மார்ச் 28, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

நீட் எனும் தூக்குக்கயிறு.!

சுசிலா

Sep 9, 2017

Siragu neet exam3

ஒரு அற்புதமான, திறமையான மருத்துவரை தமிழகம் இழந்திருக்கிறது. இழக்க வைத்திருக்கிறார்கள். இந்த கொடுமையை நம்மால் தடுக்க முடியவில்லையே என்று எண்ணும்போது நம் மனம் குற்றயுணர்ச்சியில் தவிக்கிறதே. அதுவும் சமூகநீதியில் முன்னே நிற்கும் நம் மாநிலம் இப்படிப்பட்ட ஒரு தவற்றை இழைத்திருக்கிறது என்றால், நம் வருங்கால சந்ததியினர் நம்மை குற்றவாளிகளாக, துரோகிகளாக அல்லவா பார்ப்பார்கள்.

இந்தியாவிலேயே மருத்துவக்கல்வியில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது என புள்ளிவிவரங்கள் நமக்கு சொல்கின்றன. நம் மாநிலத்தில்தான் மிக அதிக அளவில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. நம் மாநில மாணவர்கள் படித்து அதிக அளவில் ஒவ்வொரு ஆண்டும் வெளி வருகின்றனர். கிராமப்புற சேவைகளில் தங்களை அர்பணித்துக்கொள்கின்றனர். ஆரம்ப சுகாதர மருத்துவமனைகளில் பணிபுரிகிறார்கள். ஆனால், இவ்வாண்டு நம் மாணவர்களின் மருத்துவக் கனவை தகர்த்து எறிந்திருக்கிறது இந்த நீட் எனும் நுழைவுத்தேர்வு.

அரியலூர் அனிதா எனும் மாணவி 1200 மதிப்பெண்களுக்கு, 1176 மதிப்பெண்கள் பெற்று, 196.25 கட்ஆப் வைத்திருந்தும் மருத்துவம் படிக்க முடியாமல், போனதற்கும், தன் உயிரையே மாய்த்துக்கொண்டதற்கும் என்ன காரணம். முதல் நிலையிலேயே மருத்துவம் படிக்க எல்லாத் தகுதிகளையும் பெற்றிருந்தும் இந்த நீட் எனும் கொடூரனால், படிக்கும் வாய்ப்பை இழந்திருக்கிறாள். அதனால் தன் உயிரை விட்டிருக்கிறாள் என்றால், இதைவிட கொடுமை வேறு எங்கும் நடந்திருக்குமா. தக்க ஆலோசனைகள் இல்லாத காரணத்தால், மனமுடைந்து தற்கொலை செய்திருக்கிறாள் என்று சில ஆதிக்க சக்திகளும், மத்திய, மாநில அரசின் இந்த படு பாதக செயலுக்கு துணை போகும் கயவர்கள் சொல்வதை நாம் ஏற்று கொள்ளத்தான் முடியுமா. இன்று தமிழ்நாடே கொந்தளித்துக் கிடைக்கிறதே. எங்கள் சகோதரி, அன்பு, அறிவுள்ள, திறமைவாய்ந்த எங்கள் மகள் தற்கொலை வரை விரட்டப்பட்டிருக்கிறாளே என்று ஒவ்வொரு தமிழனும் போராட்டக்களத்தில் குதித்திருக்கிறார்களே. தமிழக மக்களின் இந்த உணர்விற்கு மத்திய அரசும், அதற்குத் துணை போன மாநில அரசும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள். என்ன தீர்வு காணப் போகிறார்கள்…?

Siragu neet exam2

அடிப்படை வசதிகளற்ற ஒரு குடும்பத்தில், மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகளாகப்பிறந்த அனிதா, சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆகும் இலக்கில் கடும் முயற்சி செய்து படித்திருக்கிறாள் என்பதை கேட்கும்போதும், படிக்கும்போதும் நம் மனதை வாட்டி வதைக்கிறதே. அந்த மகளின் கனவு இப்படித்தான் மண்ணோடு மண்ணாக போக வேண்டுமா, இத்தனை திறமைவாய்ந்த அறிவு செல்வத்தின் முயற்சி எல்லாம் வீணாகப் போய்விட்டதே என்று நினைக்கும்போது நம் மனதை அறுப்பதைப்போல் அல்லவா உணர்கிறோம். நம் மாணவர்கள் போராடும் போது கூட, எங்கள் தங்கை மரணத்திற்கு பதில் சொல்லுங்கள், அனிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றல்லவா நீதி கேட்கிறார்கள்.

2007 முதல் சென்ற ஆண்டு வரை, தமிழ்நாட்டிற்கு நுழைவுத்தேர்வு கிடையாது. கிராமப்புற, ஏழைமாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த நுழைவுத்தேர்வை நீக்கி, பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச்சேர்க்கை நல்லமுறையில் நடந்துகொண்டு தானே இருந்தது. மத்திய பாசக அரசின் செயல்கள் யாவும் தமிழர் விரோத செயல்களாக இருக்கின்றன. சட்டமன்றத்தில், எதிர்க்கட்சிகள், ஆளும்கட்சியும் சேர்ந்து தீர்மானம் போட்டு, சட்டம் இயற்றி நீட் தேர்வு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஏகமனதாக நிறைவேற்றி, மத்திய அரசிற்கு அனுப்பியும், இந்த மதவாத அரசு சற்றும் மதிக்காமல், குடியரசுத் தலைவர் கையொப்பத்திற்கு அனுப்பாமல், காலம் தாழ்த்தி, பிறகு, அந்த கோப்பே காணவில்லை என்று ஒரு குண்டைத் தூக்கிப்போட்டது. பிறகு ஓராண்டு விலக்கு தருகிறோம் என்று சொன்னார்கள். மாநில அரசும் அதற்காகப் போராடுகிறோம் என்று கடைசி வரை நம்பிக்கை அளித்து வந்தது.

