நீறு பூத்த நெருப்பு ஈழம்(கவிதை)
பாவலர் கருமலைத்தமிழாழன்May 28, 2016
ஈழமெனும் தலைப்பினிலே இலங்கை நாட்டில்
இயங்குகின்ற தடாகமெனும் கலைவட் டத்தார்
வேழமெனும் சுவைதமிழில் கவிதைப் போட்டி
வைத்துலகோர் கலந்துகொள்ள அழைத்தி ருந்தார்
ஆழமான கருத்துடனே கவிதை யாத்தே
அனுப்பியதில் முதல்வதாகத் தேர்வு பெற்று
சூழபுகழ் கவியருவி விருது வாங்க
சுடர்மனையாள் துணையுடனே இலங்கை சென்றேன் !
விருதுதனைப் பெறுவதற்கு முன்பு ஈழ
விடுதலைக்காய்ப் போர்புரிந்த புலிகள் தம்மின்
திருவடிகள் பட்டயிடம் காண்ப தற்கே
திருவான யாழ்ப்பாண நகர்க்குச் சென்றேன்
அருநூல்கள் குவிந்திருந்த நூல கத்தை
அனல்தீயால் எரித்திட்ட சுவடு மாறி
பெருமையுடன் நிமிர்ந்துநிற்கும் அழகு கண்டு
பெருமிதமாய் நூல்களினைத் தொட்டுப் பார்த்தேன் !
புவிவியந்து பார்த்தவனின் அடிகள் தாங்கி
புலித்தலைவன் பிரபாவைச் சுமந்த மண்ணாம்
நவில்தோறும் நவில்தோறும் நாவில் சூட்டை
நன்கேற்றி மறவுணர்வை ஏற்றும் மண்ணாம்
செவிகளிலே இன்னுமவர் முழக்கம் கேட்டுச்
செயலூக்கம் பெற்றிருக்கும் சிவந்த மண்ணாம்
குவித்திரண்டு கைகளிலே வவுனியா மண்ணைக்
கும்பிட்டு நெற்றியிலே திலக மிட்டேன் !
உலகத்தை அண்ணாந்து பார்க்க வைத்தே
உயர்தமிழன் வீரத்தைக் கண்முன் காட்டிக்
குலம்காக்கப் போர்புரிந்த யானை யிறவு
குலைநடுங்கச் சிங்களரை அஞ்சச் செய்து
புலம்மீட்கப் போர்புரிந்த சாவகச் சேரி
புறம்காட்டா கிளிநொச்சி முல்லைத் தீவை
வலம்வந்து வலம்வந்து மண்ணைத் தொட்டு
வணங்கிவீர வணக்கத்தைச் செலுத்தி நின்றேன் !
பெண்களொடு ஆண்களுமே பயிற்சி பெற்ற
பெருவன்னிக் காட்டிற்குள் கால்ப தித்தேன்
கண்போன்ற கடல்புலிகள் பயிற்சி பெற்ற
கவின்நீச்சல் குளம்தன்னைத் தொட்டுப் பார்த்தேன்
உண்ணாமல் உறங்காமல் ஈழம் காண
உயிர்த்தியாகம் புரிந்திட்ட புலிகள் தம்மின்
எண்ணத்தைச் சுமந்தங்கே வீசும் காற்றை
என்னுள்ளே இழுத்தந்த உணர்வைப் பெற்றேன் !
வீடுநிலம் முழுவதையும் பறித்துக் கொண்டு
விடுதலைக்குத் துணைநின்ற தமிழர் தம்மை
ஆடுமாட்டை அடைத்துவைத்த பட்டி போன்றே
ஆண்பெண்கள் குழந்தைகளை அடைத்து வைத்த
ஏடுகளில் படித்திட்ட முள்ளி வாய்க்கால்
எழுத்தினிலே தரவியலா துயர மண்ணைக்
கேடுகெட்ட தமிழகத்துத் தமிழ னாகக்
கேள்விகணை துளைத்திடவே பார்த்து நின்றேன் !
வகைவகையாய்த் துப்பாக்கி ரவைகள் குண்டு
வான்துளைத்த ஏவுகணை டாங்கி என்றே
பகையான சிங்களர்கள் நடுந டுங்க
பாய்ந்திட்ட வானூர்தி ! கடலுக் குள்ளே
திகைக்கவைத்த நீர்மூழ்கிப் படகு என்றே
தீரமுடன் போர்புரிந்த செய்தி யெல்லாம்
மிகையன்று வரலாற்றின் உண்மை யென்று
மீட்டுவைத்த கருவிகளைச் சான்றாய்க் கண்டேன் !
விதவையரே நிறைந்திருக்கும் முல்லைத் தீவின்
வீடுகளின் ஆண்களெல்லாம் இராணு வத்தின்
மதயானைத் தாக்குதலில் களப்பலி யாக
மகன்களெல்லாம் கொத்துகுண்டால் எரிந்து போக
நிதநிதமும் செத்துசெத்து இராணு வத்தின்
நீள்கண்ணில் பட்டிடாமல் பெண்பிள் ளையை
விதவைத்தாய் காக்கின்றாள் பொத்தி பொத்தி
வீதிகளில் காப்பில்லா அவலத் தாலே !
உண்மைகளை எழுதுதற்கோ உரிமை யில்லை
உரியவாழ்வு இன்னுமங்கே கிடைக்க வில்லை
கண்ணீரும் சோகமுமே நிறைந்தி ருக்கும்
காட்சிகள்தாம் என்கண்ணில் பட்ட தங்கே
புண்ணன்று மறைவதற்கு வடுக்க ளாக
பூத்தநீறு நெருப்பாக உள்ளா ரின்றும்
எண்ணமெல்லாம் ஈழமென்றே உயிரை ஈந்த
ஏந்தல்தாள் படைக்கின்றேன் பெற்ற விருதை !
பாவலர் கருமலைத்தமிழாழன்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “நீறு பூத்த நெருப்பு ஈழம்(கவிதை)”