நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

நீதி சொல்லும் சேதி என்ன? ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு

சாகுல் அமீது

Oct 11, 2014

needhi6

ஆங்கிலத்தில் மிக அரிதாக ஆனால் சமூகத்தை பெரிதும் பாதிக்கும்படி நடக்கும் நிகழ்வுகளை கருப்பு அன்னம் நிகழ்வு (Black Swan) என்று குறிப்பிடுவார்கள். அது போன்ற கருப்பு அன்னம் நிகழ்வு தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் சொத்துக் குவிப்பு வழக்கின் மீதான தீர்ப்பு.

பொழுது போக்கிற்காகவும் சமூக ஆர்வத்திற்காக மட்டுமே செய்தியை அறிந்து வந்த மக்கள் மத்தியில் தங்களின் பாதுகாப்பிற்கே செய்தியை அறிவது அவசியம் என்ற நெருக்கடி நிலையை சில நாட்களுக்கு உணர்த்தி விட்ட நிகழ்வு ஜெயலலிதா அவர்களின் கைது. இன்று பணிக்கு செல்லலாமா, கடையை திறக்கலாமா, பயணம் செய்யலாமா, குழந்தைகளை வெளியில் அனுப்பலாமா என்பதைக் கூட செய்தியைப் பார்த்து முடிவு செய்யும் அவல நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். மக்களின் நற்பேறு தருமபுரி பேருந்து எரிப்பின் கடுமையான தீர்ப்பாலும், அதிமுக-வினரின் சுய நினைவாலும் விரைவிலே தமிழ்நாட்டில் இயல்பு நிலை திரும்பி விட்டது.

needhi3இது ஒரு சிக்கல் அற்ற வழக்கு. 1991 ஆம் ஆண்டில் பதவிக்கு வரும் பொழுது ஜெயலலிதா அவர்களின் சொத்து மதிப்பு மூன்று கோடி. பதவி கால முடிவில் அவருடைய சொத்து மதிப்பு 66 கோடி ரூபாய். இதில் ஐம்பது கோடிக்கும் மேலான பணத்திற்கு அவரால் கணக்கு காட்ட இயலவில்லை. ஆகவே கணக்கு காட்ட இயலாத பணம் தவறான வழிமுறையில் திரட்டப்பட்ட பணமே என்று நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கின்றது. இவ்வழக்கிற்கு எதற்கு 18 ஆண்டு காலம், 350 சாட்சிகள், ஏழு நீதிபதிகள், மூன்று அரசு வழக்கறிஞர்கள், உச்ச நீதி மன்றத்தில் 25 மனுக்கள், 130 முறை ஒத்திவைப்புகள் என்று புரியவில்லை. ஆயிரக்கணக்கில் பணம் கைமாறு செய்பவர்களுக்கே ஒன்றிரண்டு ஆண்டு சிறை தண்டனை கொடுக்கும் நடைமுறையில் நான்கு ஆண்டு கால சிறை தண்டனை இவ்வழக்கில் கொடுத்திருப்பது பெரிய செய்தி அல்ல. ஆனால் நூறு கோடி ரூபாய் அபராதம் என்பது சரியாகத் தோன்றவில்லை. இத்தீர்ப்பின் அடிப்படையில் பல வழக்குகளில் தீர்ப்பு கொடுக்க வரும் என்றால் ஆயிரம் கோடி, பத்தாயிரம் கோடி, இலட்சம் கோடி என்று நடைமுறைக்கு ஒவ்வாத கணக்கில் அபராதம் விதிக்க வேண்டிய சூழ்நிலைகள் வரும். உச்ச நீதி மன்ற மேல் முறையீடு மறு விசாரணையில் அபராதத் தொகை மீதான தீர்ப்பை சரி செய்வார்கள் என்று நம்பிக்கை இருக்கின்றது.

