நவம்பர் 16, 2019 இதழ்
தமிழ் வார இதழ்

நிலவியல் அடிப்படையில் பறம்புமலை

சொ.அருணன்

Jul 13, 2019

siragu parambu malai1

தமிழ் மொழி மட்டுமன்று. வரலாற்றுக் கண்ணாடியும் கூட. காலத்தைத் தன் மடியில் இருத்தி அவை வடித்துத் தந்த இலக்கியங்கள் இன்னும் பழமை பேசுகின்றன. மனித குலத்திற்கு மட்டுமின்றி, உயிர்க்குலத்துக்கும் உலகியலுக்கும் கூடத் தமிழ் தெளிந்த வரலாறு கூறுகிறது. நிலமும் பொழுதுமாகப் பகுபடும் அதன் வகைமைகளில் உயிர்ப் பொருள்களோடு இயைந்த உயிரல் பொருள்களும் இடம் பெற்றுள்ளன. அவை இன்றும் காலத்தின் சாட்சியங்களாக விளங்குகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது பாரியாண்ட பறம்புமலை ஆகும். நிலவியல் அடிப்படையில் அதன் அமைவிடம் குறித்து இக்கட்டுரை அமைகிறது.

நிலவியல் ஒரு சிறு விளக்கம்

ஒரு குறிப்பிட்ட ஒன்றின் கூட்டமைவு, கட்டமைப்பு, இயற்பியல் இயல்புகள்வரலாறு, மற்றும் அதனை உருவாக்கிய வழிமுறைகள் என்பவை தொடர்பான அறிவியலும், அவை பற்றிய ஆய்வும் நிலவியல் எனப்படும். இது புவி அறிவியலில் ஒரு பிரிவாகும். நிலவியல் அறிவானது,  புவியியல், நிலநெய், நிலக்கரி மற்றும், இரும்புசெம்புஉரேனியம் போன்ற உலோகங்கள் ஆகிய இயற்கை வளங்கள் இருக்கும் இடங்களை அடையாளம் காண உதவுகின்றது. மேலும், விலையுயர்ந்த இரத்தினக் கற்கள் மற்றும் கல்நார்மைக்கா, பொஸ்பேற்றுகள், களிமண்படிகக்கல், சிலிக்கா போன்ற கனிமப் பொருட்களைப் பூமியிலிருந்து பெற்றுப் பயனடைவதற்கும் நிலவியல் உதவுகின்றது. பழங்கால வரலாறுகள் கிடைக்கவும் இவை வழிவகை செய்கின்றன. இது இயற்பியலின் ஒரு பிரிவு ஆகும். இவ்வகை நோக்கில் பறம்புமலையைக் குறித்து ஆராய்வது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

பாரியது பறம்பு

தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க காலத்திற்குத் தனித்த – முதல் இடம் உண்டு. எட்டுத்தொகையும் பத்துப் பாட்டுமாகப் பரந்து விரிந்திருக்கும் அக்கால மன்னர்களின் செம்மார்ந்த ஆட்சியும் தமிழ்ப்புலவர்களின் உலகளாவிய சிந்தனைகளும் தெரிய வருகின்றன. போர் வீரத்தையும் காதல் நுண்மையையும் மட்டும் சங்க இலக்கியங்கள் பாடவில்லை. பெருங்கொடைக் குணமுடைய வள்ளன்மைப் பண்பினையும் உயிரிரக்கக் கொள்கையையும் அவை முன்னிலைப்படுத்தின.

இதனை, தமிழிலக்கியம் நமக்குப் பழங்காலத்தில் வாழ்ந்த தமிழரின் வாழ்க்கைச் சூழல்களை மட்டுமின்றி, இந்தியாவின் பிற பகுதிகளில் வாழ்ந்த மற்ற மக்களினங்களின் சூழ்நிலைகளையும், விளக்கமாக எடுத்துக் காட்டுகிறது. பண்டைத் தமிழிலக்கியம் அகல்பெரும் பரப்புடையது. அதேசமயம் அது முன்னால் வேறு எவர் காலடியும் படாத ஒரு புதுநிலப்பரப்புப் போன்ற இயல்புடையதாகவும் இலங்குகின்றதுஎன்னும் குறிப்பினால் உணரலாம்.

