மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நீதி

முனைவர் மு.பழனியப்பன்

Feb 2, 2019

Religious Leader Mahatma Gandhi 1869 - 1948

இந்திய மண்ணின் விடுதலைக்காக ஆயிரம் ஆயிரம் தியாக வீரர்கள் தம் உயிர், பொருள், ஆவி அனைத்தையும் இழந்துள்ளனர். தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தது அல்ல இந்திய சுதந்திரம். செந்நீர் ஊற்றி கண்ணீரால் காத்துப் பெற்றது சுதந்திரம். இந்திய சுதந்திரத்திற்காக எத்தனை எத்தனை பேர் இன்னுயிர் இழந்தனர். சிறைபட்டனர். எண்ணிக்கை எண்ணி முடியாது. வரலாறு சொல்லி முடியாது.

அண்ணல் காந்தியடிகள் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை நீதி மன்றத்தில் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அக்காலத்தில் ஆண்ட ஆங்கில அரசிற்கு எதிராக, பத்திரிக்கைகளில் காந்தியடிகள் எழுதி மக்கள் அமைதியைக் குலைக்கிறார் என்பது அரசு தரப்புக் குற்றச்சாட்டு. இதனைக் காந்தி எதிர்கொள்கிறார்.

வழக்கறிஞராக, பாரிஸ்டராக தென்ஆப்பிரிக்காவில் கடமையாற்றிய அண்ணல் காந்தியடிகள் அக்காலத்திலேயே சமதானத்தின் மீது ஆர்வம் கொண்டு செயல்பட்டார். இரு செல்வர்களுக்கு இடையே நடைபெற்ற தென்னாப்பிரிக்க வழக்கில் இவர் ஆஜர் ஆகி அவ்வழக்கினை அமைதியான முறையில் இருவரும் ஒத்துக்கொள்ளும் நிலையில் நீதிமன்றத்தினை விடத்து அமைதித் தீர்வினைக் கண்டவர் அவர்.

அவர் அப்போது வழக்கறிஞர். இப்போது குற்றவாளி என்கிறது அரசு. அண்ணல் காந்தியடிகள் சட்ட நுணுக்கங்கள் காட்டித் தன் தரப்பு வாதத்தை வைக்கவில்லை. மாறாக குற்றமாக கருதப்படும் அரசு தரப்பு வாதங்களை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்.

‘‘இந்திய மக்களின் சுதந்திரத்தைப் பறிப்பதற்காக ஏற்பட்ட சட்டங்களுக்குள்ளே 124 –ஏ முதன்மை ஸ்தானம் வகிக்கிறது. இந்திய மக்களின் பேரன்புக்குப் பாத்திரமான தேச பக்தர்கள் பலர் மேற்படி சட்டத்தின் கீழ்ச் சிறைப்பட்டிருக்கிறார்கள். ஆகவே இந்தச் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்டதை நான் ஒரு பாக்கியமாகவே கருதுகிறேன். தனிப்பட்ட அதிகாரி யார் பேரிலும் எனக்கு வெறுப்புக் கிடையாது. அரசரிடத்திலும் எனக்கு வெறுப்புக் கிடையாது. ஆனால் இந்தியாவில் முன் நடந்த எந்த ஆட்சியைக் காட்டிலும் அதிகத் தீங்கு செய்திருக்கும் பிரிட்டிஷ் ஆட்சி முறையை வெறுப்பது என்னுடைய கடமை. இந்த ஆட்சி முறையில் விசுவாசம் வைப்பது பாவம். எனக்கு விரோதமான சாட்சியங்களாகக் குறிப்பிட்ட கட்டுரைகளை எழுதியது நான் செய்த பெரும் பாக்கியம். சட்டப் பிரகாரம் நான் செய்திருப்பது பெருங்குற்றந்தான். ஆனால் என்னுடைய அபிப்பிராயத்தில் அது என்னுடைய பரம தர்மம். ஆகவே என்னைக் குற்றவாளி என்று கருதினால் சட்டப்படி அதிகமான தண்டனை எது உண்டோ அதை அளிக்க வேண்டும்.’’ என்று சத்தியத்தின் வழியில் தன் குற்றத்தை ஏற்கிறார் தனி ஆண்மை அண்ணல் காந்தியடிகள்.

இதனைக் கேட்டுக் கொண்டிருந்த நீதிபதி ஒரு தர்ம சங்கடனமான நிலைக்கு ஆளானார். அவர் தன் தீர்ப்பின் வடிவை வாசித்தார்.