சிக்கலற்ற வழக்கு எதிர்பார்த்த தீர்ப்பு என்று இவ்வழக்கை கடந்து சென்று விட இயலவில்லை பெரும்பாலான மக்களால். அதிமுக கட்சியினர் இத்தீர்ப்பை எதிர்ப்பது கட்சியின் அல்லது தலைமையின் (தங்களது பணத்தின்) மீதான பற்று என்றாலும், பொது மக்கள் பலரும் இத்தீர்ப்பை உள்வாங்கிக் கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். தவறுக்கு தண்டனை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத மனப் பக்குவம் எப்படி உருவாகியது? இது மிகவும் ஆபத்தான சமூக நிலை அல்லவா? இந்நிலை உருவாக காரணம் யார் என்று சிந்தித்தால் நீதி மன்றங்களை நோக்கியே விரல்கள் நீள்கின்றன.

நீதி மன்றங்களின் அடிப்படையே சட்டங்கள் தான். ஒரு சமூகத்திற்கு சட்டம் எதற்கு தேவைப்படுகின்றது? நாம் அனைவருக்குமே எது நல்லது எது கெட்டது என்ற அடிப்படை அறிவுண்டு. இந்நிலையில் சிந்திக்கும் திறன் உள்ள எவரையேனும் நீதிபதியாக வைத்து சட்டம் ஏதுமின்றி தீய செயல்களை தண்டித்து வரலாமே? அவ்வாறு செய்தால் நீதிபதிகளைப் பொறுத்து தண்டனையின் அளவுகள் மாறி விடலாம் என்பதாலே, நீதி  எந்நிலையிலும் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதாலே தானே சட்டங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. நாமறிந்த வரையில் 3800 ஆண்டுகளுக்கு முன்னரே ஹமுராபி போன்ற அரசர்கள் சட்டங்களை பொது இடங்களில் மக்கள் அறிய எழுதி வைத்திருப்பதை பார்க்கும் பொழுது, 5000 ஆண்டுகளோ அல்லது அதற்கும் முன்னர் இருந்தோ நாம் தெளிவான சட்டங்களுடன் வாழ்ந்து வருகின்றோம்.

ஆனால் உண்மையில் இன்று நடப்பதென்ன? இதே சொத்து குவிப்பு வழக்கை வேறொரு நீதிபதி கையாண்டிருந்தால் தீர்ப்பு எப்படி இருந்திருக்கும்? இந்தியாவில் இன்று ஊழல் செய்யாத அரசியல்வாதிகள் யாரேனும் உண்டா? இந்நிலையில் ஊழலிற்காக ஆயுள் தண்டனையோ தூக்கு தண்டனையோ பெற்ற அரசியல்வாதிகள் யாரேனும் உண்டா? இக்கேள்விகள் ஜெயலலிதா அவர்களுக்கு ஆதரவானவைகள் அல்ல, மாறாக நீதி அமைப்பிற்கு எதிரான கேள்விகள். நாட்டில் நடக்கும் இலட்சம் வழக்குகளில் ஏன் ஒரு சில வழக்குகளுக்கு மட்டுமே நீதி கிடைக்கின்றது? அரிதான நீதி அநீதி இல்லையா?

ஏதோ இந்த அளவிற்காவது நீதி கிடைக்கின்றதே என்று திருப்தி அடைந்து கொள்ளுங்கள் என்று மக்களை நெருக்குவதாலே தானே மக்கள் குற்ற செயல்களை கூட வாழ்க்கை நடைமுறைகளாக ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு மாறிவருகின்றனர். பேருந்து நெரிசலில் நூறு ரூபாய் திருடிய திருடனை கோபம் கொண்டு அடித்து துவைக்கும் மக்கள் ஏன் ஜெயலலிதா அவர்களின் தண்டனைக்கு பரிதாபப்படுகின்றார்கள்? இலட்சம் ரூபாய் ஊழல் செய்யும் உள்ளாட்சி அரசியல்வாதி, முதல் இலட்சம் கோடி ஊழல் செய்யும் நடுவண் அமைச்சர் வரை அனைவரையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு 66 கோடி ரூபாய் ஊழலுக்கு தண்டனை கொடுப்பதை மக்கள் அதிகமாகப் பார்ப்பதில் என்ன வியப்பிருக்க முடியும்? இது போன்ற அரிதான நீதி மக்களிடம் கோபத்தை விட அனுதாபத்தைத் தான் தூண்டுகின்றது. அதனால் தான் தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகள் மீண்டும் அதே அல்லது அதைவிட பெரிய பதவிக்கு மக்களால் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