அவ்வகையில் சங்க இலக்கியங்கள் முதல், கடை, இடை என மூன்று காலங்களில் எழுவர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இதில் கடைச்சங்க வள்ளலாகிய எழுவருள் முன்னிற்பவர் வேள் பாரியே ஆவார். கடையெழுவருள் இவர் முன்னவராகவும் முதல்வராகவும் முன்னிறுத்தப் பெறுகிறார். இவர்களுக்கு ஒரு தனித்த சிறப்புமுண்டு. இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மலை, ஒரு புலவர் என்னும் அமைப்பு இருந்துள்ளது.

சோழநாட்டுக்கு வடக்கே திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு ‘மலையமான்கள்’ ஒரு சிறு நிலப்பகுதியை ஆண்டு வந்தனர். தகடூரைத் தலைநகராகக் கொண்டு கொங்கு நாட்டின் ஒரு பகுதியை ‘அதியமான்கள்’ ஆண்டு வந்தனர். இவ்வாறே கொங்குநாட்டில் ஓரி, குமணன் முதலிய சிற்றரசர்கள் சிறு நிலப்பகுதிகளை ஆண்டு வந்தனர். பறம்புமலைநாட்டைப் ‘பாரி’ ஆண்டு வந்தான். பழநிமலைப் பகுதியை ‘வேள் ஆவி’ ஆண்டு வந்தான். பொதியமலை நாட்டை ‘வேள் ஆய்’ ஆண்டு வந்தான்.[3]இவ்வாறு தமிழகத்திலிருந்த சிற்றரசர்கள் பலராவர்.

பாரியின் அவைக்களப் புலவராகவும் உற்ற தோழனாகவும் விளங்கியவர் கபிலர். பாரியாண்ட பகுதியாகப் பறம்பு நாடும் அந்நாட்டின் தலைமையிடமாகப் பறம்பு மலையும் விளங்கியது. பாரியின் கொடைக்குரிய வளமையெல்லாம் தன்னுள் நிறைத்ததாகவும் கபிலர்தம் கவிப் பெருக்குக்குக் கருப்பொருளாகவும் உரிப்பொருளாகவும் விளங்கியது பறம்பு மலையே ஆகும்.

பறம்புமலையின் அமைவிடம்

பாரியின் பறம்புமலை தற்காலத்தில் சிவகங்கை மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் திருப்புத்தூர் வட்டம், சிங்கம்புணரி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தின் முக்கியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும் இது விளங்குகிறது.

எவ்வியின் உறவினனான வேள்பாரி பறம்பு என்ற ஒரு சிறுநிலப்பகுதியின் தலைவன். ஆனால் புலவர்களுக்கு ஆதரவளித்த மாபெரும் புரவலன் என்ற முறையில் தமிழ்மொழியுள்ளளவும் அவன் பெயர் தமிழர் நினைவில் மங்காமல் நிலைபெறத்தக்கது. எவ்வியின் வீழ்ச்சிக்குப் பின் பாரி உயர்ந்த பறம்புமலையையும் அதனைச் சூழ்ந்த நிலங்களையும் கைக்கொண்டு மூவரசர்களில் எவரையும் மேலாளராக ஏற்காமல் தனியாட்சியாளனாக நடக்கத் தொடங்கினான்.

