நுரையீரலும் மின்மினிபூச்சிகளும்… (கவிதை)
குமரகுரு அன்புSep 3, 2022
மின்மினிபூச்சிகளால்
நிரம்பிய வெளிச்சம் நிலவுக்கு போட்டியாக.
அண்ணாந்து பார்த்தால்
நீண்ட மின்விளக்கு கம்பமென
நிற்கிறது பனை மரம்!
தூக்கணாங்குருவிகளை
வீடு காலி பண்ண சொல்ல
பனை மரத்துக்கு ஓனரில்லையே
பதநீர் குடுவை கட்டுபவன்?
இந்த இருட்டில்,
கூட்டில் ஒட்டியிருக்கும்
மின்மினிகளின் ஒளியில்
தலைப்பாகையை விரித்து
அண்ணாந்து படுத்தபடி,
பீடி புகையை வானுக்கு
செலுத்தி கொண்டிருக்கிறான்!
இருளில் பறக்கும் புழுதியில்
வாய்க்கால் தூசுகள்
அவன் மீது படர்ந்து பறக்கின்றன…
ஒரு பழைய தொழிற்சாலையின்
சிம்னியைப் போல கருகி கிடைக்கும்
நுரையீரல்களின் உள்ளே,
ஒரே ஒரு மின்மினி பூச்சியின் மினுங்களில்
ஒரே ஒரு தூக்கணாங்குருவி குஞ்சு
தூங்கி கொண்டிருக்கிறது…
குமரகுரு அன்பு
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “நுரையீரலும் மின்மினிபூச்சிகளும்… (கவிதை)”