடே அழிகிறது. என்றாலும் ஒரு சில இடங்களை சிலரை அழிக்காமல் இவ்விருவரின் தீயும் அமைதி கொள்கின்றது.

பார்ப்பார் அறவோர் பசுப் பத்தினிப் பெண்டீர்
மூத்தோர் குழவி, எனும் இவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று (சிலப்பதிகாரம், அழற்படுகாதை, 51-55)
கண்ணகி சொல்லுகிறாள். பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டீர், மூத்தோர், குழந்தைகள் போன்றவர்களை விட்டுவிட்டு, கண்ணகிக்கு இழைக்கப்பெற்ற அநீதிக்குச் சார்பாக இருந்தவர்கள் பக்கமே தீ பரவட்டும் என்ற கண்ணகியின் மனப்பாங்கு போற்றத்தக்கதாக உள்ளது.
அனுமன் இட்ட தீயும் நாடு முழுவதும் இருந்த அரக்கர் பக்கம், இராவணன் அரண்மனை என்று எல்லா இடங்களிலும் பரவியது. ஓரிடத்தைத் தவிர.

விட்டுயர் விஞ்சையர் வெந்தீ வட்ட முலைத் திரு வைகும்
புள் திரள் சோலை புறத்தும் சுட்டிலது என்பது சொன்னார்
(கம்ப ராமாயணம், இலங்கை எரியூட்டுப்படலம், பாடல் 1243)
என்ற இப்பாடலில் சீதாபிரட்டி இருந்த சோலையின் பகுதியில் அனுமன் இட்ட தீ பரவவில்லை என்பது தெரியவருகிறது.

எனவே தீமை செய்தார்க்கு தீமை செய்ய, தீத்தொழில் புரியாருக்குக் காவலாக தீ இருக்க படைப்பாளர்கள் எண்ணி அவ்வாறு படைத்துள்ளனர். நெருப்பு தேவன் இரு காப்பியங்களிலும் இடம்பெறுகிறான். அவன் தீமைகளை அழிக்க வழிப்படுத்தப்பெற்றுள்ளான். தனி ஒருவருக்கு நிகழும் கொடுமையைக் களைய எவ்வகையிலாவது அறம் வந்து சேரும் என்பதற்கு ஏற்ப நெருப்பு இங்கு வந்து சேர்ந்துள்ளது. இந்நெருப்புச் சிந்தனை தனி மனிதர்களின் நியாயத்திற்கு என்றும் பலமாக அமையட்டும்.

தொகுப்புரை:

சிலப்பதிகாரத்திலும், கம்பராமாயணத்திலும் எரியூட்டப்படுதல் என்பது நிகழ்த்திக் காட்டப்பெற்றுள்ளது. கண்ணகி நெருப்பை உருவாக்கி, நெருப்புக்கடவுளை கைகட்டி நிற்கச் செய்து, யார் யாரை அழிக்கவேண்டும், யார் யாரை அழிக்கக் கூடாது என்று கட்டளையிடும் சாதாரணப் பெண்மகள் ஆவாள். ஆனால் கம்ப ராமாயணத்தில் தெய்வமாக கருதப்பெறும் சீதா பிராட்டி மெல்ல நினைந்து தீக்கடவுளுக்கு வேண்டுகோள் வைக்கிறாள். எந்த நிலையிலும் தான் தெய்வம் என்பதை உணர்த்தாமல் உணராமல் ஒரு சாதாரணப் பெண்ணின் பாத்திரப் பண்பினையே சீதை பெற்றுள்ளாள். இவள் வழிப்படுத்திய தீ அனுமனைச் சுடவில்லை. அவள் இருந்த இடத்தைச் சுடவில்லை. இதன் காரணமாக தீ நல்லோர்க்குச் சார்பாக, அல்லோர்க்கு தீய்ப்பாக அமைந்து விளங்கும் என்பது தெரியவருகிறது.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நியாயத்திற்குத் துணையாகும் நெருப்பு”

அதிகம் படித்தது