இதனால் ஏற்பட்ட பகையினால் மூவேந்தராலும் வஞ்சித்துக் கொல்லப்பட்ட பாரியின் மறைவுக்குப் பறம்புமலையின் வளமும் ஒரு காரணமாக விளங்கியது மூன்று பேரரசுகளின் எல்லைகளுக்குள் பறம்புநாடு அடங்கவில்லை. அக்கால அமைப்பில் அது தனிக் கூற்றமாகவே விளங்கியது. தற்போதும் தனித்து. நான்கு மாவட்டங்களில் எல்லைப் பகுதியாகவே விளங்குகிறது. பறம்புமலை எனப்படும் பிரான்மலையின் ஒரு பகுதி சிவகங்கை மாவட்டத்திலும் மற்றொரு பகுதி, புதுக்கோட்டை மாவட்டத்திலும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பறம்புமலையின் வளம்

இலக்கணப் பகுப்பின் ஐவகை நிலங்களில் முதன்மையான குறிஞ்சியைப் பெரிதும் பாடிய காரணத்தாலேயே குறிஞ்சிக் கபிலர் எனப் பெயர் பெற்றார் கபிலர். அவருக்கு அப்பெயர் பெறுவதற்குக் காரணமாக அமைந்ததே பறம்புமலையின் வளமும் இயற்கை சூழ்ந்த அழகியலுமே ஆகும்.

கபிலர் தம் அகப்பாடல்களில் மட்டுமின்றிப் புறநானூற்றுப் பாடல்களிலும் பறம்புமலையின் வளத்தைத் தனித்தே சிறப்பிக்கிறார். அவ்வளங்கள் இன்னும் குறையாமலே உள்ளன. உழவர் உழாது பெறக்கூடிய வளங்கள் அவை.

“ஒன்றே வெதிரின் சிறியிலை நெல்விளை யும்மே

இரண்டே தீஞ்சுவைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே

மூன்றே கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே

நான்கே அணிநிற வோரிபாய்தலின் மீதழிந்து

திணிநெடுங் குன்றம் தேன்சொரி யும்மே

என்று கபிலர் தமது புறப்பாடலொன்றில் நேரடியாகவே பறம்பின் வளத்தைக் குறித்துக் காட்டுகிறார்.

அரியவகைத் தாவரங்கள்

கபிலர் தாம் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் 99 வகையான பூக்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இவை பெரும்பாலும் குறிஞ்சி நிலத்திற்குரிய மலர்கள் என்பதும் அவை பறம்புமலையில் நிறைந்திருக்கக் கூடியவை என்பதும் உணர வேண்டியதாகும்.

வள் இதழ்,

…………………………….

மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும்,

என மலர் வரிசை நீள்கிறது.

இதற்குச் சான்றாக சங்க காலத்தில் பறம்புமலையாக விளங்கிய இம்மலை பக்தி இலக்கியக் காலத்தில் திருக்கொடுங்குன்றம் எனப் பெயர் விளங்கி, திருஞானசம்பந்தரால் பாடப்பெற்றபோதும் பல்வகை மணமலர்கள் நிறைந்த நகர் என்றே இம்மலையைக் குறிப்பிட்டுச் சிறப்பிக்கிறார். அவ்வரிசையிலும் அரியவகை மலர்கள் இடம் பெறுகின்றன.

மரவத்தொடு மணமாதவி மௌவல்லது விண்ட

குரவத்தொடு விரவும்பொழில் சூழ்தண்கொடுங் குன்றம்

அரவத்தொடு மிளவெண்பிறை விரவும்மலர்க் கொன்றை

நிரவச்சடை முடிமேலுடன் வைத்தானெடு நகரே.

என்று பறம்புமலையாகிய திருக்கொடுங்குன்றத்தின் மலர்மணத்தைத் தம் பாடல்களில் பரப்புகிறார் நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் திருஞான சம்பந்தப் பெருமான்.

விலங்கினங்கள்

பறம்புமலையில் கானுறை விலங்குகள் மிகுந்திருந்ததைக் கபிலர் தம் பாடல்களில் பதிவு செய்துள்ளார். குறிப்பாக சிங்கம், யானை, வேங்கை முதலிய விலங்குகள் பாடல்களில் உவமையோடும் உள்ளுறையோடும் இறைச்சியோடும் இயைந்து வருகின்றன. திருஞான சம்பந்தர் பாடல்களில் யானை, சிங்கம் முதலியன பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன.