‘‘மிஸ்டர் காந்தி! குற்றவாளி என்று ஒப்புக் கொண்டதால் என்னுடைய வேலையை ஒரு விதத்தில் சுலபமாக்கி விட்டீர்கள். ஆனாலும் உங்களுக்குத் தண்டனை என்ன கொடுப்பது என்பது எந்த நீதிபதியையும் திணறச் செய்யக் கூடிய கடினமான பிரச்சினைதான். சட்டமானது மனிதர்களுக்குள் பெரியவர்கள், சிறியவர்கள் என்ற பேதம் காட்டக் கூடாது. ஆன போதிலும் நான் விசாரித்திருக்கிற அல்லது விசாரிக்கக் கூடிய பிற குற்றவாளிகளுடனே உங்களை ஒன்றாகப் பாவிப்பது இயலாத காரியம். கோடிக் கணக்கான உங்கள் தேச மக்கள் உங்களை மாபெரும் தலைவராகவும் மகத்தான தேசபக்தர் என்றும் கருதுகிறார்கள் என்பதை நான் மறந்து விட முடியாது. உங்களுடைய அரசியல் கொள்கைகளுடன் மாறுபட்டவர்களும் உங்களை உயர்ந்த இலட்சியங்களுடைய உத்தம புருஷராகக் கருதுகிறார்கள். எனினும் நான் உங்களை ஒரே ஒரு முறையில் தான் பார்க்க வேண்டியதாயிருக்கிறது. நீங்கள் சட்டத்துக்கு உட்பட்ட பிரஜை . சட்டத்தை மீறிக் காரியம் செய்ததாக நீங்களே ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் பலாத்காரத்தை எதிர்த்துப் பிரசாரம் செய்து வந்திருப்பதை நான் மறந்து விடவில்லை. பல சமயங்களில் பலாத்காரம் நிகழாமல் தடுப்பதற்கும் முயன்றிருக்கிறீர்கள். ஆனாலும் உங்களுடைய அரசியல் பிரசாரத்தின் இயல்பும், யாரிடையே பிரசாரம் செய்தீர்களோ அவர்களுடைய இயல்பும் உங்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும். அப்படித் தெரிந்தும் உங்களுடைய பிரசாரம் பலாத்காரத்திலேயே வந்து முடியும் என்பதை எப்படி நீங்கள் அறிந்து கொள்ளாமலிருந்தீர்கள் என்பதை என்னால் அறிந்து கொள்ளவே முடியவில்லை.

உங்களைச் சுதந்திரமாக விட்டு வைப்பது எந்த அரசாங்கத்துக்கும் முடியாத காரியமாகச் செய்து விட்டீர்கள். இதைக் குறித்து இந்திய தேசத்தில் உண்மையாக வருத்தப்படாதவர்கள் யாருமே இல்லை. உங்களுக்கு நான் செலுத்த வேண்டிய கடமையையும் பொது நன்மைக்காக நான் செய்யவேண்டிய கடமையையும் சீர்தூக்கிப் பார்த்துத் தண்டனை விசயமாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்னால் கிட்டத்தட்ட இதே விதமான வழக்கு ஒன்று இதே சட்டத்தின் கீழ் நடைபெற்றது. பாலகங்காதர திலகரின் வழக்கைச் சொல்லுகிறேன் அவர்மீது முடிவாக விதிக்கப்பட்ட தண்டனை ஆறு வருஷம் வெறுங்காவல். ஸ்ரீ திலகருடன் உங்களை ஒப்பிட்டு நடத்துவது நியாமே என்று நீங்களே ஒப்புக்கொள்வீர்கள். ஒவ்வொரு குற்றத்துக்கும் இரண்டு வருசம் வீதம் மொத்தம் ஆறு வருஷம் வெறுங்காவல் தண்டனை உங்களுக்கு அளிப்பது என் கடமை என்று கருதி அவ்விதமே தீர்ப்பளிக்கிறேன். ஆறு வருஷத்துக்கு முன்னதாகவே இந்தியாவின் நிலைமையில் ஏற்படும் மாறுதலினால் அரசாங்கம் உங்களை விடுதலை செய்வது சாத்தியமானால் அதன் பொருட்டு என்னைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சி வேறு யாருக்கும் இராது.’’

என்ற இந்தத் தீர்ப்பு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய அச்சமற்ற நியாயமான தீர்ப்பு. இந்தத் தீர்ப்பு முடிந்ததும் காந்தியடிகளில் ஒரு சில நிமிடங்கள் பெற்று நீதி மன்றத்தில் பேசினார்.

‘‘ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன். லோகமான்ய பாலகங்காதர திலகருடன் என்னை ஒப்பிட்டுக் கூறியதைப் பெறற்கரும் பேறாகவும் கருதுகிறன். எனக்கு தாங்கள் கொடுத்திருக்கும் தண்டனையைக் காட்டிலும் குறைவாக வேறு எந்த நீதிபதியும் கொடுத்திருக்க முடியாது. தாங்கள் என்னை நடத்தியதைக் காட்டிலும் மரியாதையாக யாரும் நடத்தியிருக்கவும் முடியாது!’’

இதுவே காந்தியின் முடிவான உரை.

சிறைக்கு மகிழ்வோடு சென்ற காந்தியடிகள் தனியறையில் பெருங்குற்றவாளிபோல நடத்தப்பெற்றாலும் புத்தகங்கள், புனித சிந்தனைகளுடன் சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்கினார்.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நீதி”

அதிகம் படித்தது