ஏப்ரல் 4, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

நீங்கள் யார்?

செல்வக்குமார் சங்கரநாராயணன்

Aug 6, 2016

Siragu Neengal yaar1

நீங்கள் யார் என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். ஆனால் உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரும் உங்களைப் பற்றி ஓரளவிற்கு அறிந்திருப்பார்கள் என்பது மிகப்பெரும் இரகசியம். அதேபோல நம்மை நாமும் அறியத் துவங்கிவிட்டால், அறியத்துவங்கிய பின் வாழும் வாழ்க்கையின் நிலையே வேறு மாதிரியாக இருக்கும். அதை அனுபவித்துப் பார்க்கும் பொழுது தான் தெரியும் எனென்றால் அதன் பூரணத்துவத்தை நிரப்ப தமிழில் வார்த்தைகள் இல்லையென்றே நினைக்கிறேன்.

ஒரு ஓவிய நிகழ்ச்சி பார்த்ததும் ஓவியத்தின் மீது ஈர்ப்பு வருவது மிகவும் இயல்பு. நீங்கள் ஓவியம் கற்கலாம் என்று நினைத்து ஓவிய வகுப்பிற்குச் செல்ல முற்படுவீர்கள், அதுவும் ஒரு வித தற்காலிக ஈர்ப்பு தான். ஆனால் அவ்வாறு செல்லும் பொழுது நம்மை சுற்றி இருக்கும் பெற்றோரோ, நண்பர்களோ, உடன்பிறப்போ, தெரிந்தவரோ நம்மைப் பார்த்து, நீ ஓவியம் செல்ல வேண்டாம், இசை கற்றுக் கொள்ளச் செல்! என்பார்கள். இங்கு தான் உண்மையின் சூட்சமம் புதைந்து கிடக்கிறது. அங்கே கவனிக்கப்பட வேண்டிய விடயம் ஒன்று மறைந்தும் இருக்கிறது. அதாவது உங்கள் குரல் நன்றாக இருக்கிறது என்பதே இது நாள் வரையில் நீங்கள் அறியாத ஒன்றாக இருந்திருக்கிறது என்பது தான் அந்த இரகசியம்.

ஆக, நாம் யார் என்று நமக்குள் தேடத் துவங்கிவிட்டால் போதும் ஒவ்வொருக்கும் ஒரு தனித்திறமை என்பது உண்டென்பது மறுக்க முடியாத பேருண்மை. பெரும்பாலானோர் என்ன நினைக்கிறார்கள் என்றால் நம்மை நாம் அறிவதற்கு கடுந்தவம் புரிய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதுவும் இருக்கலாம் தான் அதில் நான் எந்தக் கருத்தும் கூற விழையவில்லை, ஏனென்றால் அது எனக்குத் தெரியாத ஒன்றும் கூட. ஒரு சிறிய சுய ஆய்வுக்கு உங்களை நீங்கள் உட்படுத்திக் கொண்டாலே போதும். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்களை கால்வாசி அளவிற்கு மத்திப்பிட்டு வைத்திருப்பார்கள். ஆனால் வியப்பு என்னவென்றால் அவர்களுக்கும் அவர்களைப் பற்றித் தெரியாது.

Siragu-Talent1

உங்களை நீங்கள் உங்களுடன் இருப்பவர்களோடு ஒப்பிடாதீர்கள் அதற்கு மாறாக அவர்களிடம் உங்களைப் பற்றி நீங்களே கேளுங்கள். நான் எப்பொழுது எனது தேவையற்ற குணங்களைக் காட்டுகிறேன்?. நான் எப்பொழுது உங்களிடம் நன்றாக நடந்து கொள்கிறேன்? எனக்குத் துன்பம் நேர்ந்த பொழுதுகளில் அதை உங்கள் மீது பிரதிபலித்து உங்கள் மகிழ்ச்சியையும் கெடுத்திருக்கிறேனா? நீங்கள் துயரப்படும் சமயம் நான் உதவாதது கண்டு நீங்கள் மன விரக்தி அடைந்தீர்களா? என்பது போலவே உங்கள் கேள்விகள் இருக்கட்டும். இதையெல்லாம் தாண்டி, என்னிடம் உங்களுக்கு என்ன பிடிக்கும்? நான் எதில் சிறப்பு என்று நீங்கள் நினைக்கிறீகள்? என்று கேட்டுப் பாருங்கள். நீங்கள் அதிர்ந்து போய்விடுவீர்கள். இவற்றை எல்லாம் கேட்டு முடித்த பிறகே தெரியவரும், இதுவரை நீங்கள் செய்த நன்மை எது தீமை எதுவென்று! கூடவே உங்கள் தனித்திறமையும். இதுதான் உங்களை நீங்கள் கண்டு கொள்ள வழி என்று நான் கூறவில்லை, இதுவும் ஒரு வழி என்று கூறுகிறேன். வீட்டிலிருந்து வேறு இடங்களுக்குச் செல்லும் பொழுது நடந்தும் செல்லலாம், மிதிவண்டியிலும் செல்லலாம் அதே போலத்தான் இதுவும் ஒரு மார்க்கம்.

அதெல்லாம் சரி அது எப்படி நம்மைப் பற்றி நமக்குத் தெரியாததை உடன் இருப்பவர்கள் அறிந்து வைத்திருப்பார்கள்? நம்மை விடவா நம்மைப் பற்றி கொஞ்சம் அவர்களுக்கு அத்துப்படி, இதை நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன். இதில் எனக்கு உடன்பாடே இல்லை என்று நீங்கள் சொல்வீர்களானால், உங்களுக்கு ஒன்றே ஒன்றைச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். சிப்பிக்குள் இருப்பது முத்து தானென்று சிப்பிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அது விலைமதிப்பு மிக்கதென்றும் அது அறிந்திருக்காது! அதை அறிந்தவர்கள் அடுத்தவர்களாகிய நாம் தான். என்ன உங்களைத் தேடித் பயணம் போகலாமா??


செல்வக்குமார் சங்கரநாராயணன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நீங்கள் யார்?”

அதிகம் படித்தது