சிங்கத்தின் கர்ச்சனை ஓசையைக் கேட்டு அஞ்சிக் கொல்லும் தன்மையினவாகிய யானைகள் மன எழுச்சி குன்றி மலையிடையே உள்ள குகைப் பகுதிகளில் மறைந்து வைகும் கொடுங்குன்றம்,  என்று திருக்கொடுங்குன்றத்துத் தேவாரத்தில் திருஞானசம்பந்தர் காட்சிப் படுத்துகிறார்.

siragu parambu malai3

பறம்புமலை அமைப்பு

பறம்புமலை ஓங்கி உயர்ந்த செங்குத்தான பாறையமைப்பைக் கொண்டுள்ளது. சிகரங்களைப் போன்ற உயர்ந்த நீண்ட பாறைகளை உடையது. இதனைக் கபிலர், திணிநெடுங்குன்றம்எனவும், நெடியோன்குன்றம் எனவும் குறிப்பிடுவது இங்கு நோக்கத்தக்கது. அண்ணல் நெடுவரைஎனவும் இனியோன் குன்றம் எனவும் பாடுகிறார். பறம்புமலைப் பாறைகள் கடினப் பாறை வகை அமைப்புடையவை. அப்பாறைகள் குடைவரை அமைப்புக்கு ஏற்றவை. ஆதலால் இம்மலையின் பல பகுதிகளில் குகைகள் போன்ற அமைப்புகள் நிறைந்திருக்கின்றன. இங்கு அமைந்துள்ள கோயிலும் குடைவரைக் கோயில் அமைப்பிலேயே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பாறைகளை அடுத்த உடைமண் பகுதிகளில் அடர்ந்த வனமும் நிறைத்ததாகப் பறம்புமலை விளங்குகிறது.

நீரியலும் மேலாண்மையும்

பறம்புமலை குறிஞ்சி நிலத்துக்கே உரிய அருவிகளையும் சுனைகளையும் உடையது. சங்க காலம் தொட்டுப் பல புலவர்கள் இதனைத் தமது பாடல்களில் பதிவு செய்துள்ளார்கள்.

நல்லூர் நத்தத்தத்தனார் சிறுபாணாற்றுப்படையில் பறம்பின் பனிச்சுனை நீரைப் புகழ்ந்து பாடுகிறார்.

நன்னாகனார் பறம்பின் இனிய சுனைத் தண்ணீரைப் புகழ்ந்து பாடுகிறார்.

பெருஞ்சித்திரனார் தனது பாடலில் பறம்பின் வலிமையைப் போற்றிப் பாடுகிறார்.

அதே பொருண்மையில் குறுந்தொகையில் மிளைக்கந்தனார் பாடுகிறார்.

நக்கீரர் அகத்துறைப் பாடலொன்றில் பறம்பின் பனிச்சுனை நீரில் எழுந்த புதுமலர் எனத் தலைவியின் நெற்றியைப் புகழ்ந்து உரைக்கின்றார்.

ஔவையார் பறம்பின் கோட்டைச் சிறப்பைப் புகழ்ந்துரைக்கிறார்.

ஓங்கி உயர்ந்த சிகரங்களிலிருந்து வீழும் அருவிநீர் தேனடைகளோடு கலந்து சுனைகளில் நிறைவதைச் சங்கப் பாடல்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன..

வானத்தில் விளங்கும் விண்மீன்களைக் கூட எண்ணி விடலாம். ஆனால், பறம்புமலையின்கண் உள்ள சுனைகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்ள முடியாது எனவும் வானத்தில் உள்ள சனி என்னும் கிரகம் வந்தபோதும், தூமகேது என்னும் தீயகோள் தோன்றிய காலத்தும்,  பறம்பின் வளம் குன்றாது நிலைத்திருக்கும் என்றும் கபிலர் உறுதிபடக் கூறுகிறார்.

அருவியில் பெருகி சுனைகளில் வழிந்து நிறையும் நீரை வீணாக்காமல் சேமித்து வைப்பதற்கான நீர்நிலைகளான குளங்கள் நிறையவே உண்டு. அவையும் முறையாகப் பராமரிக்கப்பட்டு வேளாண்மைக்கு உதவும்படி மேம்படுத்தப்பட்டவை. இன்றும் அந்நீர்நிலைகள் அழிந்தும் அழியாமலும் பறம்புமலையின் கதை கூறும் வரலாற்று எச்சங்களாக உள்ளன.