needhi5நீதி என்பது நடந்து முடிந்த குற்றத்திற்காக கொடுக்கப்படுவதில்லை. கொலைக் குற்றத்திற்குத் தண்டனை கொடுப்பதால் இழந்த உயிர் திரும்பவும் கிடைக்கப் போவதில்லை. ஒரு குற்றவாளி தண்டிக்கப்படும் பொழுது எதிர்காலத்தில் ஆயிரம் குற்றங்கள் தவிர்க்கபடுகின்றன. அதே நேரத்தில் ஊரறிந்த ஒரு குற்றவாளி நிரபராதி என்று அறிவிக்கப்படும் பொழுது இலட்சம் குற்றங்களுக்கு அடிக்கல் நாட்டப்படுகின்றது. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற அருமையான பாடல் வரிகளைப் போன்று மக்களாகப் பார்த்து குற்ற செயல்களில் இருந்து ஒதுங்கும் வரை குற்றங்களை குறைக்க முடியாது. இன்று மக்கள் தங்களின் வாழ்க்கைக்கு முன்மாதிரியாக பார்க்கும் நபர்களில் பெரும்பாலானோர் குற்றவாளிகள் தானே? பின்னர் எப்படி மக்கள் குற்றங்களில் இருந்து ஒதுங்குவார்கள்? மாறாக குற்றங்களை நோக்கி இழுக்கப்படுகின்றார்கள். நேரடி குற்ற செயல்களில் ஈடுபடாவிடினும் இலஞ்சம் கொடுப்பது, வரி ஏய்ப்பு செய்வது, அரசு சலுகைகளை தவறாக பயன்படுத்துவது போன்ற தன்னால் முடிந்த சிறு குற்ற செயல்களில் ஈடுபடுகின்றார்கள். சமூகத்தில் குற்றவாளிகளை உருவாக்குவதும் ஊக்குவிப்பதுமே நீதிமன்றங்களின் அநீதி செயல்பாடுகள் தான்.

தற்போதும் தாமதமில்லை, குன்ஹா போன்ற நேர்மையான நீதிபதிகளுக்கு பதவி உயர்வு கொடுத்து அனைத்து குற்ற வழக்குகளிலும் நேர்மையான தீர்ப்புகளை வழங்க வேண்டும். முக்கியமாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த நீதிபதிகளை முதலில் தண்டிக்க வேண்டும். நரிகளிடம் இருந்து ஆடுகளைக் காப்பாற்ற, ஓநாய்களை பயன்படுத்த முடியாது. எந்த வழக்கையும் எந்த நீதிமன்றத்திலும் எந்த நீதிபதி விசாரித்தாலும் ஒரே மாதிரியான தீர்ப்பு வரும் நாள் தான் உண்மையான நீதி நிலைநாட்டப்பட்ட தினம். அந்நாளிர்கான பாதையில் ஒரு மைல்கல் தான் குன்ஹா வின் தீர்ப்பு. இங்கிருந்து முன்னோக்கி நகர்வதும் அல்லது வழக்கம் போல் பின்னோக்கி நகர்வதும் நீதிபதிகளின் மனசாட்சிகளில் தான் அடங்கி இருக்கின்றது.

 


சாகுல் அமீது

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நீதி சொல்லும் சேதி என்ன? ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு”

அதிகம் படித்தது