Siragu neet exam1

பிறகு உச்சநீதிமன்றம் தீர்ப்பு என்ற போர்வையில், நீட் தேர்வின் மூலம்தான் சேர்க்கை என்று நம் மாணவர்களின் கழுத்தை அல்லவா அறுத்துவிட்டது. எத்தனை, எத்தனை தில்லுமுல்லுகள், அலட்சியங்கள், அயோக்கியத்தனங்கள் செய்து இந்த நீட்தேர்வை நடத்தி, நம் மாநில மாணவர்களுக்கு இடம் கிடைக்காமல், வடமாநில மாணவர்களுக்கு இடம் அளித்திருக்கிறது. முதல் தலைமுறை பட்டதாரிகள் 420 மாணவர்கள் தங்கள் மருத்துவப்படிப்பை இவ்வாண்டு இழந்திருக்கிறார்கள். நம் மாணவச் செல்வங்கள் தங்களின் மருத்துவக்கல்வியை பறிகொடுக்கிறார்கள் என்றால், இதைவிட துரோகம் வேறு எதுவும் உண்டா. நம் வரிப்பணத்தில் மற்ற மாநில மாணவர்கள் படித்துவிட்டு, இங்கு சேவை செய்யவா போகிறார்கள்?

அனிதாவின் மரணம் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் சிந்தனையை புரட்டிப்போட்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நீட் தேர்வின் கொடூர முகத்தை அனைவரும் உணர்வதற்காக, தன் உயிரை ஈந்து உணர்த்திருக்கிறாள் நம் அன்பு மகள் அனிதா. சமூகநீதி என்றால் என்னவென்று உணர்த்திருக்கிறாள். சமூக உணர்வுள்ள நாம் ஆரம்பத்திலிருந்தே சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம் நீட் தமிழகத்திற்குத் தேவையில்லாத ஒன்று என்று. ஆனால், அந்த அப்பாவி மகள் அனிதா உயிர் நீத்தப்பிறகுதான் போராட்டம் வலுக்கிறது. ஆங்காங்கே மாணவர்கள் போராடி வருகிறார்கள். அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட்டிற்கு நிரந்த விலக்கு வேண்டுமென்றும், கல்வியை பொதுப்பட்டியலிலிருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றும் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

Siragu-en-kanmoodinaai1

பொதுப்பட்டியலில் இருக்கும் எந்த ஒரு நடைமுறையும் மாநில, மத்திய அரசுகளின் ஒப்புதல் வேண்டும் என்பதுதான் சட்டமாக இருக்கிறதே தவிர, மத்திய அரசின் முழு கட்டுப்பாட்டில் இல்லை என்பதை மத்திய அரசு மூடி மறைக்கிறது. மக்களை அதிலும், தமிழக மக்களை பழி வாங்குவதில் குறியாக இருக்கிறது இந்த மோடியின் மதவாத அரசு. இவ்வாண்டு மருத்துவம் என்று ஆரம்பிக்கும் இந்த அரசு, அடுத்த ஆண்டு, பொறியியல், பிறகு கலை, அறிவியல் பாடத்திற்கும் நுழைவுத்தேர்வை அமலாக்க முயன்றுகொண்டிருக்கிறது. நம்மை மீண்டும் கல்வியற்ற அடிமைகளாக ஆக்கும் மனுதர்ம ஆட்சியை நிறுவ துடித்துக்கொண்டிருக்கிறது இந்த பாசக அரசு. இதை எதிர்க்க துணிவில்லாமல் மாநில அரசு அடிமைப்பட்டுக் கிடக்கிறது.

சமூகநீதியை, சுயமரியாதையை, தன்மானத்தை, பகுத்தறிவை கற்றுத்தந்த தந்தை பெரியார் பிறந்த மண் இம்மண். காவிகளின் கனவு நிறைவேற என்றைக்கும் விடமாட்டோம் என்று உறுதி ஏற்போம். தமிழகம் சமூகநீதியில் என்றைக்கும் ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்பதில் சிறிதும் அட்டியில்லை. இந்தித்திணிப்பு எதிர்ப்புப்போராட்டத்தில் வெற்றிப்பெற்றதன் மூலம், நம் போராட்ட ஆற்றலை ஏற்கனவே மெய்ப்பித்து இருக்கிறோம். அதேபோல் நீட் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் அவசரச்சட்டத்தை நிறைவேற்றி செயல்படுத்த வேண்டும் என்ற இந்தக் கோரிக்கை வெற்றி பெறும்வரை போராடி நம் வருங்கால சந்ததியினரின் கல்வியைக் காப்பாற்றவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆகவே மக்களே… இது நம் தலையாய கடமை. அனைவரும் இதற்காக தங்களின் பங்களிப்பை கொடுக்கவேண்டும். இதற்கான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் தீ போன்று பரவச்செய்ய வேண்டும்.

நம் அன்பு மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்கும்வரை போராடுவோம்.!
கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றும்வரை இந்தப்போராட்டத்தைத் தொடருவோம்.!
நீட் தேர்வு தமிழகத்திற்கு எப்போதும் தேவையில்லை என்பதை மெய்ப்பிப்போம்.!
சமூகநீதிக்காக, மாநில உரிமைக்காக வெற்றி கிடைக்கும்வரை போராடுவோம்.!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நீட் எனும் தூக்குக்கயிறு.!”

அதிகம் படித்தது