உழவில்லாப் பறம்புமலை

பறம்புமலை செங்குத்தான பாறை அமைப்புடைய மலை என்பதனால் சமதளத்தில் மேற்கொள்ளும் நிலைத்த விவசாயத்துக்கு அங்கு வழியில்லை. ஆனால், உழவர் உழாதனவாக விளங்கும் நால்வகைப் பிறபொருட்கள் அங்கு தாமே கிடைக்கும்.

அவை, 1. மூங்கில் நெல், 2. தீஞ்சுளைப் பலா, 3. கொழுங்கொடி வள்ளியின் கிழங்கு, 4. தேனும் அதற்கு இணையான சுவையுடைய அருவிநீரும் ஆகும்.

மூவேந்தர் பறம்பின்மீது முற்றுகையிட்டபோது பாரி எயில் காத்து இருந்தான். உண்ண உணவில்லாமல் உள்ளிருப்போர் மடிவர் அல்லது வெளிவருவர் என எண்ணிய மூவர் படை முற்றுகையை நீட்டித்தது. ஆனால், கபிலர் தாம் வளர்த்த கிளிகளைக் கொண்டு முற்றுகைப் பகுதிக்கு அப்பால் உள்ள விளைநிலங்களில் உள்ள தானியக் கதிர்களைக் கொய்து வருமாறு செய்தார்[18] என்று ஔவையார் தனது பாடலில் பதிவு செய்துள்ளார்.

இதன்மூலம் பறம்புமலையில் உழவுத் தொழில் நிகழாததும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அத்தொழில் சிறந்திருந்ததும் பெறப்படுகிறது.

நிலவியல் அடிப்படையிலேயே முற்றுகை

சங்க காலத்தின் பேரரசுகளாக விளங்கிய சேர, சோழ. பாண்டிய அரசுகளைத் தவிர ஏனைய சிற்றரசுகளும் ஆங்காங்கு சிறப்புப் பெற்றிருந்தன. சோழநாடு – சோறுடைத்தும், பாண்டிய நாடு முத்துடைத்தும், சேரநாடு – வேழமுடைத்தும்  தத்தம் வளங்களில் மிகுந்திருந்தன. இவ்வளங்களுக்கு இணையான வளங்களுடன் தமக்கென ஒரு மலையையும் ஒரு புலவரையும் கொண்டு சிறந்திருந்தனர் வள்ளல்கள்.

அவ்வகையில் வளங்களில் மிகுந்திருந்த பறம்புமலை நிலவியல் அடிப்படையில் மூவேந்தருக்கும் போட்டியாகவே விளங்கியது. மிழலைக் கூற்றத்தையும் முத்தூற்றுக் கூற்றத்தையும் தனதாகக் கொண்டு தனிப் பெரும் ஆட்சியாளனாக விளங்கிய பாரியும் அவன்தன் புகழைப் பாரறியப் பாடிய கபிலர்தம் பாடல்களும், இவ்விரண்டுக்கும் காரணமாகிய பறம்பும் அதன் நிலவியல் அமைப்பும் மூவேந்தர்களுக்குப் பாரியின்மீதான பகையை  ஊட்டி வளர்ந்தன.

மூன்று பேரரசுகளின் எல்லையாகவும், மூன்று பேரரசுகளின் நடுப்பகுதியாகவும் விளங்கிப் பறம்புமலையைத் தமதாக்க, பாரியை வஞ்சித்துக் கொல்ல வேண்டியிருந்ததை வரலாறு குறிப்பிடுகிறது.

நிலவியல் அடிப்படையிலான எல்லைப் பிரச்சனையே பாரியின் மரணத்துக்குக் காரணமாக அமைந்திருக்கிறது. இதேபோலும் நிலவியல் அடிப்படையிலான எல்லைச் சிக்கல்கள் பிற்காலத்தில் ஏற்பட்டிருப்பதையும் வரலாறு உணர்த்துகிறது.

பிரான்மலை ஒவ்வொரு காலத்திலும் சிவகங்கை, இராமநாதபுர, புதுக்கோட்டை சமஸ்தானங்களின் ஆளுகைக்குட்பட்ட எல்லைப் பகுதியாக விளங்கியுள்ளது. மேய்ச்சல் நிலமாகவும் விளங்கிய இதனை முன்னிட்டுச் சண்டை சச்சரவுகளும் நேர்ந்திருக்கின்றன. அதை ஆங்கிலேயர்கள் தீர்த்து வைத்தனர் என்றும் வரலாறு உணர்த்துகிறது.

பறம்புமலையைச் சுற்றியுள்ள பிற பகுதிகள்

சிவகங்கை மாவட்ட வனச்சரகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் பறம்புமலையாகிய தற்போதைய பிரான்மலை விளங்குகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் நீட்சியாக விளங்கும் இப்பறம்புமலையினைச் சுற்றிலும் சிறு, குறு, குன்றுத் தொடர்கள் நீண்டு கிடக்கின்றன.

பறம்புமலையோடு இணைந்த வாணரிருப்பு மலை என்னும் வண்ணாரிருப்பு மலையும் செங்கண்ணான் மலையும் ஒருசேரக் காட்சி தருகின்றன.

இதனைக் கடந்து புழுதிபட்டி, துவரங்குறிச்சி, விராலிமலை வரையிலும் வடக்குப் பகுதியில் குன்றுத் தொடர்கள் பரந்துள்ளன. அதுபோலவே மேற்குத் தொடர்ச்சி மலையின் இறுதி எல்லையாகப் பறம்புமலையாக விளங்கினாலும் கிழக்குத் திசையில் பூலான்குறிச்சி, திருமெய்யம், குடுமியான்மலைக் குன்றுகள் வரையிலும் நீட்சி தொடர்கிறது. தென்பகுதியில் கருங்காலக்குடி, திருச்சுனை தொடங்கி ஆனைமலை, கீழவளவுவரை நீண்டு வையையின் எல்லை வரையிலும் உள்ள அழகர்மலைப் பகுதிவரை நீண்டிருக்கிறது.

நிறைவாக…

சங்க காலத்தின் பறம்புமலை இன்று எங்குள்ளது என்று அறிந்து கொள்ள நிலவியல் அடிப்படையில் அமைந்த ஆய்வே வழிகோலுகிறது.

அக்காலத்தில் விளங்கிய இயற்கை வளங்களாகிய பாறையமைப்பு, நீர்நிலைகள், நிலவளம் முதலியவை ஒத்துக் காணப்பட்டு அவை உறுதிப்படுத்தப் பெறுவதற்கு நிலவியல் நோக்கிலான ஆய்வே உதவுகிறது.

பறம்புமலையில் வாழ்ந்த உயிரினங்கள் – விலங்குகள் மற்றும் தாவரங்கள் ஒத்துக் காணப்பட்டு வகைப்படுத்தப் பெற்றுள்ளன.

பறம்புமலையின் அமைவுக்குப் பெருஞ்சான்றாக விளங்கும் பல புலவர்களின் பல்வேறு காலவகைப்பட்ட பாடல்கள் பறம்புமலை குறித்து நிலைத்த தகவல்களையே அளிக்கின்றன. அவை குறிப்பாக நிலவியல் நோக்கிலேயே பாடப்பட்டுள்ளன என்பதும் குறிக்கத்தக்கது.

பறம்புமலையின் நிலவியல் சூழலே பாரியின் பறம்புநாட்டின்மீதான படையெடுப்புக்குக் காரணமாக விளங்கியது என்பதையும் அதே நிலவியல் சூழல் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது என்பதையும், தற்காலத்தும் அதே போன்ற நிலவியல் அமைப்பிலேயே விளங்குகிறது என்பதும் இந்த ஆய்வின் மூலமாக நிறுவப் பெற்றுள்ளது.


சொ.அருணன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நிலவியல் அடிப்படையில் பறம்புமலை”

அதிகம் படித்தது